நான் இன்னும் உயிருடனிருக்கின்றேன்.

காஷ்மீர் வானொலி மூலம் புகழ்பெற்ற நயீமா அஹமட் 1955 ல் பிறந்தவர். ஒலிபரப்புக்கான பத்மஸ்ரீ விருதினை வென்றவர். காஷ்மீர் இளம் எழுத்தாளர் சங்கத்திலும் அங்கம் வகித்தார். பீ.பீ.சீ. வானொலியில் உருது சேவையில் ஒலிபரப்பாளராகவும் சேவை புரிந்தார். நீர்ஜா மாத்தூ மொழிபெயர்த்துத் தொகுத்தளித்த காஷ்மீர் சிறுகதைத் தொகுப்பான ‘‘The Stranger Beside Me’  நூலிலிருந்து பெறப்பட்டது இக்கதை. “அழகும் மதிப்பும் பெற்று இலங்குகின்ற அனைத்திலும், ஒரு வதைக்கத்தக்க வன்மத்தைத் தரிசிக்கின்ற சிந்தனையுடைய ஒருவரின் கற்பனைக்குச் சாட்சியாக விளங்குகிறது இக்கதை” என்கிறார் நீர்ஜா.

நான் இன்னும் உயிருடனிருக்கின்றேன்.
மூலக்கதை: நயீமா அஹமட்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: கெகிறாவ ஸ_லைஹா
   
பாதை நடுவே குந்தியிருந்தவண்ணம் கடந்து போவோர் வருவோரைப்பார்த்து மறுபடி மறுபடி அவள் அந்த கேள்வியைத் தொடுத்துக் கொண்டேயிருந்தாள். “நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்?” சிலர் வெறுமனே அவளைப் பார்த்துக் கொண்டு போயினர் அவளது வினாவைப் புறக்கணித்த வண்ணம். மற்றும் சிலர் வியப்பில் ஆழ்ந்தனர். இன்னும் சிலரோ அவளது அக்கேள்வியின் அர்த்தத்தைக் கிரகித்துக் கொள்ளவே முடியாதவர்களாய் அவர்கள் வழியினில் உறைந்து போய் நின்றிருந்தனர். உறைந்து நிற்கும் அவ்வுருவங்கள் மீதில் கிஞ்சித்தும் அஞ்சிக் கலக்கமுறாப் பார்வையைப் பதித்து அவள் அடிக்கொருதரம் பைத்தியக்காரத்தனமாய் சிரித்தும் கொண்டாள்.

அவளது சிரிப்பு அவர்களுக்குள் பெரிய மாற்றங்கள் எதையும் செய்து விடவுமில்லை. கடந்து செல்வோரில் அவசரப்பயணத்தில் இருப்பவர் பலரும் இருக்கவே செய்தனர். தம் சூழல் குறித்த கரிசனை எதுவுமற்றவர்களாய் மட்டுமன்றி, அவர்களது சுயம் பற்றியதான எதையும் கூட அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பதாகப் பட்டது. சட்டங்கள் கட்டவிழ்க்கப்பட்டு குழப்பங்கள் மிகைத்துக் கிடப்பதாய்ப் பட்டது அவர்களைப் பார்க்கையில். யாருக்குத் தெரியும் யார் யாரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று? அன்றி, யார்தான் யாருடன் சேர்ந்து நடந்தார்கள்? அவர்கள் அனைவருமே யாரது கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாதவர்களாய், ஒருவரைவிட்டு ஒருவர் முற்றிலும் விலகி, செவிடுகளாய், பார்வையற்றோராய் ஒருவரை உதைத்துத் தள்ளிக் கொண்டு முன்னேறிப் போவோராய்த் தான் இருந்தது அங்கு நிலவிய சூழ்நிலை.

நானும் நெடுநாட்களின் பின்னர்தான் அப்பாதைவழி நடந்து கொண்டு வந்திருந்தேன். என்னுடல் எலும்புக்கூட்டினையொத்த விறைப்பான நிலையினதாய் உணர்ந்தேன் நான். எதுவோ ஓர் வலிதான சக்தி என் சிந்திக்கும் ஆற்றல்களையெலாம் கொள்ளையிட்டுப் போயினதாய் இருந்தது எனக்கு. நானும்தான் அப்பாதையில் விரைந்து போய்க் கொண்டிருந்தேன் ஆயினும், எனக்கும்கூட நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவில்லை.

குதிகால்கள் வெடிப்பெடுத்திருந்ததில் நடப்பது ரொம்பக் கடினமானதாய் இருந்தது. அவள் அமர்ந்திருக்கும் அவ்வீதியை நான் நெருங்கியபோது அவள் எழுந்து நின்று வழிமறித்தாள் என்னை. என் கண்கள் அவள் முகத்தின்மீது பதிகையில் ஜீவிதம் மீளக்கிடைத்து விட்டதே போலிருந்தது எனக்கு. என் இருப்பினூடாய் ஒரு மும்முர உத்வேகம் தோன்றி உந்துதல் தர, இப்போது நடக்க இயலுமாய் இருந்தது எனக்கு. எனக்குள் நான் எண்ணிக் கொண்டேன்: “இது இவளே…. ஆமாம்…. நான் நெடுநாட்கள் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருந்தவள் இவளேதான்…” குதூகலத்தில் நிரம்பி வழிந்தேன் நான். அவள் மடிமீதில் என்  இருப்பின் எல்லாச் சுமைகளையும் கிடத்திவிட முடிந்தால் நான் மறுபடி உயிப்பெற்று வாழ முடியலாம். அவளோ என்னிலும் பன்மடங்கு உடைந்து நொறுங்கிச் சிதைந்துபோய் நாதியற்றுத் தெரிந்தாள். தன் சுமைகளையேத் தாங்கொணாமல் தள்ளாடும் அவள் என் சுமைகள் தாங்கியெல்லாம் உதவிடுதல் எங்ஙனம்?

“எங்கே போய் கொண்டிருக்கிறீர்கள்…?” எனைப் பார்த்தும் கேட்டாள் அவள் தன் வதனத்தே ஒரு புன்சிரிப்பை ஏந்தியபடி. எனக்கே என் இலக்குத் தெரியா நிலையில் நான் இருந்தேன் ஆதலால் என்னால் அவளது கேள்விக்கு பதில் பகற முடியவில்லை. அவள் எனைத் துண்டு துண்டுகளாய்ச் சிதைத்துப் போடுவதாய்ப் பயமுறுத்தும் ஒருவகைச் சினத்துடன் பார்த்தாள். அதிவேகமாய்ப் பேசலானேன் நான். “நானா? நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்..? எனையா கேட்கிறாய் நீ? இல்லை.. நீயே சொல்லேன் எனக்கு..” நீளமாய்ப் பெருமூச்செறிந்தாள் அவள். முடிவற்று கண்ணீர்த்துளிகள் உருண்டோடி வந்து விழ ஆரம்பித்தன அவள் கண்களிலிருந்து. “நான்தான் நெடுநாட்களாய் உனக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கிறேனே… நீ ஏன் இன்னும் அதே குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கிறாய்?

எனக்கு முன்னம் நீ சந்தித்த மாந்தரிடத்தே நீ ஏன் இந்தக் குழப்பத்தைத் தீர்க்க உதவி கோரியிருக்கக் கூடாது?” ஒரே மூச்சில் அந்தச் சொற்கள் நொறுங்கி வந்து வீழ்ந்தன. “ஆயினும் பாரேன் நான் அப்படிச் செய்தபடியே இருந்தேன் தெரியுமா…? நான் சந்தித்த எல்லா நபர்களிடத்தேயும் கேட்டேன் நான் இந்தக் கேள்வியை… அவர்களோ என் பாதையில் எனக்காக எஞ்சிக்கிடந்த எல்லாக் கொஞ்ச நஞ்ச அடையாளங்களையும் அகற்றிப் போட்டு, என்னைப் பிழையாகவே வழி நடத்திப்போயினர் தெரியுமா…? இதற்குமேல் எனக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை. நீ ஒருவன்தான் அதைக் கண்டு பிடிக்க வேண்டும்…”

அவள் குரல் உடைந்து வந்து ஒலித்தது. “இல்லை.. இல்லை..” “ நான் மிகப் பலவீனப் பட்டுப்போயினேன். அவர்களை நான் கேள்வி கேட்டபோதெல்லாம் அவர்கள் என்னைக் கேலி செய்தனர். என் நாதியற்ற நிலையை அறிந்த அவர்கள் என்னை ஓரத்துக்கு ஒதுக்கிப் போயினர். பின்னர் நான் ஒரு பாலை நிலம் நோக்கி ஓடினேன் குடிக்கும் நீர் பருகி வரவென்று. என்னதான் பருகினாலும் தாகம் தீர்ந்தபாடில்லை. அது அடங்கியதாவே இல்லை. எனக்குள்ளேயே எதுவோ ஒன்று வலித்துக் கொண்டே, வதைத்துக் கொண்டேயிருந்தது. எதையோ சொல்லிக் கொண்டேயிருந்தது. குற்றம் சாட்டிக் கொண்டேயிருந்தது நீ தொலைந்தாய் என்று…”

அவள் எனை வெறுமையாய்ப் பார்த்தாள் என் கதையைப் பற்றி அதிகம் சிந்திக்காதமாதிரி காட்டிக்கொண்டு. பின் அவள் சிரித்தாள். குதூகலங்கள் அறவேயற்ற படுபயங்கரச் சிரிப்பு அது. அதன் எதிரலைகளைத் தாங்க முடியவில்லை எனக்கு. அது என்னை மூச்செடுக்க முடியாதபடி நான் இறந்து போகுமளவு உறைய வைத்தாற் போல உணர்ந்தேன் நான்.. அவளை அப்படி நகைக்க வேண்டாமென்று இரந்து நின்றேன் நான். “அது என்; வயிற்றெரிச்சலை அதிகப்படுத்திற்று. “சும்மா சொல் நான் எங்கே போக வேண்டுமென்று.. அவ்வளவுதான்..” என் கெஞ்சுதல் கேட்டுக் கண்ணீர் பருவ மழையெனப்  பெருகி ஊற்றியது அவள் கண்களிலிருந்து. அவள் சொன்னாள்.. “நானும் தொலைந்துதான் போயினேன் உன்னைப் பின்பற்றி… எங்கே போவதென்ற தெளிவான யோசனை என்னிடமுமில்லை. அதனால்தான் தெரு நடுவே உட்கார்ந்து கொண்டு கடந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் இந்தக் கேள்வியை.. அவர்களில் யாரேனும் ஒருவர் அறிந்திருக்கலாமல்லவா அதற்கான பதிலை…”

“என்ன நீயும் தொலைந்து விட்டாயா…?” அலறினேன் நான்.

“ஆமாம், நானும் தொலைந்து தான் போயினேன்… ஆனாலும் நான் உன்னைத்தேடிக் கொண்டேயிருக்கிறேன். ஓ! எத்தனை முயன்று முயன்று உன்னைத் தேடிக் கண்டுபிடித்தேன் நான் தெரியுமா? அதனால்தான் என் தொலைந்துபோன சுயத்தைக் கண்டு கொள்ள முடியுமாயிற்று எனக்கு. நீ பிடிபடாமலேயே எப்படி நழுவிக்கொண்டிருந்தாய்…? என் இளமையே வீணாகிப் போயாயிற்று. ஏதோவோர் அசுர நம்பிக்கையோடு நான் தேடிக்கொண்டேயிருந்தேன் நீ இவ்வழியால் போகக்கூடும் என்று… உனதான பழைய ஊசலாட்டத்திற் தொலைந்த நீ இன்னமும் இப்படித்தான் நடந்தலைந்து திரிகின்றாய் என்று எப்படி நான் அறிந்திருந்தேன் பாரேன்…” திடீரென்று பைத்தியம் பிடித்தாற்போல மாறி, தன் தலைமயிரைப் பிடித்திழுத்து ஆடைகளைக் கிழிக்கத் தொடங்கினாள் அவள். சட்டென்று அவள் கைகளை என் கைகளுக்குள் எடுத்துக் கொண்டே சொன்னேன் நான். “என்ன செய்யத் தொடங்குகிறாய் நீ இந்தப் பெருவீதியின் நடுவில் நின்று கொண்டு.. பார்! எல்லோரும் நம்மையேப் பார்க்கிறார்கள்..”

மக்கள் தத்தமது மார்புகளில் அடித்து அலறிக் கொண்டு நம்மைச் சூழத் தொடங்கினார்கள். கூர்ந்த அழுகையொன்று வெடித்துப் புறப்பட்டது அவளிடமிருந்து. “ஏன் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தனிப்பட்ட இழப்பு ஒன்றுக்காக அழுது வடிந்து கொண்டிருக்கிறீர்கள்…? ஏன் ஒன்றுபட்ட ஒரு அழுகையின் குரலாக ஏன் இவை மாறக்கூடாது?” சனக்கூட்டம் மௌனத்தில் உறைந்து போய் ஒருவரையொருவர் வியப்போடு பார்த்துக் கொண்டனர். திடீரென்று, தொலைதூரத்தே ஒரு துயர அழுகை கேட்கவே, அத்திசை நோக்கி அனைவர் கவனமும் திரும்பத் தொடங்கியது. ஒட்டியுலர்ந்துபோன ஒரு மனிதனின் எலும்புக்கூடு ஒன்று புதைகுழியிலிருந்து தோன்ற, அதன் மீதமாய் இருக்கும் சதைத் துண்டுகளைக் காகங்களும், கழுகுகளும் கொத்திக் கொத்தி இழுத்தபடி இருந்தன. திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று எனக்கு. இந்த வயோதிக மனிதன் நீண்ட நாளைக்கு முன்னம் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும்.

அவன் தனது எஞ்சிய மீதமுள்ள  சதைத்துண்டுகள் சகிதமான அழிவுற்ற உடலோடு நம்மை நோக்கிப் புறப்பட்டு வந்தான் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே. “ஏன் இந்தக் கழுகுகளும், காகங்களும் எனதுடம்பைக் கொத்திக்குதற வேண்டும்?” அவனது கேள்வியில் சனக்கூட்டம் உருகத் தொடங்கிற்று. அவளும் முன்னகர்ந்து என்னை நெருங்கி வந்து இழுத்து வைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். வருஷங்கள் என்னைக் கிழித்துச் சிதைத்துப் போட்டிருந்தன. என்னால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆயினும் அவள் என்னை முன்னோக்கி இழுத்தபடியே நகர்த்திச் சென்றாள் ஓடியோடி. அவளைத் துரத்திக் கொண்டே மக்கள் ஓடி வந்தார்கள் குருட்டுத்தனமாய், ஏதோவோர் ஆயுதம் தரித்த படைவீரர்களால் தாம் துரத்தப்படுவதேபோல. புதைகுழியிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் அம்முதிய மனிதனோடு பேசி, அவன் கேள்விக்கு விடையளிக்க வேண்டுமென்பதற்காய் அவள் பிடியிலிருந்து என்னை மீட்டுக் கொள்ள நான் போராடினேன். நான் திரும்பிப் பார்த்தேன். தன் புதைகுழியருகே அவன் வீழ்ந்து கிடக்க, முன்னம் போலவே காகங்களும், கழுகுகளும் அவனைக் கொத்திக் குதறிக் கொண்டிருந்தன. ஒரு படுபயங்கரத் தோற்றப் பொலிவற்ற வனத்தே நாம் நுழைந்தபோது, அவள் பிடி மெல்லத் தளர ஆரம்பித்திருந்தது.

இப்போதோ நான் அவளை இறுகப் பற்றிக் கொண்டேன். பிறகு சொன்னேன், “ இல்லை இல்லை நீ என்னை விட்டுப் போய் விடாதே. மறுபடி எப்படி நான் என் பாதையை இனம் காணுவேன்?” அவள் மிக நெருங்கி என்னருகே வந்தாள். அவளது உதடுகள் என் செவிகளைத் தொடுமளவு நெருங்கி வந்து முணுமுணுத்தன. “திரும்பிப் பார் நம்மைத் தொடர்ந்து வந்த சனக்கூட்டத்தை…” நான் பார்த்தேன். அவர்தம் அனைத்து உடல்களும் தரையோடு ஒட்டிக்கிடந்தன. எவற்றிலும் எந்த அசைவும் இல்லை. அனைவரும் இறந்து கிடந்தனர். வாழ்க்கைக்கு இனி எந்த அர்த்தமும் இல்லை. ஒரு இடர் வரவின் முன்குறிப்பாய் மௌனம் பற்றிப் பிடித்திருந்தது அந்தக் காட்சியை. ஒரு மரத்தடியே அமர்ந்து அவள் பெருமூச்செறிந்தாள். ஆயிரக்கணக்கான வல்லூறுகள் சூழ பாதையில் ஒட்டிக்கிடந்த எல்லா இரு பரிமாண உடல்கள் மீதும் என் பார்வை பதிந்தபோது, எனக்கும் அப்படியே பெருமூச்செறியத்தான் தோன்றிற்று. “இல்லை… இல்லை ஏன் இந்தக் காக்கைகளும், கழுகுகளும் இவர்களைக் குதற வேண்டும்?” அவள் அவளது தலையை என் தோள் மீதிற் கிடத்தி, ஒரு சிரிப்போடு சொன்னாள் “செத்துப் போய்விட்டதாய் நீங்கள் கற்பனைப் பண்ணுகிற இவர்கள் நிஜத்தில் உயிருடன்தான் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான வருஷங்களாக வாழ வேண்டுமென்று மட்டந்தட்டப்பட்டவர்கள் இம்மக்கள்.” அவள் கூறுவது சரியென்பதை உணர்ந்தேன் நான், காகங்களும், கழுகுகளும் பாதையை அரவணைத்தபடியிருக்கும் அவர்களைக் கொத்திக் குதறாமல் மணல் கும்பத்திலிருந்து தத்தமது சொண்டுகளால் மணல் அள்ளி வந்து அவர்கள் மீதில் தூவிப்போனபோது. நான் அவளைக் கேட்டேன், “நான் இறந்து விட்டவனா..? அன்றி, உயிருடன் இருப்பவனா?” அமைதியாய்ச் சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள், “நீ இன்னும் உயிருடன்தான் இருக்கிறாய். ஏனெனில், இறந்தோர் கேள்விகள் கேட்பதில்லை.”

நான் அந்த பதிலால் எனது நிலைப்பாட்டை உறுதிசெய்ய முடியுமாயிற்று. சிலவேளை, எனக்கும் கூட நிம்மதியாய் இப்படி மணல் கும்பத்திலிருந்து காகங்களும், கழுகுகளும் தத்தமது சொண்டுகளால் மணல் எடுத்து வந்துத் தூவிப் போகிற மாதிரி கிடந்திடத்தான் ஆசையாய் உள்ளது. ஆயின், நானும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன் என்றாகிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *