அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்

சமீலா யூசுப் அலி(இலங்கை)

photowide
அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.

நாளை மறுநாள் பரீட்சை.பாதி குடித்த தேநீரும் பரீட்சைக் கையேடுகளுமாய் நானும் என் சகோதரியும் அடைபட்டுக்கிடந்தோம். நடு இரவு தாண்டி விட்டது.சாப்பிடக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ந்து போன உம்மாவும் உறங்கி விட்டார். நெஞ்சில் விரிந்த பொருளியல் குறிப்புக்கையேட்டுடன் நான் நிலத்திலேயே அயர்ந்திருக்க வேண்டும்.எவ்வளவு நேரம் அப்படி இருந்தோமோ தெரியாது. ஏதோ அமானுஷ்யமான கனவு.அது அறுபட முன்னரே தொலைபேசி’ ட்ரீங் ட்ரீங்’ என அலறத்துவங்கியது.ஓடிப்போய்த் தூக்கினால் யார் யாரோ அழும் குரல் ‘உம்மும்மாவுக்கு சொகமில்ல, ஒஸ்ரோவுக்கு கொண்டு போகப்போற…. வாப்பாவக் கூப்பிடுங்க’என்னை அறியாமல் நான் வாப்பாவின் அறை வாசலில் நிற்கிறேன். அதற்குள் முன் வாயிலருகே ஆட்டோ வந்து நிற்கிறது. ஓடிச்சென்று ‘வாப்பும்மா… வாப்பும்மா’ என்று உள்ளே சாய்ந்திருந்த வாப்பும்மாவை அசைக்கின்றேன்.கடைசி கடைசியாக ஒரு பெருமூச்சுடன் வாப்பும்மாவின் தலை பின்னே சரிகிறது.கடைசி வரை பெரியமகனைக் கூப்பிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தாராம்.பெரிய மகன் தான் வாப்பா.எந்த வைத்தியமும் பலனளிக்காமல் இறைவனை நோக்கி ஒர் ஆன்மா சிறகடித்துச் சென்று விட்டது.
‘வாப்பும்மா மெளத்தாகிட்டாங்க’
photowide

அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.
வாப்பும்மா-
உம்மும்மா இறந்த போது உம்மாவுக்கு மூன்று வயது.
உம்மாவின் வாப்பா நான் பிறக்க கொஞ்சம் முன்னால் மண்ணுக்குள் சென்று விட்டார்கள்.நெடிதுயர்ந்த தோற்றமும் சிவந்த நிறமும் கொண்ட அப்பா- வாப்பாவின் வாப்பா- மரணித்த போது எனக்கு வெறும் ஆறே வயது.எனவே எங்களைப்பொறுத்த வரை பழைய காலம் என்ற மாய உலகத்திற்குப் பாலமாய் இருந்தவர் வாப்பும்மா மட்டுமே. வாப்பும்மாவைப் பற்றி எழுதும் போது எதை எழுதுவது ,எதை விடுவது என்று ஒரே குழப்பமாய் இருக்கிறது.ஏனெனில் ஒரு தனிப்புத்தகம் எழுதக் கூடியதான நினைவுகள் என் நெஞ்சில் நிரம்பிக்கிடக்கின்றன. அடுத்தது; சில சம்பவங்கள் பிரத்தியேகமானவை; அந்தரங்கமானவை.அவை எங்களுக்கும் எங்களது வாப்பும்மாவுக்கும் மட்டுமாய் இருந்து விட்டுப்போகட்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றேன்.
வாப்பும்மா 5 ஆம் வகுப்பு வரை தான் படித்தார்.ஆனால் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில் அந்தக்காலத்திலேயே உறுதியாக நின்றிருக்கிறார்.காரும் செல்வமுமாய் வாழ்ந்து பின் அன்றாடச் சாப்பாடிற்கே அல்லாடிய குடும்பம் அவர்களுடையது. ஒன்பது பிள்ளைகளை படிக்க வைக்கவும் பராமரிக்கவும் எத்துணை துன்பம் சுமந்திருப்பார்?

எந்த நேரத்திலும் ஏழ்மையை மற்றவர்களிடம் காட்டி இரந்து வாழக்கூடாது என்பது வாப்பும்மாவின் உறுதியான கட்டளையாம். கந்தலைக்கசக்கி உடுத்தாலும் கால் வயிற்றுக் கஞ்சி தான் குடித்திருந்தாலும்இ விருந்தாளிகள் வந்து விட்டால்இ வீட்டில் வளர்க்கும் கோழியை அடித்துச் சாப்பாடு போடும் விருந்தோம்பல் அவருடையது.
சராசரிக்குச் சற்றுக் குறைவான உயரம்.மாநிறத்துக்கும் சற்றுத்தூக்கலான நிறம். கடைசிவரை நரைக்காத கருந்தலை மயிர்.இறக்கும் போது 83 கோடை காலங்களைத் கடந்து வந்திருந்தார். வாப்பும்மாவுக்கு பிள்ளைகளின் வீட்டில் தங்கி வாழ்வதில் சில அசெளகரியங்கள் இருந்தன.தோட்டத்தின் நடுவே வாப்பாக் கட்டிக் கொடுத்திருந்த தனிவீட்டில் தான் தன் கடைசி மூச்சு வரை வாழ்ந்தார். இல 7 என்ற தகடு தொங்கும் அந்த வீட்டை எப்போதாவது கடக்கும் பொழுதுகளில் வாசலில் வாப்பும்மா கைத்தடியை ஊன்றி நிற்பதாய் தெரியும்…அது நிஜமா பிரமையா என்று என்னால் இன்று வரை பிரித்தறிய முடியவில்லை.

வாப்பும்மா வீடு, ஒரு பக்கம் விறகடுப்பு, மறுபக்கம் சில இருக்கைகள், நடுவில் ஒரு தடுப்புக்கொண்ட  சிக்கனமான சொர்க்கம்.வாப்பும்மாவுக்கு நிறையப் பேரக்குழந்தைகள்இ அதுவும் ஒவ்வோர் வயதில். வாப்பும்மா பிள்ளைகளுக்குத் தருவதற்காய் சில பிரத்தியேகமான தின்பண்டங்கள் வைத்திருப்பார்.அரை நூற்றாண்டு கடந்த வாப்பாவும் சாச்சாமார்களும் கூட அவருக்குப் பிள்ளைகள் தான். ஈத்தம் பழம், பிஸ்கட்.கற்கண்டு அல்லது எண்ணெய் வாசம் தூக்கலாயிருக்கும் தொதல், இவற்றில் ஒன்றோ பலவோ எமது கரங்களில் திணிக்கப்படாமல் நாங்கள் அங்கிருந்து திரும்பியதில்லை. ஈத்தம் பழத்துக்கு உயிர் வந்த கதை கேட்டிருக்கிறீர்களா? இப்போது நினைத்தாலும் மனம் விழுந்து விழுந்து சிரிக்கிறது.

வாப்பும்மா ஈத்தம் பழத்தை சின்னக் கையுரலில் தட்டித்தான் சாப்பிடுவார்.அன்றும் அப்படி ஈத்தம் பழத்தை எடுத்து உரலில் வைத்து தட்டப்போனாராம்.ஈத்தம் பழமோ உரலுக்கும் விரலுக்கும் அகப்படாமல் நழுவி குடு குடுவென ஓடியதாம் பார்த்தால் அது ஒரு கரப்பான் பூச்சி. வாப்பும்மாவின் முத்தம்- அது மறக்ககூடியதன்று.
கன்னங்களில் இப்போதும் அந்த வயதான முத்தத்தின் கதகதப்பு மாறாமல் இருக்கிறது.அன்பின் மொத்த வர்ஷிப்பை ஏந்தி வரும் அந்த முத்தத்தைப் பெற்றுக் கொள்ள நாங்கள் குனிந்து கொள்வோம், வாப்பும்மாவை விட நாங்கள் மிகுந்த உயரமாய் வளர்ந்து விட்ட படியினால். வாப்பும்மாவின் ஒரு பேரப்பிள்ளை வானொலிப் பெட்டியொன்றினை வாங்கிக் கொடுத்திருந்தார்.அதில் முஸ்லிம் நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருப்பார்.

நேரசூசிப்படி இயங்கியது வாப்புமாவுடைய வாழ்க்கை.ஒரு தொழில் பார்க்கும் பெண்ணுடையதை விட ஒழுங்கமைப்புடன் கூடியது. பழங்களில் அரைக் கனிந்தவை தான் அவருக்குப் பிடித்தம்.சாப்பாடு நேரத்துக்குச் சாப்பிட்டாக வேண்டும் அவருக்கு.காலையில் எந்த இடி இடித்து எந்த மழை பெய்தாலும் தவறாமல் குளிப்பார். தடுமன் காய்ச்சலில் கூட குளியலை விட்டதில்லை.தவறாமல் குளியல் முடிந்ததும் இளநீர் குடிப்பார்.குளித்து விட்டு தலை முடியைத்தூக்கி சின்னதாய் ஒரு கொண்டை போடுவார். அந்தக்கோலத்தில் தான் அவரைக் கடைசியாகப் பார்த்து விட்டு வந்ததுஇஅப்போது அது தான் அவரோடு கடைசியான விடைபெறல் என்பதைக் கொஞ்மேனும் அறிந்திருக்கவில்லை. வாப்பும்மாவுக்குப் பிடித்த நிறம் கறுமை கலந்த சிவப்பு மற்றும் கருவூதா.வாப்பும்மா பேசும் போது ஒரு நாடகம்

பார்ப்பது போன்ற உணர்வு எமக்கிருக்கும்.சம்பவங்களை விவரிக்கும் போது அவ்வப் பாத்திரங்களாகவே மாறிப் பேசுவார்.அவரது பேச்சில் வழக்கொழிந்து போன ‘சிறா(கம்பு)இ எதரக்கட்டி(ஐஸ்கட்டி), வகரக்கட்டு(விளக்கு மாறு) போன்ற வட்டாரச்சொற்களைத் தாராளமாகக் கேட்கலாம். வாப்பும்மாவின் சமையல் கைவண்ணம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர் சமைக்கும் போது அந்தப்பக்கம் செல்பவர்களுக்கு இன்னொரு மூக்கு வேண்டியிருக்கும்.அதிலும் அந்தப் இறைச்சிப் பொரியல்… இப்போது நினைத்தாலும் நாக்கின் சுவை நரம்புகள் சிலிர்ந்துக் கொள்கின்றன.எந்துணையோ விதவிதமாக மேலைத்தேய, கீழைத்தேய,இந்திய சீன முறைகளில் இறைச்சிப்பொரியல்கள் சாப்பிட்டிருக்கிறேன்; ஆனால் சத்தியமாகச் சொல்கிறேன், வாப்பும்மாவின் இறைச்சிப்பொரியலின் சுவையும் மணமும் ஒப்பிட முடியாத தனிரகம்.

வாப்பும்மாவிடம் ஓர் அழகான பழைய காலத்து அலுமாரி இருந்தது.அதனை துண்டு துண்டாகக் கழற்றி மீண்டும் பொருத்தலாம்.அந்த அலுமாரியைத் திறந்து அந்துருண்டை வாசம் கலந்திருக்கும் அவரது சாரிகளைத்தொட்டுப் பார்ப்பது எங்களது தவறாத பொழுது போக்கு. நோயில் விழுந்து பாயில் படுத்து நாம் அவரைக் கண்டதில்லை. இறப்பதற்கு முந்தைய தினமும்  வீட்டுத்தோட்டத்தைக் கூட்டி குப்பையை எரித்துக் கொண்டிருந்தாராம்.வாப்பும்மா- அவர்  ஒரு சரித்திரம்.அவருக்காக நான் தர  முடிந்ததெல்லாம் இருகரம் ஏந்திய பிரார்த்தனைகளும் சில விழிநீர்த்துளிகளும் மட்டும் தான்.
இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.
வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *