நான் பெண்

 — லறீனா அப்துல் ஹக்–

     (இலங்கை)
  
நான் பெண்
என் சின்னஞ்சிறு உலகம்
எப்போதும் இருட்டுக்குள்!
 
என் இரவுகள்…
நிலவோடு நட்சத்திரங்களை
தொலைத்துவிட்டன
 எனது பகல்கள்…
ஆதவனை, தென்றலை
இழந்துவிட்டன
 
அன்று…
சீருடை மிருகங்களால் 
துகில் உருவப்பட்டு…
பருத்த முலைகளும்
தொப்புளும் தொடைகளுமாய்
அவயவங்கள் – பலர்முன்
ஏலம்விடப்பட்டு…
சிறைக்கம்பிகளின் பின்னால்
மாறிமாறிக் குதறப்படுகையில்
பெண்மையின் ஆன்மா
உரத்துக் கதறிய குரல்
எவருக்கும் கேட்கவில்லை
 
அன்பையும் பரிவையும்
யாசிக்கும் போதெல்லாம்
புறக்கணிப்புக்கள் பல்லிளித்தன
கருணை விழைந்து
கரம் நீளும் போதெல்லாம்
அவர்கள்…
‘சிங்கப்பல்’ தெரியச் சிரித்தார்கள்!
 
நான் பெண்
 
கீற்று நிலவொளியில்
காணாமல் போன ‘என்னை’
கூடவே, என் விடியலை…
தேடித் தேடித் தனியாக…
 
சகதி நிறைந்த இப்பாதை
விரைந்திட முடியாமல்
பெண்களை உயிருடன்
புதைத்த குழிகளுடன்
கற்களும் முட்களும் நிறைந்து…
கண்ணுக்குத்தெரியாத
விலங்குகள் பிணித்த கால்கள்
தள்ளாடித் தடுமாற…
விடியலைத் தேடி
நான் – மெல்ல நடக்கிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *