சிவரமணி – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

sivaramani

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 20 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் வாழ்கின்றன. எனக்கு இறுதியாகக் காட்டிய கவிதையயான்றில் இடம்பெற்ற இரத்தம் சிவந்து ஊதிய செந்நிற இதயம், துக்கம், விரக்தி, கோபம் மற்றும் ஆசையும் கலந்து நிறைந்த பெண்ணிற்கு ஒரு கற்றை மலர்களாலும் இதயத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சொற்களாலுமான ஒரு பூச்செண்டைக் காணிக்கை செய்ய விரும்புகிறேன்…திவ்வியாகாலத்தின் பின் தொடர்தல்
என்னையும் நிர்வாணமாக்கும்
என்கிற நம்பிக்கைக் கீற்றில்
கணங்களைக் கொழுத்தி
என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்

மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள்
என் பாதங்களுக்கிடையில்
மூச்சையுற
என் வெளிச்ச நோக்குகை

இன்மையை விரட்டுகிறது

இக்கவிதை  வரிகள் “இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”  என்ற தலைப்பில் சிவரமணியால் எழுதப்பட்ட கவிதை வரியிலிருந்து…(இக்கவிதை இது வரை வெளிவந்த சிவரமணியின் தொகுப்பில் இடம்பெறவில்லை என அறியக் கிடக்கிறது. இக்கவிதையை முழுமையாக ஊடறுவில் பிரசுரிக்க முனைகின்றோம்.-

….

..அவர் தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள் கருத்துக்களும் இலங்கையிலும் புலம்பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.  அவரது கவிதைகளை தொகுத்து புத்கங்களாக வெளியிட்ட விழிப்பு பெண்கள் அமைப்பு கனடா, திருநாவுக்கரசு இந்தியா, இலக்கியச்சந்திப்பு ஜேர்மன்  ஆகிய அமைப்புக்கள் வெளியிட்ட சிவரமணியின் புத்தகங்களை ஊடறுவின் நூலகப்பகுதியில் வாசகர்கள் வாசிக்க முடியும்

sivaramani01 copysivaramani 2.jpegselvi sivaramani.jpeg 

 சிவரமணி பற்றி மறுபாதி சஞ்சிகைக்கு திவ்வியா எழுதிய தொலைவில் ஒரு வீடு என்ற குறிப்பை நாம் இங்கு நன்றியுடன் பிரசுரிக்கின்றோம்

  திவ்வியாவின் பக்கங்கள் –

வெய்யில் மடியத் தொடங்கியிருந்தது. என் நினைவுகள் சரியாக இருக்கின்றதாயின் அது 1991 இன் மே மாதம். நல்லூர் மேற்கு வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்டத்தில் செல்வரத்தினம், சந்திரமதியாகி மாண்ட லோகிதாசனுக்காகப் புலம்பியழுகிறார். “மங்காத ரவி குலத்தே என் மாணிக்கரத்தினமே, திங்கள் மதி துலங்கும் என் செல்வமே…” பொல்லா அமைதி; முடிவடையாத துக்கம் படியிறங்கி வெளியேறிச் செல்கிறது. யாரென இப்போது உடனடியாக நினைவுக்கு வராதவொரு நண்பர் சனங்களை விலத்தி வந்து சிவரமணியின் மரண முயற்சியை -தற்கொலையைக் காதோடு கூறுகிறார். கூடவே அங்கேயிருந்த செல்வியிடம் அதைப் பக்குவமாக எடுத்துக் கூறுமாறும் கேட்கிறார். செல்வரத்தினம் கேவி நீண்டழுகிறார்…

sivaramaniசெல்வியாற்றான் சிவரமணி எனக்கு அறிமுகமானார். சிவரமணி அறிமுகமான தருணம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. கலை – இலக்கியம் மீதான என் இளம் பராயத்து ஆர்வம் காரணமாக பாடசாலை நாட்களிலேயே சில பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். அதுவெல்லாம் ஒரு காலம். இந்தப் பழக்கம் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளுக்கு சாதாரணமாகச் சென்று வருமொரு ஆளாக என்னை ஆக்கியிருந்தது. இவ்வாறானவொரு நாளிற்றான் செல்வி, சிவரமணியை எனக்கு அறிமுகஞ் செய்துவைத்தார். தேநீர் அருந்துவதற்காக நண்பர்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்த ரமணி, என்னையும் கூட அழைத்தார். புதியவர்களுடன் சட்டெனப் பழகுவதில் சற்றுக் கூச்சமுடைய நான் அதை நாகரிகமாகத் தவிர்த்தேன். ஆனாலும் தேநீர்ச்சாலையிலிருந்து திரும்பிய ரமணி எனக்காக அளவிற் பெரிய ‘கன்டோஸ் சொக்ளேற்’வாங்கி வந்தார். தன்னைவிட வயதில் இளைய எனக்கு அது பிடிக்குமென்று அவர் நினைத்திருக்கக் கூடும். அவ்வாறு தான் ஆரம்பமானது பெரிய உருட்டு விழிகளுடைய, சற்றுப் பருத்த, குழந்தை இதயமுடைய பெண்ணுடனான குறுங்கால நட்பு.

sivaramani01 copy

இருபத்துமூன்று வயதில் தன் வாழ்வை முடித்துக் கொண்ட ரமணியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். தந்தையாரது கலை-இலக்கிய அரசியலீடுபாடே ரமணியின் கலை-இலக்கிய அரசியல் ஈடுபாட்டின் முதற்தூண்டியயனக் கருதலாம். விதவையாகிவிட்ட தாயுடனும் தங்கையுடனும் வாழ்ந்து வந்த அவர் அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகத்துள்ளும் வெளியிலும் தொழிற்பட்ட பல பெண்கள் அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றினார். தமிழிலும் – ஆங்கிலத்திலும் பரந்துபட வாசிக்கும் பழக்கமுடைய ரமணி, இலக்கியத்திற்கப்பால் ஏனைய கலை வெளிப்பாடுகளிலும் பொதுப்படையாக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தனியாற்றலும், அக்காலமும் அவரை முன்னோக்கிச் செலுத்தின. என்றபோதும் மத்தியதர வர்க்க வீடுகளிலிருந்து பொது வெளிக்குள் நுழையும் பெண்கள் உள்ளும் புறமுமாகச் சந்திக்க வேண்டியிருந்த பல்வேறு பிரச்சனைகளால் அவர் மனரீதியான அழுத்தங்களை அதிகமாகவே பெற்றாரென எண்ணத் தோன்றுகிறது. தமிழர் அரசியலில் வலுவாக ஏற்படத் தொடங்கியிருந்த ஜனநாயக மின்மை அக்கால கட்டத்தில் முற்போக்கான சிந்தனை செயற்பாடுடைய இளைஞர் – யுவதிகளை சிதறடித்தது போலவே ரமணியையும் பலமாகப் பாதித்ததென்றே சொல்ல வேண்டும். அவரது சுயகொலையில் இந்தக் காரணிகள் பலவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொண்டனவென்றே கூறவேண்டும். அந்த இறப்பை ஒரு தனிமனித நிலவரமாக மட்டும் காண முடியவில்லை. அது குறித்த காலகட்டத்து நிலவரங்களின் குறிகாட்டிகளுள் ஒன்றுமாகும்.

selvi sivaramani.jpegஈழத்துத் தமிழரசியலில் நிகழ்ந்தஇளைஞர் எழுச்சியின் பகைப் புலத்தில் உருவாகிய தமிழர் கலை – இலக்கிய மலர்ச்சியின் பின்புலத்திலிருந்து உருவாகிய ஒரு தலைமுறையைச் சேர்ந்தவை ரமணியின் படைப்புக்கள். கவிதை எழுத்துக்களிலும், அக்கால கட்டத்தில் பிரபல மாகத் தொடங்கியிருந்த கவிதா நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றார். எண்பதுகளின் வரலாற்று நிலவரங்களால் சிவரமணி பிரசவிக்கப்பட்டிருந்தாலும் அவரது எழுத்துலக நுழைவு கூட எண்பதுகளில் ஆரம்பித்தாலும் சிவரமணி தனது பாடுபொருளிலும் – வெளிப்பாட்டிலும் ஒரு மாறு காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறார். அவரது ஆரம்ப காலகட்டக் கவிதைகளில் எண்பது களில் உருவான கவிதைகளின் கனத்த நிழல் படர்ந்துள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லைத்தான் அவ்வகையில். “என்னிடம் /ஒரேயாரு துப்பாக்கி / ஒரேயயாரு கைக்குண்டு / என் எதிரிக்கெதிராய்ப் /போரைப் / பிரகடனம் செய்ய / என்னிடம் ஒரேயயாரு துப்பாக்கி / ஒரேயயாரு கைக்குண்டு / எனினும் நான் தளரவில்லை” (1985) எனப் பிரகடனப்படுத்தும் ரமணி வானிற்கும் மண்ணிற்கும் இடையில் ஒரு புதிய கோட்டினைடு வரைகிறார். எண்பதுகளில் சுடர்ந்து எரிந்த விடுதலை பற்றிய நம்பிக்கையும் – முன்னோக்கிய ஒரு பயணம் பற்றிய கனவுகளும் அவற்றுள் ஒட்டிக் கிடக்கின்றன. “விலங்குகளுக்கெல்லாம் / விலங்கொன்றைச் செய்த பின் / நாங்கள் பெறுவோம் / விடுதலை ஒன்றை” (1986) எனவும் எழுதிய ரமணியின் நம்பிக்கைகள் 1989 இற்கு பிற்பட்ட கவிதைகளில் தோற்றுச் சரிகின்றன. “நான் / எனது நம் பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.” (1989) என வாக்குமூலம் தரும் ரமணி “என்னிடம் / ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல /நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க / வார்த்தைகள் இல்லை” (1989) எனக் கூறவும் “வினாக் களுக்குரிய விடைகள் யாவும் / அச்சடிக்கப்பட்டுள்ளன.” (1989) எனக் கூறவும் விளைகிறார். கூடவே எண்பதுகளின் கவிதைகளின் மீது கவிந்து கிடந்த கனவும் – நம்பிக்கையும் மனோரதியத்தனமும் (யூலிதுழிஐமிஷ்உஷ்விது) இந்த மேற்படி ரமணியின் கவிதைகளில் இல்லாமற் போவதனையும் சாதாரணமான வார்த்தைகள், மண்டிக் கிடக்கும் ஆழமான உணர்ச்சிகளின் மோதற் பரப்பிலிருந்து எழுகையில் பெறுகின்ற அசாதாரணமான கூரையும் – அதனால் இதயத்தை வெட்டிக் கீறி விடத்தக்க உணர்ச்சிப் பிரவாகத்தைத் தரத்தக்க நிலைகளையும் அவரது கவிதை வார்த்தைகள் அடைவதையும் காண முடிகிறது.

அவரது மேற்படி பிற்பட்ட கவிதைகளுடாகப் பயணஞ் செய்யும்போது அவரது கவிதை களின் பேசுபொருளும் அதன் தொடராக அதன் தோற்றவுருவும் மாறி இருப்பதைத் துல்லிய மாக இனங் காண்கிறோம். அவரது அடிப்படை மனநிலையிலும் – உணர் நிலையிலும் மாற் றம் நிகழ்ந்துவிட்டதை அவை தெட்டத் தெளிவாகப் பதிவு செய்கின்றன. இந்த மாறு நிலவரம் என்பது எண்பதுகளின் கவிதைப் போக்கின் மாறுதலுமாகும். என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு மாறு காலகட்டத்தின் மிக முக்கியமான பிரதிநிதியா வார் என்பதுடன் தொண்ணூறுகளின் போக்கின் முன்னோடியுமாகிறார் எனலாம். “கூனல் விழுந்த எம் /பொழுதுகளை நிமிர்த்தத்தக்க / மகிழ்ச்சி எதுவும் / எவரிடமும் இல்லை” (1989) என அவரறிவிக்கும்போது அவரது “புதிய வாழ்வின் / சுதந்திர கீதத்தை /இசைத்துக் களிப் போம் / வாருங்கள் தோழியரே” (1986) என அவரது முற்பட்ட வரிகள் உக்கி வீழ்ந்து மறைகின் றன.

sivaramani 2.jpeg

சிவரமணி ஒரு கவித்துவச் சாட்சி “கேள்விகள் கேட்காதிருக்கவும் / கேட்ட கேள்விக் விடையில்லாத போது / மெளனமாயிருக்கவும் / மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்ட” (1989) சூழலுக்குள் பேசாதவர்களின்-பேச்சு மறுக்கப்பட்டவரின் மனச்சாட்சியாய்-குரலாய் அவரிருந்தார். “தேவ தூதனுக்கும் போதிப்பவனுக்கும் / தீர்க்கதரிசிகளுக்கும் உரிய / இடமும் காலமும் போதனையும் கூட / இல்லாதொழிக்கப்பட்ட …” (1989) வெளியில் அவரது குரல் முதற்குரல்களில் ஒன்றாய் ஒலிக்கத் தொடங்கியது. பல முதற்குரல்கள் போல ரமணி யின் குரலும் முதற்குரலானதால், ஒற்றைக் குரல்களுள் ஒன்றாய் இருந்தது. சகோதரப் படு கொலைகள், இந்திய ராணுவ வருகை என்ற இரு வரலாற்று யதார்த்தங்களின் மத்தியில் கைவிடப்பட்ட தமிழ்ப் பொதுமனிதனின் கைவிடப்பட்ட குரலாய் ஆனால் வரலாற்றுச் சாட்சியமாய் ரமணியின் எழுத்துக்கள் பதிவாகின. “எனக்குப் பின்னால் / எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் / நானும் விடப்பட்டுள்ளேன்” என அறிவிப்புச் செய்யும் சிவ ரமணி நமது காலத்து ஈழத்துக் கவிதையின் கவித்துவச் சாட்சியாயும், மனச் சாட்சியுமாயும் இருந்தார்.

சிவரமணி! இப்போதும் மயான காண்டத்தில் சாம்பர் காற்றுப் பறக்கும் வெளியில் சந்திர மதி பாடும் தோறும் உன் நினைவுகள் என்னுள் எழுந்து மனத்தை வாட்டிச் செல்கின்றன. பின்னர் காணாமற்போன அல்லது இறப்பதற்கு முன் நீ எரித்தவற்றுள் எரியுண்டு போயிருக்கக் கூடிய எனக்கு இறுதியாகக் காட்டிய கவிதையயான்றில் இடம்பெற்ற இரத்தம் சிவந்து ஊதிய செந்நிற இதயம், துக்கம், விரக்தி, கோபம் மற்றும் ஆசையும் கலந்து நிறைந்த பெண்ணிற்கு ஒரு கற்றை மலர்களாலும் இதயத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சொற்களாலுமான ஒரு பூச்செண்டைக் காணிக்கை செய்ய விரும்புகிறேன்.

..………

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

 

இனியும் என்ன

தூக்கியயறியப்பட முடியாத கேள்வியாய்

நான் பிரசன்னமாயுள்ளேன்

என்னை

அவமானங்களாலும்

அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

 

ஆனால்

உங்கள் எல்லோரினதும் கனவுகளின் மீது

ஒரு அழுக்குக் குவியலாய்

பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை

அசுத்தம் செய்கிறேன 

 (அவமானப்படுத்தப்பட்டவள் கவிதையிலிருந்து / 1990)

 

சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள்

2006  – சேலை கட்டிக் காப்பாற்றிய  சில நாகரீகங்களைத் தவிர…

 2007 – சிவரமணி வாழ்ந்த ,விகசித்த, இறந்த

2008 – நீங்கள் உறங்க வேண்டாம்.

2009 – குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் 

 2010 – சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19″

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *