காணாமற் போனவர்களின் உறவினர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்

IRIN   தமிழில் சர்மிதா( நோர்வே)

 காணாமற் போன பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டுள்ள போதிலும்  இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் செயற்பாட்டாளர்களும் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்

“காணாமற் போன தமது துணைவர்கள்;, பிள்ளைகள்;, அல்லது பெற்றோர்கள் போன்றவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்கின்ற அச்சம் காரணமாக இவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வேதனைப்படுகின்றனர். இதனால் இவர்கள் மனஅழுத்தத்திற்கு உட்படுகின்றனர்” “காணாமற் போன தமது உறவுகள் இறந்து விட்டார்களா அல்லது அவர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளமுடியாத உறவுகள் உணர்வு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என என கொழும்பு பல்கலைக்கழகத்தின்  தேசிய ஆலோகருமான அனந்த கலாப்பற்றி தெரிவித்துள்ளார்.

 காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு சிறிலங்காவில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சமூகஉளவியல் ஆதரவுகளே வழங்கப்படுவதாக அனந்த கலாபற்றியும் ஏனைய வல்லுனர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசு மற்றும் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் ஆகியன காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு மிகவும் குறைந்தளவு உதவிகளையே வழங்குவதாகவும் மேலும் சமூகஉளவியல் சார் சேவை வழங்குனர்கள் உளவியல் தாக்கத்திற்குட்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அரசியல் சார் பிரச்சினைகள் தடையாக காணப்படுகின்றன” என கலாப்பற்றி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதாவது இந்தச் சேவை வழங்குனர்கள் காணாமற் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தடையாக உள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் சில முறையிட்டுள்ளன.

 காணாமற் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபடும் தனது நிறுவனத்தைப் போன்ற பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்துப் பணியாற்றுவதற்கான அனுமதியைத் தருவதற்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளும் இராணுவத்தினரும் அண்மைக்காலம் வரை தயக்கம் காண்பித்ததாக யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் இயக்குனர் சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ஆனால் தாங்கள் எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள்  தமது சார்பில் பதிலளித்துள்ளனர்.

2011ல் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் காணாமற் போனவர்களின் உறவினர்களிடம் நிறுவனங்கள் சென்றபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் தமது ஒத்துழைப்பைத் தருவதில் தயக்கம் காண்பித்ததாகவும் சிவச்சந்திரன் குறிப்பிட்டார்.

Rights Now Initiative (தேசிய அரச சார்பற்ற நிறுவனமான) நிறுவனத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளரான றுக்கி பெர்னாண்டோ காணாமற் போனவர்கள் பற்றி தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கமானது காணாமற் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குவதானது நாட்டில் சமூக உளவியல் ஆதரவுத் துறையானது மிகவும் பலவீனமடைந்துள்ளதையே காண்பிக்கின்றது  என தெரிவித்துள்ளார்.

 

“காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினையை ஏற்றுக் கொண்டு ஆராயப்படுவதானது இவர்களின் உறவுகள் தாங்கி நிற்கும் வடுக்களைக் களைவதற்கு அடிப்படையானது. இலங்கை அரசாங்கமானது பாதிக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினையை அங்கீகரிப்பதில் தயக்கம் காண்பிப்பதானது இவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் உளவள ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் குறைகிறது. எடுத்துக்காட்டாக இந்த விடயத்தில் சாதகமான அனுபவங்களைக் கொண்டுள்ள ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் காணாமற் போனவர்கள் தொடர்பில் உதவிகளை வழங்க முன்வருகின்ற போதிலும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காததால் இந்த வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன” எனவும் றுக்கி பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே 2009ன் முதல் வாரத்தில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான மகேஸ்வரி என்கின்ற பெண்ணின் சகோதரன் காணாமற் போனார். அதிலிருந்து இந்தப் பெண் காணாமற் போன தனது சகோதரனைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

“நாங்கள் இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்திருந்த போது நந்திக் கடல்நீரேரியைத் தாண்டி இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது எனது சகோதரன் எம்மிடமிருந்து பிரிந்துவிட்டார். இதிலிருந்து இவர் தொடர்பான எந்தத் தகவலையும் நாம் பெற்றுக் கொள்ளவில்லை” என மகேஸ்வரி தெரிவித்தார். மகேஸ்வரி தனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது மிகவும் வேதனையில் வாழ்கிறார். இவரைப் பொறுத்தளவில் இவர் தனது சகோதரனின் நினைவுகளிலிருந்து அகல முயற்சிக்கின்ற போதிலும் அது சாத்தியமற்றதாக இருப்பதாக கூறுகிறார்.

“இரத்த உரித்தானவர்களை இழந்து அவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்பதை அறியமுடியாத வாழ்கின்றவர்கள் மனஅழுத்தத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில், அதாவது அவர்கள் கிடைத்துவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கைக்கும் அவர்கள் கிடைத்துவிடவில்லையே என்பதால் உண்டான மனவேதனைக்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கின்றனர்” என அனைத்துலக மன்னிப்புச் சபையின் அவுஸ்திரேலியாவுக்கான பேச்சாளர் மிங்க் யு தெரிவித்துள்ளார்.

இலங்கையில்முப்பதாண்டுகளுக்கு  மேலாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் காணாமற் போயுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியால் 1988 தொடக்கம் 1989 வரை கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் பல பத்தாண்டுகளாக உள்நாட்டு யுத்தம் தொடரப்பட்டது. இவற்றின் விளைவாக நாட்டில் பல்வேறு அழிவுகள் ஏற்பட்டன. இதில் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. ஜே.வி.பி கிளர்ச்சியின் போது 60,000 வரையான மக்கள் காணாமற் போனதாக றுக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

“1995ல்இ சிறிலங்கா அதிபர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது 30,000 வரையான காணாமற் போன முறையீடுகள் பெறப்பட்டது” என பெர்னாண்டோ குறிப்பிட்டார். இலங்கையின் வடக்கில் 2635 பேர் வரை காணாமற் போயுள்ளதாக 2011ல் இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கையானது 2005 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்காலப்பகுதியில் இலங்கையின் வடக்கில் பணிபுரிந்த ஆய்வாளர்கள் மற்றும் மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமானது எனக் குறிப்பிடுகின்றனர்.

சிறிலங்காவில் 16,090 காணாமற்போனவர்கள் தொடர்பான வழக்குகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் பதிவு செய்துள்ளதாக 2012ல் அறிவித்த போதிலும் இந்த வழக்குகளில் பெரும்பாலனவை 1988-1989 ஜே.வி.பி கிளர்ச்சிகளில் காணாமற் போனவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 புள்ளிவிபரப்படி  அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது காணாமற் போனவர்கள் தொடர்பில் 310 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

காணாமற் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா செயற்பாட்டுக் குழுவானது இலங்கை அரசாங்கத்திற்கு 12,473 காணாமற் போன வழக்குகளை அனுப்பியிருந்தது. அதாவது இந்தக் குழு 1980ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளே இவையாகும். இவற்றுள் 5676 வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே காணப்படுகின்றன. இவற்றுள் 6535 வழக்குகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்திருந்தது. இதில் 222 வழக்குகள் இரு தடவைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய 40 வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வேறு தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
1980லிருந்து ஐ.நாவிடம் இந்த வழக்குகள் கையளிக்கப்படுவதாகவும், இந்தக் காலப்பகுதியிலிருந்து காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படுவதில் ஈராக்கிற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் இலங்கை இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. வடக்கில் தொடரப்பட்ட யுத்தத்தில் 30,000 வரையானோர் காணாமற் போயிருப்பதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய ஆய்வாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுiபாவள ழேற ஐnவையைவiஎந நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாது போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உளவியல் சேவைகள் வழங்கப்பட வேண்டும். 2008 ஏப்ரல் 25ல், கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலவில் பேரூந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மக்களுடன் புறப்படத் தயாராக இருந்த பேரூந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை நேரில் பார்த்தார். இந்தக் குண்டுவெடிப்பில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 40 பேர் வரை படுகாயமடைந்தனர்.“நான் இந்தக் குண்டுவெடிப்பை நேரில் பார்த்தேன். நான் தற்போது வேலைக்குச் செல்லும் போது சிலவேளைகளில் இந்தக் குண்டுவெடிப்பு நினைவுகள் என்னைச் சிலிர்க்க வைக்கும். குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பேரூந்தில் பயணிப்பதற்கு 2 கிலோமீற்றர் தூரம் வரை தற்போது நடந்து செல்ல வேண்டியுள்ளது” என நயந்தி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போது காணாமற் போன மக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவானது ஆறு மாதத்திற்குள் காணாமற் போனோர் தொடர்பான விசாரணை அறிக்கையை இலங்கை அதிபரிடம் கையளிக்க வேண்டும்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த நவநீதம்பிள்ளை போரின் தாக்கத்தால் வடுக்களைச் சுமந்து வாழும் மக்களைப் பார்த்த போது தான் மிகவும் வேதனையடைந்ததாகவும், இவர்களில் காணாமற் போனவர்களின் உறவினர்களும், போரின் போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் அடங்குவதாகவும் போரிலிருந்து மீண்டெழுந்து தற்போது உயிர்வாழும் மக்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். “இந்த மக்களின் காயங்கள் ஆறாது. வேதனைப்படும் இந்த மக்கள் மதிக்கப்படாதுஇலங்கையில் ; மீளிணக்கப்பாடு ஒருபோதும் நடைபெறமாட்டாது” என பிள்ளை மேலும் தெரிவித்திருந்தார்.

2004ல், இலங்கையில்  30,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட ஆழிப்பேரலையின் பின்னர் உளவியல் ரீதியாக மக்களை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

“பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு உளவியல் தாக்கத்திற்கு உட்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது” என கொழும்பிலுள்ள இலங்கையின் முதன்மையான மருத்துவ உடல் நலத் தேவைகளுக்கான தேசிய நிறுவகத்தின் பிரதி இயக்குனரான வின்டியா குமாரப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில், உளவியல் பாதிப்புக்கு உட்பட்ட நோயாளிகளை வைத்தியசாலையில் தங்கவைத்துக் குணப்படுத்துவதற்கு ஒரேயொரு வைத்தியசாலை மட்டுமே உள்ள போதிலும் வெளிநோயளர்களைப் பார்வையிடுவதற்கு 278 நிலையங்கள் காணப்படுவதாகவும் 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் உளவியல் தாக்கத்திற்குட்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2005ல் தேசிய உளச் சுகாதாரக் கோட்பாடு வரையப்பட்டது. இலங்கையில் உளவியல் மருத்துவர்கள் 60 பேர் பணியாற்றுவதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒருவர் பணியாற்றுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதமானவர்கள் மிகப்பெரிய உளவியல் நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் 10 சதவீதமானோர் மனஅழுத்தங்கள் மற்றும் மனக்கவலை போன்றவற்றுக்கு உட்பட்டுள்ளதாகவும் வின்டியா குமாரப்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் காணாமற் போனவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும். இவர்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் வாழ்வதால் இவர்கள் சிறப்புத் தேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு சட்டம் மற்றும் பொருளாதார ரீதியில் உதவிகள் வழங்கப்பட வேண்டும்” என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்புப் பிரதிநிதியான சுராப் புர்டுலி தெரிவித்துள்ளார்.

“காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்களின் காத்திருப்புக்கள் தொடர்கின்றன. இந்தக் குடும்பங்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளும் இவ்வாறான தொடர்ச்சியான காத்திருப்பால் மேலும் மோசமடைகின்றன. இந்தக் குடும்பங்களின் தேவைகள் கவனத்தில் எடுக்கப்படாவிட்டால் இவர்களின் பிரச்சினைகள் மேலும் தொடரும்” எனவும் சுராப் புர்டுலி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *