ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!

யாழினி யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்)

கருநாவு ” ஒரு நீண்ட தூர பயணத்தின் போது வாசித்துக் கொள்ள முடிந்தது. வாசிப்பும் அதனூடான உள்வாங்கலும், சிந்தனை  எண்ணங்களும், அதனை வெளிப்படுத்தும் கருத்துப் பகிர்வுகளும் ஆளுக்காள் வேறுபாடுடையவை. இதனை அடிப்படையாகக் கொண்டு கருநாவை நான் வாசித்த போது என்னுள் எழுந்த சிந்தனைகளும் , மன உணர்வுகளுமே இங்கு பதிவாகின்றன.

கருநாவு கவிதை தொகுதி ஈழம் மற்றும் அதன் இன்னொரு பரிணாமமான புலம்பெயர் தமிழ் அடையாள வாசனையை வீசிக்கொள்வதோடு, மொழிபெயர்ப்பு கவிதைகள் இயற்கை மற்றும் அவரவர் சுயம் சார்ந்த விடயங்களையும் தேடிச் சென்றிருக்கின்றன.

‘அம்மா ” இது கருநாவின் ஆரம்பம்  – “நானும் வாழ்வும் ” இதனோடு தன்னை இடைநிறுத்தி மிகுதிப் பக்கங்களில் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு வாழ்வு கொடுத்திருகின்றது.
‘கருநாவு” கவிதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் அழகானவை, பல்வேறு அர்த்தப்பாட்டைக் கொடுப்பவை.

கருநாவின் ஆரம்பமே “அம்மா” -இன்றைய அவதி வாழ்வில் புலம்பெயர்  நாட்டில் வாழ்க்கைப் பொருளாதாரத்தை ஈடு செய்ய, கால்களில் சில்லுக் கட்டினால் போல் ஓடி ஓடி உழைக்கின்றாள். காதோரச் சவ்வுகளில் வலிசுண்ட,வலி தாங்கி குளிரில் ஓடும் அம்மாவின் அன்புக்காய் மழலைகள் மனம் ஏங்கும் படைப்பாகவே இதனைக் காண முடிகின்றது.
“செவ்வரத்தம் பூ ” இந்த அழகிய சிவப்பு நிற பூவோடு அந்த ஒரு மனிதனின் வாழ்வின் ஆதி,அந்தம் அத்தனையையும் மிகச் சாதாரணமாக ஒப்பிட்டுப் படைத்துள்ளார் கருநாவு கவிஞர் .

   “மிகச் சாதாரணமாய்ச்
   சிவப்பில்
  ஊறித் தோய்ந்து கிடந்தான்
   ஒரு செவ்வரத்தம் பூப் போல்”
வாழ்வு கண்டும்,வாழ விடாத சிவப்பு அவனை தன்னோடு முழுமையாக முழுங்கிக் கொண்டது.

“வீடு” இக் கவிதையில் வருகின்ற
என்னைச் சுழற்றும் கடிகாரமும

என்னோடே வளரும் சுவர்களும்
 பூட்டற்ற கதவுகளுடன்
சாத்த முடியாத யன்னல்களுடன்

எப் பக்கமும் வாயிலாக

வீடொன்று வேண்டும் எனக்கு.

படைப்பாளியின் எண்ணற்ற கற்பனைகள்,வாழ்க்கைச் சுற்றாடலில் இறுகியுள்ள,இறுக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக்குள் உள்ள முறைமைகளை அவிழ்த்துக் கொள்ளகூடிய சுதந்திரமான வாயிலை திறந்து கொள்ளும் நோக்கில் தனது மனகிடக்கைகளை பேசுவதாய்  உள்ளன.

“கொப்பித் தாளில் கிடந்த (பான்கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?” இக் கவிதையின் தலைப்பு போலவே அதன் உள்ளடக்கமும்,பான்கீ மூனைத் தவிர தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் அதிஉச்ச விளக்கத்தினையும், எம் ஊர்ச் சூழலின் பின் நோக்கிய வாழ்வையும் எட்டிப் பார்க்க வைத்துள்ளன.”சூட்டுக்கு சொந்தக்காரர் கவிதை கூட ஈழத்தின் சந்துபொந்துகளில் உயிர் காவு கொள்ளப்பட்ட உண்மைச் சம்பவங்களை இயல்போடு சொல்லியிருக்கின்றது.

“என் அண்ணன் லசந்தவுக்கு அவர்கள் கூறியதாவது….”               

வார்த்தைகளாலும்

பாஷைகளாலும்              

தீர்த்துக் கொள்ள முடியாத               

எல்லாவற்றையும்

மிகச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடிகின்றது
 துப்பாக்கிச் சன்னங்களால்
எவ்வளவு சுலபமாக,
ஒரு பிஸ்கோத்தை
  மொறு மொறுவென்று கொறிப்பது போல        

எவ்வளவு இலகுவாக… இக் கவிவரிகள் மனித உயிரின் பெறுமதியை (சாதி, இனம், மதம், மொழி வேறுபாடின்றி) வலியை பிழிந்து சொல்லியிருக்கின்றது.  அத்தோடு”வெற்றி வாகை” வெற்றியை மட்டும்மல்ல வெறுமைகளையும் கொடுத்துவிட்டிருக்கின்றன.

“நானும் வாழ்வும்” இக் கவியினூடு புலம்பெயர் நாடுகளைத் தம் வாழ்விடங்களாகக் கொண்டாலும், அதன் கலாசாரத்திற்கும் , பிறந்த மண் வாசனைக்கும் இடையிலான போராட்டங்கள், நிர்ப்பந்தங்கள் என்பவற்றை ஏக்கத்தோடு வெளிப்படுத்தி இருக்கின்றன.
                   

நான் வெளியே நின்றேன் – எனக்கு
மிகப் பிடித்த கருஞ்சிவப்புச்  சுங்குடிச்
சேலையில்
வாழ்வைப் பார்த்தபடி .

“நான் இலந்தைச் செங்காய்களையும், உறைப்பு பனாட்டையும் விரும்பினேன்”- இதுவே பலதாய், புலம்பெயர் அகதிகள் பலரின் உள்ளக் குமுறல்களாகவும் எதிரொலிக்கின்றது. இயற்கை வனப்புகள் சார்ந்த கருநாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெள்ளையர்களால் ஆளப்பட்ட கறுப்பின மக்களுக்காக,அவர்கள் விடுதலை பற்றி குரல் எழுப்புபவையாகவும் ,நிற வெறிப் போராட்டத்தில் மடிந்து போன கறுத்த முகங்களைப் பற்றியதாகவும்  உள்ளன.             

அவர்கள் போராடவேண்டியிருக்கிறது.
 ஒன்றாய்       
  உயிர் வாழவும்
காதல் செய்யவும்
சாவதற்கும் அவர்கள் போராட
  வேண்டியிருந்தது
  தங்களுக்குச்  சொந்தமான
  சொந்த மண்ணிலேயே!!!

மொழிபெயர்ப்பின் போது கையாளப்பட்டுள்ள அழகு தமிழ், வாசகர் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய மனோநிலையை உருவாக்கியிருக்கின்றது.  

“கருநாவு” குறைந்த எண்ணிக்கையுடைய கவிதைகளைக் கொண்டு தொகுப்பாக வெளிவந்திருப்பினும், தான் சொல்ல வந்த விடயத்தை இயல்பாகவும், உண்மைத் தன்மையுடனும் நறுக்கெனச் சொல்லி என் ஆழ்மனதில் நிலை பெற்று விட்டதென்றே கூறிக்கொள்ள முடியும்.
                                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *