சிவரமணி நினைவாக…(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

sivaramani

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்

இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க உணர்வுகளை சமூகம் பற்றிய கருத்துக்களை நுட்பமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்திய ஆளுமை மிக்க பெண்கவி சிவரமணியின் நினைவு நாள். மே மாதம் 19ம்திகதியான இன்று.  தனது உணர்வுகளுக்கு வடிகால் தேடும் ஒரு சாதகமான அரசியல் சூழ்நிலையை கூட இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கவில்லை ஆதலால் அவரது உணர்வுகள் மரணத்தில் குவிந்தது…

சிவரமணியின் கவிதைகள் சில

‘பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர்.’ -சிவரமணி

எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லைஞ்
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரதேசத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்பட்டன

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது பரம்பரையம் நானும்

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள்

2006  – சேலை கட்டிக் காப்பாற்றிய  சில நாகரீகங்களைத் தவிர…

 2007 – சிவரமணி வாழ்ந்த ,விகசித்த, இறந்த

2008 – நீங்கள் உறங்க வேண்டாம்.

2009 – குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் 

 2010 – சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19″

2011 – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

2012 –  இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

2013-ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *