பெண்களும் உணவு நெருக்கடியும்

– ஸ்டெலா விக்டர் (இலங்கை)

march 8 2008 3
  • உலகில் 850மில்லியன் மக்கள் பட்டினியாலும் மந்த போசனையினாலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நிமிடமும் உலகில் 24 பேர் பட்டினியால் இறக்கின்றனர் ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்குக் கீழ்ப்பட்ட 6 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர்

கடந்த சில வருடங்களுக்குள் உலகில் உணவுப்பொருள் விலையானது 40வீதத்தால் அதிகரித்திருப்பதாகக் கணிப்பிடப் பட்டுள்ளது. 2007-2008 காலப்பகுதிக்குள் மாத்திரம் உலகின் சராசரி அரிசி விலையானது 217 வீதத்தாலும், கோதுமை மாவு 136 வீதத்தாலும் சோளம் 125 வீதத்தாலும் சோயா பீன்ஸ் 107 வீதத்தாலும் உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி ஏற்றமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அடங்கலான நாடுகளை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது

இவ்வாறு உலகளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரித்திருப்பதை ஒரு மௌன சுனாமி என ஐக்கியநாடுகள் சபை சித்தரிக்கிறது. உலகில் 100 மில்லியன் மக்கள் இவ் விலைவாசி உயர்வால் மீளவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் 22 வீதமானோர் பட்டினியில் வாடுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது.

உலக அரங்கில் உணவுப் பொருட்களுக்கான விலை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இப்படியாக உயர்வதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

உலகில் பெற்றோலியக் கனிம வளங்கள் அபரிமிதப் பாவிப்பின் காரணமாக குறைந்து வருகின்றன. இதனால் செயற்கையான பெற்றோலியம் தாவரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. Bio ethanol எனப்படும் இந்த முதலாவது தலைமுறை எரிபொருளானது கரும்பு, சோளம், கோதுமை, பாம் எண்ணெய், சோயா பீன்ஸ் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இரண்டாவது தலைமுறை டீழை னநைளநட ஆனது புல், காட்டு மரங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.

பரந்துபட்ட மக்களின் உணவுத் தேவையைப் பற்றி அக்கறை கொள்ளாத உலக வல்லரசுகள் எரிபொருளை உற்பத்திசெய்யும் அவாவில் உணவுக்கான பயிர்ச்செய்கையில் ஈடுபடாது எரிபொருள் உற்பத்திக்கான பயிர்ச்செய்கையில் மும்முரமாக இறங்கியுள்ளன. மனிதரின் உணவுக்கான பயிர் நிலங்கள் எரிபொருள் பயிர் உற்பத்தி நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் உலக அளவில் உணவுப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும்.

இத்தகையதொரு உலக சூழலில் உள்நாட்டு யுத்தத்துக்காக அதிகளவில் நிதியை முடக்கியிருக்கும் இலங்கையின் நிலையோ மிக மோசமானதாக உள்ளது. ஒரு காலகட்டத்தில் இலங்கை அரசு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து அதை அரிசித் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான பாதுகாப்புத் தொகையாக (buffer stock)) களஞ்சியங்களில் சேகரித்து வைத்தது. இதனால் அரிசி விலை அதிகரிப்பு மட்டுப்படுத்தப்பட்டது. 1977 இன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையுடன் உள்நாட்டில் விவசாயியிடம் நெல்கொள்வனவு செய்வதற்குப் பதில் பாதுகாப்பு நெல் தொகை வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டது. அரசு தனது பொறுப்பை தனியார் துறைக்கு மாற்றியது. சில தனியார் நிறுவனங்களே பின்னர் பாதுகாப்பு நெல் தொகைக்குப் பொறுப்பாளர்களாக இருந்தன. தற்போது இந்தப் பாதுகாப்பு நெல் தொகையைப் பேணும் கொள்கை அற்றுப் போய் எந்த முதலாளியும் அரிசியை இறக்குமதி செய்யலாம் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முதலாளிகளோ தமது இலாபத்தை முதன்மைப் படுத்தியே அரிசி இறக்குமதியில் ஈடுபடுகின்றனர். அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இது அடிப்படையாகும். இதைவிட இன்னும் பல மக்கள் நலன் சாரா பொருளாதார மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளும் இன்றைய நெருக்கடிக்குக் காரணமாயுள்ளன.

இலங்கை அரசு ஆழ்கடலில் மீன் பிடிக்கும் உரிமையை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்து வி;ட்டது. 200 மைல் தூரத்துக்கான பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்தில் exclusive economic zone)) மீன் பிடிக்கும் உரிமை இலங்கை மீனவர்களுக்கு இல்லாது போயுள்ளது. பத்துலட்சத்துக்குமதிகமான இலங்கை மீனவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைவிட, கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள கடுகதி போக்குவரத்து நெடுஞ்சாலை நிர்மாணத்தினால் சுமார் 170 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஆயிரம் ஏக்கர் வரையிலான விவசாய நிலம் பாதிக்கப்படப் போகிறது. நெல், தேயிலை, இறப்பர் தோட்டங்களில் கூலிக்கு வேலைசெய்யும் கிராமவாசிகளும் தமது சொந்தக் காணிகளில் பயிர் செய்கிறவர்களும் வாழ்வாதார மற்றும் வதிவிட நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கிராமங்கள் சில உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதன் காரணமாக அங்கு வீட்டுத் தோட்டத்திலும் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டுவந்த மக்கள், விவசாயத்துறையை அண்டி உயிர்வாழ்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வதிவிடத்தையும் இழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் கடற்பாதுகாப்புச் சட்டம் நிலவுவதன் காரணமாக மீனவர்கள் சுதந்திரமாக கடலுக்கு செல்ல முடிவதில்லை. இது கரையோரம் வாழும் மக்கள் மத்தியில் வறுமை அதிகரிப்பதற்குக் காரணமாயுள்ளது.

may-l

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 200 ரூபா என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நாளொன்றுக்கு ஒரு கிலோ மாவுக்கு 72 ரூபாவும் அரிசி (நாட்டரிசி) ஒரு கிலோவுக்கு 70 ரூபாவும் செலவளிக்க நேர்ந்திருப்பது பெரும் சுமையாகவேயுள்ளது.

 இப்படியாக, இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மக்களனைவரும் அரசின் இந்த அபிவிருத்தி மற்றும் உணவுக் கொள்கையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகையதொரு சூழலில் பெண்களின் உணவுக்கான உரிமை எவ்வாறுள்ளது என்பதை அவதானிப்பதும் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதும் பெண்ணிலைவாதிகளின் கடமையாகும்.

அன்றாட கூலி உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு ஆண்களிலும் விட குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் பெண்களுக்கு 300 ரூபாவும் ஆண்களுக்கு 700 ரூபாவும் தினக் கூலியாக உள்ளது. கரை வலை இழுப்பவர்கள் மத்தியில் நாளொன்றுக்கு பெண்களுக்கு 200 ரூபாவும் ஆண்களுக்கு 500 ரூபாவும் வழங்கப்படுகிறது. மலையக தேயிலைத் தோட்டங்களை எடுத்துக்கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் 200 ரூபா சம சம்பளம் எனக் கூறப்பட்டாலும் ஆண்கள் ஐந்தரை மணித்தியாலங்கள் வேலை செய்ய பெண்கள் எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர். ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பல்லாயிரக்கணக்கான சகோதரிகள் அநியாயமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் காணி உரிமை என்பது பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக அந்தஸ்த்துக்குமான காரணியாக உள்ளது. மேட்டு நிலப் பயிச்செய்கை, வீட்டுத் தோட்டம், தாழ்நில நெற்பயிர்ச் செய்கைக்கான காணிகள் பெரும்பாலும் ஆண்களின் பெயரிலேயே உள்ளன. தேச வழமை சட்டத்தின் கீழும் பெண்ணின் சீதன காணி மற்றும் சொத்து மீதான  இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் ஆணுக்கே உள்ளது. மகாவலி விவசாயக் குடியேற்றங்களின் போது அரசானது விவசாயிகளுக்கு மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்கும் தாழ்நிலப் பயிர்ச் செய்கைக்குமான காணிகளை வழங்கி அப்பிரதேசத்தில் மக்களைக் குடியேற்றியது. இதன்போது காணிகள் குடும்பத் தலைவனுக்கு அதாவது ஆணுக்கு உரித்துடைமையாக்கப்பட்டது. இவ் ஆண்கள் தமது காணிகளை தமது கடைசி ஆண் பிள்ளைக்கு அல்லது ஆண் பிள்ளைக்கு வாரிசுரிமையாக்கியதால் பெண் பிள்ளைகள் காணியுரிமை இழந்ததுடன் அவர்களும் அவர்களின் சந்ததியினரும் விவசாயக் கூலிகளாக மாறியுள்ளனர்.

வறிய மக்கள் மத்தியில் சாபக் கேடாயமைந்துள்ள மதுபானப் பாவனையானது மலையகத்திலும் இலங்கையின் பின்தங்கிய கிராமங்கள் அனைத்திலும் அதிகளவில் காணப்படுகிறது. உடலுழைப்பில் ஈடுபடும் ஆண்கள் தமது உழைப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டத் தொகையை மதுவுக்கு செலவளிப்பதனால் குடும்பப் பொருளாதாரத்தில் ஆண்களின் பங்களிப்பு குறைவாயுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சந்தித்த பெண்கள் சிலர் விவசாயக் கூலி வேலையும் கிடைக்காத சந்தர்ப்பங்களில் குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்காக உயரமான பாளை மரங்களில் ஏறி பாளைப் பழம் பறித்து விற்று குடும்பத்துக்கு உணவூட்டுகின்றனர். சிலர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி வந்து விற்று உயிர் வாழ்கின்றனர்.

மலையகத்தில் மாத்தளை மாவட்டத்து தேயிலைத் தோட்டங்களைச் சார்ந்த பெண்கள் கொழுந்து குறைவான காலங்களில் ஏலக்காய்த் தோட்டங்களில் ஏலம் பறிக்கவும் பைனஸ் பால் வெட்டவும் செல்கின்றனர்.

இவ்வாறு பெண்கள் பாளைப் பழம் விற்றும் கொழுந்து பறித்தும் ஏனைய கூலி வேலைகள் செய்தும் கொண்டுவரும் பணத்தில் ஒரு பகுதியை ஆண்கள் மதுவுக்காக வாங்குவதும் உண்டு.

பெண்களுக்கு பரம்பரைச் சொத்துக்களிலும் காணியிலும் உரிய பங்கும் வாரிசுரிமையும் இல்லாமை, பெண்களின் சமூக உழைப்புக்கு உரிய பெறுமதி வழங்கப்படாமை, பெண்களின் குடும்ப உழைப்பு இனங்காணப்படாமை, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படாமை, பெண்களின் வருமானத்தை ஆண்கள் கட்டுப்படுத்துவது மற்றும் சுரண்டலுக்குள்ளாக்குவது காரணமாக பெண்கள் மத்தியில் வறுமை அதிகமாகக் காணப்படுகிறது.

இவ்வாறு அண்மைய விலைவாசி ஏற்றமானது வறுமை நிலையை மேலும் பாதித்துள்ளதுடன் பெண்கள் மத்தியில் பட்டினியையும் அதிகமாக்கியுள்ளது.

வறுமையில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் இன்று மூன்று நேர உணவை உட்கொள்வதில்லை. இரண்டு நேரமே உண்கின்றனர். சில குடும்பங்கள் ஒரு நேர உணவுடன் படுக்கைக்கு செல்கின்றனர். சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க முறைமையானது குடும்பத்தில் ஆணின் உணவு உரிமையை முதன்மைப்படுத்துவதால், உணவு முதலில் ஆணுக்கும் ஆண் பிள்ளைக்கும் பரிமாறப்படுவது வழமையாயுள்ளது. இந்தப் பழக்கத்தின் காரணமாக அனைவருக்கும் இருப்பதைப் பரிமாறிவிட்டு எஞ்சிய உணவையே பெண் உட்கொள்கிறாள். இரண்டு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் உணவுண்பதாகவும் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் பெண்கள் மத்தியில் ஏற்கனவேக் காணப்படும் இரத்தச் சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு, மந்த போசனை ஆகியன மேலும் அதிகரிப்பதுடன் பெண்ணின் இறப்பு வயதெல்லைக் குறைந்து இறப்பு வீதம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்.

இது ஒரு பாரதூரமான விடயமாகும். பெண்கள் மத்தியில் வறுமையும் பட்டினியும் விரிவாக்கம் பெறுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களின் உணவு உரிமைக்காகப் போராடுவதே இலங்கைப் பெண்ணிலைவாதிகளின் கடமையாயுள்ளது.

  தகவல்: FIAN (Food First Information and Network )

பெண் சஞ்சிகையிலிருந்து ஊடறுவுக்காக  விஜயலக்சுமி (02.3.2010)

 

 

0 Comments on “பெண்களும் உணவு நெருக்கடியும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *