மெளனச்சிறைகளுள் வாடும் பெண்களின் துயரங்கள்….(சில உண்மைகளின் தொகுப்பு)

ஜெஸீமா ஹமீட் மாத்தளை   wlm-med

பெண்களுக்கும் ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் 1911 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம் எத்தனையோ கருப்பொருள்களைத் தாங்கி ஒரு சகாப்தத்தை தாண்டி வந்திருப்பினும் இன்னும் அம்பலத்துக்கு வராத இருட்டுச் சிறைகள் பெண்களை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை பெண்கள் மட்டுமே அறிவார்கள். கொஞ்சும் குழந்தையாய், கூட விளையாடும் சகோதரியாய்,மகன்மார்கள் கைவிட்டு போனபின்னும் பெற்றோரைத் துரத்திடாத உண்மை மகளாய்,குடும்பத்தின் குத்துவிளக்காய்,தொட்டிலிட்டு தாலாட்டும் தாயாய்இநோய் வந்தால் எங்குமே எம்மைவிட்டு நகராத தாதியாய் என ஒரு ஜென்மமெடுத்து பல பேரின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் ஒரேயோரு ஆத்மா பெண் மட்டுமேதான்.இத்தனை பாத்திர படைப்புக்களிலும் மங்கா புகழுடன் திகழும் இவள், மனையாள் படலத்தில் மட்டும் மலைபோல் குவியும் வேதனைகளுக்கிடையே நெளியும் புழுவாய் தவித்துக் கிடப்பது இன்னும் மொழிபெயர்த்து முடிக்கப்படாத துயரங்களின் சரிதை என்பதை யார் அறிவார்…?

 என்னதான் கவிதைகள் ஏதோ ஒரு கோணத்தில் பெண் துயர் பாடினாலும்,கணவனாய் பெண்களை பொறுப்பேற்கும் ஆண்களில் பலபேர் அவர்தம் வாழ்விலும் மனங்களிலும் மாறாத வடுக்களைஏற்படுத்துகின்றனர்.ஒரு பெண் மூன்று முடிச்சுக்களுக்குள் தன் மொத்த உலகையே ஆண்கள் கையில் அள்ளி கொடுத்துவிடுகிறாள்.ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் சந்தோசங்களுக்கோ அவசரமாக கொள்ளி வைத்துவிடும் ஆண்வர்க்கமே இன்று அதிகமாய் அலைமோதுகிறது.கள்ளக் காதலியென்றும்இகள்ளு சாராயமென்றும் குடும்ப வாழ்விலிருந்தும் அதன் குதூகலத்திலிருந்தும் தூரவாகும் பல ஆண்களால் துடித்துப் போகும் பெண்கள்

பெற்ற பிள்ளைகளை கைவிட்டு விட முடியாமலும்,குடும்பச் சுமையை இறக்கி வைக்க முடியாமலும் கடனிலும் கவலையிலும் இருதலைக்கொள்ளி எறும்பாய் எங்கித்தவிப்பதை யாரிடம் பகிர்ந்து கொள்ள…?

kalarlanka 2

சில பெண்கள் சிரமத்தை குறைக்க வழி தெரியாமல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாட வீட்டை கவனிக்க நேரும் கணவன்மார்களோ மனைவியின் பணத்தில் குடித்து கும்மாளமிட்டு அவள் திரும்பி வரும்போது வெறுங்கையை விரித்து மீண்டும் மீண்டும் அவர்களை வெளிநாட்டிலேயே சிறைவைத்து விடுகிறார்கள்.சொந்த வாழ்க்கையிலும் நிம்மதியிழந்து வெளிநாட்டுக்கு வந்தால் அங்கும் உரிய பாதுகாப்பில்லாமல் பணத்துக்காய் விபச்சாரத்தில் கூட தள்ளப்பட்டுவிடும் இவர்களின் வாழ்க்கை தற்கொலைகளிலும் கூட முடிந்து விடுவதை குடும்ப கெளரவம் என்ற பெயரில் பொத்தி மறைக்கப்படும் இவர்தம் வாழ்வியல் உண்மைகளை யார் மொழிபெயர்ப்பார்….?

கணவனும் மனைவியும் கருத்தொன்றி வாழ்ந்தாலும் மாமி மைத்துனி எனும் இராட்சத கொடுமைகள் மண் அள்ளி கொட்டுவது இன்னொரு பெண்ணின் தலையில்தான்.சீதனம் எனும் பெயரில் இவர்கள் அரங்கேற்றும் அடவடித்தனங்களால் அப்பாவி பெண்களும் கூட அரக்கிகளாய் மாறிய வரலாறும் உண்டு. ஒரு பக்கம் தாய்,றீசகோதரி மறுபக்கம் மனவியென மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆண்களும் இருக்காத்தான் செய்கிறார்கள் அதைவிட குடும்பமே சேர்ந்து குடிவந்த பெண்ணை கொன்று புதைத்த கொடுமைகளே ஏராளம்.சீதனமும் கொடுத்து ஜீவனையும் விட்ட பெண்களின் சிலுவைகளை யார் தாங்குவார்….?

கற்பு கற்பென காது கிழிய கத்தும் உலகம் கற்பையும் கண்ணியத்தையும் பெண்களுக்கே சொத்தாக எழுதி வைத்து,ஆண் போடும் அசிங்கக் கூத்துக்கெல்லாம் பெண்களின் கற்பையே துகிலுரித்துப்பேசும் துச்சாதனங்களை எந்த மொழி பேசும்…? படி தாண்டாள் பத்தினியாய் பத்தும் பொறுத்து கற்பொழுக்கம் பேணிவாழ்ந்தும்இகளவு செய்யும் கணவனின் கொள்கை படி தாண்டி விடும்போது பொறுக்காத பத்தினிகள் பலர் போடும் சோற்றிலேயே விசம் வைத்த உண்மைகளும் இல்லாமலில்லை.இவர்தம் நெஞ்சங்கள் கதறும் பாச மொழிதனை யார்தான் எடுத்துரைப்பார்…?

நாங்களின்னும் மாறவில்லை பெண்சோகம் தீரவில்லை.கருவறையில் பெண்ணை கரைக்கத் துடித்த‌ உலகம் தப்பி பிறந்த பின்னும் பெண்ணவள் வாழ்க்கையையே கரைத்து கறைபூசும் வேலையை இன்னுமே செய்துகொண்டேயிருக்கிறது.என்ன புதுமை இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஒரு சகோதரி கண்களில் நீர் மல்க தன் மெளனச் சிறைகளை உடைக்கிறாள்.தனது பதின்மூன்றே வயதில் விவாகரத்தென்ற பெயரில் தந்தையால் தனது தாய் தள்ளி வைக்கப்பட்டதில் என் தாய் வடித்த கண்ணீரை விட என் உணவுக்கும் கல்விக்குமாய் நான் வடித்த கண்ணீரே அதிகமென்றாள்.தனது உயர்வுக்காய் வறுமைஇவசைஇபழி பாவமென அத்தனை அலைகளிலும் தலை மூழ்கியே இப்படி உயர்ந்திருக்கிறேனென்ற ஆசுவாசத்தைவிட பெண்ணெண்ற பாவத்துக்காய் நான் பெற்ற வசை மொழிகள் இன்னுமே என்னை கசைகளாக மாறி வலிக்கச் செய்கிறதென ஆழ்ந்த பெருமூச்சு விட்டு முடியுமுன்பே சுமார் 68 வயது கடந்த பெண்ணொருத்தி இந்த தள்ளாத வயதிலும் இப்படி அழுதாள்.அன்புக்கும் ஆஸ்திக்கும் ஒரே மகனென கொஞ்சி கொஞ்சி வளர்த்தேன் இன்றோ பொஞ்சாதி சொல்கேட்டு என் காதிலிருந்த அரைப் பவுன் தோட்டையும் பிடுங்கி அவளுக்கே கொடுத்துவிட்டானென அழுது புலம்புகிறாள்.ஒரு பெண் சந்தோசப்படவும் இன்னொரு பெண்ணே கண்ணீர் சிந்தும் துரதிஸ்டத்தை யார்தான் கூறுவார்….?

இப்படியே இந்த உலகம் முடியும் வரை எங்கள் புண்களின் வேர்கள் புரையோடிக்கிடக்கும் எனினும் பெண்களின் அல்லல் தீர்ப்பதில் பங்கெடுக்கும் ஆண்களும் உண்டு என்பதைப்போல அதே ஆண்களை தங்கள் மட்டமான நடத்தைகளால் அலைக்கழிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.எது எவ்வாறெனினும் பெருந்துயர் சுமந்து முடிவுறாமல் கண்ணீர் சிந்துவதில் பெண்களின் பட்டியலே மிக மிக நீளமாயிருக்கிறது.எனவே இதைப் போல் எண்ணற்ற கண்ணீர் காவியங்களின் கருப்பொருளாக பெண்ணே இருப்பதால் எதிர்வரும் மகளிர் தினத்திலேனும் எம்மெளனச்சிறைகள் உடைத்து முழங்குவோம் எம் துயரங்களை,பெண்களே பெண்களை மதிக்கஇஅவர்தம் கடமைகள் அறிந்து அத்தனை பேருக்கும் நாங்களே கண்களென்பதை அழுத்தமாய் புரிய வைக்க ஊடறு ஊடகமே நீ ஆண்கள் உலகிலும் ஊடறுத்துச் செல் அவளே உன் அன்பின் அடைமொழியென அழுத்திச் சொல்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *