அடுப்படி – தாண்ட வேண்டிய – மகளிர் நாள் சிந்தன 2011

வியா (இந்தியா) 

march 8 2011 IWD-Strip-Banner

வழமை போல் இந்த ஆண்டும் மார்ச் 8 மகளிர் நாள் நம் முன் நிற்கிறது. ஒரு புறம் பெண்ணுரிமை இயக்கங்கள் இந்த நாளை பெண்கள் சமூகத்தின் எழுச்சி நாளாகக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளைஅரங்கேற்றுகிறார்கள். மற்றொரு புறம், இந்த நாளை சீரணித்துக் கொண்டு விட்ட பழமை வாத ஆணாதிக்க மரபு அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுமங்களும், விளம்பர உலகமும் கைகோர்த்துக் கொண்டு இந்த நாளை ஆண்கள் இரசிக்கும் பெண்கள் உலகின் கொண்டாட்ட நாளாக மாற்றியமைத்து வருகிறார்கள். பத்திரிகைகள், ‘சமையல் ஸ்பெஷல் இணைப்பு’ வெளியிடுகிறார்கள். தொலைக் காட்சிகளில் நடிகைகள் விதவிதமான உடையலங்காரங்களில் தோன்றிச் செல்கிறார்கள். ஆண்கள், பெண்களுக்கு ‘பூ’ கொடுக்கிறார்கள். ‘வளையல்’ கொடுக்கிறார்கள். வீட்டில் போட்டது பத்தாது என்று அலுவலகங்களிலும் பெண்கள் ‘கோலம்’ போடுகிறார்கள். பெண்கள் அதிகம் வேலைபார்க்கும் அரசு அலுவலகங்களில் இன்னொரு ‘ஆயுத பூஜை நாள்’ போல் ஆகி விடுகிறது.

 இன்னொரு ‘அம்மா நாள்’ ‘காதலர் தினம்’ போல் ஆகி விட்ட இந்தப் பெண்கள் தினமும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையை மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்த வரையில் பெண்கள் சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பரிசீலனைக்குரிய நாளாகவும் வரவிருக்கும் நாட்களில் நமது இலக்கை அடைய நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடும் நாளாகவும் அமைப்பு வழியாக திரண்டிருக்கும் பெண்கள் தங்கள் அமைப்புகளின் வளர்ச்சி குறித்து கருத்துக்களை திரட்டிக் கொள்ளும் நாளாகவும் இந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறோம்.

 

greenwave12

 தமிழ்ச் சூழலில் பெண்களின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றி இப்போது சிறிது சிந்திப்போம். ஒர் அய்ம்பதாண்டு காலம் நமது ஒப்பீட்டளவாக எடுத்துக் கொண்டால் பெண்களின் வாழ்க்கை குறிப்பிடத் தக்க அளவில் மாறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகம் பெண்களைக் கல்வி கற்க இன்று´அனுமதித்திருக்கிறது. இன்று கிராமங்களில் கூ ட கிட்டத்தட்ட அனைத்துப் பெண் குழந்தைகளும் படிக்கிறார்கள். இது சாதனைதான். ஆனால் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தால் இன்று படிக்காத பெண்களைக் கல்யாணம் செய்ய ஆண்கள் தயாராக இல்லை. பெண்கள் படிக்கத் துவங்கிய காலகட்டத்தில் படித்த பெண்ணை ஆண்கள் எதிர்கொள்ளத் தயங்கினார்கள். இன்று படிக்காத பெண்ணை அவர்கள் ஏற்றக் கொள்ளத் தயாராக இல்லை. இந்த ஒரு விசயம் நமது ஆழ்ந்த சிந்தனைக் குரிய ஒன்று. இதனுடைய பொருள் என்ன? இன்று என்ன ஆண்கள் எல்லோரும் பெண்ணியவாதிகளாக மாறிவிட்டார்களா என்ன? பிறகெப்படி படித்த பெண் இவர்களுக்கு அதிஅத்தியாவசிய தேவையாக மாறியது நிகழ்ந்திருக்கிறது? என்ன நடந்தது இந்த இடைவெளியில்? படித்த பெண்கள் இவர்கள் பயந்தது போல் எல்லோரும் புரட்சிப் பெண்களாக மாறிவிடாமல் இவர்களுக்கேற்றாற் போல் பாந்தமாக இவர்களுக்கு வருமானம் தரும் வாசலாக சமைக்கப் பட்டு விட்டார்கள் என்பதுதான் இவர்களது இந்த செரிமானத்துக்கு உண்மையான காரணமாகும். பெண் வேலைக்குப் போகிறாள் என்று சொல்லும் போது ஒரு விசயம் இருட்டுக்குள் தள்ளப் பட்டு இடித்துக் கொண்டு நிற்கிறது.

அது என்னவென்றால், ‘அப்படியென்றால் இத்தனை காலம் பெண் வேலை செய்யாமலா இருந்தாள்?’ என்பதுதான். வீட்டிலும் வயலிலும் அவள் செய்த, செய்து வரும் வேலைகள் முற்றிலுமாக அடிமை உழைப்பாக ஏற்கனவே ஆக்கப்பட்டிருக்கின்றன. கல்வி கற்று அவள் வேலைக்குப் போன போது இந்தப் புதிய அறிவுசார் தளம் அவளது இந்தப் புதிய உழைப்பை அடிமை உழைப்பாக மாற்ற அனுமதிக்காதோ என்ற அய்யயப் பாட்டின் மீதுதான் ஆணின் அச்சம் எழுந்தது.

march 10

 அந்த அச்சமே இடைக்கால சமூகக் கருத்தியலில், படித்த பெண் மீதான ஓர் அவநம்பிக்கையுணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியது. அனைத்து இலக்கிய ஊடகங்களும் இப்பணியைத் தீவிரமாக செய்தன. இதன் விளைவு படித்த பெண் முன்னால் பல அக்கினிக் குண்டங்களும், இராமாயணக் கோடுகளும் போடப் பட்டன. படித்து வேலைக்குப் போகும் ஒவ்வொரு பெண்ணும், சமையலையும் வீடு பராமரித்தலையும் தான் கைவிட்டு விடவில்லையென மீண்டும்   மீண்டும் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய நிலைக்கு ஆளானாள். தான் பெற்ற அறிவும் சேர்த்து ஆணுக்கேதான் அர்ப்பணம் என்றும் தான் படித்ததனால் தனக்கு எந்தத் திமிரும் வந்து விடவில்லையென்றும் வாழ்ந்து காட்ட வேண்டிய புதிய விதி அவளுக்கு அழுத்தமாக எழுதப் பட்டது. பெண் படித்தாலும் இங்கிலீசு படிக்க வேண்டாம் என்று எந்த அச்சத்தில் இந்து நாளேடு தலையங்கமே எழுதியதோ, அந்த அச்சத்தைப் போக்கிட
‘இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பிளை’ என்று பெண்களின் ‘கனவு நாயகன் எம்ஜிஆர்’ பாடி அது அனைத்து ஆண்களின் கட்டளையாக வீட்டுக்கு வீடு பாடப்பட்டது.

மாரியாத்தா கோவில்களில் கூட காலையில் இரண்டு பக்திப் பாடல் பாடி முடிந்ததும் இந்தப் பாட்டைத்தான் போட்டார்கள். கல்யாண வீட்டில் மறக்காமல் போட்டார்கள். கூடவே குணச்சித்திர நடிகர் சிவாஜி ‘புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’ என்று கூப்பிட்டழைத்து நிறைய கட்டளைகள் பிறப்பித்தார். கடைசியில் ‘குடும்ப விளக்குக்’ காவியம் பாடி எங்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் அதைத்தான் திருப்பிச் சொன்னார். இவற்றை யெல்லாம் தாண்டி மிகப் பெரிய அக்கினிக் குண்டம் ஒன்று ‘கற்பு’ என்ற பெயரில் போடப் பட்டிருக்கிறது. படி தாண்டினாலும் நாங்கள் பத்தினிகள் தான் என்று நிரூபிக்க வேண்டிய நெருப்பு வளையம் எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இடைக்கால சீர்திருத்தவாதிகள் பெண்களின் விதவை நிலையை மிகக் கொடுமையானதென விவரித்தார்கள். உண்மையில் வேலைக்குப் போகும் பெண்களின் வாழ்வில் அந்தக் கொடுமையைத் தூக்கி சாப்பிடும் நிலைகள் ஏராளம் உண்டு. இடைக்கால சீர்திருத்த வாதிகள் விவரித்த பெண் விடுதலைக் கோட்பாட்டில் அதற்கெல்லாம் தீர்வுகள் கிடையாது.

 

march2011 3ஆனால் இத்தனையும் தாண்டி பெண்ணுரிமைச் சிந்தனை பெண்களிடையே வளர்ந்திருக்கிறது பெண்கள் இயக்கங்கள் வளர்ந்திருக்கின்றன என்ற உண்மையை மறுப்பதோ மறைப்பதோ இக்கட்டுரையின் நோக்கமன்று. பெண் விடுதலை என்பது பெண் கல்வி அல்லது பெண் அலுவலகங்களுக்கு வேலைக்குப் போவது என்று சுருக்கப் பட்டு இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பெண்கள் இன்று வளர்ந்து விட்டார்கள் அனைத்து உரிமைகளும் பெற்று விட்டார்கள் என்று எழுதப்படும் சித்திரம் எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியே இக்கட்டுரை சிந்திக்கிறது. இத்தனைக்கும் பிறகு ஏன் இந்த சமூகத்தால் பெண் பிறப்பு என்பதே வேண்டப்படாத ஒன்றாக இருக்கிறது? தமிழகத்தின் புள்ளிவிவரம் ஒன்று பெண்கள் எண்ணிக்கை மக்கள் தொகையில் குறைந்து வருகிறது என்பதைத் தெரியப்படுத்துகிறது. அதனை ஆய்ந்து நோக்கும் போதுதான் நாம் இன்னும் அடிப்படையான சூத்திரக் கயிறுகளை அறுக்காமல் இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். அதில் ஒன்றுதான் பெண்ணுக்கும் அடுப்படிக்கும் இருக்கும் இணைப்பு. பெண்ணுக்கு வீட்டுக்கு வெளியே போகும் சுதந்திரம் வழங்கப் பட்டது போல் தோன்றுகிறதே ஒழிய அவளை அடுப்படியில் கட்டிப் போட்ட கயிறின் முடிச்சு அவிழ்க்கப் படவேயில்லையே?

இந்த இடத்தில்தான்’ வீட்டுக்கு ஓர் அடுப்பங்கரை என்பதும் ஒரு ஆம்பிளைக்கு ஒரு பொம்பிளை என்பதும் ஒழிக்கப் படாமல் பெண் சுதந்திரம் என்பது சாத்தியம் இல்லை’ என்று சொன்ன பெரியாரின் வார்த்தைகள் எதிர்காலத்திற்குள் எவ்வளவு தூரம் பயணித்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொது சமையற் கூடங்கள் அமைத்திடுங்கள் என்று அந்தத் தலைவன் சொன்ன போது அதைக் கற்பனாவாதம் என்று மதவாதிகள் சொல்லவில்லை. இந்த நாட்டின் பொதுவுடமை இயக்கத் தோழர்கள்கூறினார்கள். பொதுவுடமைச் சிந்தனை என்பதை அரசுஎதிர்ப்பு இயக்கம் என்பதாக மட்டுமே சிந்தித்துப் பழகியதால் பொதுக் கூடங்கள் அனைத்துத்துறையிலும் முக்கியமாகக் குழந்தை வளர்ப்பிலும் சமையலிலும் ஏற்படுத்தாமல் நாம் எப்படி தனியுடமை மனோநிலைய மாற்ற முடியும் என்று சிந்திக்க முடியாமல் போனதுடன் அது கற்பனாவாதம் என்று முத்திரை குத்தும் அளவுக்கு போய் விட்டது. ஆனால் இன்று ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவு விடுதிகளில் வரிசைகளில் அமர்ந்திருக்கும் குடும்பங்களைப் பார்க்கும் போது இது சாத்தியமென்றால் பொது சமையற் கூடங்கள் ஏன் சாத்தியமில்லை என்று இந்த இயக்கங்கள் சிந்தித்தன என்ற கேள்விக்கு என்ன பதில்? அனைத்து இயக்கங்களும் ஆண்கள் தலைமையிலானவை என்பது தவிர வேறென்ன பதில்? சரி. இந்த பொது சமையற்கூடங்கள் என்பது குறித்து தொடர்ந்து சிந்திப்போம். முதலில் நாம் ஏன் பொது சமையற்கூடங்களை வலியுறுத்தகிறோம்.

குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்பை மாற்றியமைக்கும் முயற்சியில் முதற்கட்டமாக குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்பை மாற்றியமைக்கும் முயற்சியில் முதற்கட்டமாக ஆண்களும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். நம்முடைய தோழர்களிலேயே ஒருசிலர்தான் இதனை நடைமுறைப்படுத்த முடிந்தது. ஒட்டு மொத்த சமூகத்தில் நேரமின்மை என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஆண்கள் ஒரு சில குடும்பங்களில் முக்கியமாகக் காலை நேரங்களில் மட்டும் மனைவிக்கு உதவி செய்கிறார்கள். ஆனால் இன்னும் இது உதவி என்ற நிலையிலிருந்து வேலைப் பகிர்வு என்ற நிலைக்கு வரவில்லை. இப்போது இந்த ரீதியில் நாம் எதிர்கொள்ளும் சில நடைமுறை ரீதியான கேள்விகளை கருத்தில் கொள்வோம்.

ஆண்கள் இந்த வேலைப் பகிர்வு என்று வருகின்ற போது இதை விட முக்கியமான தங்கள் வேலைகளை தங்களுடைய மனைவிமார் பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார்கள். எப்போதுமே சமையல் முக்கியமான வேலையாக பார்க்கப் படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுவோம். ஏன் ஒவ்வொரு வீடும் தனியாக சமையல் செய்யய வேண்டும்? எப்படி எந்தவொரு தொழிலும் பெரிய அளவில் செய்யயப் படும்போது அதனை மிக சிக்கனமாக செய்யய முடியுமோ அப்படித்தான் சமையலும் ஏன் அதனை ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனியாக செய்யய வேண்டும்? ஒவ்வொரு பகுதிக்கும் பொதுவான சமையல் கூடங்களை அங்க குடியிருப்போர் சேர்ந்து ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது? இப்போது வர்த்தக ரீதியான உணவு விடுதிகளை அதாவது « ஹாட்டல்களை மக்கள் நாட முடியாமல் இருப்பதற்கு முகாமையான காரணம் உயர்ந்த விலை, மற்றும் சுகாதாரத்தில் மற்றும் ஆரோக்கியமான சமையல் என்பதில் நம்ப முடியாத நிலை, இவற்றை சரி செய்யயும் பொது உணவுக் கூடங்கள் அவற்றால் பயன்பெறும் மக்களால் கூட்டுறவு முறையில் நடத்தப் படுமேயானால் அது மிகச் சிறந்த வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும்.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை’ என்று அம்பை ஓர் கதை எழு தியிருக்கிறார். அந்தக் கதை எப்படி சமையல் அறை பெண்ணை அடிமை வாழ்வோடு பிணைத்து வைத்திருக்கிறது என்று அழுத்தமாக எடுத்தரைத்திருக்கிறது. அதற்கு ஒரே பதிலீடு ஒவ்வொரு குடியிருப்பிலும் நடுநாயகமாக ஒரு பொது உணவுக் கூ டத்தை நிறுவுவதுதான். இதன் பலன்கள் பலவாகும். முதலாவதாக வீட்டின் ஒரு பகுதி இடம் மிச்சம். பெரிய அளவில் அண்டா குண்டா பாத்திரங்கள் அவற்றை பாதுகாத்து வைக்கும் பரண் இதெல்லாம் தேவையில்லை. அரவரவர் உடல் தேவைக்கு ஏற்ப வேறு வேறு வகைப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளலாம். ஒரு தனி வீட்டில் ஒருவர் நோயாளி குறிப்பாக வீட்டின் தலைவர் நோயாளியாகி விட்டால் அநேகமாக எல்லோருக்குமே பத்தியச் சாப்பாடுதான் கிடைக்கும். உணவின் செலவு குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் சமையல்
மற்றும் அடுப்படி சார்ந்த சாதிய மற்றும் பெண்களின் குறுங்குழு மனோநிலை சார்ந்த மறைமுக
அதிகாரத்திலிருந்து மனித இனத்தை விடுவிக்க இதை விட சிறந்த வழி வேறு எதுவுமில்லை.

குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் போது குடும்ப உறவு வலுப்படுமென்றால் குடும்பங்கள் இணைந்து உட்கார்ந்து சாப்பிடும்போது சாதி ஒழிந்து கமூக உறவு மேம்படும் என்பது வெள்ளிடைமலை உண்மை அல்லவா? அது மாத்திரமல்ல நமது நாட்டில் சமையலில் கூட சாதியம் காக்கப் படுகிறது, இன உயர்வு பேணப் படுகிறது என்கிற போது இந்த சமையலில் தனி நிலையை அழிப்பது என்பது சாதியழிப்பிற்கு மிகப் பெரிய பங்காற்றும் என்பதில் அய்யமில்லை. அடுப்படி அது இந்த நூற்றாண்டில் பெண்கள் மட்டும் தாண்ட வேண்டிய படி அல்ல மாறாக அனைத்து வீடுகளும் தாண்ட வேண்டிய படி அது; பெண் விடுதலைக்காக அல்ல மாறாக மனித இனத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்காக. தனது தனிமனித சேவைகளுக்காக பெண்ணை சார்ந்திருக்கிற ஓர் ஆண் அந்தப் பெண்ணை நேசிப்பதும் தனது பொருளாதாரத் தேவைகளுக்காக ஓர் ஆணை சார்ந்திருக்கிற ஒரு பெண் அந்த ஆணை நேசிப்பதும் மாறி உண்மையான காதலர்களாக இவர்கள் வாழ வேண்டும் என்றால் அவர்களின் இந்த பரஸ்பர சார்பு நிலை மாற வேண்டும். எனவேதான் நாம் சொல்கிறோம் இந்த மகளிர் தின சிந்தனையாக –  நாம் ஒவ்வொருவரும் தயாராவோம் – இந்த அடுப்படி என்ற படியைத் தாண்டிச் செல்ல

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *