முகமூடி… உஷா கனகரட்னம்


கைப்பை ஒரு புறம், காரின் சாவி இன்னொரு புறம் எனத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று கட்டிலில் சரிந்தவள் தான். கண்கள் இரண்டையும் மூடிக் கொண்ட போது ஆளை விழுங்குமாற் போன்றதொரு அசதி அவளைக் கட்டிலில் அழுத்தியது. சாதாரண வேலை நாள் தான். இருந்தும் ஏதோ ஒரு தெருநாய் வெகு தூரம் தன்னைத் துரத்தி வந்தாற் போன்றதொரு படபடப்பும் அயர்ச்சியுமாக இருந்தது. காரணம் தான் புரியவில்லை. இதுவரை காலமும் தயங்கித் தயங்கி எட்டிப் பார்த்த சூரியனிடம் கூட இன்று அத்தனை பிரகாசம். இனியும் என் கதிர்களை ஒளித்து வைக்க முடியாது என்பது போல் பொங்கி எழுந்து, எங்கும் வியாபித்துத் தன் விடுதலையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது

இளவேனிற்காலத்தின் ஆரம்ப விடுமுறை. இன்றிலிருந்து இன்னமும் 8 நாட்களுக்கு வேலை இருக்கப் போவதில்லை என்கிற உற்சாகம் அன்று ஓய்வறைக்குள் தெளிவாகவே தெரிந்தது. ஆங்காங்கே கலகலப்பான உரையாடல்களும் சிரிப்புமாக இருந்தது. நோர்வேயின் வடமூலையில் வசிக்கும் தனது காதலனைப் பார்க்கப் போகப் போகிற ஒருத்தியும், தன் சகோதரியின் நாயைக் கொண்டு போய்க் கடல் கடந்து விடப் போகிற இன்னொருத்தியும் சுவாரஸ்யமாக அங்கு நின்று பேசிக் கொண்டிருக்கும் போது தான் கயலும் இன்று வேலையை விட்டுப் புறப்பட்டாள்.”விடுமுறையில் உன்னுடைய ப்ளான் என்ன காயல்?” என்றாள் அவர்களுள் ஒருத்தி. உணவு இடைவேளைகளில் சாலட்டை மென்றபடி. தம்மைப் போலல்லாதவர்களின் நடவடிக்கைகளைச் சல்லடையிட்டு வேறுபாடுகள் குறித்து விவாதிக்க அவர்களுக்கு நிறையவே அவகாசம் இருக்கிறது. அவர்களின் அனுதாபப் பார்வையைத் தவிர்க்க வேண்டுமானால், அவர்களுடைய பொழுது போக்கும் முயற்சிகளில் கூட்டுச் சேர்ந்து கொள்வதில் ஆர்வமில்லாத பட்சத்தில் ஏதாவது ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்து விட வேண்டியிருக்கிறது.
“என் பியான்செயிடம் லண்டனுக்குப் போகிறேன்…” எனச் சொல்ல வாயெடுத்தவள், அட,. விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு வரும் போது “எங்கெல்லாம் சென்றாய்?” என்று கேட்டால்…….என்ற முன்னெச்சரிக்கையுடன், ஒரு வினாடியும் தாமதிக்காமல், “என் பியான்செ ஏற்கனவே வந்து விட்டிருப்பான். 1 கிழமை அவனுடன் நிறைய ப்ளான் போட்டிருக்கிறேன்….” என்றாள்.

சொல்வது உண்மையா என்று உறுதி செய்து கொள்வதற்காக ஒருவரும் அவளைப் பின்தொடர்ந்து வந்து பார்க்கப் போவதில்லை எனும் போது துணிவிற்கென்ன பஞ்சம்! அவளைப் பொறுத்த வரை பொய்களாலான உலகம் இது. இங்கு அக்கறை.. ஆறுதல்…. அன்பு எல்லாமே பொய். இதில் நம் உண்மை எடுபடாது. அவளது பதில் அவர்களுக்கும் உற்சாகம் தர, “சிறந்த விடுமுறையாக அமையட்டும்!” என்று வாழ்த்தி விடைபெற்றார்கள். நிஜத்தை மட்டுமே அவள் பேசிய ஒரு காலம் உண்டு. அப்போதெல்லாம் . பாவம். நண்பர்கள் இல்லாத ஜந்துவா இது..!?. என்பது போன்ற பரிதாபப் பார்வைகள் அவளை முட்களாய்க் குத்தும். உனக்கு நண்பர்கள் இல்லையா..? அப்படியானால் வேலை இல்லாத நாட்களில் என்ன தான் செய்கிறாய்…? உங்கள் கலாச்சாரத்தில் கட்டுப்பாடுகள் அதிகமோ!? நீயாக ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க முடியாதா…? போன்ற கேள்விகள் பல எழும். அவற்றைக் கொண்டு சுவாரஸ்யமான ஒரு உரையாடலைத் தொடங்க அவர்கள் விரும்பக்கூடும் ஆனால் தற்போதைய மனநிலையில் பிறர் முன் பேசுபொருளாகத் தான் மாட்டிக் கொண்டால் அது இருக்கின்ற தன் கொஞ்ச சக்தியையும் தன்னிடமிருந்து உறிஞ்சிக் கொண்டு விடும் என்று கயல் நம்பினாள்.

இன்னமும் 8 நாட்கள் அவளுக்கே சொந்தம். நன்றாகத் தூங்கலாம். பாட்டுப் பாடியபடி வீட்டைச் சுத்தம் செய்யலாம். மழை பெய்யும் இருண்ட மாலை வேளைகளில் நெடுந்தூரம் நடந்து போகலாம். நடுநிசியில் எழுந்திருந்து இதமான இசையைக் கேட்டபடி ஜன்னலினூடாகப் பெய்யும் கோடை மழையை ரசித்திருக்கலாம். தனிமை அவள் பலம். அதைத் தவிர்த்து அவள் சந்திக்கும் வேறு எதையும் தேர்ந்தெடுக்குமளவிற்கு எதுவுமே அத்தனை முக்கியமானதாய் அவளுக்குத் தோன்றுவதில்லை.
பீப்பீப்பென்ற கைத் தொலைபேசியைச் சலிப்புடன் எடுத்துப் பார்த்தாள். ஆதித்தியிடருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “லீவு தானே? தனிய உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதே. இங்கு புறப்பட்டு வா. எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்” என்றது குறுஞ்செய்தி. கட்டிலில் கிடந்த நிலை மாறாமலே,

“இந்தமுறை மறுக்க முடியவில்லை. வேலையில் நண்பர்களுடன் மலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வந்தபின் அழைப்பேன்” என்று அவசர அவசரமாக எழுத்துக்களைத் தட்டி அனுப்பியவள் சலிப்புடன் தொலைபேசியைக் கட்டிலில் தொப்பெனப் போட்டாள் . ம்ம்.. இப்போதெல்லாம் வெகு சுலபமாக வருகிறது இந்தப் பொய்.ஆதித்தியிடம் உண்மையைச் சொல்லலாம் தான். ஆனால் இலகுவில் சமாதானமாக மாட்டாள். அதுவே நீண்ட வாக்குவாதமாகப் போய் விடும். தனக்குக் கணவன் என்றொரு கனவான் ஒருவன் தன் வீட்டில் இருக்கிறான் என்கிற எண்ணமே இல்லாதவள் போல அவளால் எப்படிப் பேச முடிகிறதோ! ஆனால் கயலுக்கு அது தான் பெரிய தலைவலியே. இந்நாட்டாருடன் வேற்றுமை பாராது பழகும் தமிழ்ப் பெண்கள் பற்றிய அந்த மனிதனது அபிப்பிராயத்தை அவனது பார்வை, சிரிப்பு, சில வேளைகளில்- அருவருப்பூட்டும் அவனது தொடுகைகள் எல்லாமே காட்டிக் கொடுக்கும். இதை அவள் எப்படிப் போய் ஆதித்தியிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்!

தனியனாய் வாழும் நம் பெண்கள் தமது வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அசௌகரியங்களுள் இதுவும் ஒன்று போலும். ஒரு சின்னப் பொய். எவருக்கும் அதனால் பாதகமில்லை என்பது கயல் தனக்குத் தானே கூறிக் கொள்கிற சமாதானம். யாருக்கும் தொந்தரவற்ற இந்த சுயநலம்… அல்லது தன்னலம் அவளுள் ஒரு வித ஆளுமை உணர்வைக் கொடுக்கிறது. என் கதையின் வசனகர்த்தா நானே என்கிற மாதிரியான ஒரு வித குரூர திருப்தி கண்களுக்குப் புலப்படாத சில காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது.

காதல், கல்யாணம், ஒண்டிலும் அர்த்தமில்லை எண்டு சொல்லிறாய். ஆனால் எங்கட நினைப்புகளை மீறி வாழ்க்கையில் எதுவும், எப்பவும் நடக்கலாம் கயல். உன்ர மனதில இருக்கிறதைக் கதிரோட பேசு .. இல்லாட்டிப் பிறகு உனக்குத் தான் கஷ்ரமாப் போகும்.”
ஆதித்தி அவளிடம் சொன்னது தான். ஒரு தடவை அல்ல. பல தடவைகள் சொல்லியிருக்கிறாள். கயல் மேல் கோபப் பட்டும் இருக்கிறாள். இருந்தும், பள்ளிக்காலம் முடிந்து ஆதித்திக்குத் திருமணம், குழந்தை என்றான பின்னும் அவர்களிடமான தொடர்பு இன்னமும் அறுந்து போகாமல் இருக்கிறது என்றால் அது ஆதித்தியினால் தான். ஏதேதோ எண்ணங்களுடன் கயல் அப்படியே அங்கே அயர்ந்து தூங்கிப் போனாள்,

தெருவெல்லாம் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. நடுநிசி நேரம். கயல் ஒடிக் கொண்டிருக்கிறாள். கண்ணில் பட்டவர்கள் எல்லாம் வெறுப்பை உமிழ்கிறார்கள். திடீரென்று அங்கு ஆதித்தி வந்து காரில் இறங்குகிறாள். “ஆதித்தி .. எல்லாரும் என்னைப் பைத்தியம் எண்டு சொல்லுகினம். ப்ளீஸ் ஆதித்தி உனக்குத் தான் என்னைத் தெரியும். இவைக்குச் சொல்லு. என்னை வெறுக்க வேண்டாம் எண்டு. தாங்க முடியேல்ல ஆதித்தி !… இந்தப் புறக்கணிப்பை என்னால தாங்க முடியேல்ல… ” கயல் உடைந்து அழுதபடி ஆதித்தியை நோக்கி நடக்க, அவளைக் கவனிக்காதது போல் ஆதித்தி அவளைத் தாண்டிப் போய், யாருடனோ சிரித்துப் பேசி விட்டு மீண்டும் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து விடுகிறாள். கயல் எதுவும் புரியாதவளாக அதே இடத்தில் அசையாமல் நிற்கிறாள்.

“தெய்வமே. என்ன இது.. ஆதித்தி கூடவா என்னைப் புறக்கணிக்கிறாள்?.. நான் ஒரு தனித்தவளா..? எவருக்கும் வேண்டாதவளா ?”
ஓவெனக் கதறியழ வாயெடுத்தும் குரல் வராது திமிறியதில் கயல் திடுக்கிட்டு விழித்தாள் . ஓஓ.. கனவா.?! அதே கனவு. அடிக்கடி இதே கனவு வருவதால், என்னடா இந்த ஆதித்தி.. இன்று கூட நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்பது போல் கவலை தொண்டையை அடைத்தது. அது கனவு மட்டுமே. உண்மை இல்லை எனப் புரிந்து கொள்ள வெகு நேரமானது.
எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு சுடச் சுடத் தேநீரைப் பெரிய குவளை முழுவதும் நிரப்பிக் கொண்டு ஜன்னலருகே வந்து உட்கார்ந்த போது நெற்றிப் பொட்டில் ஒரு எரிச்சல். ஆதித்தியின் நினைவுகள் மீண்டும் வந்தது. ஒரு காலத்தில் அவளுடனான உரையாடல்கள் எப்போதும் சூடானதாகவே தான் இருக்கும், இந்தத் தேநீரைப் போலவே
..

“ஒரு மனுசரை எங்களுக்குச் சரியாப் பிடிச்சிருந்தால் அது காதலாத் தான் இருக்கோணுமா? இயற்கையைப் பாக்கிறோம். மிகப் பிடிச்ச இசையைக் கேக்கிறோம். அது போலத் தான் கதிரும். ரசிக்கிறேன். அதைக் காதல், கல்யாணம் என்று கொச்சைப் படுத்திறதே எனக்கு அவமானமா இருக்கு”..
என்று கயல் சீறுவாள் . இந்தக் கோபம் எல்லாம் வார்த்தைகளில் தானே தவிர. அந்த அவஸ்த்தை கொடிய புற்று நோய் போல அவள் சிந்தனைகளை ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டிருப்பதை ஆதித்தி பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்.பருவ வயதில் ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்படுவது சகஜம். நம் மனம் அதைக் காதல் என உருவகப்படுத்திக் கொள்கிறது. பொம்மை கேட்கும் குழந்தையைப் போல அடம் பிடிக்கும் மனதை. “அடப் பைத்தியமே. இது காதல் அல்ல!” என்று நம்பச் செய்து விடலாம் என்று கயல் அன்று நிச்சயமாய் நம்பினாள்.

“சரி. நான் எதுவும் சொல்லேல அம்மா. நீ ரசிச்சுக் கொண்டே இரு. எதையும் சொல்லிப் போடாத. இன்னும் 1 மாசத்தில அவன் போயிருவான்.”
என்று கோபமாகச் சொல்வாள் ஆதித்தி.
“போகக் கூடாது… !” கயலின் மனம் உள்ளூரப் பதறும் அதே கணம். “போகட்டும். அப்போது தான் இந்த வலிக்கு ஒரு முடிவு வரும் “என்றது உள்ளுக்குள் இன்னொரு குரல். இருந்தும்,
“என்ன தான் சொல்லோணும் எண்ணிறாய்…..?” என்றாள் ஒரு தடவை தன் குரல் நடுங்க.
மிக ஜாக்கிரதையாய்ப் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தவளாக, அவளருகே வந்த ஆதித்தி கயலின் தோள்களை ஆதரவாகத் தொட்டு.
“எங்கட கதிர் தானே. என்ன பயம்.? உன் மனதில அவனைப் பற்றி இருக்கிற எண்ணங்களைப் பேசு….அதுக்குப் பிறகு அமைதியா உன் வாழ்க்கையைப் பாக்கலாம்”
சர்ரென்று விலகிக் கொண்ட கயல்,
“எதுக்கு? ஏன் இப்ப, அதுவும் அவன் போகப் போறேன் எண்டு சொல்லக்குள்ள…? அமைதியா உன் வாழ்க்கையைப் பாக்கலாம் எண்டா என்ன அர்த்தம்? அவன் என்னை அலட்சியப்படுத்தீருவான் எண்டு நிச்சயமா நம்பிறாய் நீ.!
எனச் சீறினாள். ஆதித்தி எத்தனை சமாதானப் படுத்தினாலும் கேளாமல் கோபமும் வேதனையுமாக கயல் வெடுக்கென்று

எழுந்து போக,

“பைத்தியக்காரி! ”

அவளுக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பது போல அழுத்தமாக,, கிட்டத்தட்டக் கத்தவே செய்வாள் ஆதித்தி. கோபத்தில் வெளியேறும் கயல் இறுதியாகச் சொல்கின்ற,
-“என்னோட இனி ஒரு நாளும் பேசாத!”. என்கிற வார்த்தைகளை இதுவரை காலத்தில் அவள் ஆதித்தியிடம் குறைந்தது பத்துத் தடவையாவது கூறியிருப்பாள்.
அதைக் காதிலே வாங்கிக் கொள்ளாதவள் போல மறுநாள் மீண்டும் வழக்கம் போல் அவளுடன் பாடசாலை செல்ல வாசலில் வந்து காத்திருப்பாள் ஆதித்தி. இருவருமே எதுவும் நடக்காதது போல் அதன் பின் இயல்பாகப் பேசிக் கொள்வார்கள். அதை இப்போது நினைக்கையில் கயலின் முகத்தில் தன்னை அறியாமல் ஒரு புன்னகை தோன்றியது. குறுஞ்செய்தி அனுப்பிய அவளைத் தொலபேசியில் அழைத்தால் என்ன என்ற ஒரு எண்ணம் வந்து போனாலும் கூடவே தான் சொல்லி விட்ட பொய் அவளைத் தடுத்தது.

மறு நாள் காலை நேர ஓட்டப் பயிற்சி முடித்து வீட்டிற்கு வந்த ஆதித்திக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. குறுஞ்செய்தி.. 10 வருடங்களாக எங்கே இருக்கிறான் என்றே தெரியாது மறந்து போயிருந்த கதிரிடமிருந்து வந்திருந்த ஒரு குறுஞ்செய்தி. நேற்றைய நினைவுகள்.. அந்த பயங்கர கனவு. தொடர்ந்து கதிர்…
“அன்பான கயல்.
நலமா? நான் 2 நாளில் நோர்வேயிற்கு வருகிறேன். உன்னைப் பார்த்துப் பேச நிறைய இருக்கிறது. எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவாய் தானே? வந்து தொலைபேசியில் அழைக்கிறேன். “
என்றது குறுஞ்செய்தி. படபடவென்று இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது கயலுக்கு. லண்டனுக்குச் சென்று 10 வருடங்களாக மறைந்து போனவன். அவனுக்குத் திருமணமாகி விட்டதென்பதை மட்டுமே அவள் அறிந்திருந்தாள். இங்கே வருகிறானா… சரி என்னிடம் என்ன பேச வேண்டும்? மனைவியுடன் வருவானோ? எப்படியிருந்த போதும் அவனைப் பார்க்க… நேரடியாக எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவளுக்குத் திகில் தருவதாக இருந்தது.

இருள் சூழ்ந்த அந்த இலையுதிர் காலத்து மாலைப்பொழுதை அத்தனை சுலபத்தில் அவளால் மறந்து விட முடியாது. கொண்டாடுவதற்கெல்லாம் அந்த வயதில் அவர்களுக்கு ஒரு காரணம் வேண்டியிருக்கவில்லை என்றாலும், அன்று கயலுடன் கூடத் தங்கியிருந்த ஆதித்திக்குப் பிறந்த நாள். நண்பர்கள் வீட்டில் குழுமியிருக்கும் நாட்களில் வழக்கமாக இருக்கும் சிரிப்பு, வேடிக்கை எல்லாம் அன்றைய நாளில் மட்டும் எப்படி அத்தனை வலி மிகுந்ததாக இருந்தது என்பது புதிர் தான். கயலின் மனம் கனத்துப் போய் வெடிக்கத் தயாராக இருந்தது. கதிர் யாராருடனோ பேசிச் சிரித்துக் கொண்டும் பாட்டுகள் பாடிக் கொண்டும் தனை மறந்து போயிருந்தான். விசாவிற்காகக் காத்திருக்கிறவன் எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டிற்குப் பறந்து விடுவான் என்பது அங்கு எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் கயலுக்கு மட்டும் என்னவோ உயிரோடு அவளில் பாதியை ரத்தமும் சதையுமாய்ப் பறித்துப் போய் விடுகிறாற் போல வலித்ததே.

இவனை இனி அவள் காணாமலே போகலாம். ஆனாலும் அவனிடம் அவள் பிரத்தியேகமாக விடைபெற முடியாது. அங்கு வீடியோவில் போய்க் கொண்டிருந்த மூன்றாம் பிறை திரைப்படத்தை ஆறாம் தடவையாக உட்கார்ந்து ஒன்றிப் போய் பார்த்துக் கொண்டிருந்த நட்புகளுக்கு அவளுள் ஆக்கிரமித்திருந்த பிசாசுகளின் ஆட்டம் தெரிந்திருக்க நியாயமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் கதிரிடம் பேசுவதைத் தவிர்த்து அப்போதெல்லாம் முழுவதுமாக நிறுத்தி விட்டிருந்தாள். ஆனாலும் நண்பர்களுடன் அவன் வீட்டிற்கு வருவதும் , தான் அவனுடன் பேசாததை அறியாதவன் போல அவன் தன்னுடன் சகஜமாகப் பேசுவதும் அவளுக்கு மிகவும் வேண்டியதாக இருந்தது.நண்பர்களுடன் கூடியிருக்கும் போது, அவன் முடிவில் ஏதும் மாற்றம் உள்ளதா, எப்பவேனும் அவன் திரும்பி வருவானா… என்பது போன்ற கேள்விகளை யாரேனும் அவனிடம் கேட்பார்களா….என்றால்… அடச் சீ! என்றிருந்தது அவளுக்கு. நம்முடன் பல வருடங்களாகக் கூட இருந்தவன் நிரந்தரமாக நம்மை விட்டுப் பிரியப் போகிறான் என்றால் கொஞ்சம் கூட மனவருத்தம் இருக்காதா என்ன? போயும் போயும் ஒரு திரைப்படத்தில் மட்டும் யாரோ ஒரு கமலஹாசனின் நடிப்பை உணர்ச்சி வசப்பட்டுப் பார்க்கிறார்களே… எவருக்கும் அவன் புறப்படுவது பற்றிய எந்த உணர்வும் இல்லாதிருக்கத் தான் மட்டும் முட்டாள்த்தனமாய் எதையாவது கேட்டுவைக்க முடியுமா என்ன?

ஏற்கனவே பார்த்திருந்தும் அந்தத் திரைப்படத்தின் முடிவைப் பார்த்தால் உடைந்து போய் விடுவேன் என்ற பயம் எழ, மெதுவாய் நழுவி வாசலுக்குச் சென்றாள் கயல். பலத்த காற்றில் விசிறியடித்துக் கொண்டிருந்த மழையால் வாசல் தாண்டி வீட்டினுள்ளும் சாரல் வீசி நிலம் நனைந்திருந்தது… ஓவென்று கதறி அழத் தோன்றியது அவளுக்கு.

“ஓஓஓ.. நல்ல மழை என்ன., ?”..வெளியே வந்து பார்வையை ஓட விட்ட கதிர் அவளைப் பார்த்து வழக்கமான தன் மர்மப் புன்னகையை உதிர்க்கிறான்.
கண்களில் எட்டிப் பார்த்த ஈரத்தை அவசரமாய் மறைத்துக் கொண்ட கயலுக்குப். படபடப்பு அதிகமாகியது. ஏதாவது சொல்லலாமா? கதிர் போகாதே! என்று உள்ளே ஒரு குரல் ஓலமிட்டாலும், “நீ போய்விடு” என்று இன்னொரு குரல். எதைக் கேட்பது? பேசுவதற்கு அவளிடம் எதுவும் இருக்கும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்காதவன் போல் மழையைச் சில கணம் வெறித்துப் பார்த்து விட்டு மறுபடியும் அந்தத் தொலைக்காட்சியில் தொலைந்து போவதற்கு மறைந்து போகிறான்..
ஏனோ கோபம் வந்தது அவளுக்கு. எந்த உணர்வையும் எளிதில் காட்டி விடும் அவளது முகம் இவனுக்கான உணர்வுகளை மறைத்து, மறுத்து அவற்றைப் பிரதிபலிப்பதையே மறந்து விட்டனவோ!? ஆற்றாமையால் அவனை எரித்து விடுவது போலத் தொடர்ந்த அவளது முறைப்பை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை. சரி. மழையைப் பற்றி என்ன கவலை இவனுக்கு… இப்போது எதற்குப் பின்னாடியே வந்து வேவு பார்க்கிறான் !?அவளது எண்ணங்களை அவன் அறிவானோ? அல்லது சும்மா வேடிக்கை பார்க்கிறானா..? அவள் எதையாவது உளற வேண்டும்… அதற்கு அவன் உன்னை எனக்குப் பிடிக்கும். ஆனால் காதல் இல்லை என்று நாகரிகமாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டு விடலாம். த்ரில்லாக இருக்கும் என்று வேடிக்கை பார்க்க வந்திருப்பானோ….?

மழை நின்று எல்லா நண்பர்களும் வீட்டிற்குச் சென்ற பின்னும் அவள் வாசலிலிருந்து அசையவில்லை. இரண்டு, மூன்று தடவைகள் கூப்பிட்டுப் பார்த்த ஆதித்தி பின் என்ன நினைத்தாளோ, தன் கைகளை நீட்டி அவளைப் பிடிக்க, சட்டெனப் பலமின்றிக் கயல் சரிய, சிரமப்பட்டு அவளைக் கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்று அவளின் கட்டிலில் அவளை உட்கார வைத்தாள். “பைத்தியக் காரி!” என்றவளின் முகத்தில் இம் முறை கோபத்திற்குப் பதிலாகக் கவலை தான் தெரிந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஏதாவது காரணம் கூறிக் கதிர் நண்பர்களுடன் அடிக்கடி வந்து போனான். அந்தச் சிறிய வீட்டில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய விசாலமான ஜன்னலினூடாக அவர்கள் வசித்த அந்த ஒடுங்கிய தெருவுக்குள் நுழையும் கதிரின் சாம்பல் நிற நிஸ்ஸானின் ஸ்லோ மோஷன் கயல் மனதில் தேரில் அசைந்து வரும் கிருஷ்ணரின் உலாவாகப் பதிந்து போயிருந்தது. தெருவின் திருப்பத்தில் அதைப் பார்த்ததும் ஒரு கணம் அதிகரிக்கும் அவளின் இதயத்துடிப்பு அவனும் நண்பர்களும் மேலே வந்து அழைப்புமணியை அழுத்திப் பல வினாடிகள் கழித்து ஆதித்தி கதவைத் திறக்கும் வரை நீடிக்கும். ஏதோ ஒரு வேலையில் ஆழ்ந்திருப்பது போல் பாவனை செய்து கொண்டிருக்கும் அந்த திக் திக் நிமிடங்கள்… அதற்குள் இருதயம் பல தடவை வெளிக்கிளம்பிப் பின் அடங்கிப் போனாற் போன்றதொரு பூகம்பம் அவளுள் நிகழ்ந்து விட்டிருக்கும்….
அதிரடியாக அடிக்கடி வந்து வாசலில் நின்ற கதிர் மற்றும் நண்பர்களைப் பார்த்து ஆதித்தி கூடக் கொஞ்சம் குழம்பிப் போனாள்..
“என்னடா இது? குட்டி போட்ட பூனை மாதிரி இங்கேயே திரியிறான்… இவன்ர மனதிலயும் நீ இருக்கிறியா …அல்லது….பூனை மீன் குழம்பு வாசத்தை மோப்பம் புடிச்சிட்டுதோ? ” தன் மனதில் தோன்றியதைக் கயலிடம் வேடிக்கையாய்க் கேட்டுச் சிரிக்கவும் செய்தாள். ” அல்லது.. போகப் போற சில நாட்களுக்கு இங்க ஒருத்தி பைத்தியமாகிக் கொண்டு போறதை லைவ்வாப் பாத்து ரசிச்சு அசை போடிற சுவாரஸ்யம் அவனுக்கு வேண்டியிருக்குதோ என்னவோ! “
மனக்கசப்புடன் கூறிக் கயல் தோள்களைக் குலுக்க அதைக் கவனியாதவளாய்,

“இது பேசிறதுக்குச் சரியான சந்தர்ப்பம் கயல்….. எனத் தயங்கினாள் ஆதித்தி.

“அவனுக்கு என்னைப் பிடிச்சே இருக்க வேணும் எண்டு நினைக்கிறன். மற்றப்படி காதல், கல்யாணம் என்ற எதிர்பார்ப்புகள் ஒண்டும் எனக்கு இல்லை ஆதித்தி. அவனின்ர விருப்பத்தைக் கேட்டறிஞ்சு நான் என்ன செய்யப் போறேன். பிடிக்கேல்ல எண்டு ஒரு வார்த்தை சொல்லிப் போட்டால் …….. ஐயோ. பிறகு நான் என்ன ஆவேனோ தெரியேல்ல. எனக்குள்ளயே இது போகட்டும். அவன் போகட்டும். நான் எல்லாத்தயும் இப்பிடியே மறந்திடுவேன்…” என்று கயல் சர்வ நிச்சயமாய் அப்போது ஆதித்தியிடம் கூறினாள்.
என்ன ஒரு அசாத்திய நம்பிக்கை. நம் மனம் என்னவோ களிமண் போலவும், அதை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்பது போலவும் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசியது பதின்மவயதுக்கேயுரிய அசட்டுத் தைரியமே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!
நம்பத் தான் செய்தாள். ஒரு ஆணிடம் ஏற்படும் உணர்வுகளைக் காதல் என்று நினைக்காமல் அது வெறும் ஈர்ப்புத்தான் என்று தன் மனதை நம்ப வைக்க முடியும் என்று நம்பினாள். தவறி மனம் நம் வசமின்றிப் போய் விட்டாலும் அதை வெளிப்படுத்திப் பெரிது படுத்தாமல் விட்டால் மனதுக்குள்ளேயே காலப்போக்கில் அவை உருத் தெரியாமல் அழிந்து சமாதியாய்ப்போய் விடும் என்றும் உறுதியாக நம்பினாள்.
தன் அறிவு சொல்வதைப் போகப் போக ஒரு நாய்க்குட்டியைப் போல மனமும் நம்பி விடும் என முழுவதுமாக நம்பினாள்.
அந்நேரம் கோடை விடுமுறையாதலால் ஒவ்வொருவராய் நண்பர்கள் எல்லோரும் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். அது போல் கதிரும் திடீரென ஒரு நாள் காணாமல் போனான். அவன் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றதால் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை என்றார்கள்.

.அர்த்தமற்ற பேத்தலாகத் தெரிந்தாலும் இந்த ஏக்கத்தையும் பரிதவிப்பையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. அந்தத் தவிப்பு… கொஞ்சம் கொஞ்சமாக எரிக்கும் ஞாபகங்கள் … உண்மை. வேடிக்கையாகத் தோன்றினாலும் அதனால் ஏற்படும் வலி உண்மை.
கதிர் வெளிநாட்டிற்குப் போகப் போகிறான் அத்துடன் தனக்குள் நடக்கும் இந்தப் போராட்டங்கள் எல்லாம் சுலபமாக ஒரு முடிவுக்கு வந்து விடும் என நம்பியவளுக்கு அப்பா விபத்திலும் அம்மா இதய நோயிலும் அடுத்தடுத்து இறந்து போக, எதற்கும் பலமற்றுப் போய் நிராயுதபாணியாக நிற்பது போலாகி விட்டது. நேரம் காலம் தெரியாமல் தூங்கி எழுந்தாள். காலையா மாலை நேரமா என்ற வேறுபாடு தெரியாமல் போய், தலை, கை, கால்கள் சோர்ந்து விட நடக்க பலமின்றிக் கண்ட இடத்தில் உட்கார்ந்தாள். உட்கார்ந்த இடத்தில் தூங்கிப் போனாள். இது பள்ளி நிறுவனத்தினரின் கவனத்திற்குப் போக, மனம் விட்டுப் பேசவென்று ஒரு உளவியலாளரைக் கயலுக்காக ஒழுங்கு செய்தார்கள். மொத்தம் 6 மாதங்கள் அவள் பேசி முடித்தாள். கொடுக்கப் பட்ட மாத்திரைகளைத் தவறாது சாப்பிட்டாள்.
பூரணமாக குணமடைந்து விட்டாலும் அவளின் வாழ்வில் ஒன்றரை வருடங்களை முழுவதுமாக விழுங்கிவிட்ட அந்த வலியை இன்னமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளால் உணர முடிந்தது.

தன்னலம் பாராது அன்பைக் கொடுக்க மட்டுமே தயாராகவிருக்கும் பதின்மபருவத்துக் காதலில் எதிர்பார்ப்புகள் இல்லை. கொடுப்பதற்கு நிறையவே இருக்கும். ஆனால் பக்குவப்பட்டபின்னர் கொடுப்பதற்கென்று எதுவும் உள்ளதோ இல்லையோ, எதிர்பார்ப்புகள் வளர்ந்து விடுகின்றன. நிறைவேறும் சாத்தியக்கூறுகளற்ற எதிர்பார்ப்புகள். ஓவியத்தில் வடிக்கப்பட்ட அழகினைப் பார்க்கும் வெறும் கற்பனை சுகம் தான் மிச்சம். இந்தப் பக்குவம் வந்தபின் எந்த உறவும் உண்மையாகத் தெரியாது போலும். அப்படிப் பார்த்தால், அந்தப் பதின்ம பருவத்துக் கத்துக்குட்டிக் காதல் தான் மரியாதைக்குரியதோ.. ?..
கர்ப்பம் தரிக்காமலே கருவாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் வயிற்றில் ஒரு கட்டியை மாதக்கணக்கில் சுமக்கும் ஒரு தாய் போல் ஒன்றுமே இல்லாத ஒரு பெருஞ்சுமையை அத்தனை காலம் தூக்கிச் சுமந்திருந்த தனது அறியாமையினால் அவளுக்குத் தான் எத்தனை இழப்புகள்.. எத்தனை அவமானம்… இன்று அவள் யாருடனும் ஒட்டிக் கொள்ளாமல் வாழ்வது கூட அதனால் தானே. அவளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தையோ அதனால் அவள் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற நிரந்தரமான சேதங்களையோ அறியாது லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனுடன் 10 வருடங்களின் பின்னர் மறுபடியும் ஒரு சந்திப்பு!


நினைவுகளின் கனத்தை உணர முடிந்ததும் சுதாரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் கயலுக்குப் புரிந்தது. தொலைக்காட்சியைப் போட்டாள். கூடவே பாட்டையும் ஒலிக்க விட்டாள். அவள் வெகுவாக நேசிக்கும் நிசப்தமே ஊசிமுள்ளாய்க் குத்தும் இப்படியான சில மணி நேர மனக் கொதிப்பினை அவள் தவிர்ப்பது அங்ஙனம் தான். சின்னதாக இரவு உணவை முடித்துக் கொண்டாள்.
அன்றிரவு சீக்கிரமாகவே தூங்கி விட எண்ணி ஆயத்தமாகும்போது கைத்தொலைபேசி ஒலித்தது. எடுப்பதா, வேண்டாமா என்று சலிப்புடன் தூக்கினால், பெயரற்ற இலக்கங்கள் மட்டுமே ஒளிர்ந்தது.
-“ஹலோ..” என்ற கயலின் குரலில் அவளையறியாமலே சிறு எரிச்சல் எட்டிப் பார்த்தது.
-“கயல்… நான் கதிர் பேசிறேன். எப்பிடி இருக்கிறாய்?..”
அடடா.. அதற்குள்ளாகவா 2 நாளாகி விட்டது!? இல்லையே.. இன்று காலையில் அல்லவா அவனின் குறுஞ்செய்தி வந்தது…… என்ன பேசுவது என்று ஆயத்தப் படுத்திக் கொள்ளக் கூட அவகாசம் இருக்கவில்லை. இப்போது நாம் என்ன, எப்படிப் பேச வேண்டும்… எனப் பல குழப்பங்கள் ஒன்று சேர வந்தாலும் , சட்டெனத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
“ஓ.. கதிரா!. கனகாலம்…!?” என்ற இடைவேளையில் மனதை ஒருமுகப் படுத்துகிறாள்.

” யா….இப்ப இப்ப எண்டு 10 வருஷம் ஓடிப் போச்சு என்ன.? உன் குரல் அப்ப போல இப்பவும் அதே மாதிரி…. ஸ்வீட்டா இருக்கு. நாளைக்கு அங்க வாறேன். உன்னை சந்திக்க வேணும் கயல். எப்படி இருக்கிறாய்? இப்ப நீ பெரீய என்ஜினியராம். எப்பொயின்மன்ட் இல்லாம சந்திக்கலாமா… அது தான் ஒரு படி நம்பர் எடுத்து அடிச்சனான் ”
என்றான் கலகலப்பான குரலில். ஒரு காலத்தில் கேட்பதற்கு அவள் தவமிருந்த குரல். அவன் பேசும் ஒரு வார்த்தையை ஒன்பது விதங்களில் கற்பனை செய்து மகிழ்ந்த காலங்கள்…பின்னர்… அதன் பின் இருக்கும் நினைவுகள் எல்லாம்…வலி…வலி…வலி மட்டுமே.
ஓஓ.. என்று சமாளித்துச் சிரித்தவள். “பமிலியா வந்தியா?” என்று கேட்க,
-“ச்சீ. நான் டிவோர்ஸ்ட். இப்ப தனியத் தான். 3 கிழமை லீவு கிடைச்சுது. உங்களையெல்லாம் பாக்க வேணும் போல இருந்ததால வெளிக்கிட்டுட்டன். ஏர்போட்டால நேர உன்னிட்டத் தான் வருவேன். நிறையக் கதைக்க வேணும் கயல்… ”
அவன் குரலில் ஏகத்துக்குத் தயக்கம் தெரிந்தது.
பழைய ரணங்கள் எல்லாம் வெறும் கோமாளித்தனமாகத் தெரிய, துரித கதியி்ல் அவளது மூளை வேலை செய்தது. அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் சட்டென,
-“ஓஓ…நானும் அவரும் காலமை ப்ளைட்டுக்கு ஸ்ரீ லங்காக்கு வெளிக்கிடிறம் கதிர். இப்ப கடைசி சாமான்களை பக் பண்ணிக் கொண்டிருக்கிறன். அவர் கீழ நிக்கிறார் இல்லாட்டி உன்னுடன் பேசியிருக்கலாம்…, ” என்கிறாள் மன்னிப்புக் கேட்கும் தோரணையில்,

“ஓஓ… sorry. கல்யாணம் கட்டீட்டியா?. தனிய இருப்பதாக் கேள்விப்பட்டேன். கதிரின் குரலில் ஏகத்திற்குச் சுருதி இறங்கியிருந்தது.
கலகலவெனச் சிரித்த கயல்,

“அட, இதுக்கென்னத்துக்கு sorry? கல்யாணம் தானே கட்டினேன்…. ஒருத்தரும் சாகேலயே..!? என்கிறாள். தொடர்ந்து,
“இப்ப 2 மாசம் தான். grand ஆகச் செய்ய ரெண்டு பேருக்குமே விருப்பமில்லை. சும்மா சிம்பிளா நடந்ததால ஒருதருக்கும் தெரிஞ்சிருக்காது. அவரும் நான் வேலை செய்யிற கம்வெனி தான். 2 வருஷப் பழக்கம் . பிடிச்சுது. இப்ப கல்யாணமும் முடிஞ்சுது.. ”
என்று நீண்ட பெருமூச்சுடன் நிறுத்தினாள். தனக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டாள். சும்மாவா? எத்தனை வருடத் தேர்ச்சி இந்தப் பொய் பேசுவதில்!

“கன்க்ராட்ஸ்… சந்தோஷம்..” என்றது அவனது வசீகரக் குரல். கனமான நிசப்தத்தில் சில வினாடிகள் கழிகிறது.. நம்பியிருப்பானா..? இருப்பான், என்றெண்ணியவள் கூடவே,

“நாங்க 1 மாசம் கழிச்சுத் தான் வருவோம். உன்னைச் சந்திக்க முடியாமல் போச்சு… ” என்று தயங்கினாள்.

“இட்ஸ் ஓகே. விஷ் யூ எ ஹப்பி ஜேர்னி! அவரைக் கேட்டதாகச் சொல்லு” என்று வாழ்த்திக் கதிர் விடை பெறுகிறான்.
இணைப்பைத் துண்டித்து விட்டான். நிறையப் பேச வேண்டும் என்றவனுக்குத் திடீரென்று பேசுவதற்கு விஷயமே இல்லாது போய் விட்டது. ஒரு வார்த்தை பேச மாட்டானா என்று ஏங்கிய காலங்கள் இருக்க, இப்போது அவன் பேசாத வார்த்தைகளை அவசரமாய்த் தன் எண்ணங்களிலிருந்து துடைத்தெறிகிறாள் கயல்.

இப்போது கை கொடுத்ததும் பொய் தான் என்றாலும் ஏனோ… இந்தத் தடவை எந்தக் குறுகுறுப்பும் இல்லை. தன் ஆயுளின் விலை மதிப்பற்ற பருவத்தின் ஒன்றரை வருடங்களைப் பொய்யிலேயே கரைத்து விட்டாற் போல் ஒரு வேதனை தான். இனிமேல் அனாவசியமாகப் பொய் சொல்வதில்லை என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாக, படபடவெனப் பலத்து விட்டிருந்த பெரு மழையின் சத்தத்தை ரசித்தபடி போர்வைக்குள் குழந்தையாய் அவள் தூங்கிப் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *