பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …சிந்தன் ரா

Thanks – http://maattru.com/

பாகுபலி

Baahubali logo.png

பாகுபலி என்ற இந்தியாவின் பிரம்மாண்ட செலவு செய்யப்பட்ட சினிமாவை, கைகொட்டி ரசித்துப் பார்வையிட்ட ரசிகர்களுக்கு வணக்கம்.

மிகக் கூடுதலான செலவு செய்து எடுக்கப்பட்ட படம். கலை இயக்கத்தை மிகச் சரியாக உபயோகித்த சினிமா. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுமான வரை பிரம்மாண்டமும், பார்வைக்கு உருத்தாமலும் செய்யப்பட்ட படம். என புனையப்பட்டதொரு உலகம், முடியாட்சி மன்னர் குலத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியின் முதல் பாகமாக வந்திருக்கிறது பாகுபலி. இணையத்தில் தேடினால் இன்னும் பல பிரம்மாண்டங்கள் செய்தியாகக் கிடைக்கும். ஒரு ரசிகராக நீங்கள் சினிமாவை ரசித்திருப்பீர்கள். ஒரு மனிதராக இன்னும் சில விசயங்களில் ஊன்றி கவனிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

திரைப்படம் ஒரு ஆற்றல் மிக்க கலைக் கருவி. மற்ற கலைகளெல்லாம் நம்மை சிந்திக்க வைக்கும் அல்லது லயிக்க வைக்கும். திரைப்படமோ, நம்மை அறியாமல் பல பிம்பங்களை, முன் முடிவுகளை விதைத்துவிடும். தென்னிந்தியர்களாகிய நமக்கு இது சொல்லாமலே தெரியும். அரியாசனங்களை, திரைப் பிம்பங்களிடம் தந்து இனியும் தரத் தயாராய் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் நம்மிடம் உள்ளனர்.
நம்மை அறியாமல் மனதில் புகுத்தப்பட்ட கருத்துக்களை நிதானித்து பகுத்தாய்வோம்.

கதை:
என்ன கதை சொல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிற உரிமை இயக்குனருக்கு உண்டு. ஒரு இந்தி பத்திரிக்கைக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் “இதயப்பூர்வமான கதையும், சக்திவாய்ந்த கதாப் பாத்திரங்களும்தான்” இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

கதை அவ்வளவு பிரமாதமானதா என்ன?

… கற்பனை தேசமான ‘மகிழ்மதிப் பேரரசின்’ மோசமான அரசனை வீழ்த்த, அந்த ராஜ குடும்பத்தில் பிறந்த மற்றொருவன் வருகிறான் என்பதாகக் கதை சொல்கிறார் ராஜமெளலி. சாமானிய மக்களுக்கு எதிர்ப்புணர்வு ஏதுமில்லை, பாகுபலியின் மகன் வந்ததும் ‘வாழ்க கோஷமிட மக்களுக்கு தைரியம் வருகிறது’ – ஆளப் பிறந்த குலம்தான் ஆள வேண்டும் என்பதான இந்தக் கதை வித்தியாசமான ஒன்றல்ல. இயல்பானதும் அல்ல. மாறாக ஏற்கனவே இந்தியாவை சிதைத்துவரும் பிறப்பால் கற்பிக்கப்படும் சாதியின் அடிப்படை வாதம். அதற்கு ஏற்ற விதத்தில், விசுவாசம் மிக்க அடிமையாக நடிகர் சத்திய ராஜ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பல இடங்களில் இந்த கருத்தை வலியுறுத்துகிறது. முடியாட்சிக் காலத்தில் இப்படியொரு வாதம் அதிகார மட்டத்தில் நிலவியது. ஆனால், அடிமைப்பட்ட மக்களிடம் எதிர்ப்புணர்வே இல்லை என்று காட்டுவது அபத்தம்.

ஒரு தேசம் வளமாக இருக்கிறது என்றால் அதன் பிரம்மாண்டக் கோட்டை மட்டுமல்ல, விவசாயம், தொழில், வணிகம் பற்றியும் காட்ட வேண்டும். மேம்போக்கான ‘ராஜ வம்சக்’ கதைகளைப் போலவே இந்தப் படமும் அதுபற்றி எதுவும் பேசவில்லை. பழங்குடியினர் – நகர மக்கள் இடையிலான முரண், கள்வர் எப்படி உருவாகினர் அவர்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றிலும் – இந்தப் படம் ‘நம்பிக்கைகளை’, ‘பொதுவான பார்வையை’ அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இது ‘இதயப் பூர்வமானதல்ல’ மாறாக ஏற்றதாழ்வுக்கு நியாயம் கற்பிக்கும் விதமானது.

அவந்திகாவின் பலாத்காரம்:
அவந்திகா – சிவு இடையில் காதல் வருவதாக காட்டப்பட்ட காட்சிகள் பல முக்கியப் பத்திரிக்கைகளிலும் விவாதமாகியுள்ளன. இதுபற்றி ராஜ மெளலியிடம் கேட்டதற்கு “நான் அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கவில்லை. என் கேரக்டர்கள், காட்சிகளில் நான் அறிவைப் புகுத்தி பார்க்க மாட்டேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

பெண்கள் ஆட்சியாளத் தகுதியற்றவர்களாக தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதும், மகனின் வருகைக்காக காத்திருப்பது, அம்மாவின் மீதான பாசமே மகனின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைவது என கதைப் போக்கில், பெண்களைத் தாழ்த்தும் காட்சிகள் இப்படத்தில் நிறைய உள்ளன.

இருப்பினும் அவந்திகா என்ற நாயகியின் (தமன்னா) பாத்திரப் படைப்பு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாக அமைந்தது. அவள் ர்ந்த கலகக் கூட்டம் கதை நகர்வுக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்துள்ளது. அவந்திகாவாக நடித்திருக்கும் நடிகை தமன்னா, மிகச் சிறந்த முக பாவனைகளை, உடல் மொழியை வெளிப்படுத்துகிறார்.

அவர் முகத்தை கற்பனை செய்தே காதலுற்ற நாயகனுக்கு அவளின் அழகின் மீது ஈர்ப்பு உருவாகிறது. நேரில் பார்த்த பின்னர் அவளின் போர்க் குணம் தெரிகிறது. இருந்தாலும், அவளின் வாழ்க்கை முறையோ, கொள்கைகளோ ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக ‘உன்னுள் இருக்கும் பெண்ணை வரவழைக்கிறேன்’ என்று பலவந்தம் செய்கிறான். இப்படி காதல் என்ற பெயரால் பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றுகின்றனர். இயல்பாக அவந்திகா போன்ற ஒரு பாத்திரம் அந்த இடத்தில் சீற்றமடைந்திருக்கும். மாறாக அவளை பலவீனமாக்கி, நாயகனின் பாதுகாப்பில் வைப்பது முதல் ஏமாற்றம். போர்க்குணமுள்ள எந்தவொரு பெண்ணும், இப்படி தன் லட்சியத்தை, இன்னொருவனை நம்பி ஒப்படைப்பாரா? ஒரு சிறந்த பாத்திரத்தை உருவாக்கி, நம் கண் முன்னே பலவந்தப்படுத்தி, அழிக்கிறது கதை.

பாகுபலி:

இந்தக்​ கதையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நாயகன், இளவரசனும், மன்னனுமான பாகுபலி தான். ​இளம்​ வயதிலிருந்தே பாகுபலியை மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ஒருவனாக காட்டுகின்றனர். அதிகாரத்தை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறி பல்வார்த் தேவனிடம் வெறியாக வெளிப்படுகிறது. அந்த வேட்கை பாகுபலிக்கும் இருக்கிறது. தன் வேட்கையை எப்படி எட்டுவது எனும்போது பால்வார் ஒரு தந்திரம் செய்கிறார். பாகுபலியோ திறமையான அரசியல் செய்கிறார்.

அடிமையை ‘மாமா’ என்று அழைப்பது தொடங்கி, எது மரணம் என்று விளக்கி வீரர்களை தயார்ப்படுத்துவது வரை பாகுபலியிடம் அரசியல் பளிச்சிடுகிறது.

பாகுபலி புகழ்பெற்றவனாக இருக்கிறான், அதே நேரத்தில் முன்னமே சொன்னது போல விவசாயம், தொழில், வணிகம் – இதற்கான நீர்ப்பாசனம் மற்றும் சாலைக் கட்டமைப்புகள், வரி வசூல் முறை உள்ளிட்டவற்றில் – பாகுபலியின் நிலை என்ன என்பதைச் சொல்லாமல், புகழை மட்டும் காட்டுவது – ஆட்சியதிகாரப் போட்டியை, ஆடு புலி ஆட்டமாக்கி விடுகிறது.

சிவு:
பாகுபலியைப் போன்ற தோற்றமும், கதையின் மையப் பாத்திரமாகவும் அமைந்த சிவு, பழங்குடி மக்களோடு வாழ்கிறார். பழங்குடி வாழ்வியலில் இருந்து அவன் கற்றது எதுவும் இல்லை. மலை ஏற்றத்தில் பிடிவாதமான முரடன், தோற்றம் என்ற இரண்டு விசயங்களைத் தவிர பாகுபலியின் குணங்கள் கூட அவனிடம் இல்லை.

தான் என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறேன் என்ற தெளிவோடு செயல்படுகிற அவந்திகாவை விடவும் – பனி மலைச் சூழலில் ஒரு நாள் கூட வாழ்ந்திருக்காத சிவு கெட்டிக்காரன் என்று காட்டுவதும், ஒரு முறை கூட – பயிற்சிபெற்ற படையோடு சண்டை போடாத, பயிற்சி ஏதுமற்ற சிவு – எல்லோரையும் வீழ்த்திச் சாய்க்கிறான் என்பதும் காதில் பூச்சுற்றல். வலுவான கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை அப்படி சிந்திக்க விடாமல் தடுக்கின்றன.

வில்லன்:
கொடூர வில்லன் கருப்பாகவும், சூது செய்பவன் ஊனமாகவும் இருக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாகவே தொடரும் நச்சுக் கருத்தாகும். இந்தப் படத்திலும் அது மீண்டும் அழுத்தமாக விதைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட வில்லன் என்ன வியூகம் வகுக்கிறான்? தலைவனைக் கொன்றால் போர் வெற்றி என்றால் தலைவன் இத்தனை நிராயுதபாணியாகவா இருப்பான்? என்ற கேள்விகள் எழுந்தபடி உள்ளன. ஒரு மணி நேரத்தையும் கடந்து நடக்கும் அந்தப் போரில், திரிசூல வியூகம் என்று ஒன்றைச் சொல்கின்றனர். எதிர்த்தரப்பின் வியூகம் பற்றியே சொல்லாமல், ஏதோ முட்டாள் வில்லனாகக் காட்டுவது – பாத்திரப் படைப்பின் பலவீனம். போர் என்றால் அதுவொரு கூட்டு போராட்டம் என்ற புரிதலே இல்லாமல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர் குறைந்தபட்சம் அவதார் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்த்திருக்கலாம்.

வசனம்:
கதைக்குத் தேவையானதை எழுதுவதுதான் வசனகர்த்தாவின் வேலை என்றாலும், நச்சுக் கருத்துக்கள் இல்லாமல் தவிர்ப்பதும், நல்ல சிந்தனைகளைப் புகுத்துவதும் வசனகர்த்தாவால் செய்ய முடியும். மென்பொருளை வைத்து எழுதுவதால் மட்டுமே அறிவியல் சிந்தனையைப் பெற்றுவிட முடியாதுதானே.

போகிற போக்கில் ‘பகடைக்குப் பிறந்தவனா?’ என்றொரு வசனம் வருகிறது. பட்டியல் சாதியினரை தாழ்த்தும் இத்தகைய வசனங்களும் இயக்குனரின் இதயப்பூர்வமானவையா?

… அப்படியென்றால், சிலருக்கு உயர்வு கற்பித்தலும், உழைப்போருக்கு இழிவு புகட்டுவதுமான அவரின் இதயம் நொறுங்கட்டும்.

பொதுவாக​ ரசிகர்கள் ‘ரம்யா கிருஷ்ணன் நன்றாக ​நடித்துள்ளார்’, ‘சத்யராஜ் அருமை’, ‘கிராபிக்ஸ் மிரட்டல்’, ‘சம்பளம், செலவு’ என்ற ரீதியில் பேசுகின்றனர். ஒரு படத்துக்கும், ரசிகனுக்குமான தொடர்பு அந்தப் படத்தின் மூலம் உணர்த்தப்படும் கருத்தில்தான் அமைகிறது. ஒரு சிறந்த படைப்பு, எப்போதும் சமூகத்தை மேம்படுத்தும் பணியையே செய்யும்.

பாகுபலி திரைப்படம் சொல்லும் ஒரு நல்ல கருத்து – ஆட்சி நடத்துபவனுக்கு வெற்றி மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது மக்களின் நல் வாழ்க்கையும் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். மக்களின் நல் வாழ்வு, ஏற்ற தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்காத ஒரு சமூகத்தில் இருந்துதான் பிறக்க முடியும் என்பதைச் சொல்லும் தெளிவு கதை ஆசிரியரிடம் இல்லை.

திரைக்கதை வல்லுனரான ராஜேஷ் – பாகுபலியின் திரைக்கதை பற்றி விமர்சித்திருந்தார். ஒருவேளை திட்டமிட்ட மிகவும் சுவாரசியமான திரைக்கதையாக இருந்திருந்தால் – பல நச்சுக் கருத்துக்கள், இன்னும் மோசமான விதத்தில் விதைக்கப்பட்டிருந்திருக்குமே என்ற கவலையே நமக்கு எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *