“களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.

 கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்)

vasu மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.

“பழைய எண்ணக்கருக்களின் மரபுகளின் சுவரினை உடைத்தெறிந்து விட்டு அதனைக் கடந்து வரும் பொழுதே காத்திரமான கலை மேன்மையடைகிறது”.இது கடந்த மாசி 16ம் திகதி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தில் மேடையேற்றப்பட்ட “களிமண் வண்டி” எனப்படும் அளிக்கையில் வழங்கப்பட்ட கையேட்டில் காணப்பட்ட வரிகளாகும்.

vasu

இரண்டேகால் மணி நேரம் ஆற்றப்பட்ட அந்த அளிக்கையில் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் தம்மை ஈடுபடுத்தியிருந்தனர். இதில் நடித்தவர்கள் நெறியாளரால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் தமது பாத்திரங்களை இயன்றளவு சிறப்பாக வழங்கியிருந்தனர். அதிலும் சிலர் இதுவரை எமது சமூகங்களில் பலரும் ஏற்கத் தயங்கும் சவாலான பாத்திரங்களில் கூடத் துணிவுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மரபு சார் எண்ணக்கருக்களான சாதியம், பால்நிலை போன்ற கருத்தியல்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருபவர்களுக்கும் இன இணக்கம், சமாதானம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மேலே கூறப்பட்ட கூற்றும் இரு இன இளையோரின் கூட்டுருவாக்கம் எனும் செய்தியும் பலத்த எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் அன்று நிகழ்த்தப்பட்ட அளிக்கையோ இந்தக் கூற்றுக்கு எந்த வகையிலும் சம்பந்தப்படாததாக எமது சமூகங்களிலிருந்து என்றோ கைவிடப்பட்ட மரபையும் பலமிழந்து வரும் பால்நிலைக் கருத்துக்களையும் மீள வலியுறுத்தவதாக அமைந்திருந்தது.

திருமணமாகிக் குழந்தையுமுள்ள, வறுமையில் வீழ்ந்த உயர்குடி வர்த்தகனான சாருதத்தனுக்கும் பாலியல் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் வந்த வசந்தசேனை என்கின்ற பெண்ணுக்கும் இடையிலான திருமணத்துக்கப்பாலான தொடர்பை மையப்படுத்திய கி.ப 300-400ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிருச்சகடிகம் எனும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அளிக்கை ‘களிமண் வண்டி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருந்தது. இதிகாசங்கள், புராணங்கள் முதல் இன்றைய இந்திய சினிமாக்கள் வரை கூறப்படும் அதே நல்லவனும் – கெட்டவனும்;, இவர்களை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ காட்டத் தேவையான ஒரு பெண் பாத்திரமும் கொண்ட கதை.
எந்த விதமான வியாக்கியானங்களும் இன்றி கதாநாயகனை நல்லவனிலும் நல்லவனாகவும், கதாநாயகியை சிருங்கார ரசம் சொட்டும் வழக்கமான சினிமா வரையறைகளுக்குட்பட்ட மயிலாய் நடந்து கிளியாய்ப் பேசும் ‘பாவை’யாகவும்;, இவள் மீது காதல் கொள்ளும் இன்னொருவனைக் கெட்டவனான வில்லனாகவும், கதாநாயகனின் நண்பனை நகைச்சுவைப் பாத்திரமாகவும் படைத்து இவை எல்லாவற்றிலும் கேவலமான பாத்திரமாகக் தனக்குத் துரோகம் புரியும் கணவனுக்கு ஒத்தாசை புரியும்; ‘நற்பெண்’ணாக மனைவி பாத்திரத்தை ஒரு உயிர்ப்பற்ற பாத்திரமாகவும் ‘களிமண் வண்டி’ கொடுத்திருந்தது.

 

vasu1மரபுகளின் சுவரை உடைத்து எழுந்த கலைப்படைப்பாக எதிர்பார்க்கபட்ட இந்தப் படைப்பானது கலை வடிவத்திலும் புது வடிவமாக இன்றி தமிழ் சினிமா ஒன்றின் மேடை வடிவமாக இருக்க, கருத்தியலிலாவது ஏதாவது சமூகத்துக்குப் பாதகமான கருத்தியல்களை உடைத்திருந்ததா என்றால் அதுவும் இல்லை.வறுமையோ கல்வி அறிவின்மையோ சூழலின் அச்சமோ எதுவாயினும் அவற்றைத் தாண்டித் தமக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்காகச் சலிக்காது போராடிய, போராடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பெண்கள் வாழும் பூமி இது. பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் கௌரவமான வாழ்வுக்குத் தகுதியற்றவர்களாகவும், உரிமையற்றவர்களாகவும்; ஆக்கும் எல்லாவிதமான கருத்தியல்களையும் அவை நவீனமானவையோ மரபு சார்ந்தவையோ கேள்வி கேட்பதும் ஆரோக்கியமான வகையில் சமத்தவத்தை நோக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதுமான செயற்பாடுகளில் மடட்க்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் வருடக்கணக்காக ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமாகப் பால்நிலை சமத்துவத்தை நோக்கிய செயற்பாடுகளும் இதன்மூலம் இம்மாவட்டத்திலுள்ள பல மட்டங்களில் நிகழ்ந்துள்ள சாதகமான மாற்றங்களும் ஏனைய பல மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது.

பல மட்டத்திலுள்ளவர்களும் தமது செயற்பாடுகளில் பால்நிலை வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும் கருத்தியல்களைச் சமூக அக்கறையுடன் கவனமாகத் தவிர்த்து வரும் இம்மாவட்டத்தில் இம்மாற்றங்களுக்குப் பாதகமான இத்தகைய ஒரு அளிக்கையை பாரிய பொருள் மற்றும் கால செலவுடனும், இளம் தலைமுறையொன்றை ஈடுபடுத்தியும் தயாரித்ததானது கேள்விக்குரியதாகவே உள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது. சாதி, இன, அடிப்படையில் எந்த சாராரையும் கீழ்மைப்படு;த்தும் புண்படுத்தும் விதமான வார்த்தைப் பிரயோகங்களோ கருத்துக்குளோ தமது படைப்புக்களில் வெளிப்படாதிருப்பதில் இலங்கையின் ஊடகங்களிலும் கலை வடிவங்களிலும் உள்ள அநேகமானவர்கள் கவனமாக நடந்து வருவது கண்கூடு.

ஆனால் இவற்றுள் பால்நிலை அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சமூகக் கட்டமைப்பின் பிரச்சனைகளைக் கவனமாகக் கையாள்வதில் இன்னமும் போதாமைகள் உள்ளன. ஊடகங்கள் இன்னமும் பால்நிலை உணர்திறனற்ற வகையில் பெண்களை இரண்டாம் பட்சமாகவும், புண்படுத்தும் வகையிலுமான விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளை தமிழ் நாடகத்துறையானது ஏனையோருக்கு முன்னுதாரணமாகத் திகழக் கூடிய பல சாதகமான மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. பங்குபற்றுவோரிலிருந்து பார்வையாளர் மற்றும் பரந்த சமூகம் வரையாக சமூக பண்பாட்டு நிலைமைகளில் தாக்கம் செலுத்தக் கூடிய வகையிலும் காலங்காலமாக நிலவி வரும் பாகுபாடுகளைக் கேள்வி கேட்பதாகவும் மாற்றங்களைச் செய்து காட்டுவதாகவும் நாடக செயற்பாடுகள் கடந்த சில தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் எமது சூழலில் மீண்டும் பிற்போக்குத் தனமான ஒரு அளிக்கையைத் தயாரிக்க வேண்டிய தேவை என்ன?

அதிலும் நவீன நாடகங்களில் சாதி அடிப்படையிலான பாத்திரங்களை இயன்றளவு தவிர்த்தும் இன மத அடிப்படையிலான பாத்திரங்களைப் படைப்பதில் அதீத கவனத்துடனும் இருக்கும் நாடக நெறியாளர்கள் பெண்களது பாத்திரப் படைப்பின் போது மட்டும் தமது ஆணாதிக்க சிநதனைகளிலிருந்து மீள முடியாதவர்களாக இருப்பதற்கு இந்த நாடகம் ஒரு உதாரணம். முக்கியமாக சமூக மாற்றம், பால்நிலை சமத்துவம் சார்ந்த வட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடகவியளாளராக இருந்து வந்த பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இந்நாடகத்துக்கு நிறைவேற்று நெறியாளராக இருந்தும் இவ்வாறான ஒரு படைப்பு உருவாகயதென்பது அதிர்ச்சிக்குரியது.

நாடகக் கற்கைக்காக இதே பிற்போக்கான கதையைத்தான் மேடையேற்றியிருக்க வேண்டும் என்ற தேவை இருந்திருப்பினும் பெண்களைக் காட்சிப்பொருளாக, போகப் பொருளாக மேடை வெளியில் அலைய விட்டும,; பெண் உடலைக் கேவலப்படுத்துவதாகவும், பெண்களின் பாலியல்பை அவமதிக்கும் சொற்பிரயோகங்களுமாக நாடகத்தை வடிவமைத்திருக்க வேண்டிய வரலாற்றுத் தேவை என்ன? இது நாடகத் தேவை கருதியதெனில் பெண் சார்ந்த இந்த ஆதிக் குலத் தொழிலை அன்றி வேறேதாவது ஆண்களால் செய்யப்பட்ட குலத்தொழில்களைப் பற்றியோ, சாதிப் பெயர்களையோ, சாதி அடிப்படையிலானதாகக் கூறபப்படும் உடல் அசைவுகளையோ இவர்களால் இன்று மேடையில் காட்ட முடியுமா? கலையின் பெயரிலும், பழைய கதைகளை மீளச் செய்து பார்த்தல் என்பதன் பெயரில் எதனை மீள உருவாக்கப் போகிறார்கள். சிறு வயதுத் திருமணம், சதி (இறந்த கணவனுடன் பெண் உடன்கட்டை ஏறுதல்) என எத்தகைய பெண் விம்பத்தை இவர்கள் கொண்டாடப் போகிறார்கள்?

“சிறு பிள்ளைத்தனமான சித்தாந்தங்கள், மரபுகள் மற்றும் பழைய மோடிமைகளுக்குள் சிறைப்பட்டு கடிகாரத்தை நிறுத்துவதற்கு அல்லது அதனைப் பின்னோக்கிச் சுற்றுவதற்கு நாம் முயற்சிக்க மாட்டோம்”….என்ற வரிகளை நாடகத்தின் கையேட்டில் வாசித்துவிட்டு நாடகத்தைப் பார்த்த பொழுது ஒரு பெண்ணியவாதியாக எனக்கு இவ்வாறே பட்டது. சிறு பிள்ளைத்தனமான சித்தாந்தங்கள், மரபுகள் மற்றும் பழைய மோடிமைகளுக்குள் ஆண்களாகவும் தலைவர்களாகவும் நாம் சிறைப்பட மாட்டோம். ஆனால் பெண்களையும், எங்களது வழிகாட்டலில் வரும் இளையோரையும் சிக்க வைப்போம்.

பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் முழுச் சமூகத்துக்குமே பாதகமான கருத்தியல்களையும் காட்சிப்படிமங்களையும் வகை தொகையற்றுப் பரப்பிக் கொண்டிருக்கும் தென்னிந்தியச் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றின் மாயையிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் எங்களுக்கு எங்களுக்குள்ளிருந்தே இப்படியொரு படைப்புத் தேவையா?

மக்களுக்குத் தீங்கான மக்களாலேயே கைவிடப்பட்ட மரபுகள், கருத்தியல்களை மீளக் கொண்டு வருவதற்கு பாரிய பொருள், கால, மனித வளத்தைச் செலவழித்தது ஏன்? அதிலும் இதனை சமூக அக்கறையும் கலைத்திறனும் கொண்ட பராக்கிரம நீரி எல்ல, பேராசிரியர மௌனகுரு போன்ற இரண்டு நெறியாளர்களும், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனம், இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் ஆகிய சமூகப் பொறுப்புடைய இரண்டு பாரிய நிறுவனங்களும்; இணைந்து முன்னெடுத்தது ஏன்? இன, மொழித் தடைகளைக் கடந்து அரங்க வெளியில் தாம் எடுத்துக் கொண்ட முயற்சியைச் சிறப்பாகச் செய்வதில் ஒன்றிணைந்து பாடுபட்ட இளம் தலைமுறையை இவர்கள் சரியாக வழி நடத்தியிருக்கலாம்.

மாசி 2012
கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்)

1 Comment on ““களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.”

  1. qUESTIONS RAISED BY vASUKI HAVE TO BE ADDRESSED IN DEPTH. dO WE HAVE ALTERNATE IMAGININGS OF A FEMALE EXISTENCE? HAVE WE PRODUCED IMAGES THAT CAN HELP US BREAK THESE STEREOTYPES?
    i THINK ANY TEXT CAN BE READ IN CONTEMPORARY WAYS ON STAGE / READING. ALL THAT WE NEED IS OUR PERSPECTIVE AND IDEOLOGY. hABIB tANVIR’S PRODUCTION OF mRCCHA gATIKA IN iNDIA HAS BROKEN NEW GROUNDS. Especially with so many women learning thetare for higher studies in tamil, in srilanka, which is undreamt of in tamilnadu, I wish we can have more path breaking texts, performances and directions!
    Thanks Vasuki.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *