இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

நன்றி :– ஆனந்த விகடன் அக்டோபர் 03/ 2012, www.inneram.com

 இரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். 

 ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், ‘நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ”உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?”

இன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

”கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை!” என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.

நியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.

பெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், ‘போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.

தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ”நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க” என்றவனிடம் ”தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா?” என்று கேட்டேன். ”அப்படின்னா..?” என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்… எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்களில் இரண்டைக் ‘கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.

சுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.

”சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன? மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற” என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.

இடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய   தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.

பொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் முழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.

மளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

யாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்!


1 Comment on “இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?”

  1. கால்கள் இரண்டையும் இழந்தாலும் – ஒரு
    கொள்கை உறுதியில் வாழுகிறாய் – உன்
    போலோர் பெண்ணின் பெருமையினை அப்
    பதர்கள் உணரார், வருந்தாதே!

    ஓர் உடம்பாய் மட்டும் பெண்ணினத்தை
    எண்ணும் கயமை மாயும்வரை
    நீள் பயணம் தொடர்ந்திடு – அராஜகங்கள்
    நீங்கும் வரை நீ போராடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *