‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை முன் வைத்து!

குட்டிரேவதி

பாரதத்தாயின் புதல்வர்கள்!

‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
முதலில், ‘இந்தியாவின் மகள்’ என்ற டைட்டிலுக்குப் பதிலாக, ‘பாரதத்தாயின் புதல்வர்கள்’ என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு, திரையில் தோன்றும் முதல் ஆண் மகன் முதல் கடைசியாகத் தோன்றிய ஆண்மகன் வரை, சமூகத்தில் பெண்கள் குறித்த தம் அரைகுறையான புரிதல்களைக் கூட மிகத் தெளிவாக, எந்த அளவும் தயக்கமில்லாமல் முன் வைத்துள்ளனர்.
நிர்பயா, வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு, திரையிலும், செய்தித்தாள்களிலும் விவரிப்பாக வந்து இரத்தம் உறையச் செய்த அந்த முதல் நாள் இன்னும் நினைவிருக்கிறது.

ஆனால், இந்தப்படத்தில் ஒரு களப்பணியாளர் சொல்வது போலவே, இந்தியாவில் தினம் தினம் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் முக்கியமானவை, வேறுபட்டவை, சமூகத்தின் கண்ணாடியாக இருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

குற்றவாளிகள் எனப்படுவோருக்காக வழக்காடுபவர் ஏ.பி. சிங், சொல்லும் இரண்டு விடயங்கள் மிக மிக முக்கியமானவை: ஒன்று, “என் மகள் இப்படி எல்லை தாண்டி சென்றிருந்தால், என் சமூகத்தின் முன்னேயே, பெட்ரோலை ஊற்றி எரித்திருப்பேன்”.

இரண்டு: “பார்லிமெண்டில் இன்று நுழைந்து அமர்ந்து பேசிவரும் உறுப்பினர்களில், 250 நபர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன” என்று கூறுவது.

மேற்சொன்ன, இவை இரண்டுமே இந்தியச்சமூகத்தின் அவலத்தை இரண்டு துருவங்களிலிருந்து படம்பிடித்துக் காட்டுபவை.

கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, சமூகத்தில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, இருண்ட அறைகளில் மடிந்துபோன பெண்களின் வரலாறுகள் சொல்லி மாளாதவை. அந்த ஓலத்தின் கூக்குரல்கள் தாம் அவ்வப்பொழுது இப்படியான பெண் குரலாக எழும்பித் தேய்ந்து போகின்றனவோ என்று தோன்றுகிறது.

பிபிசியின் இந்த ஆவணப்படம், இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தை, பகிரங்கப்படுத்துகிறது. அதில், நிறைய பொத்தல்கள் இருந்தாலும், விவாதங்களைத் தூண்டிவிடுவதன் பொருட்டு இந்தப்படத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவது ஒன்றும் எதற்கும் பாதகமாகாது.
அதற்காக, சர்வதேச நாடுகளில், லண்டனில், அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை.

ஆனால், இந்தியாவில் போல், இவ்வளவு மூடத்தனமாக, ஆண்களும் பெண்களும் ஆண்கள் செய்யும் குற்றத்தைச் சமூக நியாயமாக முன்வைப்பதில் ஒரு தயக்கமேனும் இல்லாமல் இருக்காது என்பதை நம்புகிறேன்.

‘அந்தப்பெண்ணை உயிருடன் விட்டது தான் பிரச்சனை. கொன்றிருந்தால், இவ்வளவு பெரிய விவகாரமாகி இருக்காது!’ என்பதே நீதியாகிவிடுமோ என்ற அச்சமும் தோன்றாமல் இல்லை.

இன்னும், பதிவுக்கு வராத, சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மரங்களில் கட்டிவிடப்பட்டப் பெண்களின் வரலாறுகளையும் ஓலங்களையும் சொல்லி, ‘இந்தியாவின் மகள்கள்’ என்று தலைப்பிட்டிருந்திருக்கலாம்.

2. இன்னும் மேலதிகமான குற்றங்களுக்கான வழி தான், குற்றங்களுக்குத் தீர்வா?

எல்லோருமே, இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக, ‘கல்வி’யைச் சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.

‘கல்வி’யைப் பெற்றவரும், கல்வியைப் பெற வாய்ப்பில்லாதோரும் ஒரே மாதிரி சிந்தனையைத் தான் கொண்டிருக்கின்றனர் என்பது இப்படத்தின் போக்கில் தெளிவாகத் தெரிகிறது.

நமக்குக் கற்பிக்கப்படுவது, அடிமைக்கல்வி. அதிலும், இந்துமதம் மற்ற எல்லா மதங்களையும் விட, மூர்க்கமான, மடத்தனமான வன்முறையை, பெண்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துவது.

இந்த நாட்டை முழுமையும் ‘இந்து நாடாக’ ஆக்க, ஒரே வழி: பெண்களின் கருப்பையைக் காவல் காப்பது அல்லது சீரழிப்பது என்ற நம்பிக்கையைக் காலந்தோறும் வலியுறுத்திவருகின்றனர்.

‘பெண்கள் விடயத்தில்’ எந்த ஊடகமும் முழு விழிப்புணர்வுடன், நீதிநம்பிக்கைகளுடன் இல்லை என்பது வெளிப்பாடு.

வீட்டில் பெற்ற தாய் முதல் மணந்து கொண்ட மனைவி வரை, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்ற அடிமைச் சிந்தனை உடைய சமூகத்தை பெற்ற மகளைக் கொன்றும் நிலைநாட்டி வரும் ஓர் அபத்தமான நாடு இது.
எந்த நூலிலும், பெண்ணை மதிக்கும் கல்வி இல்லை.
இந்த நிலையில், ‘கல்வி’ எப்படி தீர்வாகும்?
அல்லது, ‘தூக்கில் போடுங்கள்!’ என்று சொல்கிறார்கள். அதைத் தீர்வு என்று சொல்கிறார்கள். எனில், அங்கு டில்லி வீதிகளில் நின்று போராடிய, அத்தனைப் பெண்களின் தந்தையரையும், சகோதரர்களையும், ஏன் பார்லிமெண்டில் தினம் தினம் நுழைந்து நாட்டுப்பற்றைப் பேசிவரும் அத்தனை ஆண்களையுமே ‘தூக்கில் போடுவது என்பது சாத்தியமா?

தண்டனை பெற்றவன், தண்டனை பெறாதவனைக் குற்றம் சாட்டுகிறான். தண்டனை பெறாதவன், வன்முறைக்கு ஆளானோரே குற்றவாளி என்கிறான். வன்முறைக்கு உள்ளாகும் மக்கள், ‘நீதி பெற போராடாமல்’ தண்டனை பெற போராடுகிறார்கள்.

இதற்கு முடிவே இல்லை. எந்தக் கல்வியும் போதாது என்பதை இப்படமே முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது.

வீட்டிலும், பொதுவெளியிலும், ஊடகங்கள் வழியாகவும், ‘உண்மையான ஓர் ஆண், பெண்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருப்பான்,’ என்ற ஒரு சாதாரணமான நம்பிக்கையை விதைப்பதே, சரியான, முதல்கட்ட தீர்வாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

3. மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் இதன் கொடூரத்தை உணரமுடியுமா?

இந்தியா என்பது, தமிழகத்தைத் தவிர்த்தது இல்லை.
தமிழகத்தில், பொதுவெளியில், சமூகவலைத்தளங்களில், பெண்களை, ‘மூதேவி’, ‘தேவடியாள்’, ‘வாழாவெட்டி’, ‘வைப்பாட்டி’ என்ற அடைமொழி கொடுத்து அழைப்போர் கூட கல்வி பெற்ற அரும்பெரும் ஆண்மகன்கள் தான்.

அவர்களுக்குப் பின் விசிறிகள் வரிசையாய், கூட்டங்கள் பெரிதாய். இங்கே, பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுப்போர் கூட, அப்படியான ஆண் ஆளுமைகளை வரவேற்றுப்பாராட்டிப் பொது அரங்கில் உயர்த்துவது நிறைய விடயங்களை உறுதி செய்கிறது.

1. ஓர் ஆண் சமூகத்தில் சிறந்த படைப்பாளியாக இருக்க, பெரியாரைப் போல சுயமரியாதையுடன் இருக்கவேண்டியதில்லை.

2. குறைந்தபட்ச, சமூக நாகரீகமும் தன்மான உணர்வும் விழிப்புணர்வும் அவசியமில்லை. ஊடகங்களில் அங்கீகாரம் பெற, அவையெல்லாம் அவசியமே இல்லை. காட்டுமிராண்டிச்சிந்தனைகள் போதுமானவை.

3. இந்து மதம் வலியுறுத்தும் அடிமைத்தனத்தை நாங்கள் எங்கள் மனைவி, மக்களிடம் வலியுறுத்துவது போலவே, பிற பெண்களிடமும் அச்சுறுத்துவோம் என்று பொதுப்படையாக, எழுத்திலும் சினிமாவிலும் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆனால், தொடரும் கடந்த கால நிகழ்வுகளின் பின்னால் எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவையே:

இப்படி, பொதுச்சமூகத்தின் பார்வையால் ‘தான் பெற்ற மகள்’ வன்புணர்வுக்கு ஆளாக நேரும் போது, பெற்ற தந்தையான இவர்களின் உணர்வு எப்படியாக இருக்கும்?

இன்று ஆண்களிடம் இவர்கள் நியாயப்படுத்தும் வன்முறையைத் தன் மகள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும்போது ஏற்படும் வலியைப் பார்த்துத் துடித்துப்போகாமல், இவர்கள் மீதே பெட்ரோலை ஊற்றி எரிப்பார்களா?

மகன்களைப் பெற்றோரை விட, மகள்களைப் பெற்றோர்களால் இச்சமூகமாற்றத்திற்காக ஒரு கணமேனும் சிந்திக்காமல் இருக்கமுடியுமா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் ‘பாலியல் வல்லுறவின்’ கொடூரத்தை நியாயப்படுத்தாமல் இருக்கமுடியுமா? அந்தத் துன்பியலைப் புறக்கணிக்கமுடியுமா?

இவர்களாலேனும், சமூகத்தில் இந்த வன்முறை எப்படி உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியுமா?

4. ஆவணப்படத்தின் புரிதலில் உள்ள சிக்கல்.

இந்தியச் சமூகத்தில், இப்படி ‘பாலியல் வல்லுறவுகள்’ இருபது நிமிடங்களுக்கு ஒன்றாக நிகழ்வதற்கும், கற்றோர் முதல் கல்லாதோர் வரை, ‘ஆண் பாலியல் வல்லுறவு’ செய்வதை நியாயப்படுத்துவதற்கும், செய்துவிட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து தப்பிக்கமுடிவதற்கும் ஒரே காரணம், இச்சமூகத்தின் கட்டமைப்பு, ‘சாதிய வலையால்’ ஆனது. இது ஆதிக்க சாதியினருக்கும், மேல்மட்டத்தில் இருப்போரும் தப்பிப்பதற்கு ஏற்ற பெரிய ஓட்டைகளையும், நலிந்தோர் தப்பிக்க ஏதுவான சிறிய ஓட்டைகளையும் அல்லது ஓட்டைகளே அற்ற முட்டுச்சந்துகளையும் கொண்டது.

இந்துமதம், ஆகவே, சாதியமுறையை வற்புறுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்தும் விடயங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இதற்கு ஏற்ப இந்துமதம் வலிமையுடையதாகும் என்று நம்புகிறது.

இதை, அந்த பிபிசி ஆவணப்பட இயக்குநரால் ஒரு பொழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அல்லது, புரிந்து கொள்ளமுடியாது.

இதைப் புரிந்துகொள்ள, நம்மை ஆண்ட பிரிட்டீசாராலும் இயலவில்லை. ஆகவே, நம்மை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.

லெஸ்லி வுடின் என்ற இந்த ஆவணப்பட இயக்குநராலும் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதில் குற்றமிழைத்த எல்லோரும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்.

வறுமைக்கும் மேட்டிமைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு, சாதிஅதிகாரத்தினால் செயற்கையாய் உருவாக்கப்பட்டது.

ஆகவே தான், இந்நிகழ்வில், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பும், ஏழ்மையின் மீது இருக்கும் அருவெறுப்பும் இயங்கி, தண்டனையைப் பெற்றுத்தரமுடிந்தது.

இதே நியாயத்தை, இரு தலித் பெண்களை வல்லுறவு செய்து, கொன்று மாமரங்களில் தொங்கவிடப்பட்ட, ‘மாமர வழக்கிலும்’ ஏன் நம்மால் பெற முடியவில்லை? ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை? என்பது முக்கியமான கேள்வி.

சென்ற வருடம் மட்டும், ‘நிருபயா’ போன்று, 900 – க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஏன், இவர்கள் ‘இந்தியாவின் மகள்கள்’ இல்லையா?

பிபிசி ஆவணப்பட இயக்குநரால், இந்தியாவின் இப்பிரச்சனையைப் பரந்த அளவில் அறிந்து கொள்ளவோ, உள்வாங்கவோ முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால், இந்த ஆவணப்படம், இந்தியாவின் நீதிமுறையைப் பெருத்த கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.

இந்தியா, இன்னும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கும்.

 

நன்றியுடன் குட்டி ரேவதியின் https://www.facebook.com/photo.php?fbid=889784424429637&set=a.143271025747651.34001.100001942625550&type=1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *