” இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் ‘

அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை. சுருக்கம்.

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – கவிதா முரளிதரன்
நன்றி….கவிதா முரளிதரன்Ec .Ramachandran

 

capital

” இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில் ’தங்க முலாம் யுகம் ’ என அழைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும்நிறுவனங்களும் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும் எந்திரமாக இருப்பது குடும்ப சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு)அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன் படி பார்த்தால் சொத்து, அறிவு,சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.”

” பெரும்பாலான பனியா குடும்ப நிறுவனங்கள்தான் இன்று பல ஊடக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றன. எது செய்தி எது செய்தியில்லை என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு தேசத்தின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி உருவாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நான்கு மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் மூன்றை நடத்துவது வைசியர்கள். நான்காவது பார்ப்பன குடும்ப நிறுவனம். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நௌ போன்ற ஊடகங்களை நடத்தும் நிறுவனமான பெனட் கோல்மேன் நிறுவனம் ஒரு ஜெயின் குடும்பத்தால் (பனியா) நடத்தப்படுகிறது). இந்துஸ்தான் டைம்ஸை நடத்துவது பார்டியா (மார்வாரி பனியாக்கள்). இந்தியன் எக்ஸ்பிரசை நடத்துவதும் மார்வாரி பனியாக்களான கோயங்கா. தி இந்துவை நடத்துவது பார்ப்பன குடும்ப நிறுவனம். இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ’தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளிதழை நடத்துவது (கிட்டத்தட்ட 55 மில்லியன் சர்க்குலேஷன்) கான்பூர் பனியாக்களான குப்தாக்கள். 17.5 மில்லியன் சர்குலேஷன் கொண்ட தைனிக் பாஸ்கர் என்கிற செல்வாக்கான ஊடகத்தை நடத்துவதும் அகர்வால்கள் என்கிற பனியாக்கள்தான். 27 முக்கியமான தேசிய மற்றும் பிராந்திய தொலைகாட்சிகளில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பங்குகளை வைத்துக்கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானி என்கிற குஜ்ராத்தி பனியா நடத்தும் ரிலையன்ஸ் நிர்வாகம். இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ’ஸீ’ தொலைக்காட்சியை நடத்துவதும் சுபாஷ் சந்திரா என்கிற பனியா. பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன. வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய செய்தியாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தலித்துகளும் ஆதிவாசிகளும் அந்த எல்லைக்குள்ளேயே இல்லை. இட ஒதுக்கீட்டின் கொள்கையை வேண்டுமென்றே திசைதிருப்பி, நீதித்துறை, அதிகார வர்க்கம், அறிவுத்துறை எல்லாவற்றிலும் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். தலித்துகள் மிக அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடம், அரசாங்க நகராட்சிகள்தாம். பெருக்குபவர்களில் 90 சதவீதம் பேர், வால்மீகி சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த மிகப்பெரிய வல்லரசில்தான், இன்னமும் பதின்மூன்று லட்சம் பெண்கள் தங்களது தலைகளின் மீது மலக் கூடைகளை சுமந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.”

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *