பாராசூட் இரவுகளின் பயணம்

ச.விசயலட்சுமி (கல்குதிரை)

6++Maldivianஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் கண்திறந்து இடுக்கின் வழியே குரைத்துக் கொண்டிருக்கும் நாய்களின் திசையைப் பார்த்தாள். சக நாய்களுக்குள் நடைபெறும் சண்டை கொஞ்சம் மூர்க்கமாகவும் சமயங்களில் அறியாத மனிதனின் புதுவாசனையாலும் நிகழும். வீதியோர உறக்கத்திலிருப்பவர்களுக்கு நாய்கள்தான் பெருங் காவல்காரர்கள். இதன் பொருட்டாகவே கண்திறந்து பார்த்தவளுக்கு சிறிது தூரத்தில் வினோதமானதொரு உருவம் நிழலாடிக் கொண்டிருப்பது போல தோன்றியது. நாய் தொடர்ந்து குரைத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தூங்கப்பழகியிருந்த மனிதர்கள் சிறிய உடலசைவும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தனர்.முன்பெல்லாம் இரவுக் காட்சி திரைப்படம் முடிந்து சிலர் இப்பகுதியைக் கடந்து போவதுண்டு. சில வருடங்களுக்கு முன் அவ்வீதியின் முனையில் நள்ளிரவில் குத்தப்பட்டு வீழ்ந்து கிடந்த ஆஜானுபாகுவான மனிதனின் மரணம் இன்னும் மறக்க முடியாதபடி அப்பகுதியில் நள்ளிரவு பயணத்தை அச்சத்திற்குள்ளாக்கியிருந்தது. இப்பொழுதெல்லாம் ஆள்நடமாட்டம் குறைவுதான். மனதும் உடலும் அசந்திருந்தாலும் நிலையில்லாது அலைபாய்ந்திருந்தவளின் மூளை எச்சரிக்கை உணர்விற்கு ஆட்பட்டதாய் அதன் எல்லாக் கண்களையும் அகலத்திறந்திருந்தது.

கடலோர உப்புக்காற்று மிக இதமான குளிர்மையைப் பரப்பிக் கொண்டிருக்க, இலவசமாய் வரிசையில் கடக்கும் அப்பகுதியின் துர்நாற்றத்தையும் கொசுக்கடியையும் எல்லோரையும்போல் இவளும் சகித்துக் கொள்வாள். இதிலிருந்து தப்பிவிட வேண்டுமென்ற அவளது ஆசை நிறைவேறிடாததொரு கனவென எப்பொழுதும் சுற்றிக்கொண்டிருக்கும் மனவெளியில். உலகம் விழிக்காத அதிகாலை முதலாய் உழைக்கத் துவங்கி அயர்ந்து படுக்கும் வரை ஓயாத வேலை. இருந்தும் அவ்வேலை அவளை எந்த விதத்திலும் மாற்றியிருக்கவில்லை. எப்பொழுதோ தம்பி வாங்கித் தந்த அந்த பழைய மஞ்சள் நிறச்சேலைதான் இப்பொழுதும் இவளிடமிருக்கும் ஒரேயொரு நல்ல சேலை. இதுதான் தனக்கான வாழ்க்கை என்கிற மனநிலையோடே ஒவ்வொரு தினமும் உடல் களைப்பிலிருந்து வெளியேற முயன்று அயர்ந்து உறங்கிப்போவாள்.

யசோதா சிறு குழந்தையாய் இருந்தபொழுது அப்பகுதிக்கு தந்தையின் விருப்பத்தின் பேரில் குடி வந்திருந்தார்கள். இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பிளாட்பார வாசத்தை முடிவுக்குக் கொண்டுவரவுமாக அவளது அப்பா எல்லா நொடிகளிலும் போராடிக் கொண்டிருந்தார். நிதானமுமில்லாமல் பதட்டமுமில்லாமலிருக்கும் அப்பாவின் நடை. சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடப்பதைப்போல் அவர் எண்ணங்களோடே நடப்பவராயிருந்தார். சதாவும் அன்றைய தினங்களைப் பற்றியும், அடுத்தடுத்த தினங்களைப் பற்றியுமொரு கணக்கு அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும். கூவம் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த காலமது. எழும்பூரை ஒட்டிய கூவம்படகுத் துறையில் விளையாடிக் கொண்டிருப்பது யசோதாவுக்கும் அவள் வயதையொத்த குழந்தைகளுக்கும் பிடித்தமானதொன்று. இன்னும் பசுமையாய் நினைவிலிருக்கிறது தம்பியும் இவளுமாய் கூவத்தில் குதித்து நீந்தி கரையேறிய ரம்யமான பொழுதுகள். நினைத்துக் கொள்வதற்கு மட்டும் தான், மீண்டும் அதை நிகழ்த்த முடியாது என்கிற உண்மை அவளுக்குக் கசந்தது. இவர்களைப்போலவே அப்பகுதியில் குடியேறியவர்களாக அப்பகுதி குழந்தைகள் இருந்ததால் புதிய பல கதைகளைப் பேசிவிளையாடிக் கொண்டிருப்பதில் முன்னிரவில் குதூகலமாக பேச்சும் சிரிப்பும் கலந்திருக்கும்.

இருபது வருடங்களில் கூவம் அடியோடு மாறிவிட்டது. முகமூடி அணிந்துகொண்டதுபோல் அதன் நீரோட்டம் ஆங்காங்கே தேங்கத் தொடங்கி விட்டது. கழிவுகளால் நிறைந்து நிறம்மாறி நீரென்று சொல்லமுடியாத நீராய் ஓடிக்கொண்டிருக்கிறது. இளம்வயதிலேயே நோய்வாய்ப்பட்டு முதுமையடைந்தால் எப்படியிருப்பார்களோ அப்படியொரு மாற்றம் கூவத்தில். அதன் பொலிவு குறைந்து கொண்டே போனாலும் ஒவ்வொரு காலத்திலும் அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்தபடிதானிருக்கிறது இப்பொழுதும். நகரத்தை நோக்கி வருபவர்களை அணைத்துக்கொள்ளத் தெரிந்த நதிக்கு அவர்களது துயரங்களைத் தன் நீர்மையோடு கரைத்துக் கொள்வதில் சிரமங்களிருக்கப் போவதில்லை. இடைவெளிகளோடு வேயப்பட்டிருந்த குடிசைகள் நெருக்கமாய் உரசியபடி வாய்சண்டைகளோடும் வெடிச்சிரிப்புகளோடும் திறந்த மனங்களாக இருந்தன. அவ்வீதிகளில் இருந்த வறுமை அங்கிருந்தவர்களின் முகங்களில் சந்தோஷத்தைக் குறைத்திருக்கவில்லை.

எழும்பூர் ஸடேசனில் கூலியாயிருந்த அப்பா இரவு பகலென கடுமையாய் உழைக்க, அம்மா இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்தாள். அனாதரவான சூழலிலும் வீட்டில் பள்ளிக்கூடத்திற்கு இவர்களை அனுப்பிக் கொண்டிருக்க, படிப்பதின் மேல் விருப்பமற்றிருந்தனர் அக்காவும் தம்பியும்.நகரம் பணத்தால் நகர்ந்து கொண்டிருந்தது. திருடர்கள், போக்கிரிகள், தண்டால்காரர்கள், மொள்ளமாரிகள் அவ்வளவு பேருக்கும் இங்கு அவரவர் தகுதிக்கேற்ப மரியாதையிருக்க காரணம் அவர்களிடமிருந்த பணம்தான். தம்பி பணத்தைப் பற்றி படிக்க விரும்பினான். அப்படியானதொரு படிப்பை அவன் வாசித்த புத்தகங்கள் தராமல்போக, படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தான். அவன் வயதொத்தவர்கள் கைகளில் புழங்கும் பணம் அவர்களின் புகைபிடிக்கும் பழக்கம் இரண்டும் இவனை இடையூறு செய்தது. அவன் கேட்ட

கதைகளிலெல்லாம் மிக விரைவாக வாழ்க்கையில் முன்னேறுகிறவர்களாய் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பது சந்தோசமானதொரு நிகழ்வாய் அவன் நினைவில் பதிந்தது. வேலை முடிந்ததும் நண்பர்களோடு பிளாட்பார ஓரத்தில் கேரம் விளையாடத்தொடங்கினால் கருப்பு வெள்ளைக் காய்ன்களோடு கடந்து போகிற நேரமும் தெரியாமல்போகும். ஒவ்வொரு வெற்றியும் அவனை சந்தோசப்படுத்துகிற பொழுது அடுத்த கட்டம் நோக்கி தான் உயர்ந்திருப்பதாக நினைத்துக் கொள்வான். துறைமுகத்தில் வேலை செய்பவர்கள் கொண்டுவந்து போடும் பேரல்களைக் கவிழ்த்துப்போட்டு கேரம் பலகையை வைத்தவுடன் களைகட்டத் தொடங்கிவிடும். இப்பகுதி இளைஞர்களின் துக்கத்தையும் அவமானத்தையும் துடைத்துவிட்டு கொண்டாட்டமான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள இரவுநேர விளையாட்டுதான் மிக்கதுணையாய் இருக்கும்.

சமீபமாய் அம்மா நோய் வாய்ப்பட்டு படுத்தாள். முன்பே பூஞ்சையான அவளுடல் தீவிர வாந்தியும் பேதியுமாக ஒருவாரம் அவதிப்பட்டதில் திடீரென ஒரு நாள் இறந்து கிடந்தாள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்பிருந்தே அவள் உடல் முழுவதும் வீக்கம் கொடுத்திருந்தது. கண்களில் நீண்டகால அயர்ச்சி தேங்கி கருவளையம் கிடக்க, எப்பொழுதுமில்லாததொரு மலர்ச்சி முகத்தில் மட்டும் விரவியோடியிருந்தது. சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு யோசனையும் கைவைத்தியமும் சொல்ல, எந்த மருந்திற்கும் அம்மாவின் உடல் கட்டுப்படவில்லை. கார்ப்பரேசன் டாக்டர் பெரியாஸ்பத்திரியில் சேர்த்துவிடச் சொல்லியும் அம்மா போகவேண்டாமென மறுத்துவிட்டாள். பெரியாஸ்பத்திரியின் வாசனை அவளுக்குப் பிடிக்காது. எல்லா மாத்திரைகளும் கலந்து எழும் வாசனை எல்லா ஜீவராசிகளின் கழிவும் சேர்ந்த நாற்றமாய் நாறும். மூக்கிலிருந்து வயிறுவரையிலும் அந்நாற்றம் நிரம்புகிற பொழுது நொடியில் குடலிலிருந்து எல்லாம் பொங்கியெழும். இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல படுக்கைகளை எப்பொழுதும் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தங்களுக்கானதாய் வைத்துக் கொண்டிருந்தனர். ஏதேதோ ஊரிலிருந்து மோசமான நிலையில் வருபவர்கள் படுக்கைவசதியில்லாமல் மருத்துவமனை வராண்டாக்களில் கிடத்தப்பட்டிருக்க நர்சுகளிடத்தில் மருந்துக்காக காத்திருப்பது குறித்து அம்மா பேசிக்கொண்டிருப்பாள்.

பிணங்களோடும் சீக்காளிகளோடும் அதிகமாய் சினேகம் கொண்டு ஊழியர்கள் ஓவ்வொருவருக்கும் சவக்களை வந்திருக்கும். சீரியசாக சேர்க்கப்படுபவர்கள் மருத்துவம் பலனின்றி இறந்துவிடுவதும் அவர்கள் உடலை அறுத்துக்கொடுப்பதும் பிடிக்காது அம்மாவுக்கு,செத்ததுக்குப் பிறகும் கிழிச்சிக்கொடுக்கறானுங்க பாழாப்போன டாக்டருங்க எனப் புலம்பித் தீர்ப்பாள். அம்மாவும் அவள் வார்த்தைகளும் இவ்வளவு சீக்கிரத்தில் வெறும் நினைவுகளாகிப் போகுமென யாசோதா எதிர்பார்த்திருக்கவில்லை.கூவத்தை ஒட்டிய இவர்களின் வீட்டின் மீது பணம் வாங்கி அம்மாவின் இறுதிக் கடனையெல்லாம் செய்து முடித்தார் அப்பா. அவளது பதினாறாம் நாளுக்கு மட்டன்பிரியாணியோடு, லவுட்ஸ் பீக்கரில் பாட்டு போட்டு வந்தவர்கள் சாப்பிட்டர்களா என விசாரித்து விசாரித்து வழியனுப்பினார். பட்டுவண்ண ரோசாவாம்…. பாட்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுது மட்டும் அவ்வளவு நேரமும் இறுகிப்போயிருந்த அப்பாவின் கண்ணில் தாரைதாரையாய் நீர் வடிந்து கொண்டிருந்தது. அத்தனை பெரிய கூட்டத்தில் கண்டு தேற்ற ஒருவருமில்லாமல் தனித்துக் கிடந்தவர் இந்தப் பிள்ளைகள் அனாதைகளாகிப் போனதுகளே என்பதைத்தான் நினைத்து நினைத்து மருகினார்.  அம்மாவின் பிரிவு அப்பாவின் வலுவைக் குறைத்தது. அவரால் முன்பு போல பாரம் துாக்க உடல் தோதுப்படவில்லை. அதிகம் சோர்ந்து போனவர் முன்பு இருந்ததைவிட இரட்டிப்புக்குடிக்கு மாறிப்போனார்.இரவில் அவர்படும் துயரம்சொல்லிமாளாதது.அவர் படும் அவஸ்தையைப் பார்த்து இந்த குடி காமத்தை அடக்குமா தூண்டுமா என்ற சந்தேகம் யசோதாவுக்கு எழும் பின் சமாதானப்படுத்திக் கொண்டு இதெல்லாம் தேவையா ஏன் இப்படி புத்திகெட்டுப்போயி யோசிக்கிறேன் என மண்டையில் அடித்துக்கொண்டு அடுத்த வேலைக்குப் பொங்க அடுப்பு பற்றவைப்பாள். பாரம் தூக்க சிரமப்பட்டிருந்த அப்பா சோர்ந்து படுத்துக்கொள்பவராயிருந்தார். வெயில் தகித்து சிவந்திருந்த வானம் கன்றிச் சிவந்த முதுமையாய் விரிந்திருக்கிறது.சில மாதங்களில் பாரம் தூக்கிக் கொண்டு நடந்த அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்ததாக தகவல் வந்ததும் இவளும் தம்பியுமாக ஓடிப்போனார்கள். இவர்கள் போவதற்கு முன்பாகவே அப்பாவின் கண்கள் நிலைகுத்திவிட்டிருந்தன. இரயில்வே டாக்டர் இரண்டொரு வார்த்தைகளில் உறுதி செய்துவிட்டுச் சென்றார். பேயடித்தது போல இவளும் தம்பியும் நிற்க அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களது ஆறுக்கு மூணு அளவுள்ள குடிசையை விற்றுவிடுவதாகப் பேசி அப்பாவுக்கான கடமைகளை முடித்தனர். அடுத்தடுத்த எதிர்பாராத துயரத்தோடு நிலையாக இருப்பதற்கென்றிருந்த ஒரே குடிசையும் கை நழுவியதில் பெற்றவர்களோடு சொந்த குடிசையுமாய் இருந்த சமயத்தில் நிலவிய பாதுகாப்புணர்வு நொறுங்கி நிர்வாணமாக தெருவில் விடப்பட்டதாக யசோதா உணர்ந்தாள்.

6++Maldivianசாக்குப்பையை பிளாட்பார ஓரத்தில் கட்டிக்கொண்டும், பகல் நேரத்து வேலை இல்லாத நாட்களில் பாழடைந்து ஆள் நடமாட்டமின்றி அழுக்குப்படிந்திருக்கும் கூவம் படகுத்துறையில் ஒய்வெடுப்பதுமாக சமாளிக்கத்தொடங்கினர். ரோட்டோரக் கடையில் தம்பி வாங்கித் தின்பான். இவள் வேலை பார்க்கும் வீட்டில் கொடுப்பதைத் தின்றுவிடுவாள். இவ்வளவு பெரிய ஊரில் திண்ணக் கஷ்டமெதும் இல்லை, மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி நிற்கத்தான் இடமின்றிக் கிடந்தது. வெவ்வேறு இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் நிர்ப்பந்தம் எப்பொழுதும் எச்சரிக்கையுணர்விலிருக்கப் பழக்கியிருந்தது. அவள் சமீபமாய் கண்களை பாதித் திறந்த நிலையிலேயே உறங்கப் பழகியிருந்தாள். சமனின்றி வீசும் காற்றும் வெக்கையும் அவ்வப்பொழுது உறக்கம் களைத்து பதறியெழச்செய்யும். எல்லாத் துயரங்களையும் உறக்கம் அடித்துப் போகும்தான், அப்படியானதொரு உறக்கத்திற்காக ஏங்கியிருக்கையில்தான் சொந்தமாக குடிசை வேண்டுமென்கிற தவிப்பு அதிகமானது. எப்படியும் பணம் சேர்த்து ஒரு ஒலைக் கொட்டகைக்குச் சொந்தமாகனும் என தம்பியிடம் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தாள்.முன்பெல்லாம் நினைத்த இடத்தில் 

குடிசைபோட்டுக்கொள்ளமுடியும். விலைபேசுவது இங்கும் முள்ளுச் செடிகளைப் போல் முளைத்துவிட்டது. அவனுக்கும் அவளது கஷ்டம் புரியாமல் இல்லை. கார்ப்பரேசன் குழாயையையும் கக்கூசையும் பயன்படுத்திக்கிட்டாலும் அவசர ஆத்திரத்திற்கு துணிமாற்றிக்கொள்ள சிரமமாகத்தான் இருக்கும்.முன்பு அவள் துணிமாற்றும் சமயங்களில் தெரியாமல் இவனே திடுதிப்பென நுழைந்திருக்கிறான். பின் சுதாரித்துக் கொண்டு இப்பொழுதெல்லாம் வாயில் விசிலடித்துக்கொண்டு போனான். அக்கா இவ்வளவு கஷ்டத்திலும் லட்சணமானவளாய் அழகானவளாய் இருப்பதில் எப்பொழுதும் அவனுக்கொரு பெருமிதம் இருக்கும். அவளின் மீதான ஈர்ப்பும் நெருக்கமும் இப்பொழுது இன்னும் அதிகமானது. அவளை இன்னும் பத்திரமாய் அன்பாய் பார்த்துக்கொள்ள வேண்டிய குறுகுறுப்பு சேர்ந்திருந்தது. அவள் குறித்து பேசுவதற்காகவே நிரையபேர் இவனுக்கு நண்பனானார்கள். ஒவ்வொருவரின் வார்த்தைகளிலிருந்தும் அவர்களின் ஆர்வம் தெரிந்தாலும் இவன் எதையும் கண்டுகொள்ளாதவனாய் நழுவிவிடுவான். இப்படி நிறைய பையன்கள் அவளை விசாரிப்பதை முன்பு அவளிடம் ஆர்வத்துடன் சொல்வான். விருப்பமேயில்லாமல் கேட்கும் அவளின் முகம் இதிலெல்லாம் அவளுக்கு ஆர்வமில்லை என்பதாக இருக்க, இப்படி சொல்வதை நிறுத்திவிட்டிருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவள் இவன் வாழ்விற்கான பிடிமானமாயிருந்தாள்.சமீபமாய் கேரம் விளையாடப் போனாலும் சீக்கிரமே முடித்துக்கொள்ள ஸ்டிரைக்கரை தவறாகக் கூடப் பயன்படுத்தினான். அங்கு பேசப்படும் அரசியல் விமர்சனங்களிலிருந்தும் கருத்தெதும் கூறாதவனாயிருந்தான். நண்பர்கள் பேச்சு முற்றினால் எதற்கும் துணிந்துவிடுவார்கள்.அம்மா இருந்த சயங்களில் வாய்சண்டை கைக்கலப்பாய் மாறினாலும் பின்வாங்கமாட்டான். இப்பொழுதெல்லாம் எல்லாசெயல்களிலும் காரணமில்லாமல் தயக்கம் மண்டியது.

சணலும் நாணலும் பின்னிப்பினைந்தது போல சாக்கும் பாயும்கலந்து உருவாக்கியிருந்த தடுப்பில் ஒட்டைபோட்டு திருட்டுத்தனமாக பார்க்க எல்லா இடங்களிலும் ஆட்கள் இருந்தார்கள். யசோதா யாருடா எவன்டாவன் என ஆரம்பித்து வாய்க்கு வந்தபடி பேசத்தொடங்கியபின் சாக்குப்பையில் படிந்திருந்த கண்கள் கால்முளைத்து ஓடத்தொடங்கும்.வாயும் கையும் இல்லையென்றால் இங்கு வாழ முடியாது எனத் தனக்குள் சொல்லிக்கொள்வாள். இரவில் பிளாட்பாரத்தின் மீது இவளும் தம்பியுமாய் தூங்கும்சமையங்களில் குடி கொஞ்சம் அதிகமானால் துணி விலகுவது கூடத் தெரியாமல் தூங்கும் தம்பியை நினைத்தால் துக்கம் அடைக்கும். பிளாட்பாரத்திலிருக்கிற பெண் பாதுகாப்புக்கு பிற ஆண்துணையை எப்பொழுதும் தேடிக் கொண்டிருக்கிறவள் இல்லை என்றாலும் தன்மீது பாசமிருந்தா தம்பி இப்படி செய்யாதுல்ல அவனுக்கு பாசம் குறைஞ்சி போச்சென நினைத்துக் கலங்குவாள். பின் அவளே அவனுக்கு இன்று எவ்வளவு கஷ்டமான வேலை கொடுத்தார்களென்று தெரியவில்லையே, பாவமென மருகுவாள்.

மழை பெய்யும் தினங்களிலெல்லாம் மழை நின்று விடவேண்டுமென சதாவும் முணுமுணுத்துக்கொள்ளுமவள் நாக்கு. மழை அதிகரித்து காட்டாறென ஒடத்தொடங்கிவிட்டால் அருகிலிருக்கும் பஸ் நிலையத்திற்குப் போய்விடுவாள். ஒரு முறை மழை தூரிக்கொண்டேயிருந்தது. மேற்கி லிருந்து கிழக்காய் சாரலுமில்லாமல் மழையுமில்லாமல் நிதானமான வேகம். பெய்கிற திசையைக் கொண்டு மழை பெய்யும் நேரத்தை கணிக்க முடிகிற அளவிற்கு மழை இவளுக்குப் பழகிப்போயிருந்தது. இஸ்லாமியர்கள் ஆலேஜூலா என குரலெழுப்பியபடியே வீதியில் சில கொடிகளை கம்புகளைப் பிடித்தவாறு சென்றனர். மழை அடர்த்தியாய் பெய்யத் துவங்கிய பொழுது பேருந்து நிறுத்தத்தில் நெருக்கடி, பஸ் போக்குவரத்து அடங்காததால் கொஞ்சம் பயணிகளும் பாதசாரிகளுமாகக் குவிந்திருந்தனர். தம்பியும் வந்து சேர்ந்தான். இனி வேறிடம் யோசிப்போம் எனக் கூறிக் கொண்டிருந்தவள் கூவம் படகுத்துறைக்குப் போவோம் என்றாள். ஆளரவமற்ற இறக்கத்திற்குப் போக தம்பிக்குப் பிடிக்கவில்லை. வார்த்தைகளை வலுக்கக் கூறாமல் வேண்டாங்கா என கனிவாய்ச் சொன்னான். இந்நேரத்துல விளக்கிருக்காது. மழையும் தூருது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகப்போகுதெனக் கூறியும் யசோதாவின் பிடிவாதத்தால் மழையில் நனைந்து கொண்டே போய்ச்சேர்ந்தனர்.நனைந்த உடலில் காற்று படப்பட லேசாக நடுக்கம் கண்டது.

சாப்பிட்டவை செரித்துவிட்டது போன்ற உணர்வு. வயிற்றைத் தொட்டுத் தேய்த்துக் கொண்டவள் பெருமூச்செரிந்தாள். அவளது நெஞ்சு அவசர கதியில் ஏறி இறங்கியது. மழையும் இருளும் நிறைந்து கிடந்த வெளியில் யாராலும் கட்டுப்படுத்தமுடியாததொரு சப்தம் இடைவெளியின்றி அலைந்து கொண்டிருந்தது காற்றில். கொசுக்கடி அதிகமாயிருந்தாலும் கொஞ்சம் உயரமான கல்திண்டின் மேல் மழைபாதிப்பில்லாமல் படுக்க முடிந்த ஆறுதலில் இருவரும் உறங்கிப் போனார்கள். அடுத்த நாளும் மழை தொடர்ந்தது. வேலைகளை முடித்துக்கொண்டு இங்கேயே நிம்மதியாகப் படுத்துக் கொள்வோமெனப் பேசிக்கொண்டு இறக்கத்தில் இருந்த டீக்கடையில் தண்ணிவாங்கி வாய் கொப்பளித்துவிட்டு டீ குடித்தனர். நெஞ்சுக் குழியில் சூடாக இறங்கிய டீ மனதிற்குப் புத்துணர்வாய் இருந்தது. அந்த இதத்தோடு அவரவர்பணிகளுக்கென பிரிந்து சென்றனர். மீண்டும் அந்தியை விழுங்கிப் புறப்பட்ட இரவில் அதே படகுத்துறைக்கு வந்தனர் தூக்கம் என்கிற ஒன்று இல்லையென்றால் இந்த அலைகிற வாழ்க்கை இருந்திருக்காதே என்கிற யோசனையில் உறங்கிப்போனாள். திடீரென நீர் ததும்பும் சத்தத்தில் அவளுக்கு விழிப்பு தட்டியது. சிமெண்டு கல்லில் நீர் ஏறியிருக்க அவசரமாய்த் தம்பியை எழுப்பினாள்.
பெரிய கண்களை சிமிட்டிச் சிமிட்டி ஆடிக்கொண்டிருந்த நாயகிகள் சட்டென மறையும்படி கண் விழித்தவன் மேட்டிற்குச் சென்று விடுவோமென்று சொல்லியவாறே நடையைக் கூட்டினான். மழை சரசரத்து மலைப்பாம்பைப்போல அவ்விரவில் நெளிந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் நிச்சயமற்ற கணங்கள் கேள்விகளை மட்டும் தந்துவிட வில்லை. கேள்விகளோடு நிலையாமையின் அஅடிப்படையிலான அச்சத்தையும் பிறப்பித்துவிடுகிறது. அர்த்தராத்திரியில் மழைக்கு ஒதுங்கி தூரல்நிற்கக் காத்திருந்தவர்கள் டீக்கடைகள் மூடப்பட்டிருப்பதாலும் நகரம் ஆழ்ந்த அமைதியில் இருப்பதாலும் மணி இரண்டு இருக்கலாம் என நினைத்துக்கொண்டார்கள். யாசோதாவின் கால்களில் வெடிப்பு எரியத் தொடங்கியது. கால்மாற்றி கால்வைத்து நின்றுக்கொண்டிருந்தவள் பஸ்ஸ்டான்ட் பக்கம் ஓடிரலாம்டா எனக் கூறிக் கொண்டே வேகமாக நடந்தாள்.பஸ் ஸ்டான்டில் சில நாய்களும் இரண்டு நபர்களும் ஏற்கனவே படுத்திருந்தனர். அதில் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாய் இருக்கக்கூடும், அவனது அழுக்கடைந்த கூந்தலும் உடையும் தலையில் தோன்றியிருக்கும் சடாமுடியுமாய் சேகரமாக்கிக் கொண்டிருந்த காலிபாட்டில்களின் பைகளை கையில் பத்திரமாய் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான். அவனை எழுப்ப எத்தனித்த தம்பியை சத்தமெழுப்பித் தடுத்தாள். அழுக்குக்குள் புதைந்த அம்முகத்தின் அமைதியை தெருவிளக்கு வெளிச்சத்தில் காண முடியாவிட்டாலும் . அதைக் கலைத்து விட வேண்டாம் என்பதாக நினைத்துக் கொண்டாள். முன்பு தான் வேலைபார்த்த வீட்டுப் பெரியம்மா குருவிக்கூட்டைக் களைக்கக் கூடாதென திட்டிய சம்பவமொன்று சட்டென அவளுக்குள் ஓடிமறைந்தது.

பகலெல்லாம் சிரித்துப் பேசிக்கொண்டு கழிவது இலகுவானதாயிருக்கும். இரவின் அடர்த்தி தாஙகமுடியாததாக ஏதேதோ சிந்தனைக் கிளறுவதாகத் தோன்றும். தம்பி துாங்கும்வரை உடலை இப்படியும் அப்படியுமாக புரட்டிக்கொண்டேயிருப்பான். அவன் துாங்கத் தொடங்கிய சில நிமிடங்களில் இவள் கண்களிலிருந்து கண்ணீர் சட்டெனப் பெருகி நிற்கும். இன்றும் மழைக்கு ஒதுங்கி நிற்கிற இந்த சமயத்தில் முன்னொரு இரவின் சம்பவம் நிழலாடியது. தம்பியும் இவளுமாய் படுத்திருந்த இந்த பஸ் நிறுத்தத்தில் நள்ளிரவுக்காட்சி முடிந்து அடங்கியிருந்த நிலையில் யாரோ அருகில் வருவதாக உணர்ந்தாள். விசுக்கென கண்திறந்த பொழுது இவளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது ஒரு உடல். ஆணா பெண்ணா எனத் தெரியாமல் தேடுவதாகப்பட்டது. லேசாக உடலைத் திருப்பியவள்மீது சட்டென பாரம் படர்ந்தது. சட்டென துளிர்த்த வார்த்தைகளையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டு வழிவிட்டாள். இந்த மழை ஏன் இதையெல்லாம் நினைவுட்டிக் கொண்டிருக்கிறது எனத் தெரியாமல் தவித்தவள் வேறொரு இடத்திற்கு சென்றுபடுப்போம் எனத் தம்பியோடு ஒரு அகன்ற வாசலைக் கொண்ட கடையின் படியில் சாய்ந்து கண்ணயர்ந்தாள்.

அடுத்த நாள் காலையில் தம்பி அவசர அவசரமாகக் கிளம்பினான். இன்னும் கொஞ்சம் போகட்டும் எனக்கூறியும் கேட்காமல் வீடுபிடிக்கப் போன தம்பி முன்னெப்போதும் பேசாத அத்தனைக் கெட்ட வார்த்தைகளில் திட்டியது கொஞ்சம் வலித்தாலும் அந்த இரவின் அலைக்கழிவும் இனி ஒருநாளும் அது போன்றதொரு இரவை எதிர்கொள்ள வேண்டாமென நினைத்ததாலும் தான் அவன் மீது வசவுகளாகக் கொட்டினானெனத் தேற்றிக் கொண்டாள். அவன் சம்பாதிப்பது அவனது தின சாப்பாட்டுக்கும் கொஞ்சம் கூடுதலாயிருந்ததால் குடிக்கும் அதிலும் மீறுகிறதை இங்கொன்னும் அங்கொன்னுமாய் இவனைப்பார்த்து பல்லிளிப்பவளுக்குமாக செலவாகிக் கொண்டிருக்கையில் வீட்டுவாடகையை நினைக்க தயக்கமாயிருந்தது. சற்றுநேரத்திற்குள் திரும்பிய தம்பி அக்கா வாக்கா வென வீம்புக்குத் திருப்பிக் கொண்டவளை வலுக்கட்டாயமாக இழுத்தான். இருக்கிற மரியாதையைக் கெடுத்துக்கொள்ளாமல் எழுந்துவிடுவதே நல்லதென விசுக்கென எழுந்து அவனுடன் நடந்தாள். தங்கராணி கைகளில் மோதிரமும் கழுத்தில் கட்டைவிரலளவிற்கு முறுக்குச் செயினும் அணிந்துகொண்டு அவ்வளவு காலையிலேயே வாயில் எதையோ மென்றுகொண்டிருந்தாள். அவளது குடிசைகளில் ஒன்றைத்தான் வாடகைக்குப் பேசி முடித்திருந்தான். இவளைப் பார்த்ததும் தங்கராணி மாராப்பை விலக்கி கையை விட்டுத்துழவி ஒரு சாவியை எடுத்துக் கொடுத்தாள். வாடகை ஒழுங்கா வரலண்ணா அந்தப் பணத்துக்கும் வட்டி போட்ருவேன் நியாபகம் எனக் கராராகக் கூறினாள். தலையசைத்து விலகியவர்கள் சொந்த பொருட்கள் சிலவற்றோடு குடியேறினர். ரொம்ப நாளுக்குப் பிறகு கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாமென நினைத்துக் கொண்டவளுக்கு லேசாகியிருந்தது மனம்.

கொஞ்சம் முக்கியப்புள்ளியாய்ப் பார்க்கப்பட்ட தங்கராணி கூவத்தின் வடக்குக் கரையோரத்தில் நிறைய குடிசைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். எப்படியும் நானூறுக்குக் குறையாத இந்த வீடுகளிலிருந்துதான் நகரின் மற்ற பகுதிகளைவிட மக்கள் தொகைப் பெருக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. சமீபமாக தங்கராணி வீட்டுப்பக்கம் கரைவேட்டிகள் தென்பட்டன. காரியமில்லாமல் யாரையும் நெருக்கமாய் சேர்க்கிறவளில்லை அவள். கரைவேட்டிக்காரங்க வந்துபோக எலக்சன் டைமும் இல்ல. வேறென்ன காரணமென்று கண்டு பிடிக்கமுடியாமல் அசைபோட்டுக் கொண்டிருந்தாள் யசோதா. இரண்டு தினங்களுக்குப்பின் தங்கராணி அவளது குடிசைகள் ஒவ்வொன்றிற்கும் வந்து சத்தமான குரலில் பேசிக்கொண்டிருந்தாள். இங்க யாராச்சும் வந்து இது உங்க வீடான்னு கேட்டா ஆமான்னு சொல்லுங்க என்னதா இருந்தா என்ன? ஒங்களோடதா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதானே என கரைபற்கள் தெரிய சிரிக்கும் பொழுதே இதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகப்பட்டது. அவள் போனபின் ஆட்களும் இவர்களுக்குள்ளாக பேசிவிட்டுக் களைந்தனர். சற்று நேரத்திற்குள் கரைவேட்டியாட்கள் இவர்களது குடிசைகளின் முன்பாக வந்து யாருடைய வீடெனக் கேட்கவும் ஏன் நமக்குப்பொல்லாப்பென எங்களோடதுதேன் என்று இழுத்தனர். ரோட்டோரம் வம்பிழுப்பவர்களிடம் கைவரிசையைக்காட்டும் ராணியம்மா சரோசா பீட்டரண்ணே எல்லோரும் தொண்டை எழாமலே பேசினர். அவர்களிடம் தகவல் கேட்டு குறித்துக்கொண்டு கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

அதன்பின்தான் இவர்களுக்குப் புரிந்தது குடிசை மாற்றுவாரியம் இவர்களுக்காக ஒதுக்கியிருக்கும் புறநகர்ப்பகுதிக்கு டோக்கன் கொடுத்து அனுப்பப் போகிறார்கள் என்பது. 

சொந்தமா இடம் கிடைக்கும் சந்தோஷம் ஒருபக்கம் இதுவரை இங்கு பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட்டுவிட்டு சென்றால் அங்கே எம்மாதிரி வேலை கிடைக்குமோவென்கிற கவலை ஒருபுறம். கவலையைத் தூக்கி வைத்துவிட்டு சொந்த இடம் கிடைக்கப் போவதிலும் அரசாங்கமே கட்டிக்குடுக்கிறதால் கல்லுக்கும் கீத்துக்குமாக செலவழிக்க வேண்டியதில்லை என்பதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி. டோக்கன் கொடுக்கும் தினத்தில் எல்லோர் முகத்திலும் சந்தோஷம். சொந்த குடிசை வைத்திருந்தவர்கள் முகத்தில் நகரின் மையப்பகுதியிலிருந்து பிய்த்தெடுக்கப்படுகிற சோகம் அதிகமாய்த் தெரிந்தது. டோக்கன் வாங்கியாச்சாவென தங்கராணி நோட்டம் விட்டவாறே அமர்ந்திருந்தாள். கூட்டம் குறைந்து கலைந்தபின் வீட்டுப்பக்கம் வந்த தங்கராணி உங்க டோக்கனையெல்லாம் எடுத்தாந்துகுடுங்க என அதிகாரமாய்க் கேட்டாள்.

கூழோ கஞ்சியோ நமக்குன்னு ஒரு இடம் வேலைக்குப் போக கொஞ்சம் சிரமமென்றாலும் சமாளித்துக் கொள்ளலாமென கனவுகளோடு பூரித்துக்கிடந்த யசோதாவின் முகம் சூம்பிப்போனது. எல்லோரும் இது தெரிந்தது தானே என்பது போல டோக்கனைக் கொடுக்க தங்கராணி சிரித்துக் கொண்டே அவங்க கூட்டீணுபோறன்னைக்கு நானே டோக்கனோட கூட வருவேன்ல, உங்களாண்ட இருந்தா மிஸ்ஸாயிடும் துரை… என தன் தோற்றத்திற்கு சம்பந்தமேயில்லாமல் நெருக்கமாய்ப் பேசினாள். யசோதா கொண்டுவாயேண்டீ என்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஆத்திரம் தலைக்கேறியது. என்னால தர முடியாது என்று அழுத்தமாகச் சொன்னாள். தந்துடுடீ இல்லேன்னா என்ன வழியாவேனு உனக்கே தெரியும் என அதிகாரமாய் சொன்ன தங்கராணியின் பேச்சை சட்டை செய்யாமல் த்தூவென காரி துப்பிவிட்டு வீட்டுக்குள் போனாள்.

வேலைக்கெனப் போய் இரண்டு மூன்று நாட்களாகியும் திரும்பியிருக்காத தம்பியை நினைத்துக் கொண்டாள். சின்ன வயதிலேயே பொறுப்பு வந்ததில் இயல்பிற்கும் திராணிக்கும் அதிகமாய் உழைத்துக் கொண்டிருந்தான். இரவு பகலென மாறி மாறி பார்க்க வேலைகள் அனேகமிருந்தன. இருட்டத் துவங்கின நேரம், வீதியில் பேச்சு சத்தம் குறைந்திருந்தது. சட்டென குடிசைக்குள் ஆட்கள் சிலர் திமுதிமுவென புகுந்து பாத்திரங்களை உடைத்து அள்ளி வெளியில் வீசிவிட்டு இடைமறித்தவளைப் பலங்கொண்டமட்டும் அடிக்கத் தொடங்கினர். யசோதாவின் ஆத்திரமும் கோபமும் சொந்த வீடென்ற ஆசையும் ஒன்றாய் இணைந்து மறிப்பதும் திருப்பி அடிப்பதுமாகப் போராடி கைகள் செயலிழந்ததைப் போல உணர்ந்தாள். துளியும் அசைக்க முடியாதபடி காலும் பல்லும் கூட களைத்துப்போனது. அது எப்பொழுது முடிந்ததென்கிற நினைவில்லாமல் மயங்கிப் போனவள் கண்விழித்த போது பிளாட்பார ஓரத்தில் அலங்கோலமாய்க் கிடந்தாள். முகமெல்லாம் வீங்கி சிவந்திருந்தது. உடலெங்கும் நகக்கீரலும் காதோரம் கசிந்து காய்ந்திருந்த ரத்தமுமாய் முகத்தையும் கையையும் பார்த்தவளுக்கு உள்ளூர தெரிந்த வித்யாசங்கள் பேரதிர்ச்சியையும் இயலாமையையும் கொடுத்தது. ஓவென குரலெடுத்து அழவும் முடியாதவளாய் உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள்.

தியேட்டரில் படம் முடிந்து செல்லும் ஆட்கள் நகரின் கடைசி இருப்பாய் போய்க்கொண்டிருந்தனர். வலுவில்லாத உடலை இழுத்துக் கொண்டு கழிவறைக்குச் சென்றவள் எவனெவனுடையதென தனித்துச் சொல்லமுடியாதபடி அவ்வளவையும் கழுவிக் கொண்டே உடலின் அத்தனை நரம்புகளிலும் ஓடிக்கொண்டிருந்த குருதிகள் கருநிறமாய் மாறுவதாக உணர்ந்தாள். மெல்ல நடந்து பிளாட்பாரத்திற்கு வந்தவள் சாக்குப்பை கட்ட வேண்டுமென்பதையும் கூட நினைக்க மறந்து உட்கார்ந்திருந்தாள். குரைத்திருந்த நாய்கள் அடங்கிவிட்டன. அதிலொன்று இவளது அருகில் வந்து ஏதேவொரு அர்த்தம் புரிந்ததான பார்வையில் உற்றுப் பார்த்து விட்டு வாலை இரு கால்களுக்குமான இடுக்கில் நுழைத்துக்கொண்டு சுருண்டு படுத்தது. ஒத்திகைக்கு தயாரான யசோதாவின் மனம் திடங்கொள்ளத்தொடங்க மலரொன்று மொட்டாய்க் குவிவதைப் போன்று மெல்ல இமைகளை மூடினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *