ஈழத்துத்தமிழ்ப் பெண்கவி ஆளுமைகள் – மாதவி சிவலீலன் -லண்டன்


.

`மரணமூறும் கனவுகள்` என்கின்ற கவிதைத் தொகுதியை 2015ஆம் ஆண்டு வெளியிட்ட யாழினி, இந்நூலில் இடம்பெறும் கவிதைகளைப் பெரும்பாலும் 2006 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் எழுதியிருக்கின்றார். ஈழத்தில் போரும் அதனால் ஏற்பட்ட அவலங்களும் கொலைகளும் பெண்கள் மீதான வன்முறைகளும் கருத்துரிமை மறுப்புக்களும் அரசியலதிகாரங்களும் மொழி இன ஒடுக்குமுறைகளும் நிரவிக் காணப்பட்ட சூழலில் தனது மனக் கொதிப்புக்களைக் கவிதைகளாக எழுதிச் சேகரித்து வைத்திருந்திருக்கின்றார். தன்னையொரு கதை சொல்லியாக அடையாளப்படுத்துமிவர், தொன்ம காலத்துக் கதையொன்றைக் கூறுவதொப்பத் தன் அனுபவங்களை எடுத்துரைக்கும் பாங்கானது கவிதைக்கு புதிய வடிவொன்றைக் கொடுக்கக் காணலாம்.இன்றைக்குச் சிலகாலத்துக்கு முன்புவரைநானொரு புகழ்பெற்ற கதைசொல்லியாக இருந்தேன்எனத் தன்னைப் பிரகடனப்படுத்துகின்றார், தாயக நினைவுகளை அங்கு நடந்த கொடுமைகளை ஒரு மாயாஜாலக்கதை சொல்லும் பாவனையில் கூறி வாசகர்களைத் தன்னுடன் ஒன்றிப் பயணிக்க வைக்கின்றார்

அதிகம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ந்து முன்வைக்கும் கவிதைகள் வாசிப்போரையே குற்றவுணர்வு கொள்ளச் செய்பவை. இலங்கையில் வன்புணர்தலுக்கான பெண்ணொருத்தியின் குறைந்த வயது ஆறு என்றும் கூடிய வயது எண்பத்தைந்து என்றும் ஏளனப்படுத்துமிவர், `அவள் வீழ்ந்த போது` என்கின்ற கவிதையில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமூகமும் அக்கொடுமைக்கு விலை போகிறதெனக் கொதிக்கின்ற அதேவேளை, பெண்ணொடுக்குமுறைகெதிரான குரலைப் பலமாகவே எழுப்புகின்றார். உங்களை வெறுப்பேற்றக் கூடுமெனினும்நான் வாழ்தலின் கடுமையைப் பற்றிபேச விரும்புகிறேன்எங்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியதேயெனினும் அதனை வாழ்ந்து முடித்தலென்பது இலகுவானதல்ல. ஒவ்வொரு பொழுதும் அகபுற அழுத்தங்களும் நகர்தலை ஆட்டங்காணச் செய்து விடுகின்றது. போலிப் புன்னகை பற்றிக் குறிப்பிடுகையில்.அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டுபுன்னகைக்க புன்னகைக்கபல்லெல்லாம் கொட்டுண்டுகடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது எனச் சொல்லுகின்றார். இற்றைவரை காதலை நிராகரிக்கும் மனோபாவமே எம்சமூகத்திடமிருக்கின்றதனைக் கவிதையாக்கியவர்,

அதனைச் சொல்லும் போது, பொய்கையில் மலர்ந்த தாமரையாக இருப்பினும் வேரூன்றாக் கால் கொண்டு பறக்கும் வெடிபலவன் போலிருக்கவே விருப்பமென்கின்றார். தமிழ்ச் சமூகத்தை மட்டுமன்றி எங்கெல்லாம் பெண்கள் மனதாலும் உடலாலும் பாதிப்புறுகின்றனரோ அவர்கள் பற்றியெல்லாம் வேதனையுறுகின்றார். பெண்ணுறுப்பைக் கீறும் ஆபிரிக்க வழக்கத்தையும் வளையங்கள் மாட்டிய கழுத்துக்கள் பற்றியும், அது சார்ந்த ஒடுக்குமுறையையும் குறிப்பிடுகின்றார். இதற்கெல்லாம் முடிவு வரவேண்டுமெனில் சமூகம் மாற்றமடைய வேண்டுமென்ற தொனியையும் முன் வைக்கின்றார். பக்குவப்பட்ட பெண்ணாக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்கையில் அது பின்வருமாறு அமைகின்றது.இப்போது நான் வளர்ந்தவள்பருக்களெனத் துருத்திக் கொண்டிருக்கும் திமிரும்விறைத்த மூளையுமாய்மரணத்துக்கே மசியாதவளை வீடென்ன செய்துவிடும் அன்றைய ஈழத்துப் போர்ச்சூழலும் அச்சங்களும் ஆக்க இலக்கியகர்த்தாக்களை மௌனமாக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறீயீட்டு வடிவத்தைக் கைக்கொண்டு சொல்ல வந்த அரசியலைப் பலரும் பேச முனைந்தனர். அதனைப் பல இடங்களில் இவரும் பயன்படுத்தியிருக்கின்றார். அவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கான அறிவைத் தக்க வைத்துக் கொண்டு கவிதையை வாசிக்கும் போதே அவற்றின் பாடுபொருளை, அதுவுணர்த்தும் உணர்வுகளை எம்மால் உள்வாங்கிக் கொள்ளமுடியும். பட்டாம்பூச்சியைப் பிடிக்குமாவெனக் கேட்கும் போதெல்லாம் ஓம் என்று சொல்லுகின்றவர்கள், அது ஒரு காலத்தில் மயிர்கொட்டியாக இருந்ததை மறந்து விட்டார்களெனச் சொல்லும் யாழினி, மயிர்கொட்டிகளை அருவெறுத்து அழிக்கப்பார்த்தவர்கள் பட்டாம்பூச்சியைக் கொண்டாடும் நியாயத்தைக் கேள்வி கேட்கின்றார்,

இச்சந்தேகத்தைப் பலமுறை பல கவிதைகளில் வினாவுகின்றார். இதுபோன்றே நாடோடி வாழ்வைக் கொண்டாடும் முகமாக வானம்பாடி, பனையோலைக் குடிசை, சத்திரம் போன்ற படிமங்களைப் பல கவிதைகளில் வைக்கின்றார். இவை கவிதைகளுக்கிடையிலான தொடர்ச்சியாக இல்லாதவிடத்தில் ஏன் இதனை முன்வைக்கின்றாரென்பது, கூறியது கூறலெனும் குற்றத்துக்குரியதாகிறதேவெனச் சிந்திக்க வேண்டியதாகிறது. ஆயினும் கொண்டாடப்படவேண்டிய கவிதை மொழியை இவர் கொண்டிருக்கின்றாரென்பதைப் பலவிடங்களில் நிரூபித்திருக்கின்றார்.மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவுசோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்ததுதமிழராய், வடக்கில் பிறந்ததற்காய் தென்னிலங்கையில் நிறுத்தி விசாரிக்கப்படுகையில் அவர்தம் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிக்கொணர்ந்து விடமுடிவதில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில்,காலடிகளின் கீழ் தவறுகள்காளான்களாய் முளைத்துக் கிளம்பஇனி நீ கடலை மட்டுமல்லகாளான்களையும் கடந்தாக வேண்டும்என்னையடையஎன்று கூறுகின்றார். காதலில் தோய்ந்த கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. பிரிவு, விரகதாபம் என்பவற்றை எடுத்தியம்பும் அதேவேளை, தனிமனிதக் காதல் வாழ்வைப் போரின் நெருக்கடிகள் எப்படி நொருக்கி விடுகின்றனவென்பதையும் மிகுந்த வலிகளுடன் பதிவிட்டிருக்கின்றார்.

ஒருவர் தன் கல்விப்புலமையுடனும் வாசிப்பு அனுபவங்களுடனும் எழுதுகின்ற போது தன்னையுமறியால் ஒரு வாசக வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார். அவர்களே இவர்தம் கவிதைகளைப் பேணிக் கொள்வர். இங்கும் நோவாவின் பேழை, மெருசாவின் தலை, மாயாவின் சிதிலங்கள் போன்ற சொற்களின் பின்னே கனதியான கிளைக்கதைகள் இருக்கின்றன அவற்றின் புரிதலோடு கவிதைக்குள் செல்லும்போது அவை பேசும் விடயங்கள் மேலும் சிறப்புக்குள்ளாகும்.இவரது கவிதைதகளின் சிறப்பு யாதெனில், யாவும் கதை சொல்கின்றன. அக்கதைகள் எமது காலத்தில் நடைபெற்றதாக இருந்த போதிலும், அவற்றை ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் சொல்லுகின்ற ஒருவரது மனநிலையிருந்து கவி சொன்ன முறைமையானது பயங்கள் விபரீதங்கள் நிறைந்த மர்மக்கதைகள் கேட்பது போன்ற விறுவிறுப்புடன் அமைகின்ற போதிலும் மனதை வலியுடன் கனக்க வைக்கும் சோகங்களையும் பொதிந்து வைத்திருக்கின்றது..

ஊடறுவில் கவிதைத்தொகுப்பின் விமர்சனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *