சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை- உமாகாந்தி(Uumaa Kaanthi)

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை – எழுத்தாளர் அம்பையின் சிறுகதைத்தொகுப்பில் இருந்து அதே தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை பற்றிய ஓர் விமர்சனம். இது 2021 சாகித்திய அகடமி விருது பெற்ற சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.

இந்தக்கதையில் வசந்தன் என்ற ஒரு சமூகப்போராளியான முற்போக்கு சிந்தனைகள் உள்ள ஆணும் மைதிலி என்கிற ஓவிய ஆசிரியையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு பல ஆண்டுகளாக பிள்ளைகள் பிறக்கவில்லை. அதைப்பற்றி மைதிலிக்கு எந்த புகார்களும் இல்லை, கர்ப்பபை என்று ஒன்று இருந்தால் அதில் கட்டாயமாக ஒரு குழந்தையை உற்பத்தி செய்து உலகத்திற்கு தந்து விட வேண்டும் என்ற உந்துதலோ, தாய்மை என்ற விடயமே தன் வாழ்வின் இலட்சியம் என்றோ மைதிலியின் மனம் ஒரு நாளும் அங்கலாயக்கவில்லை அதற்கு மாறாக வருடங்கள் உருண்டோட உருண்டோட வசந்தனின் மனதில் பிள்ளை இல்லை என்ற குறை வளர்ந்து விருட்சமாகி மனக்குமுறலாக அவ்வப்போது அழுகையாக வெடிக்கிறது. அந்த ஆசை நிறைவேறாமல் போகப்போக அது ஓர் புற்றுநோய் போல வசந்தன் மனதை தினம் தின்று கொண்டிருக்கிறது. அதை அடைவதே வாழ்வின் லட்சியம் போல ஆகிறது, வாழ்வில் எல்லா வசந்தங்களும் இருந்தும் இந்த குறை வசந்தனின் மனத்தை அரித்துக்கொண்டிருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்ய மைதிலிக்கு மட்டும் வைத்தியங்கள் செய்து மைதிலியின் உடல் பருத்தது ஒன்று தான் மிச்சம்.

பாதிரியார்கள் நடாத்தும் ஒரு இலவச விடுதியில் வசந்தன் விளம்பரங்களை டிசைன் செய்யும் தொழில் செய்வதன் மூலம் தன்னார்வத்தொண்டராக பணிபுரிகிறார் அந்த காலகட்டத்தில் அங்கு வரும் திருமணம் ஆகாத ஓர் இளம் கர்ப்பிணித்தாய் ஒரு குழந்தையை பெற்றெடுத்து அந்த ஆச்சிரமத்திடம் அதை வளர்க்குமாறு பணித்து விட்டு செல்கிறார். பல வழிகளில் கருக்கலைப்பு செய்ய மருந்துகள் உட்கொண்ட போதிலும் அது பலன் தராமல் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்தப்பெண்ணிற்கு் உருவானது. அந்த பாதிரியார்களையே அந்தக்குழந்தையை வளர்ரக்குமாறு மனம் தளம்பாமல் நிதானமாகவும் உறுதியாகவும் சொல்கிறார் அந்தப்பெண். அவள் பேச்சு தேன் போல இருக்கும் என்றும், உறுதியான மனம் கொண்ட பெண் என்றும் அவளுடன் பழகியவர்கள் வசந்தனிடம் சொன்னார்களாம்.

வசந்தன் அந்த குழந்தையை தத்து எடுக்க உத்தேசிக்கிறார். அப்படியே அந்தக்குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து “ தேன் மொழி “ என்று பெயரிடுகிறார். அந்த குழந்தையை தத்து எடுப்பது பற்றி மைதிலியின் விருப்பு வெறுப்பு என்ன என்பதை வசந்தன் முன்கூட்டியே அறியவில்லை, அதனையிட்டு மைதிலிக்கு சிறு அதிர்ச்சி இருந்தாலும் அந்தக்குழந்தைக்கு வளர்ப்பு தாயாக மாறுகிறாள். அந்தக்குழந்தை அந்த குடும்பத்தை முழுமையாக்குகிறது, வசந்தனுக்கு மைதிலியை விட தேன்மொழி உற்ற துணையாகிறாள்.

குழந்தை பேச வேண்டிய வயதில் பேசவில்லை, அதற்கு காதும் கேட்கவில்லை என்று வீட்டில் இருந்து கவனித்த வசந்தனின் அத்தை சொல்லும்போது குழந்தைக்கு காது கேட்கவில்லை என்பது வசந்தனுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதை ஏற்கும் பக்குவமோ நிதானமோ வசந்தனிடம் துளியும் இல்லாமல் அதிர்ந்து போவதும், உணர்ச்சி வசப்பட்டு கலங்குவதுமாக தொடர்ந்து வந்த வசந்தனின் நாட்கள் நகர்கின்றன. பின்னர் குழந்தைக்கு காதுக்குள் செயற்கையான ஓர் கருவி பொருத்ப்படுகிறது அதை அணியும் நேரங்களில் காது கேட்கிறது. ஒலியின் அளவு மற்றும் அது வரும் திசைகள் பற்றிய எந்த பிரக்ஞையும் அந்தக்கருவியால் தேன் மொழிக்கு கொடுக்க முடியவில்லை.

காதுக்கு பொருத்திய காது கேட்கும் செயற்கையான கருவியை தேன் மொழி பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றும்போது கழற்றி வைத்து விட்டு வீட்டில் இயல்பாக இருப்பாள் , ஆட்கள் பேசும் போது அவர்கள் வாயசைவை வைத்து சொற்களை கண்டு பிடிப்பாள். பேசுவாள்.

பின்னர் அவள் வளர்ந்ததும் அவளுக்கு சைகை மொழியில் பேசும் காது கேட்காத அவளையொத்த ஒரு பையனோடு நட்பு உருவாகிறது , கூடுதலாக அவனுடன் சைகை மொழியில் தேன் மொழி பேசத்தொடங்கியதும் அது வசந்தனுக்கு எரிச்சலைத்தருகிறது. தேன்மொழியை அப்படி பேசுவதை நிறுத்க்கோரி மைதிலியிடம் முறையிடுகிறான்்மைதிலியின் மனத்திற்கு தன் மகள் காது கேட்காத இன்னொரு பையனுடன் பழகுவதோ சைகை மொழியில் பேசுவதோ இடைஞ்சலாக தென்படவில்லை, ஆகவே இந்தக்கோரிக்கையை புறங்கையால் தள்ளி விட்டு விட்டு தன் வேலையைப்பார்க்கிறாள்.

எப்போது தேன்மொழிக்கு காது கேட்காது என்று வசந்தன் அறிந்தாரோ அன்றில் இருந்து தேன் மொழிக்கு கொக்கிளியர் சிகிச்சை வழங்க திட்டம் இட்டு அதற்கான பணத்தையும் சேர்க்கிறார். கொக்கிளியர் சிகிச்சை மூலம் தேன் மொழிக்கு முற்று முழுதாக காது கேட்கும், அவள் சைகை மொழியை தவிர்த்து முழுதாக பேசத்த்தொடங்கி விடுவாள், மற்ற எல்லாரையும் போல இருப்பாள் என்ற கற்பனைகளில் வாழத்தொடங்குகிறான். ஆனால் இந்த எண்ணம் பற்றி பெரிதாக மைதிலியிடமோ தேன்மொழியிடமோ அதிகம் வசந்தன் பேசியது கிடையாது.

தேன் மொழி பெரியவளாகிய பின் வசந்தன் இந்த அறுவை சிகிச்சை பற்றி பேச தேன் மொழி முற்று முழுதாக காது கேட்க செய்யப்படும் அந்த அறுவைச்சிகிச்சை தனக்கு தேவை இல்லை என்று மறுக்கும் போது அதை ஏற்கும் பக்குவம் வசந்தனிடம் இல்லை , இதுவும் வசந்தனுக்கு கடும் எரிச்சலை தருகிறது.

வசந்தன் தனக்கு இனிமேல் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றும் வாயசைவை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் தேன் மொழியையும் தேன் மொழி கொக்கிளியர் சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்ததை மிக இயல்பாக எடுத்துக்கொண்டு ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருக்கும் மைதிலியையும் தன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்தினால் தன்னால் அந்த வீட்டில் பொருந்தி இருக்கவோ வாழவோ முடியாது என்று “ நான் சுதந்திரமானவன் நான் வீட்டை விட்டு செல்கிறேன்” என்று கூறும் ஒரு சிறு துண்டை மட்டும் எழுதி வைத்து விட்டு செல்கிறார். இது மைதிலியையும் தேன் மொழியையும் வாட்டி வதைக்கிறது. இருவரும் அதிர்ந்து போய் அழுதி தீர்த்த பின்னர் வசந்தனை தேடி அவருக்கு பிடித்த இடங்களின் பெயர்களை குறித்துக்கொண்டு இந்தியாவில் வடக்கில் உள்ள பல பிரதேசங்களில் அலைகிறார்கள்.பயண ஏற்பாடுகள் தங்கும் வசதிகள் என்று எல்லாவற்றையும் தேன்மொழி கச்சிதமாக செய்து முடிக்கிறாள்.

கடைசியாக வசந்தன் இருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

வசந்தன் அமைதியை தேடி வடக்கில் ஓர் ஆச்சிரமத்தில் போய் சேர்ந்துவிட்டார்.

வசந்தனை அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள் என்றாலும் வசந்தன் அங்கு மௌன சாமியாராக மாறிவிட்டதனால் அவரின் அமைதியை குலைக்க விரும்பாமல் மலையில் உள்ள் அவரின் இருப்பிடம் சென்று அவருக்கு தேவையான பொருட்கள் சிலதை வைத்து விட்டு வருகிறார்கள், வசந்தனின் தேர்வு இனி சன்னியாசமாக இருந்தால் அதை ஏற்கும் பக்குவம் அவர்களிடம் இருந்தது, அவர் வீட்டுக்கு வர விரும்பினால் அதற்கான பணத்தையும் அங்கு வைத்து விட்டு வந்தனர்.

இந்தக்கதையை வாசிக்கும் போது ஒன்றை தெட்டத்தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மைதிலி மற்றும் தேன் மொழி என்ற இருவரும் மிகவும் இயல்பான இரண்டு மனிதர்களாக இந்த கதை முழுக்க உலா வருகிறார்கள். தாங்கள் வாழும் சூமலுக்கு ஏற்ப தங்களை இசைவாக்கம் செய்தவர்கள் அவர்கள்.

அவர்களின் மனமும் உடலும் தாங்கள் வாழும் சூழலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் விடயங்களையும் அனுசரித்தும் தழுவியும் அதற்கு ஏற்றாற்போல தங்கள் சூழலோடு இசைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல அது தான் அவர்களுக்கான பிரத்தியேகமான தக்கன பிழைத்தல் பரிணாமக்கோட்பாடாக இருக்கிறது.

அவர்கள் வாழ்வில் எட்ட நினைக்கிற இலக்கு நிம்மதியான நிதானமாக வாழ்க்கை மட்டுமே. கிடைத்ததை வைத்துக்கொண்டு அதில் முழுமை காண்பதே அவர்கள் இயல்பாக இருக்கிறது. அவர்கள் போதாமைகளைப்பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளாமல்்அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டு மையநீரோட்ட பெரும்பான்மை சமூகத்தோடு கலக்க பழகுகிறார்கள் சமூகமும் அவர்களை அவர்கள் போதாமைகளைத்தாண்டி ஏற்றுக்கொள்கிறது/ அனுசரிக்கிறது. அவர்கள் ஆற்றல்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கைப்பாதை நிதானமாக ஓடும் ஒரு

நதியின் ஓட்டத்தையும் இலக்கையும் ஒத்திருக்கிறது, அந்த நதி ஒடுகிற பாதையில் இயல்பாக சந்திக்கும் தடைகளோடு தன்னால் இயன்ற அளவில் சமரசம் செய்து கொண்டு தன் கரைகளை அதன் சூழலுக்கு ஏற்றற்போல வடிவமைத்து கொண்டு போவற்கு ஒத்ததாக இருக்கிறது. பொதுவாக மனிதர்களின் / உயிர்களின் இயல்பான பரிணாம வளர்ச்சியானது இப்படித்தான் இருக்கும்.

வசந்தனின் வாழ்க்கை பாதைகளும் அவர் அடைய நினைக்கும் இலக்குகளும் அவரோடு கூடி வாழும் இரண்டு பெண்களின் சிந்தனை நீரோட்டத்தோடு சேராமால் இருக்கிறது. வசந்தன் தான் வாழும் சூழலையும் அதில் தான் எதிர்கொள்ளும் விடயங்களையும் அனுசரித்து போவதை விட அவற்றை தனக்கு ஏற்றாற்போல தான் விருப்பப்படுவது போல சதா மாற்ற நினைக்கிற ஓர் நபராக இருக்கிறார்.

மருந்துவ விஞ்ஞானம் பரிந்துரை செய்யும் அறுவைச்சிகிச்சைகள் மற்றும் “ implants” ( உள்வைப்புக்கள்) என்பவை பலரின் வாழ்வின் தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது சிலருக்கு இந்த “உள்வைப்புக்கள்” அவர்கள் உடலுக்குள் புகுத்தப்படும் வேண்டாத அந்திய சக்திகளாகவும் உபத்திரவமாகவும் இருக்கிறது. தேன்மொழி தன் புறச்சூழலில் இருந்து வரும் ஒலியை தனக்கு அவசியமான நேரம் கேட்கவும் அது தனக்கு அவசியம் இல்லை என்று நினைக்கும் நேரம் அதை நாங்கள் தொலைபேசியை அணைத்து வைப்பது போல அணைத்து வைத்தும் பழகிக்கொண்ட ஒருத்தி. அந்த வாழ்வு அவளுக்கு சௌகரியமாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது.

காலப்போக்கில் அது அவள் தேர்வாகி விட்டிருக்கிறது. உலகம் கேட்கத்தேவையில்லாத ஒலிகளால் நிறைந்து வழிகிறது என்பது தேன்மொழியின் நண்பியின் கருத்து, அதை தேன்மொழி தகப்பனுக்கும் ஒரு சந்தர்ப்த்தில் கூறுகிறாள். இப்படியான ஒலி பற்றிய தேன்மொழியின் வியாக்கியானங்கள் அவள் தகப்பனுக்கு எரிச்சலை தருகிறது.

வசந்தனால் தனக்கு பிள்ளை இல்லை என்ற போது அது இயற்கையின் நியதி என்று நினைத்து ஆறுதல் அடைய முடியவில்லை, அவர் தன் மனைவி கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு அவருக்கு வைத்தியம் பார்த்து களைத்து போய்விடுகிறார். தன் உடலில் ஏதாவது குறை இருக்க கூடும் என்று நினைக்க அவர் ஆண் மனத்திற்கு தோன்றவில்லை. மைதிலிக்கு செய்ய வைத்தியம் பலனளிக்கவில்லை என்பதை பற்றி பலரோடு புலம்பித்திரிகிறார்.

இந்த இடத்தில் அம்பை முற்போக்குவாதியான வசந்தனை ஒரு படிப்பறிவற்ற விஞ்ஞானம் தெரியாத நபர் போல திடீர் என்று சித்தரித்தது தேவையற்ற வலிந்து திணிக்கப்பட்ட ஒரு விடயம் என்றே தோன்றியது.

தேன்மொழி என்ற குழந்தை ஒன்று கையில் கிடைத்ததும் குழந்தையை த்த்தெடுக்க சம்மதமா என்று வசந்தன் மைதிலியிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

கேட்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். தன்னுடைய தேர்வுகள் எல்லாம் தன்னுடைய ஏக போக சுதந்திரம் என்று

திடமாக நம்பும் வசந்தனுக்கு மகளுடைய தேர்வு அவளுடைய சுதந்திரம் என்று புரிவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

தேன்மொழிக்கு காது கேட்கவில்லை, காது கேட்க வைக்கும் கருவியை மிக அவசியமான நேரம் மட்டுமே பாவிக்கும் தேன்மொழி மற்றைய நேரங்களில் அவள் சூழலையும் அதில் அவள் உறவாடும் மனிதர்களையும் தன் எஞ்சிய புலன்களை குவித்தும் கூர்மைப்படுத்தியும் தொடர்பாடல் செய்கிறாள். அவளின் போதாமை அவளின் இயல்பு அல்லது தனித்தன்மை என்று அதற்கு தன்னை மட்டுமன்றி தன்னைச்சார்ந்தவர்களையும் ப்பழக்கப்படுத்மிக்கொண்டாள். அந்த சூழலில் வெற்றிகரமாக வாழ முடிந்ததும் அவளும் அவள் சார்ந்த சூழலும் பரஸ்பரம் சமரசம் செய்து கொண்டமையினால்த்தான் என்ற கருத்து அம்பையின் இந்த கதையில் நுட்பமாக இழையோடுகிறது.

சத்தங்களை விட நிசப்தங்கள் மூலம் தன் உலகை புரிந்து கொள்வது தேன்

மொழிக்கு வசதியாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த நிசப்தங்களினூடாக நிதானமாக ஓடும் ந்தியாக தன் கரைகளோடு தன்னை சமரசம் செய்து கொள்ளப்பழகுவதும் சத்தங்களோடு வாழும் மனிதர்களோடும் தன் வாழ்வை பகிர்ந்து கொள்ள வேண்டிய பொழுதுகளில் அதற்கான தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் சூக்குமங்களையும் அவளே தன் இதர புலன்களினூடாக வகுத்துக்கொண்டாள் , செயற்கையான ஒர் கொக்கிளியர் சிகிச்சை மூலம் தனக்கு காது கேட்க வேண்டும் என்று தேன்மொழி ஆசைப்படவில்லை, அப்படியான சிகிச்சை நிதானமாக நதி போல ஓடும் அவள் வாழ்வில் ஓர் அத்துமீறலாகவும் அவசியமற்றதுமாக இருக்கும் என்று தகப்பனிடம் கூறுவதற்கு தேன்மொழிக்கு விருப்பம் இருந்தாலும்வசந்தனிடம் அதை செவிமடுத்து கேட்பதற்கான நிதானம் மற்றும் பொறுமை இருக்கவில்லை.

இந்த உலகத்தில் பல மில்லியன் மனிதர்களுக்கு ஐம்புலன்களும் சீராக வேலை செய்கிறது என்பதனால் மட்டும் அவர்கள் அனைவரும் தங்கள் புலன்களின் உதவியோடு பிற மனிதர்களுடனும் உயிர்களுடனும் துல்லியமாக தொடர்பாடல் செய்து சமாதானமான ஓர் முழுமையான வாழ்வை வாழ்கிறார்களா என்றால் அது இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த கதையில் அந்த கருத்து நுட்பமாக எடுத்துரைக்கப்படுகிறது.

வசந்தனுக்கு காது கேட்கிறது என்றாலும் மற்றவர்கள் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு மதிநுட்பம் போதவில்லை, மொழிகளை நன்றாகப்பேசத்தெரிந்திருந்தும் வசந்தனுக்கு வீட்டில் இருக்கும் தனக்கு நெருக்கமான இரண்டு பேரோடும் தொடர்பாடலை வெற்றிகரமாக செய்யக்கூடிய வல்லமை இருக்கவில்லை. அதனால் கடைசியாக மௌன சாமியாராகப்போவது தான் சாத்தியம் ஆயிற்று.

ஆனால் தேன்மொழி தன்னுடைய போதாமைகளோடும் இந்த உலகில் முழுமையான ஓர் வாழ்வை வாழக்கூடிய மதி நுட்பம் வாய்ந்த ஓர் பெண், அவள் எந்தவொரு கட்டத்திலும் தனக்கு காது கேட்கவில்லை என்று கவலைப்படவோ மற்றவர்களோடு புகார் செய்யவோ இல்லை.விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியின் பின் தாம் வாழும் சூழலோடு தங்களை பொருத்திக்கொண்டும் அந்த சூழலை அனுசரித்து போகும் “தக்கன பிழைக்கும்” என்ற பரிணாம வளர்ச்சிக்கோட்பாடாது வெகு தூரம் திசை மாறிப்பயணப்பட்டுவிட்டது.சதா வெயில் கொழுத்திக்கொண்டு இருக்கும் அனல் பறக்கும் பாலைவனங்களில் செயற்கையாக குளிரூட்டப்பட்ட கட்டடங்களிலும் சதா பனி பெய்யும் குளிர்பிரதேசங்களிலும் செயற்கையாக வெப்பமாக்கப்பட்ட கட்டடங்களில் மனிதர்கள் இன்று வாழப்பழகி விட்டார்கள்.

வெயில் இல்லாத ஊர்களில் உள்ள மனிதர்கள் வெயில் மூலம் தோலுக்குள் தயாரிக்கப்டும் விட்டமின்களை செயற்கையான மாத்திரைகள் மூலம் பெற்றுக்கொள்கிறார்கள். இப்படியாக இன்றைக்கு பரிணாம வளர்ச்சி என்பது “ instant and artificial ” உடனடியாகவும் செயற்கையாகவும் ஆகிவிட்டது. அதனால் பல நன்மைகள் உண்டு என்றாலும் இது மனிதர்களை ஓரே சட்டகத்திற்குள் அடக்க முற்படுகிறது.இந்தக்கதையில் வரும் கதாநாயகன் சமூகத்தில் உள்ள சராசரி ஆண்களை விடவும் ஓர் முற்போக்குவாதியாக இருந்தாலும் அவரும் தான் வாழும் சூழலை மாற்றுவதன் மூலம் தன்னையும் தன்னை சார்ந்தவர்களின் இயல்புகளையும் சூழலையும் செய்ற்கையாக மாற்ற முனைகிறார்.பெண்களை அவர் வாழும் சூழலில் இருக்கும் ஒன்றாகவே எண்ணுகிறார்.

தன் வீட்டில் இருக்கும் பெண்களை தனிமனிதர்களாக எண்ணாமல் அவர்களை தன்னுடைய மூளையின் ஓர் நீட்சி என்றே எண்ணுகிறார். நம் சமூகத்தில் ஒரு சராசரி ஆண் தன்னை தன்னுடன் கூட வாழும் பெண்களின் முழு நேரப்பாதுகாவலன் என்று நினைக்கிறார், அது ஒரு சிறந்த குணம் ஆனால் அது அன்புத்தொல்லையாக எல்லை மீறும் போது ஏதேச்சதிகாரமாகவும் ஆணாதிக்கமாகவும் பரிமாணம் எடுக்கிறது, பல நேரங்களில் அந்த பாசக்கயிறு கூட இருப்பவர்களின் குரல் வளையை இறுக்குகிறது, இவர்கள் குரல்களை வெளியே கேட்க விடாமல் நுட்பமாக பார்த்துக்கொள்கிறது.

வசந்தனின் மனதில் இந்த எதேச்சதிகாரம் குடிகொண்டதனால் வீட்டில் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய எல்லா முடிவுகளையும் தனி ஆளாக தானே பெரும்பாலும் எடுக்கிறார். அவர் முடிவுகளை சில நேரங்களில் அவர்கள் நிராகரிக்கும்போது அவரால் நிதானமாக மற்றவர்களின் முடிவுகளை அலசி ஆராய்ந்து அவர்களின் வியாக்கியானங்களோடு சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. பேச்சுவார்த்தைகள் என்பதை வசந்தன் எந்த ஒரு சந்தர்ப்த்திலும் செய்வதில்லை.வசந்தன் பிரக்ஞைபூர்வமாக தான் ஓர் ஆணாதிக்கவாதி என்று அறியாதவர். பாசக்கயிறு என்ற ஒன்றைக்கொண்டு தன் அதிகாரத்தை மிக நுட்பமாக தன்னை அறியாமலே தன் மகள் மீதும் மனைவி மீதும் திணிக்கும் பல கோடி ஆண்களின் ஒரு பிம்பம் தான் வசந்தன்.

இந்தக்கதையில் மைதிலி மற்றும் தேன்மொழி என்ற இரண்டு பெண்களும் தங்களை தாங்கள் வாழும் சூழலொடு இயைந்தும் அதை அனுசரித்தும் அதைத்தழுவியும் வாழக்கற்றுக்கொண்டு விட்டார்கள் அதில் கணிசமான வெற்றியும் பெற்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வசந்தன் வீட்டை விட்டை சென்ற பின் தாயோடு சேர்ந்து தேன்மொழி முன் பின் தெரியாத ஊர்களுக்கு பிரயாணம் செய்கிறாள். அந்த நேரத்தில் தேன்மொழி வெற்றிகரமாக பயண விடயங்களை கவனிப்பதோடு தாயையும் கவனித்துக்கொள்கிறாள் . ஒரு சமூகத்தில் வாழும் மனிதர்கள் வெவ்வேறு வகையான இயலுமைகளுடனும் இயலாமைகளுடனும் வாழ்கிறார்கள், அப்பேர்ப்பட்டவர்கள் ஒன்றுபடும் போது அங்கு அவர்களுக்குள் ஓர் நல்லிணக்கம் ஏற்படுவதை அம்பை காட்டுகிற இடமாக இருப்பது , தேன்மொழிக்கு காது கேட்காது வாழ்க்கையை நகர்த்த ஒரு தடை இல்லை என்பதை இடைஞ்சல்கள் ஏதுமற்ற பயணங்களின் மூலம் காட்டுகிறார்.

இந்தக்கதையின் பின் இணைப்பாக தேன்மொழி எழுதிய கட்டுரை என எழுத்தாளர் அம்பை தொலை பேசியை கண்டுபிடித்த கிரஹம் பெல் என்பவர் காது கேட்காதவர்களை காது கேட்காதவர்களோடு சேரக்கூடாது என்பதை எப்படி பொது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் என்பதை எழுதியிருக்கிறார்.

மேலும் காது கேட்காதவர்கள் மற்றவர்கள் மாதிரி பேசினால்த்தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் அவர்கள் தனியே ஒரு கூட்டமாக தனித்து நின்றால் குறையுள்ள மனிதர்களை இனப்பெருக்கம் செய்ய வழிவகுக்கும் என்றும் மேலும் அவர் சைகை மொழியை இல்லாமல் பண்ண பாடுபட்டார் என்றும் கூறியிருக்கிறார்.

குறைகள் ஏதும் இல்லாத ( வலிய) மனிதர்களை மட்டும் இனப்பெருக்கம் செய்ய அனுமதித்துவிட்டால் ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்பலாம் என்பது Francis Galton என்பவரின் Eugenics சித்தாந்தம்.

கிரேக்க மொழியில் Eugenics என்பதை “ சிறந்த “ அல்லது ஒரிஜினல் என்கிறார்கள், அதாவது சிறப்பான பிறப்பை மட்டும் அனுமதிப்பது தான் Eugenics ன் கொள்கை. Francis Galton இதைப்பற்றி எழுதிய புத்தகத்தின் பெயர் Hereditary Genius (1869) “ பரம்பரை புத்திசாலி”.

இந்த விடயம் பின்னர் அமெரிக்காவில் காட்டுத்தீயாக Eugenics movement “ இனப்பெருக்க மேம்பாட்டு இயக்கம்” என்று ஓர் இயக்கமாக உருவெடுத்தது. 1920-30 களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் sterilisation (சந்ததி இல்லாமல் கருவறுத்தல்) சட்டங்கள் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேர்கள் வரையில் வாழ்வில் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதபடி sterilisation என்ற விடயத்திற்கு ஆளாக்கப்பட்டனர் என்பது அமெரிக்காவின் சோக வரலாறுகளில் ஒன்று.

அதனைத்தொடர்ந்து அமெரிக்க Eugenics இயக்கத்துடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்ட ஹிட்லரும் Eugenics க்கை சட்டமாக்கி யூத இன அழிப்பை உக்கிரப்படுத்தினார் மற்றும் ஒரு தூய இனத்தை உருவாக்கும் வேட்கையில் பல்வேறு வகைப்பட்ட மனித அவலங்களை அரங்கேற்றினார் என்பது யாவரும் அறிந்த ஒன்று.

இந்தக்கதையை வாசிக்கும் போது ஒரு விடயம் துல்லியமாக புலப்படுகிறது மனிதர்கள் மனம் பேசும் மொழிக்கும் வாய் பேசும் மொழிக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருப்பதாகப்படுகிறது. வசந்தனுக்கு வாய்மொழி பரிச்சயமாக இருக்கும் அளவிற்கு மனிதர்களின் மனம் பேசும் மொழியில் பரிட்சயம் குறைவு அதனால் அவரால் துல்லியமாக சதா அவருடன் வீட்டில் இருக்கும் மனித்ரகளுடன் உறவாடுவது கடினமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களின் ஆழமான எண்ணங்களை புரிந்து கொள்ள மொழி தாண்டிய ஓர் தொடர்பாடல் மனிதர்களுக்கு அவசியமாகிறது. அது மனம் பேசும் மொழியாக இருக்கிறது. தங்களை முற்போக்குவாதிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் ஆண்களுக்குள் அவர்களுக்கு தெரியாமலேயே ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தின் அடுக்குகளை பறை சாற்றும் கதை தான் அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை எனத்தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *