பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர் பாத்திமா மெர்னிஸ்ஸி

யோகி, (மலேசியா)

fatimafatima2பாத்திமா மெர்னிஸ்ஸி (feminist writer Fatima Mernissi )தனது 75-வது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியான போது, பலருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அந்த மரணம் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்றே எனக்கு தோன்றியது. காரணம் அவரைக்குறித்தான பதிவு மட்டுமல்ல அனுதாபத்தையும் யாரும் தெரிவிக்கவே இல்லை. மொரோக்கோ நாட்டில் ஃபெஸ் என்ற நகரத்தில் 1940-ஆம் ஆண்டு பிறந்ததாக விக்கி பீடியா தகவல் சொல்கிறது. ஆனால், பிறந்த தேதியையும் மாதத்தையும் குறிப்பிடவில்லை.  
இந்த நூற்றாண்டில் மிக ஆழமான மரபை அவர் அடுத்த தலைமுறை வரைக்கும் விட்டு சென்றுள்ளார்  என்று பெண்ணியவாதிகள் மத்தியில் கொண்டாடப்படுகிறார். 
இஸ்லாமிய சமூகப் பண்பாட்டுத் தளத்தில் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாத்திமா மெர்னிஸ்ஸி தனது குரலை உயர்த்தியிருக்கிறார். சுமார் 17  புத்தகங்களை  எழுதியுள்ளார். அதில் பல நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் சம்பந்தப்பட்டதாகும். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் கொண்டிருக்கும் அடைப்படைவாதம், பெண்கள் ஒடுக்கு முறை, மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட விஷயங்களை பாத்திமா மெர்னிஸ்ஸி  எழுதியிருக்கிறார். 
தொடக்க கல்வியை தேசிய பள்ளியில் பயின்றவர், தொடர்கல்வியை  சிறப்பு நிதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த பெண்கள் பள்ளியில் தொடர்ந்திருக்கிறார். 1957-ஆம் ஆண்டு  Brandeis பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் இவர்  டாக்டர் பட்டம் பெற்றார். இஸ்லாமிய நாடுகளில்  இஸ்லாமிய பெண்கள் மீது வைக்கப்படும் ஒடுக்கு முறைகளையும்,  அவர்கள் மீது வைக்கப்படும் அரசியலையும் தனது பார்வையில்  விமர்சித்து எழுத அந்த துறை அவருக்கு கைகொடுத்தது என்றே சொல்லலாம். 
டாக்டர் பட்டம் பெற்றதைத்தொடர்ந்து  பாத்திமா மெர்னிஸ்ஸி 1974-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை  Mohammed V University -யில்  முறையியல் (methodology), குடும்ப சமூகவியல் ( family sociology) மற்றும் உளவியல் (psychosociology) போன்ற துறையில் கல்வியை போதித்தார். 

அந்தக்காலக்கட்டத்திதான் 1975-ஆம் ஆண்டு  ‘பர்த்தாவுக்கு அப்பால்’ (Beyohe nd tVeil) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் ஆற்றலை  (Male-Female Dynamics in a Muslim Society) பேசக்கூடியதாக அமைந்தது. அவரின் இந்தப் படைப்பு திருத்தப்பட்டு 2011-ஆம் ஆண்டு லண்டனில் மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது. அதுவரை திறை மறைவில் அறியப்பட்ட பாத்திமா மெர்னிஸ்ஸி உலகளவில் பேசப்பட தொடங்கினார்.  The Forgotten Queens of Islam  என்ற புத்தகம் அவரை இன்னும் ஒரு படி மேலே கொண்டுச் சென்றது.  இஸ்லாமிய பெண்களின் ஆரம்ப கால அரசியல் ஈடுபாட்டினை பேசக்கூடிய ஆய்வு நூலாக அந்த புத்தகம் அமைந்திருந்தது.  தனது படைப்புகளில் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றங்கள் குறித்தும், சமூக மானுடவியல் குறித்தும் அதிக முக்கியத்துவம் செலுத்தினார் பாத்திமா மெர்னிஸ்ஸி.  
உண்மையில் பாத்திமா மெர்னிஸ்ஸின் எழுத்துகள் சமூகத்தளத்தில் அவசியம் உரையாடப்பட வேண்டியவை என சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தாகும்.  இருந்தபோதிலும், அவரின் செயற்பாடுகள் குறித்து உலக ரீதியில் தீவிரம்  காட்டப்படாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பாத்திமா மெர்னிஸ்ஸி பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்ககூடியவர் இல்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *