கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?

எம். ஆர். ஷோபனா

 இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

பேதைப் பருவம் தொடங்கிப் பெரிளம் பெண் பருவம் கடந்து கடந்து மூதாட்டி ஆனாலும் இந்த மூடக் கருத்துகள் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. நவீன அறிவியலும் நவீனமயமான வாழ்வும் இவற்றில் பலவற்றை வழக்கொழியச் செய்துவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் பார்வைகள் பெரிதாக மாறிவிடவில்லை. அந்தப் பார்வைகள் வெவ்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளவே செய்கின்றன. அதன் வடிவங்களில் ஒன்றுதான் உடைக் கட்டுப்பாடு.

பெண்களை ஓயாமல் துரத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது. இந்த நாட்டின் கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடை மீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள்.

கொடூரமான பாலியல் பலாத்காரக் கொலைகளுக்குச் சாக்கடையாக மாறிபோன ஆண் மனத்தின் வக்கிரங்களைக் காரணம் காட்டாமல், காவு கொள்ளப்பட்ட பெண்ணின் நடை, உடை, பாவனைகள் மீதே கேள்விகள் எழுப்படுகின்றன. தில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு நீதிமன்ற வாசலை அடைவதற்கு முன்னரே, அவள் அப்போது என்ன உடை அணிந்திருந்தாள் என்பதைத் தீவிரமாக அலசினர் நம் மக்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரம் குறித்த செய்திகள் வெளிவர, பதறிப் போன பொதுச் சமூகம், என்னென்ன ‘சீர்திருந்தங்கள்’ கொண்டு வரலாம் என்று அறிவுரைகளும் அறிக்கைகளும் விடுக்க ஆரம்பித்தது.

மாணவிகள் ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பதான கட்டுப்பாடுகளைப் பல கல்வி நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. சமுக ஆர்வலர்கள், ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளால் ‘சமத்துவமாக’ மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் சில கல்வி நிறுவனங்களால் விதிக்கப்படுக்கின்றன.

நாங்கள் படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம் என்று விளக்கம் அளிக்கும் இந்த ஒழுக்கக் காவலர்களால் உண்மையில் மாணவர்களிடம் ஒழுக்கத்தையோ கட்டுப்பாட்டையோ கொண்டு சேர்க்க முடிந்ததா?

இன்று மாணவர்கள் சுலபமாக ஒரு கல்லூரி முதல்வரைக் கொல்ல முடிகிறது. காதலை ஏற்கவில்லை எனில் மாணவியை வெட்டிச் சாய்க்க முடிகிறது. அவள் முகத்தில் அமிலத்தை ஊற்ற முடிகிறது. மாணவிகள் பள்ளிக்கூடத்திலையே குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் பல நடக்கின்றன. கருக்கலைப்பு செய்துகொள்ளும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற வன்முறைகளும், சீர்கேடுகளும் அதிகரித்துவரும் நிலையில், எந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மாணவ மாணவிகள் மத்தியில் நாம் நிலைநிறுத்துகிறோம்? இதுபோன்ற விதிமுறைகளால் என்ன மாற்றத்தை உருவாக்குகிறோம்? ஒரு பெண் தன் உடலை முழுவதுமாக மறைந்துக் கொண்டு வீதியில் சென்றால் மட்டும், அவளுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருந்துவிடுமா?

பாதிப்புக்குள்ளான பெண்கள் உடை விஷயத்தால்தான் அந்த பாதிப்புக்கு உள்ளானார்களா? உடைக் கட்டுப்பாட்டினால் வன்முறையையும் குற்றங்களையும் குறைத்து ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியாது. ஆடைகள் நம் உடலை மறைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே. அவை நம்மைப் பாதுகாக்கும் கவசம் அல்ல. தவிர, உடை என்பது வெறும் கடமைக்காக அணிவதல்ல.

உடையில் ஒருவரது விருப்பம், அழகுணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி ஆகியவை வெளிப்படுகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் தேவை. குறிப்பாக, சுதந்திரச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும் இளம் பருவத்தினருக்கு இது அவசியம் தேவை. எந்த உடை ‘கண்ணியமானது’, எது ‘கவர்ச்சிகரமானது’, எது ‘ஆபாசமானது’ என்பவை எல்லாம் நபருக்கு நபர், சூழலுக்குச் சூழல் மாறுபடக்கூடிய அளவுகோல்கள்.

ஒருவருக்கு கண்ணியமானதாகத் தெரியும் உடை இன்னொருவர் கண்ணுக்கு ஆபாசமானதாகத் தெரியலாம். ஒரு சிலர் எதை அணிந்தாலும் பிறர் கண்ணுக்கு வசீகரமாகத் தெரியலாம். இவற்றையெல்லாம் பொதுமைப்படுத்தவே முடியாது. எனவே எந்த உடையை அணிய வேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமையையும் பொறூப்பையும் அவரவருக்கே விட்டுவிடுவதுதான் பக்குவமான சமுதாயத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதே சமயத்தில், ஒரு சூழல், குறிப்பிட்ட ஒரு தருணம் ஆகியவை சார்ந்து தமக்குத்தாமே விதித்துக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளைப் பெரும்பாலான பெண்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும்போது அதிக வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளும், விழாக்களுக்குச் செல்லும்போது கண்கவர் ஆடைகள் எனவும் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே வெளியிலிருந்து யாரும் இதை அவர்கள் மீது திணிக்கத் தேவையில்லை. மொத்தத்தில், ஒருவர் அணியும் உடை அவரது சுதந்திரம். அடையாளம். அதைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமோ தடுப்பதற்கான உரிமையோ யாருக்கும் இருக்க முடியாது.

நன்றி மாற்று .கொம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *