தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)
 
தினமும் செல்கின்றேன் – அவ் வழியே
திரும்பியும் வருகின்றேன்
வீதியோர வீட்டின் முன்னே
வெள்ளை உடையோடு – எந்நாளும்
என் கண்களில் தென்படுவாள்.
ஆடையைப் போலவே அவள்
உள்ளமும் தூய்மையாய் இருக்கும்
என அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.
தினமும் காலையில்
அவள் அமரும் இடத்தை நிச்சயப்படுத்தி
தேடுகின்ற போது, அதற்கு ஏற்றாற்போல்
அவள் அமர்ந்திருப்பது
அந்த பின்னல் வேலை செய்யப்பட்ட மர நாற்காலியே..
நான் செல்கின்ற காலையில்
காய்கறி நறுக்குவதும்,
திரும்பி வருகின்ற வேளையில்
வீட்டைச் சுத்தம் செய்வதும்
அவளது வழமையான வேலையாகிப் போனது.
 
ஒவ்வொரு நாளும்…
அவளைப் பார்க்கின்ற ஒவ்வொரு பொழுதும்….
எனக்குள் ஆச்சரியமே.
இவளுக்கும் எனக்கும்
என்ன பந்தம் இருக்க முடியும்?
நான் வாழ்கின்ற கணங்களில்
ஒரு தடவையாவது
அவளோடு பேச வேண்டும் என எத்தனிப்பேன்.
ஏனோ! சிறு தயக்கம்
அவள் என்னை நிமிர்ந்தும் பார்த்தாளில்லை
எனக்கும் கர்வம்
என்னை நிமிர்ந்தும் பார்க்காதவளிடம்
நான் ஏன் பேச வேண்டும்?
 
என் விடுமுறை தினங்களில்
அவள் நினைவுகளே எனக்கு மருந்தாகி விடும்
அப்போது ஏங்கிக் கொள்வேன்.
வாரம் முழுமைக்கும்
எனக்கு மட்டுமாவது
பாடசாலை திறக்கப்படாதா?
 
அன்றும் அப்படித்தான்…
வார இறுதி இரு நாட்களும் 
பெரும் யுகங்கள் போல் 
கழிந்து விட்டன.
காலை வேளை
அவள் முகம் காணும் ஆவலோடு – என்
மிதிவண்டியை வேகமாக மிதிக்கிறேன்.
அதே வேகத்தோடு
அவள் இருக்குமிடம் தேடி அலைகிறது
என் கண்கள்.
காணவில்லை அவளை
அவள் நிரந்தர இருக்கையில் – என்
விழிகளை அகலித்து
அவள் வீட்டையே வளைக்கிறேன்.
அமைதியைத் தவிர
அங்கு அவளில்லை
நெஞ்சை முட்டிய பாரத்தோடு
பள்ளி நோக்கி மிதிக்கின்றன என் கால்கள்.
 
பள்ளியில்…
பாடத்தை சரியாக விளக்க முடியவில்லை.
அவள் நினைவை விடுத்து -என்னால்
கற்பிக்க இயலவில்லை – என்
கைக் கடிகாரத்தையே
கண்கள் குறி பார்த்துக் கொண்டிருக்க
மணி இரண்டாகின்றது.
மீண்டும் அதே வேகத்தோடு – வீடு வரை
வண்டியை மிதிக்கிறேன்
காணவில்லை அவளை…
 
மாதம் ஒன்றாகிவிட்டது – இன்றோடு
அவளை நான் கண்டு.
அவள் நினைவோடு,
வார இறுதிப் பத்திரிகையைப் புரட்டுகிறேன்.
என்ன இது!
பத்திரிகையில் என்னவளது
அழகிய முகம் – என்
கண்கள் விரிய கீழுள்ள எழுத்துக்களை
படிக்கிறேன்….. 
என் விழிகளில் ஈரம்
மனதினில் விரக்தி…
 
நூற்றின் முக்கால் வயதினை
நிமிர்வோடு வரவேற்றவளால்
முழுமையையும் வாழ்ந்து விட
ஏன் முடியவில்லை?
 

 சிறு வருத்தம் கண்டு
சோர்ந்து போகும் என் இளம் உடல் எங்கே?
தீரா வருத்தம் கொண்டும்
உயிர்ப்புடன் வாழ்ந்த அந்த பழுத்த உடல் எங்கே?
 
இன்றும் செல்கின்றேன் – அவ் வழியே
திரும்பியும் வருகின்றேன்.
அடையாளமற்றுப் போய் – என்
நினைவோடு வாழும்
அந்த இனியவள் – அடையாளமாய்
பின்னல் வேலை செய்யப்பட்ட
நாற்காலி மட்டும் வெறுமையாய் …..

1 Comment on “தலைப்பிலி கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *