Thanks :- அன்புடன் சூரி சின்னத்துரை –https://www.facebook.com/profile.php?id=100083053181469
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிருசாந்தி சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் முப்பதாம் ஆண்டு 2026.09.07, இன்றாகும்.
அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை
1996 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிலவிய கொடூரமான இராணுவக் கட்டுப்பாட்டுச் சூழலில் தமிழ் மக்கள் சந்தித்த மனித உரிமை மீறல்களுள் சர்வதேசத்தை உலுக்கிய மிகக் கொடூரமான ஒன்றாகச் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் படுகொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி மற்றும் கடத்தல்:-
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவி கிருசாந்தி குமாரசுவாமி, க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டுத் தனது வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.
யாழ். மாவட்டத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிங்களப் படைகளின் 512 ஆவது படைப்பிரிவின் சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றபோது, அங்கு கடமையிலிருந்த சிங்களப் படையினரால் அவர் விசாரணை என்ற பெயரில் மறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார். அதன் பின்னர் கிருசாந்தி வீடு திரும்பவில்லை.

யாழ். செம்மணியிலுள்ள சிங்களப் படைக் காவலரணில் மாணவி கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்ற ஊரவர்கள், மாணவியின் தாயாரிடம் கூறியதையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனுமான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீடாடிற்கு அயலில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியைத் தேடிச் சென்றனர். ஆனால், தேடிச் சென்ற மூவரையும் கைது செய்த சிங்களப் படையினர், கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே வைத்துத் தொண்டையை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்தனர்.
கிருசாந்தி குமாரசுவாமி சோதனைச் சாவடியில் வைத்துச் சிங்களக் காடையர்களான படைச் சிப்பாய்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், கழுத்து நெரிக்கப்பட்டும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் நால்வரின் உடல்களும் செம்மணிப் பகுதியில் இருந்த உப்பு வெளி நிலத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டன.
இச்சம்பவம் யாழ். குடாநாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பன்னாட்டு மன்னிப்புச் சபை (Amnesty International) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கடுமையான அழுத்தத்தையும் தோற்றுவித்தது.
வழக்கு விசாரணை, குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு (1998)
சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் (Trial-at-Bar) அமைத்து விசாரணையை நடத்தியது.
இவ்வழக்கில் கைதாகி விசாரணையை எதிர்கொண்ட முக்கிய இராணுவக் குற்றவாளிகளின் விபரங்கள்:
• லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராசபக்ச (Somaratne Rajapakse)
• கார்ப்பரல் ரத்நாயக முதியான்சேலாகே யெயசூரிய (Rathnayaka Mudiyanselage Jayasuriya)
• சிப்பாய் யி.எம். இணோக் (G.M. Enoch)
• சிப்பாய் டி.வி. அமரசிங்க (T.V. Amarasinghe)
• சிப்பாய் ஏ.எஸ். பி. பெரேரா (A.S.P. Perera)
• சிப்பாய் கே. வை. டி. பெரேரா (K.Y.D. Perera)
• சிப்பாய் டி.எம். சிறினந்த (T.M. Sirinanda)
இவர்களுடன் சேர்த்து மேலதிக இராணுவப் சிப்பாய்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, 1998 யூலை 3 ஆம் நாள் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது:
முதன்மை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சோமரத்ன ராசபக்ச, யெயசூரிய, அமரசிங்க, இணோக் மற்றும் பெரேரா உட்பட 5 இராணுவத்தினருக்குக் கொலை மற்றும் பாலியல் வன்புனர்வுக் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஏனைய குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மிக முக்கியத் திருப்பமாக, தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராசபக்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அமைந்தது:
“நாங்கள் உடல்களைப் புதைக்கும் வேலையை மட்டுமே செய்தோம். மாலை நேரங்களில் பாரவூர்திகளில் கொண்டுவரப்படும் உடல்களைப் புதைப்பதே எங்கள் வேலை. செம்மணி உப்பளப் பகுதியில் 300 முதல் 400 வரையிலான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.”
இந்த திடுக்கிடும் வாக்குமூலமே ஈழப் போராட்ட வரலாற்றில் ‘செம்மணி மனிதப் புதைகுழி’ விவகாரத்தை சர்வதேச வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
தண்டனைக் குறைப்பு, பொது மன்னிப்பு மற்றும் நீதியின் பின்னடைவு
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீர்ப்பு அறிவிக்கப்பட்டாலும், தமிழ் சமூகத்திற்கு இலங்கை நீதித்துறையின் மீதிருந்த நம்பிக்கையின்மை மீண்டும் உண்மையாக்கப்பட்டது.
இலங்கையில் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை என்பதால், தண்டிக்கப்பட்ட இராணுவக் குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் சிறப்பு வசதிகளுடன் அடைக்கப்பட்டனர்.
சோமரத்ன ராசபக்ச அம்பலப்படுத்திய 300-400 தமிழர்களின் காணாமல்போதல் மற்றும் மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை அரசு முழுமையாகக் கிடப்பில் போட்டது. சில இடங்களில் சர்வதேச அவதானிகளுடன் தோண்டப்பட்டு, பின்னர் அரைகுறையாக விசாரணைகள் நிறுத்தப்பட்டு வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
சிறையிலிருந்த குற்றவாளிகளுக்குப் பின்நாட்களில் தண்டனைக் குறைப்புகள், மேல்முறையீட்டுத் தளர்வுகள் வழங்கப்பட்டதுடன், பொது மன்னிப்பு மற்றும் சிறைக் தண்டனைக் குறைப்பு என்ற பெயரில் அவர்கள் #இரகசியமாகவும்#பகிரங்கமாகவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் அல்லது அவர்களின் சிறைக்காலம் பெருமளவில் குறைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் படுகொலை வழக்கின் முடிவுகளும் செம்மணிப் புதைகுழியின் உண்மைகளும், சிங்கள அரசின் பேரினவாதக் கட்டமைப்பில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் நீதி என்பது ஏட்டுச் சுரக்காய் போன்றதே என்பதைப் பறைசாற்றும் மற்றொரு கசப்பான வரலாறாகவே நீடிக்கிறது.

