மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை

கவிதா (நோர்வே )  Thanks to http://www.enkavitai.com/

front cover-sமழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது. கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை.விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல் மலையக இலக்கியங்களை நாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது.

உலகம் முழுதும் கவிதையின் பிரவாகம் கட்டுடைத்து செல்கின்ற இந்தக் காலத்தில், மலையக மக்களின் கவிதை இலக்கியம் என்பது எம்மத்தியில் பெருமைப்படுமளவு வளரவில்லை என்ற மலையக இலக்கியம் தொடர்பான சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நாட்டார் பாடல் வடிவில் வளர்ச்சி பெற்றுவந்த மலையகக்கவிதைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கவிதை நடைகளில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், இக்கவிதை துறை அதன் ஏற்றத்தை பெரிய அளவில் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இக்கவிதை நூல் என்னிடம் கொண்டு வந்த சேதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட வேறு எந்த நோக்கமும்மில்லாது, என் மீது உட்கார்ந்து கொண்ட மனப்பாரத்தை இதன் மூலம் கொஞ்சமேனும் இறக்கி வைக்கும் முயற்ச்சியாய் சிறு இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.

கொளுந்து பறிக்கும் பெண்களின் பிரம்புக்கூடைகளுள் அடங்கமறுத்து எகிறி விழும் தேயிலைக் கொளுந்துகளாகவும், கூடையின் ஊட்டுக்குள் இருந்து அமுக்கம் தாங்காது எட்டிப்பார்க்கும் தேயிலைக் கொளுந்துகளி;ன் நுனிஇலைகளாகவும் விளிம்புநிலை மக்களின் கோபமும், துயரமும் கவிதைகளாகி ”இசையால் பழியப்பட்ட வீணை” கவிதைத் தொகுதியில் எமக்குக் காணக்கிடைக்கின்றன.

பிலிஸ்தியன் இனத்தைச்சேர்ந்த மகாவீரனான கோலியாத்தின் உயிரையும், ஆணவத்தையும் சிறு கவண்களால் அடித்து வீழ்த்தியது மட்டுமன்றி, கோலியாத்தின் உயிரை எடுப்பவர்களுக்கு அரசையும் மகளையும் தருவதாகக் கூறி ஏமாற்றிய அரசனையும் எதிர்த்து, வென்று தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே அமைத்துகொண்ட தாவீதைத் தொட்டுச்செல்கிறது கீழ்க்காணும் சந்திரலேகாவின் கவிதை வரிகள்.

எனக்கு பாதுகாப்பாய் வாழ
சதுர அடிகூட அதிகம்தான்!
தாவீதுக்கு கவணும் கற்களும்தான்
வீர கவசம்
குறிஞ்சியின் தாவீதுகளுக்கும்!
எனது நிலம் எனது மொழி
எனது இனம் எனது குருதி யாவும்
மாசுபடுகிறதெனில்
மரணம் எனக்கு
மரியாதைக்குரிய வரப்பிரசாதம்!
இன்னும் கற்களைப் பொறுக்கு
கவண்களை உற்பத்தி செய்!

– சந்திரலேகா கிங்ஸ்லி

அமுக்கப்பட்ட ஒரு சிறு சமூத்தின் ஒட்டுமொத்தக் கோபக்குரலாக எழுந்து வருகின்றது சந்திரலேகாவின் இக்கவிதை வரிகள்.

வறுமையே தலையெழுத்தாகிப் போன
மலையகத்திற்கு
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
சவால்களுக்கு மத்தியில் இணைந்து
வாழ்ந்து கொண்டிருக்கும் எமது
வறுமையின் நிறம்
இன்னும்
கடுமையாகிக் கொண்டே இருக்கிறது
– மஞ்சுளா

உலகில் எப்போதும் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொடூரமானவை. அதிகார அரசினால் தன் பார்வைக்கு எடுபடாத சிறுபான்மையினத்தவரின் வாழ்க்கைத்தரத்தை வெளிச்சத்திற்கு எடுத்துவருதல் என்ற பொறுப்பை இனி ஒவ்வொருவரும் முன்னெடுத்தாலொளிய, மலையகமக்களின் நிறம் மாறுவதற்கில்லை என்பதையும் தனது வாழ்க்கை முறையையும் மஞ்சுளா சிறப்பாகத் தனது முழக் கவிதை வரிகளிலும் வடித்திருக்கின்றார்.

மலையக மக்களின் வாழ்நிலையை மட்டுமல்ல உலகமட்டத்திலும் உள்ள பெண்ணியச்சிந்தனைகளும், பெண்நிலைவாதங்களும் இங்கும் பல கவிதைகளில் காணக் கூடியதாகவுள்ளது. பெருமுற்கள் நிறைந்த பாதைகளில் சலிக்காமல் பயணிக்கும் மலையகப்பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது பற்றி யாரும் பெருமளவில் பேசுவதில்லை. பிற மாநிலங்களில் காணப்படும் வசதிவாய்புகளுடனும், கல்வியறிவுடனும் ஒப்பிடும் போது மலையகப் பெண்கள் தமக்குரிய உரிமைகளைக்கூட அறியாமலேயே வாழ்ந்துள்ளனர். சகலநிலையிலும் பின்தங்கிய மலையகப்பெண்களிடம் இப்படிக் கூறுகின்றார் கவிஞர் புனிதகலா.

அடடா
அது என்ன உன்
சிறகுகளில் புராணப் பிசுபிசுப்பு?
அறிவுச் சுடரொளியில்
உலர்த்திக் கொள் விரைந்து

அதே பெண்ணியச்சிந்தனையோடு க.கவிதாவின் கவிதையொன்று இப்படிக் கேட்கிறது.

மலைகளேறி
மழையில் நனைந்து, விறைத்து
கொழுந்து சுமந்து, இறக்கி
களைப்போடு வீடு வருகின்றேன்
வழமை போலவே
வழமைக்கு மாறாக
என்றாவது
ஒரு கோப்பைத் தேனீர் தந்து
அதிர்ச்சியின்பத்தால்
சிலிர்ப்பூட்ட
உன்னிடம் ஏனில்லை
என்னைப் பற்றிய சிறு எண்ணம்

– க.கவிதா

வெளியில் வேலை வாய்ப்பென்று பெண்கள் கொளுந்து கிள்ளப் போனாலும் வீட்டிலும் வேலைகளைப் பெண்களே தம் முதுகில் சுமக்கும் பெண்களின் யதார்த்தமான ஒரு கேள்விதான் இவருக்கும் வந்திருக்கிறது. அண்மைக்காலங்களில் மலையகப்பெண்களின் வாழ்வுநிலை சிறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது, தேயிலை பறிப்பதை தவிர்த்து கல்வி தரத்தினை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பான்மையினர் உரிமை, வலிமை, கல்வியனைத்தையும் ஆதிக்க சக்தியிடம் அடகு வைத்திருப்பவர்களாகவே வாழ்கின்றனர்.

தாய்ப்பாசம் என்பது பொதுச் சொத்து. இக்கவிதை நூலின் ஒரு கோடு போல பல இடங்களில் தாய்பாசம் இழையோடுகிறது. சாதரணமாக தன் உயிரை வயிற்றில் சுமப்பவளிடம் ஏற்படும் தாய்ப்பாசம் ஒவ்வொரு உயிருக்கும் உடைய ஒன்று. மலையகத்துத் தாயின் வலியை அறிந்த ஒரு பிள்ளையின் பாசம் சுமந்த வரிகள் மீனால் செல்வனின் கவிதையில் கரைகிறது. தேயிலைக் கொளுந்து பறிக்கும் கூடையைத் தலையில் தினமும் சுமந்து செல்வதால் தாயின் தலையில் ஏற்பட்ட பள்ளத்தை காட்டி எம் மனதில் வடுவை ஏற்றிப் போகிறார் கவிஞர். தம் பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் ஏற்றுவதற்காக வாழ்க்கையோடு போராடும் தாய்மார்களின் வலி ஊறிய வாழ்க்கையோட்டம் பல கவிதைகளில் மனக்குருதியாய் பீறிடுகிறது.

என்னைத் தேடாத பணத்தை
நான் தேடி
ஓய்வில்லாதோடி
கூடுவாரோடு கூடி
பலரிடம் பாசாங்காய் பல்லிளித்து
கழுத்துக்குமெல் மட்டுமே
அதிகமாய் வாழ்ந்து
தலைகீழாய்த் தொங்குகின்ற
வெளவாலின் வாழ்வன்ன போதுகளில்
தசாப்தங்களைக் கடத்திவிட்ட நான்
இன்றிரவில்
உன்னை நினைக்கிறேன் தாயே!
மண்டையோட்டில் மாறாத பள்ளத்தையும்
அடிவயிற்றில் ஆழியாத கோடுகளையும்
போட்டுக்கொண்ட தாயே

– மீனாள் செல்வன்

நாமெல்லாம் துணிகளுக்காய்
பிய்த்துக் கொண்டிருக்கையில்
அம்மணமாய் ஒருவன்
அரங்கேறி விடுவான்

– சந்திரலேகா கிங்ஸ்லி

சந்திரலேகாவின் இந்த நான்கு வரிகளில் வலிசுமந்த வாழ்க்கையை ஆயிரம் கோணங்களில் காணமுடிகிறது. துன்பியல் கட்டங்களால் நிரப்பப்பட்ட இம்மக்களின் வாழ்க்கைவட்டம் ஆதிக்க அதிகார சக்தியினால் முடக்கப்பட்டிருப்பதும், வந்தேறு குடிகளென தமிழர்கள் நாமே அவர்களை புறக்கணித்து வருவதும் இன்றும் நடைமுறையில்க்காணும் நாம் வெட்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

அட்டைக்கடி பொறுத்து அந்த
கங்காணி கத்தல் பொறுத்து ௲ உன்
அப்பன் உதை பொறுத்து
பொருளாதார இடி பொறுத்து ௲ கண்ணே
உணவு உடை தந்திடுவேன் ௲ நல்
உயர் கல்வி தந்திடுவேன் ௲ என் சொத்தே
நீ எனக்கு தருவாயோ ௲ நம்
இனத்தின் விடிவுதனை என்றென்றும்
என் கருவறைக் கூலியாய்!

– சு.உஷாநந்தினி

பாகுக்கும் பருப்பிற்குமாய் சங்கத் தமிழைக் கேட்ட ஒளவை போல. தன்பிள்ளையிடம் கருவறையில் சுமந்த கூலி கேட்டுப் தன் குழந்தையிடம் பேரம் பேசும் தாயின் இக்கொடிய யதார்த்தத்தை நாம் எப்போது இல்லாதொழிக்கப் போகின்றோம். கவிஞன் வாழும் சூழ்நிலையே கவிதைகளை வழிநடத்துகின்றன என்பதற்கு இக்கவிதையே ஒரு நற்சான்று.

சமூகத்தினரின் துயரங்களும், பிரச்சனைகளுமே பாடுபொருளாகக் காணப்படும் இத்தொகுதியில் முண்டாசுக் கவிஞன் பாரதியின் பாதிப்பையும் கோபத்தையும் இம்மக்கள் மத்தியில் பெரிதும் உணரக்கூடியதாக உள்ளது. இக்கவிதை நூலைப் படித்துமுடித்த தருணம் இதில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் மலையகப்பெண்களின் வாழ்வியலை எத்தனை தூரம் எடுத்தியம்பி ஆழமாய்ப் பதித்திருக்கிறது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதையும் தாண்டி மலையகப் பெண்களின் கவிதைகளை சேகரித்து அதை தொகுத்து, பின்தங்கிய உலகினை முன்னோக்கி நகர்த்தும் ஒருசிறு முயற்சியாக ”இசை பிழியப்பட்ட வீணை” தொகுதியை இச்சமூகத்திற்கு கையளித்த ஊடறு வெளியீட்டிற்கு வாழ்த்துக்களும் மனம் நிறைந்த நன்றிகளும்.

front cover-s

அலங்கரித்து வரும் வெறும் வார்த்தை ஜாலங்களால் பின்னப்பட்டதல்ல இக்கவிதைகள். ஒவ்வருவரின் மனக்குமறல்களும் பிரசவித்துப்போட்ட கோபக்கங்குள் வாசகனின் விரல்களை வழி நெடுகச் சுடுகின்றன. தினசரி தேவைகளுக்கே வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்ப் போராடும் பின்தங்கிய சமூகத்துப் பெண்களிடம் நாம் எவ்வளவு தூரம் கவியாளுமையை எதிர்பார்க்கமுடியும்? கவித்துவம் நிறைந்ததா, சூழலையும் வலியையும் எத்தனை ஆழமாய்ப் பேசுகிறது, என்ற அளவீடுகளை இத்தருணத்தில் புறந்தள்ள விரும்புகிறேன். இதற்குரிய விடைபோல வரும் ஆர்த்தியின் சில வரிகளோடு இப்பகிர்வை தற்போது நிறுத்துகின்றேன். இன்றை நாளின் மழையும் சிறுதூரல்களோடு தன்னை நிறுத்திக்கொண்டது
இத்தோடு.

மரத்தில் கவிந்த இருளை
கலைக்க முயற்சிக்கும்
மின்மினியாய் என் மனசு
எருமையின் முதுகில்
எண்ணி எண்ணி
உண்ணி பொறுக்கும்
மைனாவாய் சிலநேரம்
கற்பனைப் பையுடன்
தட்டேந்திய கவிஞன்
கவி புனையத் தோன்றவில்லை , என்
பேனை மூடிக்கொண்டது முகத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *