ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.

ஷாமீலா முஸ்டீன்

IMG_8943

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் அவற்றை இங்கு விதந்து கூற வேண்டியது அவசியமாகும்.

ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.

மூத்தஇலக்கியவாதி சிரேஷ்ட எழுத்தாளர், கலாபூஞ்சனம், கௌரவ, கண்ணியத்துக்குரிய மற்றும் இது போன்ற இன்ன இன்னபிற புகழ் விரும்பிகளும் அதற்காகவே அலைபவர்களும் அதற்காகவே காத்திருப்பவர்களும் இங்கு இருக்கவில்லை. அதனால் இயல்பாக எல்லோரையும் அவரவர் பெயர்கூறி மிகச் சாதாரணமாகவே அழைக்க முடியுமாக இருந்தது. ஒர் எளிய உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். இந்த இரண்டு நாள் நிகழ்வையும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஒழுங்குபடுத்தி அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற ஒழுங்கமைத்த குறித்த கலாசாலையின் அதிபரான திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்களை எல்லோரும் வெறுமனே சந்திரலேகா என்றே அழைத்தார்கள். குறைந்தபட்சம் மெடம் என்று கூட முன்னாலும் பின்னாலும் யாரும் எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதுபோலவே ஓவியா, ரஞ்சி, புதியமாதவி, ரஜனி, நளினி, லரீனா, நர்மதா , சரோஜா என்று எல்லோரும்இயல்பாக அழைக்கப்பட்டார்கள் எதையும் அவர்களும் எதிர்பார்க்கவுமில்லை அலட்டிக் கொள்ளவுமில்லை.

2012ல் கொழும்பில் நடந்த ஒருபெரும் இலக்கிய நிகழ்வொன்றில் ஓர் அழைப்பிதழில் ஒருவரின் பெயருக்கு முன்னால் மூத்த எழுத்தாளர் என்று போடவில்லை எனப் பிரச்சினை வந்தது. இன்னொருவரின் பெயர் கீழே போடப்பட்டதாகவும் தனது பெயர் மேலே வந்திருக்க வேண்டும் என்றும் கீழே போட்டது தன்னை அவமதிப்பது போன்றதாகும் என்றும் சிக்கல் தோன்றியது அது போல இங்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை என்பதன் மூலம் இந்நிகழ்வு எவ்வளவு ஆறுதலானதும் அர்த்தமிகுந்ததும் என்பது உங்களுக்கே தெளிவாகும்.

தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும். தனது பிரயபல்தினைக் கருத்திற் கொண்டு எல்லோரும் தன்னை அறிந்து வைத்திருக்கவேண்டும் என்று நிலத்தில் கால் படாமல் மிதந்து கொண்டிருக்கும் கருத்தியல் பேர்வழிகள் யாரையும் இங்கு காணக்கிடைக்கவில்லை.

அதுபோல தன்னைப்பற்றி மட்டுமே புகழ்ந்து கொண்டு தன்னைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டு தனது புகழை மட்டுமே ஓதிக் கொண்டிருக்கும் கேசுகளும் இங்கிருக்கவில்லை. ஒரேயொரு ஆய்வுக் கட்டுரை மட்டும் இந்த விதியை கொஞ்சூண்டு மீறியது. மற்றபடி அத்தனையும் தரமிக்கவை.

அடுத்தது அரங்கும் மேடையும். 

ஆயிரெத்தெட்டு அரங்குமில்லை வெறும் கௌரவத்தைக் கட்டமைக்கும் மேடையுமில்லை. உரையாளர்கள் யாரையும் அந்நியமானவர்களாகக் கருதவோ நெறிப்படுத்தியவரைவிட்டும் தூரமாகி நிற்கும் மனோநிலையிலோ பங்கேற்பாளர்கள் யாரும் அந்நியப்பட்டு நிற்கவில்லை. மிகவும் தரமான மேம்பட்ட கல்வியலாளர்கள் கலந்துகொண்ட போதும் யாரும் தமது பட்டத்தினையும் தரத்தினையும் முதனிலைப்படுத்தவில்லை.

மொத்தத்தில் அருமையான நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது. அனைத்து விதத்திலும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மொத்தமாகக் காணிக்கையாக்குகின்றேன்

 

2 Comments on “ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.”

  1. A genuine account on the event. Wish all the best for your- no our journey in this course

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *