ஆழியாளின் ‘கருநாவு’ குறித்து சில வார்த்தைகள்…

கெகிறாவ ஸலைஹா

karunavuதபாலில் ரஞ்சி அவர்கள் அனுப்பிய ஆழியாளின் ‘கருநாவு’ கரம் கிட்டியது நேற்று. பெருநாள் விடுகையும் கிடைத்திருந்ததில் ஒரே மூச்சில் வாசித்து ஓய்ந்தேன். பரவசம் பாய்விரித்துப் படுத்திருக்கிறது என் புறத்தெலாம்…திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஷினி என்கிற இயற்பெயருடைய ஆழியாளை உதிரி உதிரியாய் தரிசித்துள்ளேன். நம் பாடநூலில் ‘விமான நிலையச் சந்திப்பு’ அனுபவித்திருக்கிறேன். புலம் பெயர்ந்து போய் இரு வேறு கண்டங்களில் நிர்ப்பந்தம் காரணமாய் தம் அடையாளங்களை தொலைத்து விட்ட நட்புகள் திருவாத்திப் பூ மரத்தடியில் தோண்டிப் பார்க்க முயலுகிறார்கள் தொலைத்த குதூகலங்களை…

‘அம்மா’வோடு தொடங்குகிறது கண்ணீர்த் தொகுதி. தாய்மையின் மனங் கொள்ளா அலைக்கழிவை அழுதழுதே வாசித்தேன். காணாமல்போன தம் குழந்தைகளை நெஞ்சிலடித்து அடித்து தேடும் இலங்கை அம்மாக்களின் சோகம் ஒன்றை அக்கவிதையானது உள்ளே பொதித்துப் போய் இருந்தது..

‘2 சைவரும் 1சைவக்காரியும்’படித்தபோது ‘சுந்தா’ அவர்கள் எழுதிய ‘மேரியும் மகாத்மாவும்’ கட்டுரை ஞாபகம் வந்தது. காந்தியடிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த மேரியை சுந்தா இலண்டனில் சந்திப்பார். இலண்டன் வந்ததும் அசைவமாக மாறி விடும் இந்தியர்கள் மத்தியில், காந்தீயத் தாக்கம் காரணமாக பதினெட்டு வயதிலேயே சைவம் பேணத் தொடங்கிய மேரி பற்றிய கட்டுரை அது.

‘செவ்வரத்தம் பூ” நம் தேசத்து குச்சு ஒழுங்குகளில் ரத்தம் தோய்ந்து கிடந்த, கிடக்கிற இளைஞர்களின் சடலங்கள், தேவையற்ற சாவுகள், சாபக் காட்சிகள் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிட மேலே நகர முடியவில்லை சற்றைக்கு…
விடுதலையின் சுகிப்பை வேண்டிய பெண்மையின் பிரகடனமாய் ‘குமாரத்தி” கோலம் காட்டிற்று. பொன்னும், விருந்தும் அள்ளியிட்டு கீத வாத்தியங்கள் முழங்க கல்யாணச் சந்தையிலே விற்கப்படும் படலத்தை விட்டும் விட்டு விடுதலையாதல் குமாரத்தியின் கனவாக நீள்கிறது…

‘மௌனம்’ பற்றியது அழகிய வரைவிலக்கணம். “தாயும் மூன்று யாமங்களின் தேவதையும்” கவிதையானது ஆங்கிலக் கவிதை ஒன்றை வாசிப்பதான பிரமையை ஏற்படுத்திற்று. குறிப்பாக, வேட்ஸ்வேத்தின் ‘லுசி’ கவிதைகளை ஞாபகமூட்டியது.

(ஒரு கிராமம் தன்னில் எளிமையான ஒரு குடும்பத்தில் பிறந்து, முழுக்க முழுக்க இயற்கையோடு குதூகலமாய் வாழ்ந்த இளம்பெண் லுசி திடீரென்று இறந்து போய் விடுகிறாள். அவளது தூய்மை, அழகு, இயற்கையோடு ஒன்றித்துப்போன மனமகிழ்ச்சி அனைத்தையும் அருகிருந்து பார்த்த கவிஞர் அவளது எதிர்பாரா இறப்பு குறித்துப் புலம்பி அலறும் கவிதைகளே லுசி கவிதைகளாகும்.

karunavuஅதிலொரு லுசி கவிதை ‘லுசி கிரே- அல்லது ஏகாந்தம்’ என்ற தலைப்போடு ஆரம்பிக்கும். அவர் எழுதுகிறார். “தோப்பு வழியே நடந்து திரிகையில் அந்தத் தனிமைப்பட்ட குழந்தையை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. லுசிக்கு நண்பர்களோ, நெருங்கியவர்களோ இல்லை. விரிந்த பசுந்தரையில் அவள் வாசம் செய்கிறாள். மனிதர்களின் இல்லங்களடியே வளர்ந்த செழித்த தூய்மை அவள். மெல்ல எவருமறியாதபடி சென்று, மான்குட்டிபோல துள்ளிக்குதித்து விளையாடும் முயற்பெண்ணை அந்தப் பசுந்தோப்பில் எவரும் கண்டு வரலாம். ஆனால், அந்த அழகுமுகம் யாரது கண்ணிலும் படாதபடி மறைந்தே போயிற்று.”
ஒரு கதையைப்போல நீளமாய் அவர் பாடும் இக்கவிதையூடாக இந்தப் பெண்ணுக்கு நிகழ்வுற்ற துரதிஷ்டத்தை அழகுறச் சுட்டுகிறார் வேட்ஸ்வேர்த் தொடர்ந்து.

“ “கையில் ஒரு லந்தர் விளக்கை ஏந்திக்கொண்டு இன்றிரவு பனியில் புறப்பட்டுப்போன உனது தாயாரைத் தேடி வா. சிலவேளை இன்று புயலடிக்கவும் கூடும் என் குழந்தாய்!” என்று தந்தை பணிக்கிறார் லுசியை. லுசியும் மகிழ்வோடு ஒப்புக் கொள்கிறாள். சேவல் கடிகாரம் கூவுகிறது. தொலைவில் வானத்தே நிலா எரிக்கின்றது. லுசி விளக்கை கையிலேந்திக் கொள்கிறாள். ஒரு மான்குட்டியைப் போல துள்ளி அவள் நடக்கையில், பாதையோரத்தே பனி விசிறுகிறது அவள் காலடிபட்டு. எதிர்பாராமல் புயலடிக்கவும் ஆரம்பிக்கிறது. பாதையை அவளால் அடையாளம் காண முடியாது போகிறது. எந்தச் சத்தம்சந்தடியுமில்லை. அவளுக்கு வழிகாட்டவும் எவருமில்லை.

பொழுது புலர்கிறது. தமது வீட்டிலிருந்து சுமார் 220 யார் அளவிலுள்ள தோப்பு வழியெல்லாம் சென்று, அவர்கள் அவளைத் தேடினர். அழுதரற்றிப் புலம்பினர்@ மறுபடி இல்லம் வந்தனர்@ “சுவர்க்கத்திலே அவளை இனி நாம் சந்திப்போம்” என்றனர். சட்டென்று பனியில் லுசியின் காலடித்தடங்கள் தாயாரின் கண்களில் படுகின்றன. செந்நிற பெர்ரி மரங்கள் வரிசையாக வளர்ந்த கிடக்கும் தோப்பின் வழியெங்கிலும், வயல்வெளிகளெல்லாமும், அவளது காலடித் தடங்கள் பதிந்திருக்கும் எல்லா இடங்களிலும் அவர்கள் பின்தொடர்ந்து ஆவலோடு சென்று பார்க்கின்றனர். ஓரிடத்தே திடீரென்று இனிக் காலடித்தடங்கள் இல்லையென்றாகிறது.

இப்போதும் தன்னந்தனியே அந்த வனத்தே அவள் வாழுவதாய்ச் சிலர் சொல்வர். மென்மையொடும், கரடுமுரடாயும் நீண்ட தன் பாதைவழித் திரும்பிப் பாராமலேயே நடந்து சென்ற லுசியின் ஏகாந்த ராகம் காற்றிலே கலந்துதான் கிடக்கிறது இப்போதும்.” என்று தனது ஆறாத துயரத்தைச் சொல்லி முடிக்கிறார் வேட்ஸ்வேர்த்.)
வித்தியாசமாக, தன் தேவதைக் குழந்தையை வேட்டை நாய்களிடம் தொலைத்து விட்டுத் தேடும் தாய்மையை இங்கே தரிசிக்கிறோம்

‘பெருமடி’ கடல் புதைத்துக் கொண்ட கதைகளை சொல்கிறது. கடலும் எத்தனைக் கதைகளைத்தான் புதைத்து வைத்திருக்கிறது தன்னகத்தே…? அந்தக் கதைகளே பின்னர் பாசிகளாய், சிப்பிகளாய், பவளப் பாறைகளாய், கடற்கன்னிகளாய் அவதரித்திருக்கலாம்.

வானமே எல்லையாய் வீடு வேண்டுவது மிக மிக அருமை. தனிமையையும், ஏக்கத்தையும் பரிசாய் விட்டுப்போன சுகாந்த நாட்களின் நினைவுகளை வருடிச் செல்லுவதாய் இருக்கிறது ‘ஏமாலத்தியின் விடுமுறை நாள்’ கவிதை.

சாவை மூக்குநுனியில்;; வைத்துக் கொண்டு நிறைய பொருட்தேடியலையும் மனிதனின் வேண்டாத ஓட்டம் குறித்துப் பேசுவது ‘வரைபடம்’.

புத்தரின் தேசம் எங்கிலும் ஆங்கிலேயன் குவித்துப்போன ஆயுதங்கள்… அவலங்கள்… சாவுகள்.. புலம்பெயர்வுகள்… கைதுகள்…பற்றிய குறிப்புகளைச் சொல்கின்றன அடுத்தடுத்த கவிதைகள்..

அவரது பாணியிலேயே அமைந்திருக்கிற மொழிபெயர்ப்புகள் சிலதை தேடித்தேடி சேர்த்திருப்பது அழகாயிருக்கிறது என்கிற சேதியையும் சொல்லி வைக்க வேண்டும் ஆழியாள் அவர்களுக்கு.
நிறைய உள்ளது …பிறகு தொடர வேன் ….அன்பு வாழட்டும்.
நன்றி !!!

கருநாவு கவிதைத் தொகுதி பற்றி வெளியீடும் விமர்சனங்களும்

– மரப்பாச்சி வழங்கும் கவிதை வாசிப்பும் -ஆழியாளின் கருநாவு கவிதைத்தொகுதி வெளியீடும்

– ஆழியாளின் கருநாவுஅறிமுகம்

– ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!யாழினி

– ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு

– தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

– ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு — சு. குணேஸ்வரன்

– கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு – வெலிகம ரிம்ஸா முஹம்மத்

– அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்-சி.ரமேஷ்

-ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்- புதியமாதவி -மும்பை

-ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன். -க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8

தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்

-ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில்நடைபெற்றது -தகவல் -சந்திரலோக கிங்ஸ்லி

வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்–எஸ்தர்விஜித்நந்தகுமா(,திருகோணமலை,இலங்கை)

ஆழியாளின் ‘கருநாவு’ குறித்து சில வார்த்தைகள்...கெகிறாவ ஸலைஹாஇலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *