“முனியம்மா”வும் பெண்ணியமும்

புதியமாதவி மும்பை

banvaridevi கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம்

கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம் என்று எல்லா தலைப்புகளிலும் பேசுவதற்குச் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் வழக்கம்போல மேனகாவின் தலையில் விழுந்தது.

எல்லோரும் வந்துக் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டாலும் அவர்கள் வந்து பேசி முடிக்கும் வரை அவளுக்கு  டென்ஷந்தான். நல்லபடியாக வரவேண்டும், சரியான நேரத்தில் வந்துவிட வேண்டும்,கொடுத்த தலைப்பில் ஆழமாகவும் நச்செனவும் பேச வேண்டும். இப்படியாக எதையாவது நினைத்து மனசைப் போட்டு குழப்பிக் கொண்டே நாட்கள் பறந்துவிட்டது. இதோ நாளை பெண்கள் தினம்.. மார்ச் 8..

ஆபிஸிலிருந்து வந்து வீட்டைப் பார்த்தவுடனேயே புரிந்துவிட்டது இன்று முனியம்மா வரவில்லை என்பது. காலையில் வாசித்த நாளிதழ்கள் சோபாவில் அங்குமிங்குமாக சிதறிக்கிடந்தன. ஆபிஷ் போகும் அவசரத்தில்  டைனிங் டேபுளில் சிந்திய காபி, சட்னி எல்லாம்  அப்படி அப்படியே இருந்தது. பெட்ரூமில் கட்டிலில் போர்வைகள் மடித்து வைக்கப்படவில்லை. வாக்கிங் ஷு வெளியில் இருந்தது.காய்ந்த துணிகள் பால்கனியில் விழுந்துக்கிடந்தன. பாத்ரூமில் குளிக்கும்போது கழட்டிப்போட்ட இரவு உடைகள் தொங்கிக்கொண்டு இருந்தன. தலைத்துவட்டிய டவல் அப்படியே ஈரமாகக் கிடந்ததால் புழுங்கிப்போய் வாடை வீசியது. வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சோப், டவல்.. எல்லாம் தாறுமாறாக.. அவள்  அப்படியே கைப்பையை சோபாவில் வீசிவிட்டு ‘பொத்’என்றுஉட்கார்ந்தாள். கிட்சனுக்குள் எட்டிப் பார்க்கவே பயமாக இருந்தது.

இரவு சாப்பிட்ட தட்டிலிருந்து காலையில் சாப்பிட்டதும் பிள்ளைகள் மதியம் வந்து சாப்பிட்டதுமாக எல்லாம் சேர்ந்து ஒரு குவியலாக இருக்கும். கிட்சனை நினைத்தவுடனேயே தலைவலிக்க ஆரம்பித்தது. அவளுக்கு  இரண்டும் பெண்குழந்தைகள். இரண்டும் தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கிறதே தவிர கொஞ்சம் கூட பொறுப்பில்லை. அவள் கோபம் இப்போது முனியம்மாவிடமிருந்து  பொண்ணுகள் மீது பாய தயாராக இருந்தது. பெரியவள் கீ போர்ட் க்ளாஸ்க்குப் போயிருக்கிறாள். சின்னவள் கராத்தே க்ளாஸ்க்குப் போயிருக்கிறாள். கணவர் வேலையிலிருந்து வீட்டுக்கு வர இரவு 9 மணிக்கு மேலாகும்.  சரி .. இன்னிக்கு வேலைக்காரி வரவில்லையே .. அம்மா வந்து என்ன செய்வாள் என்றாவது யோசித்திருக்க வேண்டாமா?

banvarideviமுனியம்மாவுக்கு வரவர கொழுப்பு அதிகமாகிவிட்டது. அடிக்கடி லீவு எடுக்கிறாள். போனால் போகிறது மாதத்தில் ஒரு நாள் லீவு எடுக்கலாம், அதையும் முந்திக்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்று சொன்னதுதான் தப்பாகிவிட்டது. அவள் இப்போதெல்லாம் இஷ்டப்படி லீவு எடுக்க ஆரம்பித்துவிட்டாள். வரட்டும், அவளுக்கு இனிமேதான் இருக்கு, என் புத்தி தெரியாமா அவ த்தாண்டி அடிக்கிறா.. அதுவும் எப்போ நமக்கு ரொம்ப வேலை இருக்கே அப்போ பார்த்துதான் அவ த்தாண்டி அடிப்பா. சனியன்.. இப்படியே இவள் வழக்கமாக்கிக்கொண்டால் முனியம்மாவுக்கு ஸீட் கிழிச்சிட வேண்டியதுதான். இவ லாயக்குப்பட மாட்டா.. பேசாம பழைய ஆயாவைக் கூப்பிட்டுக்க வேண்டியதுதான். ஆயா இவள மாதிரி கிடையாது. என்ன செய்ற வேலையை சுத்தமா செய்யாது. கண்ணுப்பார்வையும் மங்கிப்போச்சு. எப்பவும் இருமிக்கிட்டே இருக்கும். முனியம்மா பண்றதைப் பார்த்தா ஆயாவே பெட்டர்னு தோணுது..என்று பிள்ளைகள் வந்தவுடன் தன் முடிவைப் பற்றிப் பேசினாள். பிள்ளைகள் இருவரும் அவள் பேசுவதைக் கண்டுகொள்ளவே இல்லை. அம்மாவுக்கு இதே வழக்கமா போச்சு.. அம்மாவாவது.. முனியம்மா இல்லாமல் மேனேஜ் பண்றதாவது! என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார்கள் முனியம்மா லீவு எடுக்கும்போதெல்லாம் நடக்கும் இதேபல்லவி அவர்களுக்குப் பழகிப்போய்விட்டதுதான் காரணம்.

அப்போ பார்த்து பெண்கள் அசோசியேஷன் தலைவி போன் செய்தாள். மும்பை மேயரே விழாவுக்கு வர சம்மதித்துவிட்டதாகசொன்னாள். மேயரும் பெண் என்பதால் விழா இன்னும் களைகட்டும். அவசரம் அவசரமாக புடவையை மாற்றி நைட்டிக்குள் வந்தாள்.பாத்ரூமுக்குள் ஓடிப்போய் அங்கே குவிந்து இருக்கும் அனைத்தையும் வாரி அப்படியே அழுக்குத்துணிக் கூடையில் வைத்து மூடினாள்.கிட்சனுக்குள் நுழைந்து எச்சில் தட்டுகளை தண்ணீரில் முக்கி எடுத்து கிட்சனில் ஒதுக்கி இருக்கும் வாஷ்டக் – பால்கனியில் ஒரு பெரிய பக்கெட்டில் போட்டு மூடினாள். அதற்குள் இடுப்பு வலிக்க ஆரம்பித்துவிட்டது. கை நகத்தில் அழுக்குப் படிந்த மாதிரி இருந்தது, சந்தணமணம் கமழும் லிக்கொய்ட் சோப்பில் கையை இரண்டு நிமிடம் கழுவிக்கொண்டாள். டெலிபோன் டைரியை எடுத்து இரவு உணவுக்காக புளுமூன் ஹோட்டலில் ஆர்டர் செய்தாள். ஹோம்டெலிவரி என்பதை அவனிடம் உறுதிச் செய்தப்பின் மடிக்கணினியை எடுத்துகொண்டு இண்டெர்நெட் கனெக்ஷனில் பெண்ணியம் குறித்தச் செய்திகளை அப்படியே ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தாள். கருத்தரங்க தலைமை அவள்தான். எனவே எல்லா  தலைப்புகளைப் பற்றியும் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை விட எதாவது நான்குவரிகளாகவது பேசியே ஆகவேண்டும். ஒவ்வொரு பெண்ணியம் குறித்தும் நச்செனு நாலுவரி அவளுக்கு கிடைத்தது. எந்த வரிசையில் கூப்பிட்டால் நல்ல இருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள்.

 என்னதான் ப்ளான் செய்துவைத்திருந்தாலும் எப்போதுமே கூட்டம் நடக்கும் போது வந்திருப்பவர்கள் என்னவோ அவர்களுக்கு அன்றைக்குத்தான் இன்னும் இரண்டு மூன்று கூட்டங்கள் இருப்பது போலவும் தன்னை முதலில் பேசச் சொல்ல வேண்டும் என்றும் அதிகாரம் கலந்த வேண்டுகோள் வைப்பார்கள். வேறுவழியில்லாமல் அவர்களைக் கூப்பிட்டாக வேண்டும். எப்படியோ ஒரு வழியா எல்லாத்தையும் தீர்மானித்துக் கொண்டு பேசப்போகும் அறிவுஜீவிகளைப் பற்றியும் சின்னதாக இரண்டொரு வரிகளில் அறிமுகத்தையும் நோட்பேடில் பாயிண்ட் பாயிண்டாக குறித்துக் கொண்டாள். மறக்காமல் டெஸ்க்டாப்பிலேயே அந்த ஃபைலை வைத்துக்கொண்டாள். அப்போதுதான் தலித் பெண்ணியம் குறித்து எதுவும் குறித்துக் கொள்ளவில்லை
 என்பது நினைவுக்கு வந்தது. ‘ஓ இது ஒன்னிருக்கே.. ரொம்ப முக்கியமானதாச்சேஇ எப்படி மிஸ் பண்ண முடியும்?
தலித் பெண்ணியம் குறித்து பேச வந்திருக்கும் பேராசிரியை அவள் நெருங்கிய தோழிதான். நல்லப் பேசக்கூடியவர் வேறு. என்ன எப்போதும் உணர்ச்சிவசமாகப் பேசக்கூடியவர். கடைசியா போடலாம் அவரை என்று நினைத்து கொண்டு தலித் பெண்ணியம் குறித்து என்ன மாதிரி அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வந்தாள்.

சிவகாமி, சுகிர்தராணி, அரங்க மல்லிகா, புதியமாதவி.. இவர்களின் கவிதைகள் கைவசமிருந்தது. ஆனால் ஒருவர் கவிதையை மட்டுமே சொன்னால் மற்றவர் கோபித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது அப்போதுதான் 1995ல் பீஜிங்கில் நடைபெற்ற உலகப் பெண்கள் கருத்தரங்கில் அனுபாமா ராவ் பேசியது நினைவுக்கு வந்தது. கோபால் குருவின் கட்டுரை வாசகத்தைத்தான் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார். சரி அதெல்லாம் எப்படியும் இருக்கட்டும்.
பீஜிங்கில் உலகப்பெண்கள் கருத்தரங்கில் வித்தியாசமாக ஒலித்த அனுபமா ராவின் குரல்: னுயடவை றழஅநn வயடம னகைகநசநவெடல – தலித் பெண்ணின் குரல் வித்தியாசமானது – என்று சொன்னால் நச்சுனு இருக்கும்னு தோன்றியது. அவளுக்கு அவளே ஒரு சபாஷ் போட்டுக்கொண்டாள். சரியான நேரத்தில் சரியான வாசகங்கள் நினைவுக்கு வருவதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான் . ஒருவழியாக அவள் தன் பேச்சுக்கான எல்லா குறிப்புகளையும் தயார் செய்து முடிக்கவும் ஹோட்டலிலிருந்து அவள் ஆர்டர் செய்த சப்பாத்தி ரைஸ் சப்ஜி எல்லாம் வரவும் சரியாக இருந்தது.

அவனிடமே மறுநாள் காலை உணவுக்கும் சேர்த்து ஆர்டர் செய்துவிட்டு கை நகத்தில் இருக்கும் நகப்பூச்சை அதற்குரிய க்ளீனரை பஞ்சில் நனைத்து துடைத்தாள். மறுநாள் பங்ஷனுக்கு கட்ட தயாராக வைத்திருக்கும் கல்கத்தா காட்டன் சாரிக்கு மேட்சிங்காக அதே நிறத்தில் அடிக்கவர்ற மாதிரி கலரில்  இளிக்காமல் ஷோபரான வண்ணத்தில் இருக்கும் நகப்பாலிஷை எடுத்துக் கவனமாக இரண்டு கோட்டிங் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் .. மார்ச் 8 மீட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது இரவு 8 மணி இருக்கும்.. வீட்டுக்கு வரும்போது வீடு பளிச்சென்று இருந்தது. முனியம்மா அவள் வரும்வரை காத்திருந்தாள். அவள் ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை என்று டோஷ் விட நினைத்தாள். ஆனால் அவள் பேச்சு அன்றைக்கு சூப்பராக இருந்தது என்று ஒருவர் மாற்றி ஒருவர் போனில் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.. அந்தப் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்தவளுக்கு முனியம்மாவைத் திட்டி தான் நல்ல மூடில் இருப்பதைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை.

‘ஆமாம்மா.. என் கண்ணெ பட்டுடும் போலிருக்கே. என்ன பேச்சு. எம்புட்டு விசயங்களைப் பத்தி யோசிக்கிறீக, என் பொண்ணு காலேசிலே படிக்கிறாள்லே அவளுக்குச் சொல்லிக்கொடுக்கிறப் பெரிய்ய ம்மேட்டம்வந்திருந்தாகளாம். அதுதான் என்னையும் இழுத்துக்கிட்டு போயிடுச்சி. நீங்க பேசி முடிக்கற வரைக்கும் இருந்துக் கேட்டுட்டுதானே வந்தேன். நல்லா சொன்னீகம்மா.. பொம்பள என்ன கிள்ளுக்கீரையா.. அவளை அம்மன்சாமியேனு கும்பிட்ட மட்டும் போதுமானு நீங்க கேட்டீக பாருங்க ஒரு கேள்வி.. எங்க மாரியாத்தா கதையைக் கூட சொன்னீகளே.. எனக்கு அப்படியே கண்ணுலே நீர் கோத்துக்கிட்டு விம்மல் வந்திடுச்சி.. ‘முனியம்மா பேசிக்கொண்டே போனாள். என்னவோ அவள் பாராட்டித்தான் பேசினாலும் அவள் பேசுவதைக் கேட்க அவ்வளவாக விருப்பமில்லை.

இரண்டொரு நாளில் யாரும் எதிர்பார்க்காமல் அது நடந்தது. முனியம்மாவை வேலையிலிருந்து எடுத்துவிட்டாள்.
இப்போதெல்லாம் ஆயா கிழவி தான் வேலைக்கு வருகிறாள். மெதுவான சப்பாத்தி, சூடான தேநீர், பளிச்சிடும் கிட்சன், சோப், டவல், டிஷ்யு என்று ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்ரூம் என்று எதிலுமே முனியம்மா மாதிரி ஆயாகிழவியால் வேலைச் செய்ய முடிவதில்லை.

ஆயாகிழவியிடம்  கத்தி கத்தி வேலை வாங்குவதைவிட நானே செய்துவிடலாம் போலிருக்கு! என்று தொலைபேசியில் தன் தோழியிடம் அலுத்துக் கொண்டிருப்பது அவள்தான்.

1 Comment on ““முனியம்மா”வும் பெண்ணியமும்”

  1. பெண்னொடுக்குமுறை என்பது ஒன்றாகவிருந்தாலும,; பெண்விடுதலைப்போராட்டங்கள் வா;க்க ரீதியாகத்தான் முன்னெடுக்கப்படமுடியுமென்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *