ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்

This image has an empty alt attribute; its file name is Nayeema-sidheeq.jpg

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் மிகவும் உறுதுணையாக இருந்தது   என்ற கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும்.  அந்த வகையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் ‘இலக்கியத் தாரகை’ கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார்.
 இவர் பதுளை மாவட்ட அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட இவர், பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து, கலைமாணி(பி.ஏ.) பட்டத்தையும், கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டவர்.

 சிறுகதைப் படைப்பாளியாக இலக்கிய உலகில் முதன்முதலாகத் தடம் பதித்த நயீமா சிறந்த சிறுகதைகள் பலவற்றை வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, பிந்திய 90களில் தோன்றிய தினக்குரல், நவமணி மற்றும் தமிழக தீபம் இதழ்களில் எழுதியுள்ளார். தனது எழுத்துலகப் பணியோடு வானொலி ஆக்கப் பிரதிகள், வானொலி நாடகம், உரைச்சித்திரம் என்பவற்றையும் படைத்துக் காற்றில் கலக்கச் செய்த பெருமைக்குரியவர். தனது இளமைக் காலத்தில் சிறுகதை, வானொலிப் பணிகளோடு நயீமா சித்தீக் சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு மலையக சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்துக்களில் காணப்பட்ட வேகம், சமூக மாற்றத்திற்கான எண்ணக்கரு, மலையகப் பெண்களின் வாழ்க்கை அவலங்களைத் தனது மேடைப் பேச்சுக்களிலும் படைப்புகளிலும் மிக வீறாப்புடன் வெளிக்கொணர்ந்ததைக் காணமுடியும். தோட்டப் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தினார். மலையகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு அப்புத்தளையில் ‘அசோக வித்தியாலயம்’ எனும் பெயரில் கல்விக்கூடம் ஒன்றினை ஆரம்பித்து மலையகக் கல்வி அபிவிருத்திக்குப் பங்காற்றியுள்ளார்.

படைப்பிலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நயீமா சித்தீக் பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தியாளராகவும் பணிபுரிந்து அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மலையகத்தில் பெண் பத்திரிகை நிருபராக முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு, அக்காலத்தில் வெளிவந்த ‘தீப்பொறி’ இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்பேற்று அதனூடாகப் பெண்களின் விடிவிற்காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தவருமாவார்.  மேலும் அவர், கண்டி திருமதி. சிவபாக்கியம் குமாரவேலு அவர்களோடு இணைந்து ‘மங்கை’ என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 
இவரின் படைப்பிலக்கியப் பணியினைப் பாராட்டிப் பல்வேறு சமூக, பொது நிறுவனங்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு:

1986 ஆம் ஆண்டு மலையக கலை இலக்கியப் பேரவை இவரது இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கிக் கௌரவித்தது.

1989 ஆம் ஆண்டு மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும்  பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1991 ஆம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் தமிழ் சாகித்திய விழாவில் ‘இலக்கியத் தாரகை’ எனும் பட்டமும் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு அவர் பிறந்த மாவட்டமான ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகா நாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய ‘சுதந்திரன் சிறுகதைகள்’ நூல் அறிமுக விழாவின்போது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகின்றது. சமூகத்தின் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் தத்ரூபமாகச் சித்திரிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.

தனது படைப்புகளில் வாழ்க்கையின் உணர்வுகளை மிக அவதானமாகப் பல்வேறு கோணங்களில் நோக்கியுள்ளார். அத்தளத்திலேயே அவர் படைத்த படைப்புக்களான ‘வாழ்க்கைப் படகு’ (நாவல்) வீரகேசரி வெளியீடு, ‘வாழ்க்கைச் சுவடுகள்’ சிறுகதைத் தொகுதி கல்ஹின்ன தமிழ்மன்ற வெளியீடு (1987), ‘வாழ்க்கை வண்ணங்கள்’ (கண்டி சிந்தனை வட்ட வெளியீடு 2004), ‘வாழ்க்கை வளைவுகள்’ (சிறுகதைத் தொகுதி) மணிமேகலைப் பிரசுர வெளியீடு 2005, அந்தனி ஜீவா தொகுத்த 25 பெண் பிரம்மாக்களின் ‘அம்மா’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2005(தமிழக கலைஞன் பதிப்பகம்) என்பன படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் மலையகப் படைப்பாளிகளின் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் பல வெளிவந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

(நன்றி: மல்லிகை, ஜூலை 2006-அட்டைப்படக் கட்டுரை)

 ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள்  பெருமை தேடித்தந்த  அன்னலட்சுமி இராஜதுரை

மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *