ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

இது கொழும்பிலிருந்து கௌரி பழனியப்பன்


ஊடறுவின் அனைத்துலக தமிழ்ப்பெண்கள் மகாநாடு, 2025ம் ஆண்டு மார்ச் மாதம்; 15 மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. பொதுவாக இலங்கையில் குறிப்பாக தமிழ்ச்சமூகப் பரப்பில், பெண்நிலைவாதம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களோ, ஆய்வறிக்கைச் சமர்ப்பணங்களோ பொது வெளியில் ஒழுங்கமைக்கப்படுதல் மிகவம் அரிதான நிகழ்வாகவே காணப்பட்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் மேற்குறித்த நிகழ்வானது ஒரு நீண்டகால வெற்றிடத்தை நிரப்புவதாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. நிகழ்ச்சியின் ஒட்டு மொத்த கட்டமைப்பை எடுத்துக் கொண்டால் வழமைக்கு மாறாக, திருநங்கைகளையும் மாற்றுத் திறநாளிகளையும் உள்ளடக்கியிருந்தமை ஒரு அரவணைப்புமிக்க அணுகுமுறையை வெளிப்படுத்தியதுடன் வரவேற்கத்தக்கதாகவும் இருந்தது.

பெண்நிலைசார் கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகங்களாக தனியே ஆய்வறிக்கை சமர்ப்பணம் மட்டுமன்;றி, ஓராள் அரங்கங்கள், கிராமிய கூத்துவகைகள், குறுந்திரைக் காட்சிகள், தனிநபர் அனுபவ பகிர்வுகள் என்பவையும் உள்வாங்கப்பட்டிருந்தமை நிகழ்ச்சிகள் அலுப்புத்தட்டாதவகையில் நடந்தேறச் செய்திருந்தது.

இவ்விருநாட் செயற்பாடுகளின் உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டால், பெண்ணிய கருத்தியல், சமகால பெண்களதும் திருநங்கைகளதும் நடைமுறை நிலைப்பாடுகள் மற்றும் ஆவணப்படுத்தல் என குறைந்தபட்சம் மூன்று பரிமாணங்களைக் கொண்டிருந்தது எனலாம். பெண்ணிய கருத்தியல் தளத்தில் குறிப்பாக பெண்ணியத்தின் பன்முகத்தன்மையும் பெண்ணிய அடக்குமுறை தத்துவங்கள் மொழிப் பிரயோகத்திலும், எழுத்துக்களிளும், சிற்ப சித்தரிப்புக்களினும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன என்பவையும் எடுத்துக் காட்டப்பட்டமையானது ஒரு நுட்பமான பெண்ணிய பகுப்பாய்வாக கருதக்கூடிய ஒன்று.

சமகால பெண்களின் நிலைப்பாடு என்ற வகையில், சமூக பொருளாதார அரசியல் களத்தில் பெண்களின் வகிபாகம், அந்தஸ்த்து, நிலைப்பாடு, எதிர்கொள்ளும் சவால்கள் என்பவை பொதுவாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், முதலிய பிரதேச ரீதியாகவும்;;;; பல்கலைக்கழகம், இஸ்லாமிய பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் முதலிய சிறப்புக்குழுவினரது நிலைப்பாடுகள் என்ற வகையிலும், ஆய்வுச் சமர்ப்பணங்கள் மூலமும், தனிநபர் அனுபவப் பகிர்வுகள் மூலமும் மற்றும் ஓராள் அரங்கங்கள், கிராமிய கூத்துவகைகள், குறுந்திரைக் காட்சிகள் என்னவற்றின் ஊடாகவும் வெளிக்கொணரப்பட்டிருந்தன. இது பலதரப்பட்ட பெண்களதும், திருநங்கைகளதும் நிலைப்பாடுகளை பதிவு செய்வதற்கும், பரஸ்பரம் அறிந்து கொள்வதற்குமான ஒரு பெருவாய்ப்பாக அமைந்தது.

ஆவணப்படுத்துதலைப் பொருத்தவரையில், நூலகங்களின் பங்களிப்பும், பெண்ணிய ஆக்கங்களை நூலகப்படுத்துதலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் சவால்களும் பகிரப்பட்டதுடன் இதழ்கள் மற்றம் மின்னிதழ்கள் என்பவற்றின் வகிபாகத்தை ஊடறுவின் அனுபவம்மூலம் வெளிக்கொணரப்பட்டது.

பங்குபற்றுனர் குறித்து ஒரு சில அவதானங்களை கூறுவதாயின், முதல்நாள் தனியே பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டடிருந்தது. இரண்டாம் நாள் ஆண்களுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தமை வரவேற்கக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் அவர்களது பங்குபற்றல் மிகமிக குறைவாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை..

நிகழ்வுகள் தங்குதடையின்றியும் குறித்த நேரத்திற்குள்ளும்; நடாத்தியிருந்தமை சிறப்பாக இருந்தபோதும் ஒன்றிரண்டு அமர்வுகளைத் தவிர ஏனையவற்றிற்கான கலந்துரையாடலுக்கு நேரம்; இல்லாது போனமையும், இருநாள் மகாநாட்டின் இறுதியில் ஒருசில பின்னூட்டல்களாவது இடம்பெறாது போனமையும் சிறு நெருடலே. இருந்தபோதும் பலதரப்பட்டவர்களை ஒன்றிணைத்து, பெண்நிலைவாதத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக ஒரு மகாநாட்டை நடத்துவது என்பது இலகுவான ஒன்றல்ல. அதை ஊடறு சாதித்துள்ளது. அரங்க அமைப்பு, உணவு, தங்குமிடம், போக்குவரத்து போன்ற பல்வேறு பணிகளும் சிறப்பாக அமைய காரணமாக இருந்த ஊடறு நிர்வாக குழுவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இதற்கு உந்து சக்தியாக இருந்தது ஆரவாரமோ ஆடம்பரமோ அற்ற ஆனால் தீர்க்கமான சிந்தனையும் செயல் திறனும் மிக்க தலைமையே என்பதனை நேரடியாக காணக்கூடியதாக இருந்தது. ஊடறு தலைமைக்கும் அங்கத்தினர்க்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சந்திரலேகா கிங்ஸிலி

ஊடறுவின் 20வது ஆண்டு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 2025

கடந்த மார்ச் மாதம் 1516ம் திகதிகளில் தந்தை செல்வா அரங்கில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு சந்திப்பு நடைபெற்றது அச்சந்திப்புக்கு இந்தியா தாய்லாந்து சுவிஸ் மற்றும் இலங்கையின் கிளிநொச்சிஇமுல்லைத்தீவுஇவவுனியாஇமட்டக்களபபு இமலையகம், கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து ஆர்வலர்களும் பேச்சாளர்களும் பங்குபற்றியிருந்தனர். இருநாள் நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பில் முதல் நாள் பெண்க ள் மட்டும் கலந்து சிறப்பித்திருந்தனர். இரண்டாம் நாள் அனைவரும் கலந்துகொள்ளும் நிகழ்வுகளாகவும் இருந்தன. உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன.

இரண்டு நாள் நிகழ்வுகளிலும் பெண்ணிய திறனாய்வுகள், பாட்டு,கூத்து ,நாடகங்கள் என கலை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டடிருந்தன. நிகழ்ச்சிகள் பல்வேறு தலைப்புகளில் வடிவமைக்கப்பட்டிருந்தன. பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பெண்கள் சார்ந்த சமூகப்பார்வைகள், பெண்கள் எதிர்நேசாக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள், உலகமயமாக்கல் , சட்ட பிரச்சினைகள் என பல்வேறு கருத்துகள் கலந்துரையாடப்பட்டன.

பெண்ணிய செயற்பாட்டாளர்கள் களப்பணியாளர்கள் சட்டத்தரணிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வை றஞ்சி,சந்திரலேகா,சரோஜா சிவச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். யாழினி தலைமையில் மட்டக்களப்பு, வண்ணம் குழுவினர், சிந்து குழுவினர் கூத்துநிகழ்வுகளும் இடம்பெற்றன. அதே போல் இச்சந்திப்பில் பல இளைய தலைமுறைகள் உட்பட பல்வேறு வயதினரும் பங்கு பற்றியிருந்தது இச்சந்திப்பின் சிறப்பு. இங்கு பேசப்பட்டவர்களின் கருத்துக்கள் எதிர்கால கருத்துகள் எதிர்கால செயற்பாடுகளுக்கு நம்பிக்கை தந்தது எனலாம். அதே போல் நிகழ்வுகளுக்கும் பல இளைய தலைமுறைகள் உட்பட பல்வேறு வயதினரும் பங்கு பற்றியிருந்தது. இச்சந்திப்பின் சிறப்பு

என் எம் லிப்சியா

ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

ஆரோக்கியமான செயற்ப்பாடுகள் நிறைய அமைந்திருந்தது.
பெண்களுக்கான ஓர் தளமாக விளங்குவதையெண்ணி பெருமை கொள்கிறேன். இதில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.இன்னும் நிறைய பெண்கள் இணைய வேணும் என்பது எனது கருத்து.

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

பெண்ணெனும் சக்திப் பெருக்கினை கண்டேனே
மண்ணின் உரமாய் மறுவில்லா சந்திரனாய்
ஊடறுவில் மாதர் குமுறல்கள் காதிலே
பூடகமாய் வந்துசே ர

வெடித்தது நெஞ்சம் எரிமலை போலே
துடித்த உயிரும் உடலும் உடைக்க
புரட்சி விதைபெண்ணில் பூக்க
கரங்கள் எழுந்தன பார்

பாரில் கணந்தோறும் மாதர்வே கின்றதீயை
ஏரியில் தள்ள எழுந்தாள் அவளும்
மரநிழலாய் ஊடறு தன்நிழலைத் தந்தே
வரமாக வந்ததே பார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *