தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி”

யாழினி முனுசாமி

osai_puthais “இரவை ஆடையாய் போர்த்தி
உன்னருகில் நான்
சற்று நேரத்துக்கு முன் தான்
வானவில்லின் வண்ணங்களை
வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும்
நரம்புகளில் இன்னமும்
சங்கீதம் அலை அலையாய்

எரியும் பனிவனத்தின் குளிர்க் கங்குகள்

முதலில் இந்த விமர்சனத்திற்கு “காமம் நுரைத்துப் பொங்கும் கவிதைகள்” என்று தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன்.ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் எல்லாக் கவிதைகளையும் திணிப்பதாகத் தோன்றியதால் அத்தலைப்பைத் தவிர்த்தேன். எனக்கான வெளிச்சம் (2004) எனும் தன் முதல் கவிதை நூலைத் தந்த கவிஞர் தி்.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. கையடக்கப் பதிப்பாக 72 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.காதல், காமம், விரக்தி, பெண்விடுதலை எனும் பொருண்மைகளுக்குள் இவரது கவிதைகள் இயங்குகின்றன. எதார்த்தம், புனைவு, ரொமான்டிக் தளங்களில் மொழிநடை அமைந்திருக்கிறது.

முதல் கவிதை “ஞாயிற்றின் மகள்” புனைவுவெளியில் இயங்குகிறது. “சிறகுகள் கோதும் சாளரம்” எனும் கவிதை எதார்த்தவெளியில் பயணிக்கிறது. ஒன்றைக் காட்சிப் படுத்தி வேறொன்றை உணர்த்துகிறது.

குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய் கண்டிக்கும் தாய்ப்பறவை
சன்னலில் பதித்த முகத்தில்
பதியும் கோடுகள்
வலிக்க வலிக்க
ரசித்துக் கொண்டிருக்கிறாள்.” (ப. 9)

சுதந்திரமான பறவைகளின் செயல்களைக் கூண்டுப் பறவையாய் அடைந்து கிடக்கும் வீட்டுப் பெண் “வலிக்க வலிக்க ரசித்துக் கொண்டிருக்கறாள்” .

“ குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப் பறவை”

எனும் வரிகள் பிள்ளைக்கும்  தனக்குமான இடைவெளியை… பிரிவை உணர்த்துகிறது.  அதனால் உண்டான ஏக்கத்தின் காரணமாகவே “வலிக்க வலிக்க ரசித்துக் கொண்டிருக்கிறாள்” எனும் வரி வந்துள்ளது.

“ கவிதைச் செடி” கவிதை எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

“ உன் மர விரல்கள்
ஊர்ந்து கொண்டிருக்கும்
என்னுள் கவிந்திருக்கிறது
ஒரு நூற்றாண்டுத் தனிமை” (ப. 11)

எனும் கவிதை வரிகளில் உணர்ச்சியற்ற விரல்கள் என்பதனை  “மர விரல்கள்” என நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்.

osai_puthais

குழிக்குள் அலையும் உடலைத்
தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்
பசியாறும் உடல் தடவி
சற்றே தளர்ந்து ஆசுவாசிக்கையில்
மீளக் குழிக்குள் தள்ளிக்
கையுதறி நடக்கின்றன வன்கால்கள்” (ப. 12)

மென்கரங்கள் என நம்பியவையும் வன்கரங்களாகிப் போன அவலத்தை வெளிப்படுத்துகிறது இக்கவிதை.  இதே தொனியில் அமைந்த மற்றுமொரு கவிதை ” என்றும்பெயர்”(ப.18). இரண்டாவது அல்லது புதிய காதலின் அவஸ்தையைப் பேசும் கவிதைகள் இவை.

“ ஆதரவு தேடித்
தோள் சாய்கிறேன்
அடி வயிற்றில்
கத்தி செருகுகிறாய்
சிதறும் துளிகள் கொண்டு
தீட்டுகிறேம் உன் ஓவியம்”

எனும் கவிதையும் “மனங்கொத்திப் பறவை”, “ மௌனக் கலவை”,  “செம்மலர்” ஆகிய கவிதைகளும் தலைக்கேறிய காதல் போதையில் உலறும் பேதையின் குரலாகவே ஒலிக்கின்றன.

“ ஓசை காட்டி
அழைக்கிறது மழை
ஓடிப் பிடிக்க எத்தனிக்கையில்
எங்கேயோ நினைவூட்ட
மனசுக்குள் மழை மறைந்து
இறுக்கம் பரவுகிறது மெல்ல” (ப.15)

என்பது ஓர் அழகான குறியீட்டுக் கவிதையாகும். தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஏதோவொன்று தன்னை அழைக்கிறது. மனம் அதன்பின் செல்ல எத்தனிக்கையில் எதிர்விளைவுகளைக் குறித்து எச்சரிக்கின்றன உறவுகள். ஆசை நிராசையாவதைச் சுட்டுகிறது இக்கவிதை.

“ அனைத்தையும் விட்டொழித்துத்
திசைவெளியெங்கும் பரவுகிறேன்
மென் காற்றாய்
மலை முகடுகளில் அலைகிறேன்
மேகமாய் உருமாறுகிறேன்
மெல்லக் கரைகிறேன்
துளிகளால் நனைகிறது பூமி ” (ப. 19)

அழகான புனைவாக இருக்கிறது இக்கவிதை.

பொதுவாக, சிறைப்பட்ட பெண்ணின் மனநிலையிலும் விடுபட்ட பெண்ணின் மனநிலையிலும் இவரது கவிதைகளின் சாரம் மையங் கொண்டிருக்கிறது.“ சங்கிலியில் திரியும் சுதந்திரம்” எனும் கவிதை, சங்கிலியில் பிணைக்கப்பட்ட வளர்ப்பு நாயாக மனைவிகளைச் சித்திரிக்கிறது. “ மனப்பாறையில் சிதறும் பரல்கள்” எனும் கவிதை சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்யும் பின்நவீனத்துவக் கவிதையாக அமைந்திருக்கறது.

காமம் சார்ந்த கவிதை “ ஏதேன் சர்ப்பம்” . உடலிலிருந்து வெளியேறி விருப்பம்போல் தனித்தலைந்து மீண்டும் உடலுக்குள் நுழையும் மனம் பற்றிய புனைவுக்கவிதை “ இரவில் முளைக்கும் சிறகு” (ப.27).

திருமணம், கணவன், குடும்பம் எனும் பந்தத்திலிருந்து விடுபட்ட பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்துகிறது “தாழியின் வெளி”(ப.29).

“இடம் பெயரும் விதைகள்” கவிதையும் குறியீடாகவே பேசுகிறது. பாறை இடுக்கில் விழும் விதை பனித்துளி, காற்று, ஒளி ஆகியவற்றின் உதவியுடன் தடம் பதிக்கும் என்கிறார், கவிஞர்.

முளைக்கக் கூடாத இடத்தில் முளைத்துவிட்டு அல்லாடிக்கொண்டிருப்பது செடிகளுக்குத் தானே தெரியும்? பாறை இடுக்கிலோ, கட்டட விரிசல்களிலோ முளைப்பது செடிகளுக்கு நல்லதல்ல; அந்த இடத்திற்கும் நல்லதல்ல.

இருளுக்குப்பின் வெளிச்சம் என்பது போல வெளிச்சத்திற்குப் பின இருள் என்பதும் இயற்கை விதி.தண்டனை எனும் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் மீது கருணை கொண்ட ஆசிரியராக “பலி கேட்கும் பிரம்புகள்” எனும் கவிதையை எழுதியிருக்கிறார்.

“நீண்ட சிறகுகள்
வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்தேன்
உன் வாசலில்
அள்ளியெடுத்து மருந்திட்டாய்
மென் மெதுவாய்த் துளிர்த்தன சிறகுகள்
…. …… …..
….. ….. …..
துளிர்த்த சிறகுகள் கத்தரித்துக்
கூண்டுக்குள் அடைத்தாய்
…… ……. ……….”

மருந்திட்ட கரங்களே மீண்டும் சிறகு கத்தரிப்பதும் கூண்டுக்குள்
அடைப்பதும் பரிதாபம் தானே? புரிந்துகொள்ள முடிகிறது கூண்டுப்பறவையின் வலியை. எதற்கு இந்தக் கவிதை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன ‘இதயத்தின் சவப்பெட்டி’ போன்றகவிதைகள் .

கலவி குறித்து சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசுகின்றன. இரண்டுவிதமான கலவிகளை அக்கவிதைகள் பேசுவதாக உணரமுடிகிறது. ஒன்று வெறுப்புக் கலவி மற்றது விருப்புக்கலவி. ‘புணர்ச்சியில் கூட முனகல்கள் / தெருவெங்கும் இறைவதாய் / எரிச்சல்பட்டாய்’. என்பது வெறுப்புக்கலவி. விருப்புக்கலவிக்கு எடுத்துக்காட்டு ‘ஒளிரும் உடல்’ கவிதை.

“இரவை ஆடையாய் போர்த்தி
உன்னருகில் நான்
சற்று நேரத்துக்கு முன் தான்
வானவில்லின் வண்ணங்களை
வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும்
நரம்புகளில் இன்னமும்
சங்கீதம் அலை அலையாய்
……. ……. ………..”   

புணர்ச்சி இரவில் எழுதப்பட்ட இக்கவிதையை மிகவும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் செய்திருக்கிறார்.

“எரியும் பனிக்காடாய்
எனை மாற்றி
ஏதும் அறியாதவன் போல் உறங்குகிறாய் ”

இதில் வரும் ‘ஏதுமறியாதவன் போல்’ என்பது ‘செய்யறத எல்லாம் செஞ்சுட்டு… ஒண்ணும் தெரியாதவன் போல் இருக்கான் பாரு!’ என்பார்களே ஊரில்… அந்த தொனி!. ‘ஏதும் அறியாதவன்’ என்பது ‘எல்லாம் அறிந்தவன்’ என்று பொருள் படும்.

“காட்டாற்றில் மிதந்து வரும்
சிறு இலையென மிதக்கிறேன்”

காட்டாற்று வெள்ளம் திடீரென்று வருவது… கட்டுப்பாடற்றது.

“புரள்கையில்
நுகர்கையில்
தழுவுகையில்
ஒவ்வொரு முறையும் உயிர்க்கிறேன்
நாபிச்சுழி மலரும் மஞ்சள் மலரெடுத்து
அதிகாலை பரிசாய் அளிக்கிறேன்”

புணர்ச்சியை ஆழ்ந்தனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது இக் கவிதை.
இந்தக் கவிதையைச் சுண்டக்காய்ச்சித் தந்திருக்கிறார் வேறொரு கவிதையில் (நீல மலர் ப. 45).

மெல்ல உரைத்தல் (ப. 67) கவிதை, ‘இயக்கங்களையும் இசங்களையும் விவாதித்தோம் மணிக்கணக்கில்’ என்று தொடங்குகிறது. இயம் என்பதும் இசம் என்பதும் வேறுவேறல்ல;இயம் தமிழ்; இசம் ஆங்கிலம் .

‘Feminism’என்ற ஆங்கிலச்சொல் ‘பெண்ணியம்’ என்று
வழங்கப்படும்போது ‘ism’, ‘இயம்’ஆக வழங்கப்படுகிறது
.

இக் கவிதையில் தன் அறிவை வியந்த ஆடவன் தன்னை அழகானவள் என்று சொன்னதை விரும்பும் மனம் வெளிப்பட்டுள்ளது. ஒரேமாதிரியான கவிதைகள் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தொகுப்பு நிறைவாகவே உள்ளது.

 
யாரோ ஒருவரின் கவிதையாகப் பார்க்கும்போது பிரச்சினை
ஒன்றுமில்லை. மா.பொ.சி எனும் மாபெரும் ஆளுமையின்
பெயர்த்தியின் கவிதைகள் என்று பார்க்கும்போது ஏமாற்றம்
ஏற்படுவதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை.

 ஊடறுவில் “ஓசை புதையும் வெளி”அறிமுகம்

நன்றி தடாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *