அறுந்த செருப்பு

சோ. நளாயினி



நகர முடியாத வாகனங்களின் நெரிசல். அகோரத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்த சூரியனின் தாக்கத்தை கொழும்பு மாநகரம் தாங்கிக் கொண்டிருக்க, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களின் அடையாளங்கள் கூட இன்றி அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டியினை ஒத்ததாகக் கட்டிடங்களின் சாயல்…..
‘ஐயோ!!! இந்தச் செருப்பு இப்பிடி நடு ரோட்டில அறுந்து அவமானப்படுத்தியிட்டுதே” நான் மனசுக்குள்ள புலம்பிக் கொண்டு நடக்க ஆராவது என்னைப் பாக்கினமோ எண்ட கூச்சம் வேற. நான் பார்த்த சனமெல்லாம் என்னையே வேடிக்கை பார்க்கிறதா ஒரு பிரம்மை…. உண்மையாயிருக்குமோ? இவை என்னத்தான் பாக்கினமோ? மனக் கலக்கத்திலை வெயிலின்ர அகோரத்தக் கூட நான் கணக்கெடுக்கேல்ல. ‘வாங்கி மூன்று மாசங்களக் கூடத்தாண்டயில்ல அதுக்கிடையில இப்பிடி அறுந்து போச்சே. எல்லாத்திலயும் கலப்படமெண்டால், காலில போடுற செருப்பிலயுமா?” தவறைத் தட்டிக் கேட்க விளையும் நியாயவாதியாகி நடுரோட்டில் விவாவதம் செய்யத் தொடங்கிவிட்ட மனச அதட்டி அடக்கிக் கொண்டு, இனியென்ன இப்பிடியே மெல்ல மெல்ல நடந்து போய் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற செருப்புத் தைக்கிற மனிசனிட்ட குடுத்துத் தைக்க வேண்டியது தான்.

‘சொல்லுங்கம்மா என்ன செய்யணும்?” நல்ல மரியாதையாத்தான் பேசினது மனுசன்.’இந்தச் செருப்பை தைச்சுத் தாறீங்களோ?” எண்டுகொண்டு குனிஞ்சு கையில செருப்ப எடுக்கப் போன என்ர கையத் தட்டிப்போட்டுத் தானே எடுத்துப் பார்த்திட்டு, தைக்கத் தொடங்கியிட்டார். என்ன ஏதென்று அவரும் கேட்கேல்ல, நானும் சொல்லேல்ல. எல்லாம் அனுபவமா இருக்குமெண்டபடியே, ரோட்டப் பார்க்கிறன்.
நடுச்சாலை. வாகனப் புகையும், இரைச்சலும், வெயிலின்ர அகோரமும், எப்படி இந்த இடத்தில் வாழுறார்? என்ர மனக் கேள்வி அவருக்குப் புரிஞ்சுதோ என்னவோ அவற்ற செருமலில் திரும்புறன் நான்,
‘இந்தாங்கம்மா….”
‘எவ்வளவு?”
‘ஒரு எழுவத்தியைஞ்ச தாங்க”
காசைக் குடுத்திட்டு திரும்பப்போக, ‘ங்கே….ங்கே….” எண்ட சத்தத்தோட குழந்தையின்ர அழுக என்ர கவனத்தைக் கலைக்க, இது என்ன புதுசாக் கிடக்கு. ஆற்ற பிள்ளையாயிருக்கும்? ஓடிய யோசினைய இழுத்துப் பிடிச்சபடி, கூடாரத்துக்க பாக்கிறன்.
‘இது எப்போ பாரு கத்திட்டே கெடக்கு… சனியன்…. ஏய் என்னா பண்ற…. கொஞ்சோம் தூக்கேன் இத” குழந்தைக்குப் பக்கத்தில கிடந்த மனிசிதான் செருப்புத் தைச்சவரிட்ட சொல்லுது. குடிச்சிருக்கிறாவோ உந்த மனிசி? குடிகாரருக்கு வாய் குளறுறது போலதானே பேசிறா. கண்ணத் திறக்காமலே கையை நீட்டி துளாவிக் குழந்தையைத் தன்பக்கம் இழுத்து நெஞ்சோட அணைச்சபடியே கேட்கவே காது கூசும் வார்த்தைகளைச் சொல்லி அந்த மனிசன திட்டிக் கொண்டிருக்க, நான் செருப்ப போட்டுக் கொண்டு பாதைக்கு இறங்கியிட்டன், ச்சீ என்ன மனிசியோ இப்பிடிப் பேசுது? ரோட்டால போறவைக்கும் அவா பேசினது விளங்கியிருக்குமோ என்னவோ? அந்தத் தறப்பாள் கூடாரத்தப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்போட போகினம்.

எரிக்கும் வெயிலோட, தூசும் படிஞ்ச அந்தத் தறப்பாள் சூட்டை என்னெண்டு உந்தப் பிஞ்சுக் குழந்தை தாங்குதோ? கடவுளே.
‘ஐயோ லேட்டாப் போச்சே. அம்மா பார்த்துக் கொண்டிருக்கப் போறா” அவசரமா வீட்டை ஓடுறன். ஆனாலும் என்ர மனசோ அந்தக் குழந்தையைச் சுற்றியே ஓடுது. ஒரு குழந்த உருவாகி, அது பிறந்து வளரும் வரைக்கும் எப்பிடிப் பாக்கவேணும்? எத்தினை பராமரிப்பு, பத்தியம் எண்டு பரபரப்பினம்.
எனக்கு நல்ல ஞாபகம், எங்கட சித்திக்குக் குழந்த பிறந்த நேரம் அம்மம்மா என்னென்டெல்லாம் பாத்தவா எண்டு. நொச்சிக்குழை, பாவட்டங்குழை புடுங்கி வா, அவிச்சுக் குளிக்க வாக்கவேணுமெண்டு என்ன எத்தினை தரம் துரத்தியிருப்பா…. அதுமட்டுமா? முள்முருக்கை இலை அரைச்சுப் பிள்ளைக்கு உடம்பு முழுக்கப் பூசிக் குளிக்கவாக்கிறதென்ன, சனிக்கிழமையான உடம்பு தலையெல்லாம் நல்லெண்ண பூசி, உச்சந்தலையில முருக்கமிலை அப்பி, இளவெயில் படத் தடுக்குப் பாயில கிடத்தி, செவ்வரத்தம் பூ இடிச்சுச் சாறெடுத்து தலைக்குத் தேய்ச்சு அந்தப் பிள்ளயக் முழுகவார்த்து….. அப்பப்பா சொல்லிக் மாளாது…
ஆனாலும் அந்தக் குழந்தை, அதுக்கான பராமரிப்பு? அந்தக் குழந்தையும் இந்தப் பூமியில பிறந்து வளரத்தான போகுது, வாழத்தான போகுது! பிறக்கும் போதே எத்தினை துன்பம்? உயர்வையும் தாழ்வையும் கடவுள் ஒரே நிலைத் தட்டில வைச்சா இந்த உலகத்த படைச்சான்? ஆளுக்கொரு சட்டமும், அடிபிடியுமெண்டு இந்த உலகம் எங்க போகுது?

ஞாயிற்றுக்கிழமை- வேலையில்லாத நாள்தான்… ஆனால் கொழும்பெண்டால் சொல்லவோ வேணும்? எந்த நேரமும் வாகனத்தின்ர இரைச்சலும், சனக் கூட்டமுமெண்டுதான் இருக்கும். எத்தினை இடங்களில இருந்து வந்த மனிசர் இந்த இடங்கள்ள வாழினம். நானும் தான்.
‘ஐயோ…. அடிக்கிறான்….. என்ன அடிக்க ஒனக்கு என்ன துணிச்சல்?” ஒரு பொம்பிள கத்திற சத்தமும், குழந்தையளின்ர அழுகுரலும் கேட்க, இந்த நேரத்தில ஆர் உப்பிடிக் கத்தினமெண்டு காதக் குடுக்கிறன், சத்தம் ரோட்டுக்கரையோட கிடக்கிற பொது மலகூடத்திற்குப் பக்கதிலயிருந்துதான் கேட்டது. ஓடிப் போய் பெல்கணியில நிண்டு பாக்கிறன், தறப்பாள அறுத்தெறிஞ்சு கிடக்கிற சாமான்களெல்லாம் ரோட்டில கிடக்குது, வேடிக்கை பார்க்வெண்டே ஒரு கூட்டம் கூடியிருக்க. சண்டை பிடிக்கிறவையத் தடுக்கிற நோக்கமில்லாமல் கூத்துப் பார்க்கிறதப்போல பாக்குதுகள். ஊர் ரண்டுபட்டால் கூத்தாடிக் கொண்டாட்டமெண்டுற மாதிரித்தான், ஆரும் சண்டை பிடிச்சால் தங்கட வீடுகளில ஒண்டுமில்லயெண்டதப் போல நிண்டு பாக்குங்கள். என்ன மனிச குணம் அதுதான்.
குழந்தை வீரிட்டுக் கத்தி, ஏனென்டு கேட்க நாதியில்லாமல் அழுதழுது சோர்ந்து போக மூத்தபெடியன் தாயையும் தேப்பனையும் மாறி மாறிப் பார்த்திட்டு ஓடிப் போய் அந்தக் குழந்தைக்குக்கிட்ட நிக்கிறான். எனக்கு மனசே கனமாப் போச்சு, நான் கூட நிண்டு வேடிக்கதான பார்க்கிறன், என்ர கையாலாகத்தனத்தினால என்னில கூட வெறுப்புத்தான் வருகுது எனக்கு.
‘என்ன பிள்ள உங்க சத்தம்? ஆர் சண்டை பிடிக்கினம்” கேட்டுக் கொண்டு வந்த வீட்டுக்காரம்மா பெல்கணியால எட்டிப்பாத்திட்டு,
‘நேரங்காலமற்ற உதுகளின்ர வாழ்க்கை என்ன பாதையில போகுதெண்டே தெரியாமல் நெடுக ரோட்டில உதுகளின்ர வாழ்க்க போகுது. இருந்து உடைஞ்ச செருப்பையும், பாக்குகளையும் தைச்சுக் கொண்டும் அதில வாற காசில் கடையில சாப்பாடும். சாப்பாடு கூட ஒழுங்கா வாங்கிச் சாப்பிடுதுகளா, அதுவுமில்ல… வாற சம்பாத்தியத்தில எப்பிடிக் குடிக்கலாமெண்டு தான பார்க்குதுகள். உந்த பிள்ளயள பார் ஒட்டிப் போன வயிற்றோட காஞ்சு பரட்டை பத்திக் கிடக்குதுகள். அதுகளயேனும் யோசிச்சு பார்க்குங்களா எண்டா ஒண்டுமில்ல?” வீட்டுக்காரம்மா ஆதங்கம்மா சொல்லிக் கொண்டு போறா…
எல்லாற்ற மனசிலயும் அதுகள் மேல ஒரு அனுதாபமிருந்தாலும், அவங்க அவங்கட தேவைகளக் கவனிக்கிறதில அடுத்தவையின்ர பிரச்சினை மறந்துதான போகும். ஒரு கிழமை கடந்திருக்கும். வேலை முடிஞ்சு வந்த எனக்கு அதிர்ச்சி. அங்க இருந்த தறப்பாளோ, குடும்பமோ அந்த இடத்தில இல்ல. எங்க போயிருக்குங்கள்…. என்ன நடந்தது? கோயிலடியில இருந்த பிச்சைக்காரரைக் கூட நான் காணயில்ல.
‘என்னடி யோசினையோட வாரா? ஏதும் பிரச்சினையோ?” அம்மாதான் கேட்கிறா.
‘அதெல்லாம் ஒண்டுமில்லயம்மா… உந்த ரோட்டில செருப்புத் தைக்கிறவையின்ர தறப்பாள் ஒண்டையும் காணேல்ல… அதுகளையும் காணேல்ல… அதுதான் யோசிக்கிறன். பாவமணை ரண்டு கிழமைக்கு முதல் பிறந்த ஒரு குழந்தையோட எங்க போயிருக்குங்கள்?” அம்மான்ர முகத்த நான் பார்க்க,
‘ஓ…. அதுவா…. உனக்கு தெரியாதா கொழும்பில ஏதோ மாநாடு நடக்கப் போகுதாம்… அதனால வெளிநாட்டுக்காரர் எல்லாம் வருவினமெண்டு, ரோட்டு வழிய இருந்த சனங்களயும், பிச்சையெடுத்ததுகளையும் எங்கயோ ஒரு இடத்தில கொண்டு போய் விட்டிருக்கிறாங்களாம்…. இனி மாநாடு முடிஞ்சாத்தான் திரும்ப அதுகள் இங்கினேக்க வர முடியுமாம். காலமை சேதியில சொன்னது”
‘ஓம் …. ஓமோம்…. உவங்கள் அதுகள் வாழ ஒரு வழியமைச்சுக் குடுக்காமல், வெளிநாட்டுக்கார் வரேக்க மட்டும் வெளிவேசம் போடுறாங்கள்…. அப்பத்தான வெளிநாடுகளிட்ட நல்லபேர் எடுக்கேலும்.” அப்பா ஒரு பிரசங்கமே வைக்கத் தொடங்கிறார்.
அப்பா சொல்றதிலயும் உண்மை இருக்குதுதானெண்டாலும் முற்றுமுழுதா அரசாங்கத்தை நம்பாமல் தாங்கள் முன்னுக்கு வரவேணும், தங்கட பிள்ளயள் நல்ல நிலைமைக்கு வரவேணுமெண்டு சம்பந்தபட்டவையுமல்லோ நினைக்கோணும்…. எனக்கு அந்தச் சின்னக் குழந்தையின்ர நினைவுதான். ஒருவேள அந்தக் குழந்தயும் வளந்து தன்னை ஒரு நிலைக்குள்ள கொண்டுவருமா… இல்ல இப்பிடித்தான் ரோட்டு வழிய இருந்து செருப்பு தைக்குமா? என்னட்ட விடையில்லாத கேள்விதான் நிறைஞ்சு கிடக்கு.

காலங்கள் ஆருக்காகத்தான் காத்திருந்திருக்கு….
‘அப்பா…. அப்பா…..” குழந்தப் பெடியனொண்டு, உரிஞ்சு விழுந்த காற்சட்டைய ஒரு கையால பிடிச்சுக் கொண்டு, பொலிசு பிடிச்சுக் கொண்டு போற ஒருத்தருக்குப் பின்னால அழுதுகொண்டு ஓட….. சனங்கள் நிண்டு வேடிக்க பாக்குதுகள்…. பொலிசு பிடிச்சிருக்கிற மனிசன்ர கையில விலங்கு போட்டிருக்க, அந்த மனிசன் நிக்க முடியாமல் வெறியில தடுமாறுது…. ஆளக் கூர்ந்து பாத்த நான் திடுக்கிட்டுப் போனன். இந்தாள் அந்த செருப்புத் தைக்கிறவர் தான, கிட்டத்தட்ட மூண்டு வருசத்துக்குப் பிறகு காணுறன்…. அந்த மாநாடு நடக்கிற நேரம் வேற இடத்தில கொண்டு போய் அவைய விட்ட கொஞ்ச நாளில நானும் வேற வேலைக்கு மாறி, வீடும் மாறியிட்டம். அதுக்குப் பிறகு அந்தப் பக்கத்துக்கு நான் போகயில்லயெண்டாலும், செருப்பு அறுகிற நேரங்களில் அந்தக் குழந்த நினைவில வந்து போகும்…..

‘தன்னூட்டு பொம்புளக்கி அடிச்சி, அந்தப் பொம்புள ஆசுபத்திரியில கெடக்காம்…. தலையில பெரிய்ய்ய காயமாம்…. அதான் பொலிசி பிடிச்சுக் கொண்டு போறாங்க” வெத்திலக் காவி படிஞ்ச பல்லக் காட்டிக் கொண்டு எனக்குப் பக்கத்தில நிண்ட பொம்பிள சொல்ல, நான் அந்தச் சின்னப் பெடியனப் பாக்கிறன். அவன், கண்ணில கண்ணீரும் மூக்கால சளியும் வடிய இன்னுந்தான் அழுது கொண்டு நிக்கிறான். தாயும் ஆசுப்பத்திரியில…. இப்ப தேப்பனையும் பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போகுது…. இனி அந்தப் பெடியன், அவன்ர எதிர்காலம்???? இருளடைஞ்சுபோன காட்சியா கண்ணெதிர தோன்றுது.
அறுந்த செருப்பாகி அந்தரிச்சு நிக்கிற சின்னப் பெடியன்ர வேதினை எனக்குள்ளயும் இப்ப நிரம்பி வழிய, விறைச்சுப் போன காலை எட்டி வைக்கிறன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *