கங்கை, யமுனை, குமரி நதிகள் -இஸ்மாலிஹா – கண்டி – இலங்கை

தலைவி என்றும் துணைவி என்றும்
தந்நிகர் இல்லாத் தாயே என்றும்
அலையிடை பிறவா அமிழ்தே என்றும்
அதியுயர் பதவி தந்தார் ஆன்றோர்.
மனைவி என்றும் மகளே என்றும்
மனையதன் விளக்கு இவளே என்றும்
மனையறம் காக்க வந்தவள் என்றும்
மங்கையின் புகழைப் பாடி நின்றார்.

இலட்சுமி என்றும் சரஸ்வதி என்றும்
இறைவி என்றும் தலைவி என்றும்
இலக்கியத்தில் சமயங்களிலே
ஏற்றம் பெற்றார் பெண்கள் அன்று
கங்கை யமுனை குமரி நதிகள்
களங்கம் இல்லாப்பெண்கள் பெயரால்
எங்கும் ஓடி பெரும் பெற்று
இதிகாசப் புகழும் அடைந்த தன்றோ!
பாவை மன்றம் பாவை விளக்கு
பாவைக் கூத்தென பற்பல சிறப்பு
அவைதனில் ஒளவை கவி மழை பொழிந்திட
அதியமான் வியந்தது விறுவிறுப்பு
எத்தனை ஏற்றங்கள் இருந்தன அன்று
அவைகளைக் காணோம் இங்கு இன்று
உத்தமப் பெண்களின் துயர்கள் வென்று
உயர்வு காணும் நாளும் என்று
சீதனம் வாங்கி மணமகனாக
சிறப்பாய் தாலி கட்டிடுவார் பின்
ஆதனம் கொண்டு வா வென கூறி
அடிமைப்படுத்தி கொடுமை செய்வார்.
பாட்டில், படத்தில், தொலைக்காட்சியதில்
பாங்காய்க் காட்டும் பெண்மை எல்லாம்
காட்டில் பொழியும் நிலவைப் போல்
காட்சி அளிப்பது துயரமன்றோ.

ஏழைப் பெண்கள் திருமணக் கனவை
இரவும் பகலும் கண்டிடுவார்
வாழைத் தளிராம் இளமை கருக
வாழ்வைத் தொலைத்து நின்றிடுவார்
வீட்டின் வறுமை போக்கிடவே
விரும்பி நாளும் உழைக்கின்றார்.
நாட்டின் பொருளாதாரம் வளர
நன்றாய் பணிகள் செய்திடுவார்.

ஏடுகளிலே பெண்கள் பற்றி
எடுப்பாய் தலைப்பு தீட்டிட்டால்
நாடுகளெல்லாம் ஒன்றாய் கூடி
நங்கையர்க்காக வாதிட்டால்
அழகு ராணிப் போட்டிகளிலே
அழகு பவனி வந்திட்டால்
கழகங்களிலே தலைவியாகி
கருத்தை மதிப்பாய் சொல்லிவிட்டால்
எங்கள் செல்வியர் வாழ்வில் மேன்மை
ஏற்றம் அனைத்தும் வந்திடுமா ?
பொங்கும் துயரக் கதைகள் மாறி
புவியில் சுபீட்சம் தங்கிடுமா ?

ஆண்களைப் போல உடை உடுத்தி
அழகு நடையும் நடந்திட்டால்
பெண்கள் தரமும் சமமாய் ஆகி
பெருமை அனைத்தும் தந்திடுமா ?
வீட்டில் வெளியில் சமூகமதில்
வாழ்வில் வசதியில் கல்விதனில்
நாட்டின் சட்ட திட்டங்களில்
நமது பெண் நிலை உயர்ந்திடணும்
முட்டும் துயரைத் துடைத் தெறிந்து
மங்கையர் நேயம் மலர்ந்திடணும்
வாட்டும் அடிமை நிலை மாறி
வளமாய் பெண் நிலை வளர்ந்திடணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *