இரத்த சுவடுகளும், நிர்வாணக் கோலங்களும், மார்ச் 8 உம்

றஞ்சி (சுவிஸ்)

womes day-gallery_23 2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர்

 தந்தை வழி ஆதிக்கத்தை இல்லாது ஒழிக்க, ஆண்டாண்டுகளாக நிலவிவரும் ஆணதிகாரத்தையும் தங்கிவாழும் நிலையை ஏற்படுத்தி வைத்த அதன் சமூக பொருளாதார நிலையையும்  நொறுக்க போர்க்குரல் எழுப்பிய புரட்சி நாளே மார்ச் 8. ஆனால் இன்று இந் நாளை வெற்றுச் சடங்காக சில சலுகைகளுக்கு குரல் கொடுக்கும் முதலாளித்துவ பெண்ணியவாதிகளும் ஏகாதிபத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சீர்திருத்த பெண்ணியவாதிகள் தான் எனக் கூறிக்கொள்ளும் பெண்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் மார்ச் 8 புரட்சிகர உள்ளடக்க்த்தை திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். இந்ந மார்ச் 8 நாளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் பெண் அடிமைத்தனத்தின் மூல வேர்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என பொடாப் பெண்கள் அமைப்பு கூறியுள்ளதை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமானது.

அன்று இரத்தம் சிந்தி போராடிய சாதித்த பசி, பட்டினி, ஓய்வின்மை ஆகிய கொடுமைகளை எதிர்கொண்டு 8 மணிநேர வேலை, வாக்குரிமை, கூலிஉயர்வு, நிரந்தரவேலை ஆகியவற்றுக்காக விலைமதிப்புமிக்க தங்களது உயிரைப் பணயமாக வைத்துப் போராடிய ஆயிரக்கணக்கான  பெண்களின் போர்க்குணத்தையும் கொள்கைகளையும் நாடு முழுக்க பரப்ப வேண்டிய நாள் மார்ச் 8. சமூக விடுதலைக்கான  அவர்களின்   தியாகத்தையும் உறுதியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய நாள் மார்ச் 8. 

 

1970ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி உலகப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு என்று  எழுப்பப்பட்டிருந்த நினைவிடத்திற்குச் சென்று துணிச்சல் மிக்க பெண்கள் சிலர் மலரஞ்சலி செலுத்தினார்கள். அப் பெண்கள் அஞ்சலி செலுத்தியது இறந்து போன வீரர்களுக்காகவல்ல, அவ் வீரர்களின் பெருமைக்கு காரணமாகவிருந்த மனைவிமார்களுக்காக என வரலாறு  கூறுகிறது.

 

womens day- iran IWD rally

எல்லா யுத்தங்களைப் போலவே இலங்கையிலும் யுத்தத்தின் செயல்பாடும் வெற்றியும் தோல்வியும் பெண்களையும் சார்ந்திருந்தது.  ஆணதிகாரம் வகுத்த மரபுகளையும் கலாச்சார எல்லைகளையும் தாண்டி வந்து இன்று இந்த யுத்தத்தில் போராடிய பெண்களின் சுதந்திரத்தையும் சுய உரிமைகளையும்; சுயசிந்தனைகளையும் புலிகள் என்ற பெயர்ப்பலகையின் கீழ் குறுக்கிவிட்டிருக்கிறது ஆணதிகார அரசியல். அவர்களில் பலர் அரச இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். புலிகளும் இதே கருத்து நிலையுடன் பெண் போராளிகளின் போராட்டச் செயல்களையெல்லாம் காசு சேர்க்கப் பயன்படுத்தினர். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவர்களின் போர்க்குணத்தையும் தன்னிலையையும் தலைவரின் சாதனையாக திரித்துக் காட்டினர். அதுமட்டுமன்றி இறுதியுத்தத்தின்போது அவர்கள் தப்பியோடிவிடாதவாறு மொட்டையடித்து அல்லது தலைமயிரை கட்டையாக வெட்டி அடையாளப்படுத்தினர். இதன்மூலம் அவர்களை இராணுவத்திற்கு இனங்காட்டவும் வழிவகுத்தனர். இதேவழிமுறை கருணா புலிகள் யுத்தத்தினபோது மட்டக்களப்பில் கருணாவாலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இன்று புலிகள் என அடைக்கப்பட்டுள்ள போராளிகள் பற்றி எந்த கவனமும் அற்று அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்வியுடன் பலர் மௌனம் சாதிப்பதும் அதுபற்றி கதைக்காது இருப்பதும் மனித உரிமைகளை மதிக்கும் இலட்சணத்தைக் காட்டுகிறது. என்னதான் மாற்றுக் கருத்தாளாகள் தமது கருத்துக்களை பேசினாலும் இதுபற்றி கதைக்க அவர்களுக்கு நேரமே இல்லை. அதேபோல்  யுத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாடங்கள் நடத்திய புலம்பெயர் தமிழ் மக்கள் இன்று இப்படியான பிரச்சினைகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, நாடுகடந்த தமிழீழம்  என இன்னுமொரு படத்தைக் காட்டுவதி;ல் சுறுசுறுப்பாகியுள்ளனர். 

கடந்த பெபர்வரி 18ஆம் திகதி வவுனியா பம்பைமடு; செட்டிக்குளம், வலயம்-6 ஆகிய பெண்கள் தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 54 பெண்கள் பூஸா தடுப்பு முகாமுக்கு விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பு அதிகாரி த.கனகராஜ் அறிவித்திருந்தார். இதில்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12பெண்கள், கிளிநொச்சியைச் சேர்ந்த 16பெண்கள், முல்லைத்தீவைச் சேர்ந்த 09பெண்கள், மன்னாரைச் சேர்ந்த 07பெண்கள், மட்டக்களப்பைச் சேர்ந்த 03பெண்கள்இ திருகோணமலையைச் சேர்ந்த 05பெண்கள், வவுனியாவை சேர்ந்த 02பெண்கள் என 54 பெண்களின் விபரங்கள் வெளியாகியpருந்தன.

அதேவேளை, பெண்கள் தடுப்பு முகாமிலிருந்து  இதற்கு முன்னரும் பூஸா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 50 பெண்களின் விவரங்கள் கடந்த வாரம் முதல் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தது. என அறிவிக்கப்பட்டிருந்தது அதே போல் மார்ச் 3ம் திகதி; வவுனியாவில் தடுத்துபவைக்கப்பட்டிருக்கும் பெண்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என மனித உரிமைகள் அமைப்புக்கள  கண்டனம் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது. போர் முடிந்த பின் படையினராலேயே மேற்கொள்ளப்படுகின்ற சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது என்றாலும் சில உண்மைகள் மனித உரிமை மீறல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூடாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூடாகவும் மேற்கொள்கின்றது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்களுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதியாகவே இன்றும் உள்ளது.   யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட பயங்கரவாதச் சட்டம் பலமடங்கு ஆதரவைப் பெற்று  அரசாங்கம் நிலைபெறச் செய்துள்ளது.

போர்க்கால குற்றங்களில் முக்கியமான ஒன்றாக பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான அரசியல் ஒன்று  உள்ளது. பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்ளாக்;கலாம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம்  பொஸ்னிய சேர்பிய, ஈராக் போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்தின் கலாச்சாரத்தை மழுங்கடிக்க அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு இனக்கலப்பு செய்வதில் சேர்பிய அரசும் அந்நாட்டு இராணுவமும் திட்டமிட்டுச் செயற்பட்டது. அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்களுக்கென்று தனியான முகாம்களை அமைத்து (Rape Camps) அவர்களை சேர்பியர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார்கள்.  பொஸ்னியப் பெண்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலியும் செய்தனர். 1992 அளவில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான  பாலியல் வல்லுறவு அல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான வல்லுறவு என மனித உரிமை அமைப்புக்கள் வர்ணித்திருந்தன.

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது. போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா,வியட்நாம் ஈராக்  போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

1990 இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். ருவாண்டாவில் கிட்டதட்ட  5 லட்சம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர் 

ருவாண்டாவில் போரில் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்களும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அப் பெண்ணையும், அப் பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தையும் மனவலிமையையும்  குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையாளத்தை உருக்குலைப்பதும், அவர்களின் கலாச்சாரத்தை கேலிக்குரியதாக்குவதும் கொச்சைப்படுத்துவதும் நோக்கமாக இருந்தன எனக் கூறப்படுகின்றனது.

இன்று இலங்கையில் படையினரை நம்பியே மிகப் பெரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுவதாகவும் பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள்  பற்றி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமானப்படுத்த பயன்படுத்துகின்ற ஒன்றாகவே கொள்ள முடியும். உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சித்திரைவதைப்படுத்திக் கொல்லப்பட்ட காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசியல் ரீதியாக பிரச்சினைகளை  வென்றெடுக்க முடியாமல் ஒரு சமூகத்தை இப்படி தண்டிப்பது மனித உரிமை மீறல் எனபலத்த குரல்கள் எழுப்பப்பட்டாலும் புகலிட மனித உரிமைவாதிகளின் காதில் விழவே விழாது. புலியெதிர்ப்பு என்ற ஒரே எல்லைக்குள் சுழல்பவர்களால் இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளப்படுவதில்லை.

அதே போல் தான் புலிகள்  ஆயுதப்போராட்டம் தான் பெண்கள் பற்றிய கருத்துக்களில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற விளக்கத்தைத் தந்தவர்களும் காணாமல் போய்விட்டனர். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்  தங்கள் வாழ்க்கையை கையில் எடுக்க முடியாமல் போய்விட்டது. இங்கு போராட்டமும் பெண்களும் ஆண்மயப்படுத்தப்பட்டதினால்  புலிகள் இயக்கத்திற்குள் முக்கியமான பணிகளை பெண் போராளிகள்  ஆற்றியிருந்தும் பல தியாகங்களை செய்திருந்தும் பெண்களுடைய ஆற்றலும் போராட்டத்தில் அவர்கள் வகித்த பங்கும் பெண்நிலையில் நின்று மதிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் புலிகள் பெண்கள் பற்றிய கருத்து நிலையில் ஆணாதிக்க சிந்தனையையே கொண்டிருந்தனர் என்பதை அப்பட்டாகக் காட்டுகிறது.

11,000 போராளிகள் இன்னமும் சிறைகளிலும் வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்ட நிலையில் பெண் போரளிகள் பலரை உயிருடன் விட்டால் பாலியல் வல்லுறவு விடயங்கள் உண்மை வெளியில் தெரிந்து விடுமென கொலை செய்து விடுவதாகக்கூட தகவல்கள் வெளிவருகின்றன. இப் போராட்டத்தில் ஈடுபட்டு தம் வாழ்வை தொலைத்து நிற்கின்ற இப் பெண்களின் நிலை நிர்வாணக் கோலங்களாகி விட்டன. 

அவர்களுக்கு உதவ யாருமே இல்லை என மனித உரிமை அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில்;  இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்களும் புகலிடத்தில் வட்டுக்கோட்டை தீhமானம், நாடுகடந்த தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பும் என எல்லோரும் சுறுசுறுப்பாகியுள்ளனர். இருதரப்பிலும் யுத்தத்தில் பலியாகியுள்ள பெண்கள் பற்றியும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது கைதுசெய்யப்பட்டுள்ள பெண்கள் பற்றியும் அவர்களின் நிலை பற்றியும் விடுதலையின் பின்னான அவர்களின் சமூக ஊடாடலின் மீதான தடைகள் பற்றியும் குடும்ப ஆண்களை இழந்ததின் மூலம் பொருளாதார அடித்தளம் நொருக்கப்பட்ட பெண்கள் பற்றியும் சிறு செய்திகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு அரசியல்வாதிகள் மார்ச் 8 செய்திகளை வாழ்த்துக்களை வெளியிடுவார்கள். தொடர்புச் சாதனங்கள் சடங்குத்தனமான களியாட்டமான நிகழ்ச்சிகளை வழங்கும். ஆணதிகாரக் கருத்தியலுக்கு எதிரான குரலாக எழுந்த மகளிர் தினம் ஆணதிகாரக் கருத்தியலின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து வியாக்கியானப்படுத்தப்படுவதும் நடந்தேறிவிடுகிறது.

பெண்களின் உரிமைகளுக்காக இடைவிடாது போராடி, ஆண் அதிகாரத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து சர்வதேசப் பெண்கள் அமைப்பினர் அணிதிரல்கள் மூலம் உரிமைகள் பலவற்றை வென்றனர். அவர்களின் இந்த கடின உழைப்பை நினைவுகொள்ளும் வகையிலும், தொடர்ச்சியாக உத்வேகப்படுத்தும் வகையிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றியபடி நகரும் உலகில் 100 வது மகளிர் தினமும் தாண்டப்படுகிறது.

மார்ச் 8 2010

 

 

.

 

.

 

 

3 Comments on “இரத்த சுவடுகளும், நிர்வாணக் கோலங்களும், மார்ச் 8 உம்”

  1. அன்புள்ள றஞ்சி

    உங்களின் இரத்தச் சுவடுகளும் நிவாணக் கோலங்களும் கட்டுரை படித்தேன். இந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதை சரியாகப் பேசியிருக்கிறீர்கள். ஒரு பக்கம் விழுந்து போன மக்களையும் அவர்களின் அம்மணங்களையும் காசாக்க அலையும் தன்னார்வக்குழுக்கள் இன்னொரு பக்கம் மக்கள் அழிந்தாலும் அது பற்ரிப் பேசாமல் வட்டுக்கோட்டை, தம்ழி ஈழம் என்று தேசியப் பெருமிதங்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் புலத்து மக்கள். ஆமாம் அவர்கள் எல்லா போராட்டங்களையும் கைவிட்டு விட்டார்கள். தமிழகம் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல, பிராந்திய சூழல் எப்போது மாறும் மீண்டும் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில் ஈழத்தை வைத்து ஆடலாம் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். எண்பதுகளின் இந்தியா போராளிகளை நடத்தியதும் அது எவ்விதமாக முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்தது என்பதைக் கூட புரிந்தரிய முடியாத படி தமிழ் பெருமிதம் கண்ணை மறைத்திருக்கிறது.
    நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் இந்தச் செய்திகளை எல்லாம் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தேசியத் தலைவரின் தயாரிடம் காட்டிய பெருந்தனமை ஏன் இவர்கள் வன்னி ஏழைகளிடம் காட்ட மறுக்கிறார்கள். ஒரு முதிய பெண் என்றவகையில் பார்வதியம்மளை முகாமில் இருந்து மீட்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் எத்தனை எத்தனை இளம் பெண்கள் இந்த இராணுவச் சகதிக்குள் சிக்கியிருக்கிறார்கள். ஏன் இவர்கள் இது பற்றி பேச மறுக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட மன வருத்தங்கள். அதைத்தான் நீங்கள் பதிவு செய்திர்க்கிறீர்கள்.

    நன்றி றஞ்சி,

  2. றஞ்சி அக்கா,
    உங்கள் பலமே சரியான நேரத்தில் விசயத்தை பயப்பிடாமல் பளிச்சென்று சொல்லுவதுதான். 11,000 ஆண் பெண் போராளிகள், அகதிகள், குழந்தைகள் எவரையும் மறக்காமல் இந்தக் கட்டுரையை எழுதப்பட்டுள்ளது. அண்மையில் வந்த சில தரமான அரசியல் கட்டுரைகளுள் இதுவும் ஒன்று.
    உங்களுக்கு நன்றி.

    விஜய்

  3. றஞ்சி அக்காவுக்கு வணக்கம்.

    இரத்தச் சுவடுகளும் நிர்வாணக்கோலங்களும் என்ற கட்டுரை படித்தேன். அருமை. சொல்ல வேண்டிய விடயங்களை எல்லாம் இந்தக்கட்டுரை சரியான தருணத்தில் பதிவுசெய்திருக்கிறது.

    பெண்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சி பாலியல் கொடுமைவரை நீண்டிருப்பதையும் படையினரின் காமுகத்தன்மையின் உச்சக்கட்டமாக பெண்ணுறுப்புகள் பிடுங்கப்பட்டும் கிழிக்கப்பட்டும் இருந்ததையும் சொல்லியிருக்கிறீர்கள்.

    கட்டுரையை படிக்கும் போது கண்ணீரோடு நீதிகேட்டு போராடும் நிலையை தோற்றுவித்துள்ளது. இவற்றையெல்லாம் பான்கீ மூன் என்ற குருடனுக்கு/செவிடனுக்கு காட்டவா/சொல்லவா முடியும்?

    புகலிட தேசத்தில் இருந்து பெண்கள் மீதான அடக்குமுறைக்கெதிராக குரல்கொடுத்து வரும் தங்களது பெண்கள் அமைப்பும் அதுசார்ந்த ஊடறு இணையத்தளமும் பாராட்டும்படியாக சேவையாற்றிவருவதை யாவரும் அறிந்தவை. இருந்தும் இனிவரும் காலங்களில் புதிய புதிய வடிவங்களில் தங்களது சேவைகள் ஆலோசனைகள் நீண்டு சென்று உலகெங்கும் இன்னலுறும் பெண்களை மீட்டெடுக்க வழிசெய்யும் என நம்புகிறேன்.

    சுதேசிகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *