இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா ( Thanks – YS TEAM TAMIL)

 கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

 ஷாஹீனுக்கு பதினான்கு வயது, இதுவே அவரது குழந்தைப்பருவத்தின் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்த வருடம் ஷாஹீனின் பெற்றோர் அவரது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்கு திருமணம் செய்து வைக்க வாய்ப்பு இருக்கிறது. ஷாஹீன் ஹரியானாவின் ஷோலாபட்டி பகுதியைச் சேர்ந்தவர். இங்கு பெரும்பாலான குடும்பத்தில் இதுதான் நடக்கிறது.

நான் அவரைப் பார்க்கும் போது, தனது தோழிகளுடன் அவர் சிரித்துக் கொண்டு ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தைகள் அதைத்தானே செய்வார்கள். அவரது கருவிழிகள் பிரகாசமாக ஒளி வீசியது, துப்பட்டாவால் தனது முகத்தை மூடி விளையாடிக்கொண்டிருந்தாள். பின்பு அதை எடுத்துத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டாள் ஷாஹீன். அது அவளது பழக்கம். தலை முக்காடு இல்லாமல் இருக்கக் கூடாது என்று அவளுக்கு நன்கு தெரியும். குஷ்பேத்தி கிராமத்தில் உள்ள தீபாலயா பள்ளியில் உள்ள ஷாஹீனின் வாழ்க்கை ஒரு வெற்றிக் கதை. அவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கு வெற்றிகரமாக முடித்தார். அவரது கிராமத்தில் இருந்த பெண் குழந்தைகள் வகுப்பறைகளை ஒருபோதும் பார்த்ததில்லை.

வெற்றியை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது

தீபாலயா தன்னார்வத் தொண்டர்களுக்கு, வெற்றி என்றால் நிறைய விளக்கங்கள் உண்டு. அதில் பெரும்பாலானவை உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் ஒத்துப் போகாதவை. இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அதில் அத்தனையும் அடங்கியிருப்பதைப் பார்ப்பீர்கள். உங்களோடு ஒத்துப் போகாத ஒரு கூட்டத்தோடு நீங்கள் வேலை செய்யும் போது, உங்களால் என்ன செய்ய முடியுமோ, எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்வது. ஷாஹீன் கூட, அவரது வாழ்க்கை பற்றியோ படிப்பு பற்றியோ ஒரு போதும் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால் ஒரு மகளாக, அவரது பெற்றோர் பார்க்காத கல்வியை தான் பெற வேண்டியது அவசியம் என்று அவர் புரிந்து கொள்வாள் என்று நாம் நம்பலாம்.

 

இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை.

“இந்த கிராமத்தில் யாரும் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்புவதில்லை. அது தவறு என்று நினைக்கிறார்கள்” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரஜித்குமார். இவர் சமீபத்தில்தான் இங்கு பணியில் சேர்ந்தார். ஆனால் தீபாலயா, வறுமைப் பின்னணியில் வளர்ந்த, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் மத்தியில் நீண்ட நாட்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஷாஹீன் செல்லும் அந்தப் பள்ளி 15 வருடத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிரோரி, குஸ்பெத்தி, பிபாகா, பதுகா மற்றும் புட்லகா ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய ஷோலாபட்டிக்கு அது சேவையாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு உலகம் மாறியது

ஹரியானாவில் மனேசர் மலைத்தொடர்களின் வழியே பயணம் செய்து இங்கு வந்து சேர்ந்தேன். வாகனச் சத்தமும் புகையுமான குர்கான் நெரிசலைக் கடந்து விட்டால் அதன்பிறகு நாம் எதிர்கொள்வது பசுமையையும் சுத்தமான காற்றையும்தான். அங்கே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் மூன்றாம் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்றனர். தரையெல்லாம் தூசு. பள்ளிப் பிள்ளைகளின் ஷூ போட்ட கால்தடங்கள், ஒரு சில வெறும் கால்களின் தடங்கள் என்று தரையெல்லாம் அசுத்தம்.

நடைபாதையில் இரண்டு வரிசையாக அமர்ந்திருக்கும் அந்தப் பள்ளிப் பிள்ளைகள் முட்டி கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, அவர்களின் முதுகில் சூரிய ஒளி பட, முன்னும் பின்னும் ஆடியபடி அவர்கள் வாய்ப்பாடை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மூணு… மூணு, இரு மூணு… ஆறு, மும்முணா ஒன்பது… அவர்களின் பாட்டு மிருதுவான குளிர் காற்றில் மிதந்தது. அதில் தாஹில்தான் எனது கண்ணைக் கவர்ந்தார். அவரது சக மாணவர்களைக் காட்டிலும் உயரமாக இருந்தார். முகத்தில் மீசையும் தாடியும் வளர ஆரம்பித்திருந்தது. இரண்டாம் வகுப்பில் அப்படி ஒரு மாணவனை நீங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. அவரது வகுப்புக்கு அவர் ஏழு வயது பெரியவர். வயது 15. ஆனால் அவருக்கும் ஒரு வெற்றிக்கதை இருக்கிறது.

அவரது தந்தை ஒரு ஏழை விவசாயி. ஆனால் அவரைப் பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தார். ஷோலாபட்டியில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் அவர்களது பெற்றோருக்கு உதவியாக நிலத்தை உழுவது, நீர் பாய்ச்சுவது, அறுவடை என்று விவசாய வேலைகளில் ஈடுபட்டனர். பெண்களாக இருந்தால், சமையலறையில் உதவி, தண்ணீர் இறைப்பது, குழந்தைகளைத் தூக்கிச் சுமக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். சில பெண் குழந்தைகளுக்கு 14 வயதில் எல்லாம் திருமணமே முடிந்து விடும். “விவசாய நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு வருவது குறையும். அவர்கள் விவசாயத்தில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியிருந்தது” என்கிறார் இந்திரஜித்.

வறுமை எல்லாவற்றையும் தடை செய்துவிடும்

“மக்கள் ஏழைகள். அவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், ஓட்டுனர்கள் அல்லது தொழிலாளிகளாக இருந்தனர். பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள். அவர்களுக்கு நிறையக் குழந்தைகள் இருந்தனர். பெரிய குடும்பம் ஆனால் ஒரே ஒருவர்தான் சம்பாதிக்க வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். பெரும்பாலானவர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதில்லை” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவது ஒரு பெரிய சவால். ஏனெனில் அவர்களது பெற்றோர் பள்ளிக்கே சென்றதில்லை. பெரும்பாலானவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வைக்க முயற்சித்தனர். “எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் உங்கள் மகனை ஒரு ஓட்டுனராக்க வேண்டும் என்றாலும் அவர் எட்டாம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்கிறோம். ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர வேண்டும் என்றால் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எனவே குறைந்த பட்சம் 10ம் வகுப்பு வரையிலாவது உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள் என்று அவர்களிடம் சொல்கிறோம்” என்கிறார் இந்திரஜித்.

பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவது இன்னும் கடினம். பெண்கள் படித்தால் அவர்களுக்கு தைரியம் வந்துவிடும். திமிர் வந்து விடும். யாராவது தனக்குப் பிடித்த பையன்களோடு ஓடி விடுவார்கள் என்பதே கிராமவாசிகளின் எண்ணமாக இருந்தது. பெண்கள் என்றால் கீழ்ப்படிந்து நடக்கும் மகள்களாகவோ அல்லது மனைவிகளாகவோதான் இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினர். ஆனால் அதற்கு கல்வி ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்தனர். ஏனெனில் கல்வி, பெண்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கி விடும் என்று எண்ணினர்.

அவர்களின் மற்றொரு பிரச்சனை. ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கக் கூடாது. பெண் குழந்தைகள் பேருந்தில் செல்வதையோ அல்லது பையன்களுக்குச் சமமாக பள்ளிக் கூடத்தில் உட்கார்வதையோ பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இப்படிப்பட்ட பெற்றோர்களை சமாதானப்படுத்த, மூத்த பெண் பிள்ளைகளை பையன்கள் அக்கா என்று அழைக்கச் செய்வது என்றும், மூத்த பையன்களை பெண்கள் அண்ணா என்று அழைக்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் பள்ளியின் மூன்று பேருந்துகளில் ஒரு பேருந்தில் பெண்கள் மட்டுமே பயணம் செய்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. பள்ளிக் கட்டணம் பெண்களுக்கு மாதம் 75 ரூபாய். ஆண்களுக்கு 225 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

“தீபாலயாவில் நான் சேரும் போது, கிராமங்களுக்குச் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து, அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்வதும் எனது வேலையாக இருக்கும் என்று நான் கற்பனை கூடச் செய்திருக்கவில்லை” என்கிறார் இந்திரஜித் உதட்டோரம் ஒரு புன்னகையுடன். “உண்மையில் இது ஒரு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய வேலை அல்ல. ஆனால் கல்வி மூலம் மனநிலையில் மாற்றம் வரும் என நான் நம்புகிறேன்” என்கிறார் அவர். பீகாரின் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்தவர் இந்திரஜித். “நான் குழந்தையாக இருந்த போது, என் தாத்தா என்னிடம், ஒரு குறிப்பிட்ட பழங்குடியினரை நான் தொட்டால் உடனே எனது எலும்பு உருகி விடும் என்று சொல்வார். ஆனால் நான் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கத் தொடங்கிய பின்தான் அவர் சொன்னது தவறு என்று எனக்குத் தெரிந்தது” என்கிறார் அவர்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கு கிராமத்தினர் வரத் தொடங்கியிருப்பது தனக்கு திருப்தி அளிப்பதாக இந்திரஜித் தெரிவிக்கிறார். “கடந்த மாதம் 81 பேர் வந்தனர். ஆனால் ஆயிரத்து 103 குழந்தைகள் படிக்கும் நிலையில், 81 பெற்றோர் மட்டுமே வந்தது குறைவான எண்ணிக்கைதான். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிக் கட்டணம் குறித்துத்தான் புகார் கூறினர். எனினும் இது ஒரு நல்ல தொடக்கம்” என்கிறார் அவர்.

பள்ளியில் ஆண் பெண் விகிதம் 60:40. பள்ளிக்கு வரும் வருமானம் ஆண்டுக்கு 12 லட்சம்தான். ஆனால் செலவு 70 லட்சம் ஆகிறது. “பள்ளியை தொடர்ந்து நடத்த நன்கொடைகள்தான் உதவுகின்றன” என்கிறார் இந்திரஜித்

வீட்டை விட்டு ஒடிவந்த குழந்தைகள் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு பள்ளியோடு சேர்ந்த விடுதி ஒன்றும் இருக்கிறது. விடுதி காப்பாளர் ஜான் ரமேசனும் அவரது மனைவியும் அந்தக் குழந்தைகளுடன்தான் சாப்பிடுவார்கள். தங்குவார்கள். அவர்களுடன்தான் கொண்டாட்டங்களும். “நன்றாகப் படிக்கும் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்பவும் அவர்களின் தகுதிக்கேற்ற வேலையில் அமர்த்தவும் முயற்சிக்கிறோம்” என்கிறார் அவர்.

பேட்டிகளை தொகுக்கும் போதுதான் நான் பெயர்களைக் கவனித்தேன். விடுதிக் காப்பாளர் ஒரு கிறிஸ்தவர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு இந்து. அவர்கள் வேலை செய்வது முஸ்லிம் குழந்தைகள் மத்தியில். இங்கு யாரும் மதத்தைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்களுடைய மத நம்பிக்கை பற்றி எல்லாம் அவர்களிடம் பேட்டி எடுத்து வந்த பிறகு தொகுக்கும் போதுதான் என்னால் கவனிக்க முடிந்தது. இவை எல்லாம் முக்கியத்துவம் அற்ற விஷயங்கள் என்றும் என்னால் உணர முடிந்தது.

நேர்மையாகச் சொல்லப் போனால், அது எப்படி ஒரு விஷயமாகும், யார் எந்த மதம் என்பதை யார் கவனிக்கிறார்கள். கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர்கள் மனிதாபிமானம் என்ற மதத்தைப் பின்பற்றுவதைப் பார்த்து சந்தோஷப்படுவார். நாம் வாழும் இந்த பூமியில் அது மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும். இந்த நெருக்கடிகள் சூழ்ந்த காலகட்டத்தில், சகிப்பின்மை வளர்ந்து வரும் நேரத்தில், அங்கீகரித்தல் மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு அழகான கதை இது. உங்களுக்கு இதைப் படிக்கவும் சிந்திக்கவும் நேரம் இருக்கும் என நம்புகிறேன்.

1979ல் நிறுவப்பட்ட தீபாலயா ஐஎஸ்ஓ 9001-2008 சான்றிதல் பெற்ற என்ஜிஓ. நகர்ப்புற மற்றும் ஊரக ஏழைகள் மத்தியில் பணியாற்றுகிறது. டெல்லி, ஹரியானா, உத்தர்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இப்போது வரையில் 2 லட்சத்து 70 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு இவர்கள் கல்வி அளித்திருக்கின்றனர். நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினாலோ, ஒரு குழந்தைக்கு உதவி செய்ய விரும்பினாலோ, தன்னார்வ தொண்டராக அல்லது தீபாலயாவில் பணியாற்ற விரும்பினாலோ இந்த முகவரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்: sponsorachild@deepalaya.org, resource@deepalaya.org

(குழந்தைகளின் பெயர்கள் அவர்களது பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டுள்ளன)

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *