ஆணை “மனிதன்”ஆக்கு

பாண்டிமாதேவி. (வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)இந்தியா

  அம்ருதா இதழில் வெளியாகிது

dalit3சாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கோ ஆண்களும் பெண்களும் மனிதர்கள் என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கோ எந்த ஆணும் முன்வராத சூழ்நிலையில், ஆணை மனிதனாக்கும் இலக்கை நோக்கி நாம் சிந்தித்துப் பயணப்பட வேண்டியது அவசியமாகிறது.1944 டிசம்பரில் கேரளாவில் ஓங்கல்லூர் என்ற இடத்தில் ’நம்பூதிரிகளின் யோக ஷேம மகா சபையின் 34-வது மாநாடு’ இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் நடைபெற்றது.” நம்பூதிரியை மனிதனாக்கு” என்று அந்த மாநாட்டில் அவர் ஒரு புதிய முழக்கத்தை எழுப்பினார். அன்று அவர் நிகழ்த்திய தலைமையுரை குறிப்பிடத்தக்கதாகும். அதில் உயர் சாதி பாரப்பனர்களான நம்பூதிரி சமூகத்தில் நிலவி வந்த தீயபழக்க வழக்கங்களையும், அவைகளை எவ்வாறு களையவேண்டும் என்பதையும் விளக்கமாக விவரித்த அவர் கூறினார்.”தற்பெருமையும், பெரிய மனிதத்தனமும், ஆதிக்க மனோபாவமும் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒவ்வொரு நம்பூதிரியும் அந்தர்ஜனமும் (பெண்களும்) உழைத்து சொந்த உழைப்பின் மூலம் வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.” குடியானவர்களைச் சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்தும் நம்பூதிரி நிலப் பிரபுக்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும். நம்பூதிரி வாலிபர்களும் பெண்களும் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும் வேலைசெய்ய வேண்டும்.”ஓங்கலூர் மாநாட்டில் இ.எம்.எஸ். எழுப்பிய இம்முழக்கத்தின் வெளிச்சத்தில் நம்பூதிரி வாலிபர்கள் செயல்படத் தொடங்கினர். புரோகித மேலாதிக்கத்தின் தீயபழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான இயக்கம் பெரும் புயலாக அடித்தது. அது நம்பூதிரி சமுதாயத்தின் மறுமலர்ச்சிக் காலமாயிற்று.

தனது சமுதாயத்தில் நிலவி வந்த ஆதிக்க மனோபாவத்தையும் சுரண்டலையும் தீய பழக்கங்களையும் இனங்கண்டு இடித்துரைத்து மாற்றத்தை நோக்கிச் செல்லவேண்டிய பாதையை எடுத்துரைத்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோரின் நேர்மையும் நெஞ்சுரமும் இன்றைய ஆண்களிடம் வளர்த்தெடுக்கப் படவேண்டியது சமூகத் தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நாம் கண்ட கேட்ட சிலவற்றை அலசினாலே ’ஆணை மனிதனாக்கு’ என்ற இந்த இலக்கு நோக்கிய பயணத்தின் தேவை புரிபட வாய்ப்பிருக்கிறது.ஒரு சிறந்த கலைஞராக சமூக அங்கீகாரம் பெற்றவரும், தேசிய விருது பெற்றவருமான திரைப்பட நடிகர் ஒருவர் தன் பிழைப்பிற்காக, பெண்குழந்தைகளை குடும்பத்தின் டென்ஷன் எனக் குறிப்பிட்டு ஓர் அபத்தமான விளம்பர படத்தில் நடித்த இழிவும் –ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், பக்கத்து வீட்டிலேயே இருந்தும் தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவோ தன் குழந்தைக்கு பொறுப்பேற்கவோ மறுக்கும் ஒருவனை, அவனது குற்றச்செயல் பற்றி எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யாமல்

பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு செய்யும் வகையில், ‘இன்றைய தேதியில் அவள் யாருடைய மனைவியும் அல்ல’ என்று தீர்ப்பிலே குறிப்பிட்டதோடல்லாமல் இருவரும் சமரசம் பேசும்படி நிர்பந்தித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை – பாதிக்கப்பட்ட பெண்ணின் மாண்பை குலைக்கும் செயல் என்று உச்ச நீதிமன்றமே கண்டித்த அவலமும் நடந்தேறியது.போதாக்குறைக்கு, பாரம்பரியப் பெருமை கொண்டாடும் ஒரு பத்திரிக்கை பெண்களின் பின்பக்கத்தைப் படம் பிடித்துப் போட்டு அறிவுசார் கட்டுரை ஒன்றை வெளியிட்டு தன் ஆண் வாசகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்து, விற்பனைக்கான நாலாந்தர வியாபார யுக்தியை கைக்கொண்டது.

dalit4ஆண் பெண் கதாபாத்திரங்களை எதார்த்தத்திற்குப் சற்றும் பொருந்தாத வேற்றுக் கிரக வாசிகளை போல சித்தரிக்கும் திரைப்பட உலகின் சமீபத்திய நகைச்சுவை, ’“வெர்ஜின் பெண்கள் டைனசர் காலத்திலேயே” என்பது தான்.ஆனால் திருமண உறவிற்கு முன்பே உடலாலும் உள்ளத்தாலும் ஒன்று சேரும் களவுக் காதல், சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உறவாகவே இருந்திருக்கிறது. தமிழர் சமூக வாழ்வை விளக்கும் அகநானூற்றின் பல பாடல்கள் மூலம் இதனை அறிய முடிகிறது. களவின் வழிவாராக் கற்பு, களவின் வழிவந்த கற்பு என இருவகைத் திருமண முறைகளும் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை அறிகிறோம். தமிழர் வாழ்வுமுறை இப்படி இருக்க, நகைச்சுவை என்ற போர்வையில் பெண்களை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு ” கன்னிகழியாப் பெண்கள் டைனசர் காலதிலேயே அழிந்துவிட்டார்கள்” என தங்கள் அறியாமையை இன்னொரு முறை பறைசாற்றி இருக்கிறார்கள் தமிழ்த் திரைப்படத்துறையினர்.  தங்கள் ஊர்ப் பெண்களின் மானத்தை, தங்கள் சாதித் தூய்மையை இழிவுபடுத்திவிட்டார் என்று பெருமாள் முருகனை எதிர்த்த சாதிக்காவலர்களும், பெண்களின் தாலியின் புனிதம் காக்க ஊடகத்திற்கு உள்ளேயும் அதன் அலுவலக வாசலிலும் மட்டுமே போராடும் மனுதர்மக் காவலர்களும், கற்பு பற்றிய ஒரு நடிகையின் கருத்துக்கு எதிராக கொடிபிடித்துப் போராடி அச்சுறுத்தி சுயவிளம்பரம் தேடிக்கொண்ட அரசியல் தலைவர்களும், பாடல்கள், நடன அசைவுகள், கேமரா கோணங்கள், கதாபாத்திர சித்தரிப்பு, உடைகள், மற்றும் வசனங்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்தியே திரைப்படங்கள் எடுக்க முடியும் என்று தொடர்ந்து செயல்பட்டுவரும் திரைப்படத் துறையினருக்கு எதிராகத் தங்கள் வருத்தத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் இன்று வரை கள்ளமெளனம் காப்பதன் பின்புலமென்ன?
சங்க இலக்கியங்களில், தமிழர்களின் திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் படம் பிடித்து காட்டிய பெருமையும் அக நானூறுக்கு உண்டு. (அகம் 86, 136).

”குறித்த நன்னாளில் உற்றார் உறவினர் அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் அருஞ்சுவை உணவு படைக்கப்பெற்றது. மங்கல இசைக் கருவிகள் முழங்கும் மணமனையில் விளக்கேற்றி வைத்து, மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். பழைய மணலை மாற்றிப் புதுமணல் பரப்பினர். மணப்பந்தலின் கீழ் மணமகளை ஒரு மணையில் அமர வைத்து, முதுமையான மங்கல மகளிர் குடங்களில் கொண்டு வந்த நீரை முகந்து கொடுக்க, மக்களைப் பெற்ற மகளிர் நால்வர் மணமகளைச் சூழ்ந்து நின்று நெல்லும் மலரும் தூவி நீராட்டினர். நன்மக்கள் பேறு முதலான பல பேறுகளைப் பெற்று, நின் கணவனை விரும்பிப்பேணும் அன்புடையை ஆகுக என்று வாழ்த்தினர். பின்னர் மலர், மாலை, சந்தனம் முதலியவற்றாலும் நன்கு ஒப்பனை செய்யப் பெற்ற மணமகளை “ நீ பெரிய மனைக்கிழத்தி ஆவாயாக”என்று அனைவரும் வாழ்த்தி மணமகனுடன் சேர்த்து வைப்பர். இத்திருமண நிகழ்ச்சி விடியற்காலை வேலையில் நடைபெறும்”. (அகம்: 86)

dalit3தாலி கட்டும் சடங்கு அறவே இல்லாத களவுக் காதலும், அறுத்துக் கட்டும் வழக்கமும் சமூக வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த தமிழர் வாழ்வுமுறை பற்றி, தாலியை வைத்து அரசியல் லாபம் தேட நினைக்கும் மனுதர்ம வாதிகளுக்கு கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் மூத்தகுடி தமிழ்க்குடி என்று தமிழர் பெருமை பேசும் தமிழ்த் தேசியவாதிகள் கூடி நின்று அகர இலச்சினை தாலிகட்டி மனுதர்மத்தைத் தூக்கி பிடிப்பது தாங்கள் தமிழர்கள் என்பதை தாண்டி ஆணாதிக்கவாதிகள் என்பதை நிலை நிறுத்தத் துடிக்கும் செயலல்லவா.ஆண்கள் எவ்வழி அரசு அவ்வழி என்பதைப் போல தமிழக அரசும் தன் பங்கிற்கு திருமணங்களில் எவ்வளவு வறியவராக இருந்தாலும் ஆண்களே தாலி வாங்கித் தர வேண்டும் என்கிற சமூக நிலையில் இருந்து, அவர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமான தாலியை – அரசே இலவசமாகக் கொடுத்து தாலிக்குத் தங்கம் என்று ஆண்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை ஏற்று நடத்தும் கொடுமையை எங்கு போய் முறையிடுவது?ஜெயமோகன் என்னும் இலக்கியகர்த்தா, காந்தி தனது உடல் இச்சையின் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டை பரிசோதித்து கொள்ளும் பொருட்டு இரவில் இளம்பெண்கள் இருவரை நிர்வாணமாக பக்கத்தில் படுக்க வைத்து கொண்டது பற்றி மட்டும் எழுதிவிட்டு, பின்னாளில் காந்தியின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பெண்களில் ஒருவர் பத்திரிக்கை மூலமாக தன் வேதனைகளைப் பதிவு செய்த உண்மையை புறந்தள்ளிவிட்டு, நம் நாட்டின் தந்தை மகாத்மாவின் இத்தகைய செயலுக்கு எந்தவித கூச்சமும் இல்லாமல் தன் மூன்றாவது கண்கொண்டு புது விளக்கம் கொடுத்துள்ளார். இவர் காலத்தில் நாமும் வாழ்வது காலக்கொடுமை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும், .தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு உள்நாட்டு நிதிபெறும் பெரும்பாலான அரசு சாரா பெண்கள் அமைப்புகள், எந்தவிதமான பால் சார்ந்த புரிதலும் இல்லாதவையாக, பெற்றுக்கொண்ட நிதிக்கு கணக்குக்காட்ட வருடத்திற்கு ஒரு ’கும்பமேளா’ நடத்துவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. பெண்கள் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த தவறிவிட்ட இவற்றின் பல்லாண்டு செயல்பாடுகளையும் பல கோடி செலவீட்டினையும் கணக்கிட்டால் இவற்றின் நேர்மையான உழைப்பையும், திறமையையும் கேள்விக்குள்ளாக்காமல் நாம் மெளனமாகக் கடந்து சென்றிட இயலாது.

இங்கு பெரியாரிய இயக்கத் தலைவர்களும் கொள்கைப்பற்றாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால், பெண்ணுரிமை ஆணாதிக்க சமூக கட்டமைப்பு இவை பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். சிலர் எவ்விதப் புரிதலும் இல்லாமல் சாதி ஒழிந்துவிட்டால் ஆண் பெண் சமத்துவம் வந்து விடும் என்ற கூறுகிறார்கள். இச்சூழலில் இன்று பெரியார் இல்லையே என்ற ஏக்கமே மேலோங்குகிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனுதர்ம கட்டமைப்பில் நான்கு சாதிகளுக்கும் வெளியே தான் பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கென்று தனியே எந்த சாதிப்பெருமையும் மரியாதையும் கிடையாது. பெண்கள் பிறப்பின் மூலம் தந்தையின் சாதியைக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிற கணவனின் சாதி முறைமைகளையே பின்பற்றுகிறார்கள். இதில் சாதி போனால் பாலின சமத்துவம் மேலோங்குவது எப்படி?

பெரியார், பெண் விடுதலை பற்றி பேசும் போது, ”பெண்களால் செளகர்யங்களையும் சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவிக்கும் ஆண்கள் பெண் விடுதலைக்கான செயல்களை முன்னெடுப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. பெண்கள் அவர்களது விடுதலையை அவர்களேதான் போராடி வென்றெடுக்க வேண்டும்” என்றார். அவர் கொள்கை வழி நடக்கும் ஆண்களை மனதில் வைத்துத்தான் பெரியார் இதனைக் கூறிச் சென்றாரோ என்ற நேர்மையான ஐயம் எழும் வகையிலேயே அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. அவர்கள் பெரியாரின் கொள்கைப்பற்றாளர்களாக இருப்பதை விட ஆண்களாக இருப்பதையே விரும்புகிறார்கள் போலும்.
ஏதோ இங்கும் அங்கும் யாரோ ஒரு சிலர் இப்படி ஆணாதிக்க சிந்தனையையைத் தூக்கிப் பிடிப்பதாக நினைக்க வேண்டாம். உலகம் முழுவதும் நிலவி வந்த முடியாட்சி முறைக்கு முடிவு கட்டிய பிரஞ்சு புரட்சியின் தந்தையும் அதன் சங்கநாதமான ’சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம்’ என்ற மக்களாட்சி அரசமைப்பின் அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு சொந்தக்காரருமான ரூசோவிடம் பெண்களின் கல்வி கற்கும் உரிமை பற்றி கருத்து கேட்டபோது, ஆண்களாய்ப் பிறப்பதாலேயே அவர்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் உண்டென்றும் பெண்களுக்கோ ரத்து செய்யப்படக்கூடிய சலுகைகள் மட்டுமே உண்டென்றும் கூறினார். ” பெண்கள் கல்வி உரிமை பெற்றால் படுக்கை அறையில் மட்டுமே ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தி வரும் நிலை மாறி, வெளி உலகிலும் ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள்; அதனால் பெண்களுக்கு கல்வி உரிமை கூடாது ” என்றார்.

dalit2இது, தான் தூக்கிபிடித்த சமத்துவம் என்ற கருத்தாக்கத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாட்டை எடுத்த ரூசோ ஒரு மனிதனாக அல்லாமல் தன்னை ஆணாக மட்டுமே வெளிபடுத்திக் கொள்ள வெட்கப்படவில்லை என்பதையே புலப்படுத்துகிறது. பெண்ணிய வாதியும் எழுத்தாளருமான மேரி வுல்ஸ்டோன் கிராப்ட் (Mary Wollstonecraft) அம்மையார் ரூசோவிற்கு அளித்த நேரடிப் பதிலில், ” பெண்கள், அவர்கள் வாழ்வின் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுமே பெற நினைக்கிறார்களே தவிர, ஆண்களின் மீதான அதிகாரத்தையல்ல ” எனத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த பின்னணியில்தான், பொதுவெளியைக் கூர்ந்து நோக்கும் ஒவ்வொரு பெண்ணும், எட்டு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் என்பதில் தொடங்கி பெண் காவல் அதிகாரி தற்கொலை என்கிற செய்திவரை கேட்டு, ஒவ்வொன்றினாலும் சினம்கொள்வதும், ஏதொன்றும் செய்ய இயலாது புழுங்கிப் போவதும், சில போராட்டங்களை முன்னெடுப்பதும், பொதுப்புத்தியில் இருக்கும் பெண் என்ற இரண்டாந்தர பிம்பத்தை உடைக்க ஏதேனும் வழியிருக்கிறதா எனச் சிந்தித்து சிந்தித்துச் செயல்பட முடியாமல் சோர்ந்து போவதுமான அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

மதமும் அரசும், அதன் கிளைகளான சாதியும், பொருளாதாரக் காரணிகளும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை வலுபடுத்தும் செயலையே திட்டமிட்டுச் செய்கின்றன. சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்களிலேயே இதற்கான அஸ்திவாரம் போடப்படுகிறது. மனிதர்களாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் ஆணாதிக்க சமூகக் கட்டுதிட்டங்களுக்கு ஏற்ப, சமவுரிமை பெற்ற மனிதர்களாக அல்லாமல் ஆணாகவும் பெண்ணாகவும் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். குடும்பங்களில் வேர் பிடிக்கும் இந்தப் பாலினப் பாகுபாடுகள் சமூகத்தில் அதன் கிளை பரப்பி செழித்து வளரவே செய்கிறது. சாதிக் கட்டமைப்பை ஒழித்துக் கட்ட உயர்சாதி என்ற கருத்தியலை தகர்க்க வேண்டியது ஒரு செயல்திட்டமாக இருப்பது போல, பாலின வேறுபாட்டை வேரறுத்திட ஆண் என்று கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க பிம்பத்தை கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு தகர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

dalitசமுதாயத்தில் அனைத்து அதிகாரங்களையும் படைத்த ஆண்கள், ஆண்களாக மட்டுமல்லாமல் மனித நேயம் மிக்க, மனித உரிமைகளை மதிக்கின்ற மனிதராகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அவர்கள் அத்தகைய மனிதர்களாக வாழ்வதென்பது பெண்களுக்கான தேவை என்பதையும் தாண்டி அமைதியான சமூகவாழ்விற்கும், அரசியல் ரீதியாக உண்மையான ஜனநாயகமுறை அரசை நடைமுறை படுத்துவதற்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஆணை மனிதனாக மாற்றும் இந்த இலக்கை அடைந்திட பெண், ஆண் என்ற அடையாளங்களை கடந்து மனிதர்களாக வாழ விரும்பும் அனைவரும் ஓர் அணியில் நின்று முயன்றால் மட்டுமே இவ்விலக்கு சாத்தியப்படும். மாற்றங்களும் மறுமலர்ச்சியும், இதுவரை வென்றெடுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதற்கான போராட்டங்களும் வலிமையான இயக்கப் பின்னணியிலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் புரிதலில் ஆண்களும் பெண்களும் சம உரிமை பெற்ற மனிதர்களாக வாழவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு பெண்கள் அனைவரும் ஓர் அரசியல் இயக்கமாக அணி திரள்வதே காலத்தின் கட்டாயமாகவும் முதல் செயல்திட்டமாகவும் இருக்க முடியும்.

நன்றி -அம்ருதா , பா.செயப்பிரகாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *