ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்

புதியமாதவி மும்பை

ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்  – (ஆழியாளின் கருநாவை முன்வைத்து)   -லூசிலி க்ளிஃப்டனும்   –ஆழியாளும்

 

பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது? இரு முலைகளா? ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா? இவற்றின் செயல்பாடுகள் மூலம் நிகழும் பூப்பு, மாதவிலக்கு, சூல், மகப்பேறு, தாய் -சேய் உறவுகளா? இவை மட்டும் தானா? இவை குறித்தப் பதிவுகள் மனிதன் கல்லில் கிறுக்கத் தொடங்கிய நாள் முதல்
இன்றைய கணினி யுகம் வரை தொடர்கின்றன.

பெண்ணுடலை அவள் பாலியல் உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால் அது பெண்ணிய படைப்பாகிவிடுமா?

அன்று முதலே பெண்ணுடல் குறித்தும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் பதிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஆணின் பார்வையில் அவன் வாரிசுகளைப் பெற்றெடுக்கும் அன்னையாக , அவன் காமத்தை நிறைவு செய்யும் உடலாக , அவன் தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உருவாக்கி இருக்கும் சமூகக் கோட்டைகளின் அறைகளாக, எப்போதாவது அவனே உருவாக்கி வைத்திருக்கும் சாளரங்களின் வழி எட்டிப்பார்க்க அனுமதிக்கப்பட்ட பச்சைக்கிளியாக…இப்படியாக ஆணின் பார்வையில் அவன் சொல்லாடல்களில், தொன்மம், படிமம், குறியீடு, மொழி, இலக்கியம் , வரலாறுகளின் ஊடாக பெண்ணும் பெண்ணுடலும் பதிவு செய்யப்பட்டன.

ஆணின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் எந்த ஒரு செயல்பாடும் இழிவானதாகவும் செவ்வியலுக்கு அப்பாற்பட்டதாகவும் வரையறுக்கப்பட்டது. இந்தப் பதிவுகளில் பெண்ணுடல் சார்ந்த அனுபவங்களின் மொழிக்கு இடமில்லை. ஆனால் பெண்கள் தங்கள் உணர்வுகளைத் தாங்களே எழுத வந்தப் போது அவள் உடலும் அவள் உடல் சார்ந்த அவள் அனுபவமும் பெண்ணிய எழுத்தின் முதல் நிலையாக இடம் பெற்றன. பெண்ணுடலை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கும் சில சூட்சம விதிகளை இந்த அனுபவங்கள் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றனவா? என்றால் அப்படியான ஒரு கலகக்குரல் எழவில்லை எனலாம். பெண்ணுடல் சார்ந்த அனுபவங்கள் அவளுக்கே அவளுக்கான சுய அனுபவங்களையும் தாண்டி சமூகவெளியில் இரண்டாம் பால்நிலையை
கேள்விக்குட்படுத்தவோ மறுதலிக்கவோ இல்லை.

எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை
ஆண்களின் பார்வையில் இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல், சிறிய இடை,பருத்ததொடை
கதைக்கு அவர்கள் எப்போதும் எனது உடலையே
நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன்வரைக்கும்
இதுவே வழக்கம்.
                (அ,சங்கரி, சொல்லாத சேதிகள் பக் 9, 10)

என்று சமூகத்தில் ஆணின் பார்வையில் பெண்ணுடல் ஆத்மா இல்லாமல் வெறும் உறுப்புகளுடன் அலையும் ஆணின் நுகர்ப்பொருளாக இருப்பதை சங்கரி தன் கவிதைகளில் பதிவு செய்தார்.

யூதர் சமூகத்தில் பெண்ணின் மாதவிலக்கை தீட்டாக எண்ணி
அவளை விலக்கி வைத்து தனித்து வைத்திருப்பார்கள். இப்பழக்கமே
இந்திய சமூகத்திலும் இருக்கிறது.

“பெண்ணே உனக்கென்று
தனியிடம் உருவானது இங்கே
நீ புதிதாய் வயதிற்கு வந்ததற்கு
அல்லது
குழந்தை பெற்றதற்கு
…….
என்று பெண் , இயற்கையான கரு உற்பத்தியின் செயல்பாடுகளால்
விலக்கி வைக்கப்படுகிறாள். அந்த நாட்களில் அவள் சிரிப்பது கூட
மிகவும் போலியான விளம்பரங்களாக இருக்கிறது

விளம்பரத்திற்காய்  stணீஹ்யீக்ஷீமீமீ யுடன்
நடக்கும் சிரிக்கும் இளம்பெண்

என்று எழுதினார் கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம். (புதையுண்ட வாழ்வு)

ஈரப்பிசுப்போடு ஒரு நிமிடம்
உட்கார்ந்து இருப்பீர்களா
ரத்தப் பெருக்கோடும்
உறங்க வேண்டியிருக்கு
……
தொடாதே தள்ளிநில்
என்கிறாள் அம்மாவும்
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை?

என்று தன் அவஸ்தையை மட்டுமே பதிவு செய்திருக்கும் அ.வெண்ணிலா (அ.வெண்ணிலா கவிதைகள். பக் 74)
மற்றும், இந்த உடற்கூறு பெண்ணுக்கு இயற்கை விதித்திருக்கும்
சாபமாகவே பார்க்கிறது சல்மாவின் மனமும்.

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
       (சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும் பக்74)

மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் பெண்ணுடலின் இயற்கையான மாதவிலக்கை ஓர் அவஸ்தையாக வேதனையான அனுபவமாக பதிவு செய்வதுடன் நின்றுவிட்டன.  மாதவிலக்கின் இரத்தப்போக்கை “இரத்த உறவுகள்” என்ற பார்வையில் நான் எழுதியிருந்த கவிதையும் என் நினைவுக்கு வருகிறது.

அடிபட்டபோது வலிக்கவில்லை
பொங்கிவந்த ரத்தம்
கட்டுகளை உடைத்துக் கசிந்து உடைந்ததில்
வலித்தது.
கட்டுகளின் அடியில்
கீறிப் பிளக்கும் காயம்.

மீண்டும் ஒரு நாள்
காயம் இன்றியே
சொட்டுச் சொட்டாக
ரத்தம்
தசைத்துணி பிழிந்து
சிந்தியது தரையில், சோபாவில்,
பள்ளிக்கூடத்து பெஞ்சில்
பார்க்கில் தியேட்டரில்

எங்கிருந்து
பொங்கித்துடித்துச் சிதறி வழிகிறது
ரத்தம்?
என் சிறகுகள் அறுத்து
என் கால்களின் ஓடையில்
என் கைகளுக்கு விலங்காய்.
என் பிறப்பின் காயத்திலிருந்து
கசிகின்றதா? எங்கிருந்து?

ரத்தம்… ரத்தம் உறவாமே
உறவுகளின் கதவு
பூட்டாத சிறை
வாசலில்லாத வீடு
சிவப்பு ரத்தம் வெள்ளை ரத்தமாகி
வீங்கிப் பெருத்த முலையிலிருந்து
படைப்பின் சிருஷ்டியாய்.
    (புதியமாதவி, நிழல்களைத் தேடி)

மாதவிலக்கு ஆண் பெண் உறவு, பாலூட்டும் பெண் என்று படைப்பின் அடையாளமாய் கண்ட உணர்வுநிலையைத் தாண்டவில்லை என் கவிதையும்!

ஆனால் பெண்ணிய தளத்தில் இந்தப் படிகளைத் தாண்டி பெண்ணுடலை அவள் மாதவிலக்கை கொண்டாடுவதில் தனித்து நிற்கிறார்கள் இருவர். ஒருவர் என் இனிய தோழி கவிஞர் ஆழியாள். இன்னொருவர் நான் கொண்டாடும் கவிஞர் லூசிலி க்ளிஃப்டன். லூசிலி ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கவிஞர். (ஜூன் 27, 1936 – பிப் 13, 2010)

லூசிலி கவிதையில் பெண்ணுடலின் மாதவிடாயைக் கொண்டாடுகிறார்.

ரத்தச்சிவப்புடன் பிரகாசமாய் நிலவுத்துண்டாய்
பாயும் நதி
இதைவிட அழகான நதி வேறு இருக்கிறதா?

ஒவ்வொரு மாதமும்
தவறாமல்
இதே ஆற்றுப்படுகையில் பாயும் நதி
இதை விட கடமை தவறாத நதி வேறு இருக்கிறதா?

பேரார்வத்துடனும் எழுச்சியுடனும்
வலியுடனும்
வருகிறது வருகிறது இந்த நதி.
இதைவிட தீரமிக்க நதி இருக்கிறதா?

ஏவாளின் மகளாக
கெய்ன் ஏபளின் தாயாக **
தொன்மையான நதி
இதைவிட வேறு நதி இருக்கிறதா?

பயங்கரமான நதியின் பிரவாகம்
இந்தப் பிரபஞ்சத்தில்
‘இதைவிட சக்திமிக்க தண்ணீர்
எந்த நதியிலும் இருக்கிறதா?

இந்த நதி அழகானது
நன்றியுள்ளது
பழமையானது பெண்மையானது
தீரமிக்கது
வணங்குகிறேன் இந்த நதியை – இது
விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும்.

என்று முடிகிறது லூசிலியின் கவிதை.

(** கெய்ன், ஏபல் இருவரும் ஆதாம் ஏவாளின் மகன்கள்)

எறும்புக்கும்  நாய்க்கும் எப்படியோ இந்த அவஸ்தை? என்று கேள்வி கேட்ட பெண்ணிய தளத்தை தாண்டி
இந்த நதி விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும் என்று வேண்டுகின்ற பெண் உள்ளத்தைப் பார்க்கிறோம்.
ஏனேனில் இந்த நதியை பிரபஞ்சத்தின் ஜீவநதியாய் கொண்டாடுகிறது பெண்ணுடல். இதே பாதையில் ஆழியாளின் கவிதைகளும் தமிழ் இலக்கிய வட்டத்தில் இக்கருப்பொருள் குறித்து இதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தொடாத உச்சத்தை தொட்டிருக்கின்றன. அண்மையில் (டிசம் 2013)ல் வெளிவந்திருக்கும் கருநாவு தொகுதியிலிருந்து
இக்கவிதை.

http://www.oodaru.com/wp-content/uploads/2014/01/karunavu-170x300.jpg

(கருநாவு புத்தகவெளியீடு : சுகிர்தராணி, ஆழியாள், றஞ்சி & தெ.மதுசூதனன்)

ஃப்ரண்ட் வந்திட்டா என்பது தான் கவிதையின் தலைப்பே. மாதவிடாயை தன் தோழமை உறவாகக் கொண்டாடும் பெண்ணுடல்.

மிளகும் கிராம்பும் கூடின
கவிச்சை வயற்காடாய்
என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம்
வருகிறாய் நீ மாதந்தோறும்.

மார்பு இரண்டின் கனம் ஏற
அடிவயிறு அலைந்துளைகிறது.
துளித்துளியஅய்ப்
பரவும் ஈரலிப்பின் வெதுவெதுப்பில்
நகக்கண்கள் இருபதும் பளபளக்கின்றன.
இடுப்போ இளகிக் கிடக்கிறது

கவிதையின் இவ்வரிகள் மாதவிடாய் காலத்து உடல்
மாற்றங்களை எல்லா கவிஞர்களையும் போலவே
சொல்கிறது. அடுத்த வரிகளில் தோழமைப் புகுந்து
கதைகள் பேச ஆரம்பிக்கிறது.
வந்திருப்பவள் வேறு யாருமல்ல, பெண்ணின் இணைப்பிரியாத தோழியாம்.

“உடன் பகிர
இருபத்தியெட்டு நெடுநாட் கதைகள் உண்டு
(இருப்பதோ மூன்றே நாள்)
சொல்லி முடிப்பதற்குள்
நெஞ்சு வெம்பித் தொண்டையும் கம்முகிறது
தொடர்ச்சியாய் என்னுள் எழும் வட்ட
வட்டக் கோபத்தை
ஏனேன்றே தெரியாத எதற்கோவான சலிப்பை
தூக்கிப் போட்டு உடைக்கிறேன்
சலீர் சலீரென அவை சிதறி நம்முன்
கிடக்கின்றன.

இந்த வரிகளில் தோழமையுடன் சேர்ந்து மாதவிடாய் காலத்து பெண்ணின் மனநிலையில் ஏற்படும் சலிப்பும் கோபமும் தோழியிடம் பகிர்ந்து கொள்ளும் கற்பனையாய் விரிகிறது.

“கதவடியில் அண்ணர் முறைத்துக் கொண்டு
நிற்கிறதையிட்டு நமக்கென்ன கவலை?
இப்போது நம்
குதித்தாடும் அசைவுகளொடான உடலின்
கூத்தாட்டம் தொடங்கிவிட்டது.
சிரிப்பும் எம்மை அப்பிக் கொண்டாயிற்று.

எம் சிரிப்பின் களி கூடக் கூட
முழுதாய் ஜொலித்துப் பெருவெளியில்
பிரகாசிக்கிறது சந்திரன்.
இதோ கால்களுகிடையே
சந்தோஷத்தின் புதிர்பாதைகளெல்லாம்
மடைதிறக்க
ஒரே அள்ளாய் அள்ளுப்பட்டுப் போகிறது
ஒரு துண்டுச் செங்கபிலப் பசுமை.

இந்நாளில் எந்நாட்களிலுமற்ற நிம்மதியுடன்
கழிமுகத்து வண்டற் படிவாய் – உன்
அடிவயிறு கட்டி உறங்குகிறேன் வெது
வெதுப்பாய் -அது
பிறப்புக்கு முன்னதாயும் சாவை மிக
அண்மித்ததாயும் இருந்தது.

என்று முடியும் இக்கவிதையின் கடைசி இரு வரிகள் தத்துவார்தமானவை. ஒவ்வொரு மாதமும் பெண்ணுடல்
மாதவிடாய் ஊடாக கருமுட்டையின் பிறப்பையும் இறப்பையும் தொடர்ந்து நடத்தும் களமாக இருக்கிறது. பிறப்பும் இறப்புமே உயிரியக்கத்தின் அடையாளம். பிறப்பும் இறப்பும் ஆக்கலும் அழித்தலுமான பிரம்மனும்
சிவனுமாய் இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கதைப் பெண்ணுடலில் அதுவும் பெண்ணுடலை தீண்டாமைக்குட்படுத்திய மாதவிலக்கின் அடையாளத்தில் இருத்திக் கொண்டாடுவது என்பது பெண்ணுடலைக் கொண்டாடும் பெண்ணியத்தின் உச்சம். ஆழியாள் பெண்ணிய தளத்தில் தனித்து நிற்கும் தளம் இது.

உரத்துப் பேச கவிதை தொகுப்பில் ஆழியாள் ஒரு கவிதையில் சொல்லியிருப்பார், பெண் என்ற அடையாளத்தை உணரும் போதெல்லாம் ஏற்படும் வலியை. அதன் ரத்த வடுக்கள் வெடித்து சிதறி கிரகங்களாக உருபெறும். அப்போது உயிர்பெறும் என்மொழி, என் ஆதித்தாயின் பெண்மொழி என்பார். பெண்ணுடலைக் கொண்டாடிய ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளின் இக்கவிதை

ருநாவு கவிதைத் தொகுதி பற்றி வெளியீடும் விமர்சனங்களும்

மரப்பாச்சி வழங்கும் கவிதை வாசிப்பும்  -ஆழியாளின் கருநாவு கவிதைத்தொகுதி வெளியீடு ம்

ஆழியாளின் கருநாவுஅறிமுகம்

ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!யாழினி

ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைத் தொகுதி அறிமுகநிகழ்வு

தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு ––    சு. குணேஸ்வரன்

கருநாவு கவிதைத் தொகுதி பற்றிய குறிப்பு – வெலிகம ரிம்ஸா முஹம்மத்

அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள் –சி.ரமேஷ்

ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும் புதியமாதவி -மும்பை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *