ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா

சர்மிதா (நோர்வே)

ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற  68வது ஐநா பொதுக் கூட்டத்தில் நடந்த சமூக நல மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துப்பாக்கிகளை அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களை அனுப்பி வையுங்கள். இராணுவ டாங்கிகள் அனுப்புவதற்கு பதிலாக பேனாக்களை அனுப்புங்கள். இராணுவ வீரர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை அனுப்புங்கள் எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதும் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதும் எனது கனவு எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலாலவின் சேவையை பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டுக்கான “பீட்டர் ஜெ ஹோம்ஸ் மனித நேய விருது” வழங்கி கௌரவித்தது.


ஹார்வர்டு ஃபவுண்டேஷன் இயக்குநரும் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியருமான டாக்டர் எஸ்.ஆலென் கவுன்டர் விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட மலாலா மருத்துவராகி நோயாளிகளுக்குச் சேவை செய்வதை விட அரசியலுக்கு வரவே விரும்புகிறேன். அதன் மூலம் பொதுமக்களுக்கு நேரிடையாக தொண்டாற்ற முடியும்.

பாகிஸ்தானில் பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் அவர்களும் சிறப்பு மிக்க ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பயில வேண்டுமென விரும்புகிறேன். எனது வாழ்க்கைப் பயணத்தில் என்றாவது ஒரு நாள் பாகிஸ்தானுக்கு திரும்பச் செல்வேன்.

அப்போது அங்கு ஹார்வர்டு போன்று உயரிய பல்கலைக்கழகத்தை உருவாக்க முயல்வேன் என்றும்  தெரிவித்துள்ளார் மலாலா

1 Comment on “ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *