பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

தகவல்  சி.ஜெயசங்கர்

பால்நிலை சமத்துவத்துக்கான ஆண்களின் பயணம் ஒரு வாழ்க்கை நெறி. மூன்றாவது கண் நண்பர்களின் கடந்த 10 ஆண்டுகால வாழ்க்கைமுறை சார்ந்த அனுபவங்கள் பால்நிலை சமத்துவத்துக்கான பயில்வுகள், பகிர்வுகள், முன்னெடுப்புக்களில் அவர்களது பதிவுகள் முன்னெடுப்புக்களுக்கான அவர்களின் ஆக்கங்கள் என விடயங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது. மனித சமூகங்கள் எதிர் கொள்ளும் இனம், மதம், மொழி வர்க்கம் சாதி என்கின்ற எந்தவகையான முரண்பாடுகளிலும் போராட்டங்களிலும் அதன் இரு பக்கங்களிலும் ஆண்களின் இருப்பும் இயக்கமுமே இருந்து வருகின்றது.

ஓடுக்குபவர்களாகவும் ஒடுக்கப்படுபவர்களாகவும் ஆண்களே தோற்றம் கொண்டிருப்பர். இதில் பெண்களது இடமும் குரலும் ஓரங்கட்டப்பட்டதாகவும் மௌனிக்கப்பட்டதாகவும் அல்லது பாதிக்கப்பட்டோராக காட்டப்படுவதன் ஊடாக ஆண்களின் தரப்புக்கு வலு சேர்ப்பவையாக வனையப்பட்டிருக்கும்.

ஆனால், முரண்பாடுகள் எல்லாவற்றுள்ளும் ஒடுக்கும் தரப்புள்ளும் ஒடுக்கப்படும் தரப்புள்ளும் பால்நிலை அடிப்படையில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்களது இடம் பால்நிலை சமத்துவத்துக்கான முன்னெடுப்புக்களில் வெளிப்படையாக நேரடியாக அவர்களது குரலாக வெளிப்படுகின்றது. இத்தகைய   பலமான பெண்நிலைவாத முன்னெப்புக்களுக்கு இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் களமாக இருந்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கள் எழுப்பிய கேள்விகளால் தூண்டப்பட்டு சமத்துவத்துக்கான தேடல்களைத் தொடங்கிய ஆண்கள் பலர் இம்மாவட்டத்தில் உள்ளனர். இவரகளுள் கலை இலக்கிய வெளிப்பாடகள் ஊடாக சமத்துவத்துக்கான தேடலைத் தொடங்கிய மூன்றாவது கண் நண்பர்களது ஆக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

அனைவரதும் சமத்துவத்துக்கான தீர்வு என்பது ஒருதரப்பினரது அதிகார விட்டுக்கொடுப்புகளுடனும், அதிகார பரவலாக்கத்துடனும் சார்ந்தது. இது மிகவும் சவாலானதும் சாதாரணமாக நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் ஏனைய முரண்பாடுகள் சார்ந்த விடயங்களில் இன்னமும் நிலவிவர பால்நிலை சமத்துவம் சார்ந்த விடயங்களில் மட்டும் ஆதிக்கநிலையைக் கொண்டிருக்கும் ஆண்கள் பலர் தமது அதிகாரத்தைக் கேள்வி கேட்கவும் மாற்றங்களளைக்  கொண்டு வரவும் முயன்று வருவது   உலகெங்கும் சிறியளவிலாவது நிகழ்ந்து வருகின்றன.
இந்த வகையிலேயே  ஆண்களாக நாங்கள் கொண்டிருக்கின்ற ஆதிக்க நிலைகளில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்கின்ற தனிப்பட்ட மற்றும் தொழில்முறைசார் வாழ்க்கை முறைகளை நோக்கிய எங்களின் பயணம் பற்றிய பகிர்வாக இந்த தொகுப்பு அமையும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *