ME TOO என்றநானும்…யோகி

ME TOO என்றநானும்யோகி

19,10,2018

metoo05 metoo07s

மீடூ குறித்து உன் பார்வை என்ன? எதைக் குறித்துப் பேசாமல் நான் மௌனமாக இருந்தேனோ அது குறித்து என்னைப்பேச சொல்லும் போது, கொடுரமீசைக் கொண்ட முகங்களும் முகமறியாத வறட்டு விரல்களும் ஒருவகை முடை நாற்றத்தோடு என்பழைய நினைவுகளைக் கொண்டு வருகின்றன

அவளை முயற்சிக்கலாம்  என்ற மனோபாவம் ஒருவனுக்குத் தோணுவது  இயற்கை என இந்தச் சமுதாயம் பேசுகிறது; என்றால்இந்தச் சமுதாயத்தை எதைக் கொண்டு கழுவுவது? பிறந்த குழந்தையிலிருந்து மாதவிலக்கு நின்ற மூதாட்டி வரை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிவரும் சூழலில், அப்போது  சொல்ல திராணியற்ற அந்தவலியை, இப்போது அவள்   எழுதத் தொடங்கியிருப்பது, பலஆண்களின்  டப்பா ஆட்டங்கண்டுதான் போயிருக்கிறது.

 முன்னதாக ME TOO விஷயத்தைப் பொது வெளியில் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றனர் என்ற ஒருகலந்துரையாடலை, பொது வெளியில் செய்வது  முக்கியம் எனத்தோணுகிறது.

தன் கவனத்தை ஒரு பெண் கவரும்போது, அவள் பால் அவன் ஈர்க்கப்படும்போது, தன் ஆசையை அவளிடம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவன்குறிப்பால்உணர்த்த முயற்சிசெய்வான்.

அதை அந்தப் பெண் எப்படி எடுத்துக் கொள்கிறாள்? ஏற்கிறாளா ? அல்லது நிராகரிக்கிறாளா என்ற மனநிலை அவர் உரிமையைச் சார்ந்ததாக இருக்கிறது. அவள் அவனின் காதலையோ அல்லது காமத்தையோ ஏற்கிறாள் என்றால் பிரச்னை இல்லை. அவளுக்கு அதுபிடிக்காத போது, தொடக்கத்திலேயே அதை நிராகரிக்கிறாள் என்றால் அதோடு அவளைத் தொல்லை செய்யாமல்சாதாரண மனநிலையோடு அவளோடு பழகுகிறவன் தான் சரியான ஆண்அதை விட்டுவிட்டு தொடந்து அவளிடம் வக்கிரத்தை வெளிப்படுத்துகிறவனை  MEE TOO-வில் போட்டு தோலுரிக்கலாம்.

முதல் நிராகரிப்பிலேயே, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து ஜெண்டில் மேனாக நடந்துகொள்ளும் ஒருவனை, அந்தப்பெண், என்னை அவன் முயற்சித்தவன் என்று காரணம் சொல்லி தொடர்ந்து பலரிடம் புகார் கூறுகிறாள் என்றால் அவளிடம் ஒரு தெளிவில்லாத தன்மையிருக்கிறது என்று தான் நான் கூறுவேன்.

 ஒரு ஆண் தன் விருப்பத்தை  வெளிப்படுத்தத் தொடங்கும் நொடியே அந்த எண்ணத்தை விருப்பமில்லாத ஒரு பெண்ணால்  உடைக்கமுடியும். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நெருங்குவது நிச்சயமாகத் தப்புதான். அதேதான் ஆணுக்கும். ஒரேயடியாக யாரையும் பொறுக்கின்னு சொல்லிடமுடியாது. அப்படிசொல்லவும்கூடாது.

பாலியல் அத்துமீறல்களுக்குப் பலியாகியிருப்பவள் தான் நானும். வெளியில் சொல்ல பயந்துகொண்டு என்னை அத்துமீறி தொட்டவனை பார்க்கநேரும் போதெல்லாம் மரவட்டை போலச்சுருங்கி ஒளிந்துகொள்வேன். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத அவனெல்லாம் தைரியமாக மீண்டும் மீண்டும் பார்வையாலேயே வக்கிரத்தைக் காட்டிய போது ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையைக் கண்ணீரில் தான் வெளியேற்றிருக்கிறேன்.

நான் ஒருவராகப் பேசதுணிந்த போதுதான் இந்தப்பாலியல் அத்து மீறலிலிருந்து மீண்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரை mee too, நிச்சயமாகப் பெண்களுக்கு ஒரு மனதைரியத்தை கொடுத்திருக்கிறது. ஆண்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் பலபோராட்டங்களுக்குப் பிறகுதான் தனக்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர். இந்த ஒரு அமைப்பாக உருமாறும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும்  பாலியல் வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் குறையும் என்றே எனக்குத் தோன்றுகிறது

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *