எழுத்தாளர் “அம்பை”யுடன்

புதியமாதவி (மும்பை)

ambai ‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?

மும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும்காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவைஎன்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில்மிகவும் தேவை என்பதாலும் மும்பை தமிழ் போஸ்ட் வார இதழை நடத்திய அனுபவமிக்கநண்பர் ராஜாவாயிஸ் அவர்கள் இந்த அமைப்பை டிசம்பர் 2010 முதல் நடத்திவருகிறார். மும்பை, சிந்தனையாளர் சங்கமத்தின் மூன்றாம் அமர்வில் எழுத்தாளர் அம்பைசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல், மொழி, ஊடக சந்தை என்ற தலைப்பில் தன் கருத்துகளை முன்வைத்தார். பிப், 6ல் மாலை 6.30க்கு மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில் இருக்கும் பரவர்சங்கத்தில் இக்கூட்டம் நடந்தது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர்,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டு கலந்துரையாடல்ஆரோக்கியமாக நிகழ உறுதுணையாக இருந்தார்கள்.

எழுத்தாளர் அம்பையைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மிகவும் சுருக்கமாகக் கொடுத்தார் எழுத்தாளர் புதியமாதவி. 1960களில் அம்பை எழுத வந்தக் காலத்தில் நம்மில் பலர் பிறந்திருக்கவில்லை. சிலர் அப்போதுதான் அ- அம்மா என்று எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தோம் என்று ஆரம்பித்த புதியமாதவி, இன்றைக்கும் அம்மையின் எழுத்துகளின் சிகரத்தைத் தொட்டுவிட இன்னும் தொலைதூரம் எங்களுக்கெல்லாம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்பதுதான் அம்பையின் சிறப்பு என்றார். 1970களில் அம்பை ‘கசடதபற’ இதழில் எழுதி வெளிவந்த ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ சிறுகதை 1978ல் மதுரை பல்கலை கழகத்தில் முதுகலை படிக்கும் காலத்தில் எங்களால் மிகவும் பேசப்பட்ட கதையும் விவாதிக்கப்பட்ட கதையுமாக இருந்ததை நினைவு கூர்ந்தார். ‘அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்’ என்ற புதுக்கவிதையும் இக்கதையுடன் சம்ப்ந்தப்படுத்தி பேசப்பட்டதையும் தானும் தன் தோழியரும் இக்கதையின்ஊடாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதையும் சொன்னார்.

வயதான தன் தாயை அருகிலிருந்து கவனித்தக் காலத்தில் எல்லாம் அம்பையின் வரிகள் நினைவுக்கு வந்ததாகவும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை அனுபவமும் அந்தந்த பருவ காலத்து நினைவுகளுடன் அம்பையின் கதைகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும்சொன்னார். “ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்” என்ற அம்பையின் வரிகளைச் சொன்ன புதியமாதவி , அம்பையின் கதைகளை வாசித்தப்பின் தோசையின் மீதிருந்த விருப்பம் காணாமல் போனதையும் 10 அல்லது இருபது வருடங்களுக்கு மேலாக எத்தனை இலட்சக்கணக்கான தோசைகளைப் பெண் செய்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர வைத்தவை அம்பையின் கதைகள் என்றும் அதன்பின் தோசை மீதிருந்த விருப்பம் காணாமல் போய்விட்டதை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பதிவு செய்திருப்பதையும் எடுத்துக்காட்டி அம்பையின் எழுத்துகளைத் தேடி வாசிக்கும்படி அனைவருக்கும் வேண்டுகோள் வைத்தார். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி அமைப்பினரால் கலைஞர் பொற்கிழி விருது சிறுகதைகளுக்காக அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியானர்வர்களை அடையாளம் கண்டு விருது வழங்குவதன் மூலம் சில சமயங்களில் விருதுகளும் தங்களைக் கவுரவித்துக் கொள்கின்றன என்று சொல்லி அமர்ந்தார் புதியமாதவி.

‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ கதையைப் பற்றி பேசினார் புதியமாதவி, அந்தக் கதை இடம் பெற்ற தொகுப்பு 1976ல் வெளிவந்தது. கிணற்றில் போட்ட கல் மாதிரிதான், அத்தொகுப்பு குறித்த விமர்சனங்களும். என்று ஆரம்பித்த அம்பை தன் எழுத்துப்பயணம் குறித்தும் தெளிவாகவும் உறுதியாகவும் ஆற்றொழுக்கான நடையில் ஒவ்வொரு சொற்களையும் தேர்ந்தெடுத்து ஆழமாக தன் கருத்துகளை முன்வைத்தார். அவற்றில் சில:

“நான் சென்னை கிறிஸ்டின் காலேஜில் பட்டப்படிப்புக்காக வந்தப் போது என் வீட்டில் அம்மாவின் கைவளையளை வைத்துதான் படிக்க அனுப்பும் பொருளாதர நிலை இருந்தது. கட்டாயம் மேற்படிப்பு படித்தே ஆகவேண்டும் என்று என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். அதுவரை பாவாடை தாவணியில் இருந்த எனக்கு கல்லூரியில் படிக்கப்போவதால் வீட்டில் நான்கு புடவைகளும் ஒரு டிரங்க்பெட்டியும் வாங்கினார்கள். என்னை தாம்பரம் கிறிஸ்டின் காலேஜில் விட அம்மாவும் கூட வந்தாள். கல்லூரி வாசலில் என்னைத் தனியாக விட்டு பிரியும் போது அம்மாவின் குரல் என் காதுகளில் விழுந்தது. “லஷ்மி, என் கனவெல்லாம் நினவாகிவிட்டது’ இன்றும் அந்தக் குரல் .. என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதன்பின் என் புத்தகம் வெளிவந்தது, ஓருநாள் அவளிடம் அவள் சொன்ன வார்த்தைகளைச் சொன்னபோது என் அம்மா என்னிடம் கேட்டாள், ‘அப்படியா சொன்னேன், நினைவில்லையே!” என்றாள் . வார்த்தைகளைச் சொன்னவர்கள் மறந்துவிடலாம், ஆனால் கேட்டவர்கள் மறப்பதில்லை”.
 

“ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம் நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர் சொன்னார் . ‘என் ஜன்னலகளைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன’ என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை என்னிடமும் சொல்லி ‘உங்களுக்கு எப்படி? ‘ என்று கேட்டார்கள். நான் சொன்னேன். அவருடைய பதில், ஜன்னல், பறவை என்பதெல்லாம் ரொம்பவும் கவித்துவமானதுதான். ஆனால் பெண்களுக்கு அப்படி அமைவதில்லை என்றேன். மேலும் ஜன்னல் இருப்பதும் அதைத் திறக்கும் அதிகாரமும் அப்படியே திறந்தாலும் அதில் பறவைகள் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரமும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமே!” என்றேன்.

“குமுதம் பத்திரிகை ஆபிஸில் காலையில் எல்லோரும் கூடுவார்கள். பகவத்கீதையிலிருந்து ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பேசி கலைந்தவுடன் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்களின் புகைப்படத்தில் எந்தப் படத்தை எந்தப் பக்கத்தில் போடலாம் என்பதைக் குறித்து பகவத்கீதைப் பற்றிப் பேசியவரே செலக்ட் செய்வார். இங்கே அவர் பேசிய பகவத்கீதைக்கும் குமுதத்திற்கும் சம்ந்தமில்லாமல் போய்விடுகிறது. பத்திரிகை ஊடகத்தில் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் சமரசம் செய்துக் கொள்ளாமல் எழுதுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. சிறுபத்திரிகைகளின் பங்கு பாராட்டுதலுக்குரியது.”

 

‘பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்? “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பைப் பற்றிய அறிமுகத்தில் நான்கு கதைகள் பெண்களைக் குறித்தவை. மீதிக்கதைகள் சோதனைக் கதைகள் என்றார் நண்பர் ஒருவர். ஆமாம் யாருக்குச் சோதனையாக இருக்கிறது அக்கதைகள் என்று நானே அவரிடம் கேட்டேன். ஆண்களைப் பற்றி ஆண்கள் எழுதினாலும் பெண்கள் எழுதினாலும் அவை எல்லாம் வாழ்க்கையைப் பற்றியதாகப் பார்க்கப்படுகிறது. இச்சமூகத்தில் ஆணே சமுகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகப் பார்க்கப் படுகிறான். ஆண் செய்வதும் ஆண் எழுதுவதும் சமூகத்தின் பொதுமைப் பண்புகளாக அடையாளப்படுத்தப் படுகின்றன.”

“பட்டுணர்வு எந்தளவுக்கு மொழியை நெருங்கிறதோ அதற்கேற்ப மொழி மாற்றம் அடைகிறது. நான் அந்திமாலை நாவல் எழுதும் போதிருந்த என் மொழி இன்று என்னிடம் இல்லை. அந்த நாவலில் பேசப்பட்டிருக்கும் ஆண்-பெண் உறவில் உடல் இச்சை தவிர்க்கப்பட்டிருக்கும். உடல் உள்ளம் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஆண் பெண் உறவில் உடல் இரண்டாம் நிலைக்கு வந்து உள்ளமே பிரதானமாக்கப்பட்டிருக்கும். அந்த நாவலை எழுதிய காலக்கட்டத்தில் எனக்கு காதலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை, ஆண்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. உடலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் என் கதைகளில் என் மொழி மாற்றமடைந்திருப்பதை கணையாழியின் ஆசிரியர்தான் எனக்கு முதன் முதலில் சுட்டிக் காட்டினார்.”

“ஆனந்தவிகடனில் ஒரு கதையாசிரியர் முதிர்கன்னியை ஊசிப்போன பண்டம் என்று எழுதி இருந்தார். ஒரு பெண்ணை ஊசிப்போன பண்டம் என்று சொல்கிற பண்பாடு நம் தமிழில்தான் இருக்கிறது. வேறு எங்கும் நான் கேள்விப்படவில்லை.”

கலந்துரையாடலின் போது:

தமிழ் லெமுரியா மாத இதழின் ஆசிரியர் திரு.சு. குமணராசன் : நீங்கள் பேசிய ஆண்-பெண் உறவில் பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியதில் பெரும்பங்கு இந்துமதத்திற்குத் தான் இருக்கிறது.
உங்கள் கருத்து என்ன?

ambai

அம்பை: நான் உங்கள் கருத்தை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். இந்து மதக் கடவுள் கதைகள் அனைத்திலும் பெண் இரண்டாம் நிலையில் இருப்பவள். அதாவது சார்ந்திருப்பவள்.
நான் கலந்துக் கொண்ட ஒரு கருத்தரங்கில் symbol and Civilization என்ற தலைப்பில் பேசியவர் இந்துமதக் கடவுளின் புகைப்படங்களை ஆதாரமாக்கிப் பேசினார். விஷ்ணுவின் காலடியில் உட்கார்ந்து லட்சுமி கால்களை அமுக்கி தடவி விட்டுக் கொண்டிருப்பாள். அதற்கு அவர் சொன்னக் காரணம் லட்சுமி அப்படி தடவி விடுவதனால்தான் விஷ்ணுவுக்கு காக்கும் சக்தி நிலைத்திருக்கிறது, லட்சுமியை அவர் சக்தியின் ஊக்கமாக இருக்கிறாள் என்றார். நான்கேட்கிறேன்,காலமெல்லாம் விஷ்ணுவின் காலைத் தடவிக் கொண்டிருக்கும் லட்சுமி எப்போதாவது தன் காலையும் தொட்டு தடவிக் கொண்டால் நன்றாக இருக்குமே, அவளுக்கும் ஊக்கசக்தி கிடைக்குமே என்று. இந்துமதம் ஆண்-பெண் சம உரிமையை மட்டும் எதிர்க்கவில்லை. அதுதான் இந்தியாவின் சாதியத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. (சபாஷ் அம்பை! கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது)

 

*பெண் இயற்கையாகவே பலகீனமான்வள்,
*பெண்ணுக்கு நாங்கள் உரிமைகளைக் கொடுத்திருக்கிறோம்,
*ஆண் செய்வதை எல்லாம் பெண் செய்ய முடியாது
*பெண்கள் இப்படி பேச ஆரம்பித்தப் பிறகுதான் குடும்ப அமைப்பு உடைய ஆரம்பித்துவிட்டது.

மணமுறிவுகள் அதிகமாகிவிட்டன, குடும்பத்தைக் கவனிக்கப் பிறந்தவள் பெண்… இப்படியாகப் பல்வேறு கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக ..

அவர்கள் கேள்விகள் அனைத்துக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அம்பை.

பெண்ணுக்கு உரிமைகளைக் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றீர்களே, நீங்கள் கொடுப்பதற்கு உரிமைகள் என்ன கடையில் வாங்கிக்கொடுக்கும் பொருளா? யாரும் உரிமைகளைக் கொடுக்கவேண்டியதில்லை. பெண் அவளுக்கான உரிமைகளை அவளே எடுத்துக் கொள்கிறாள்.

ஆண் குடித்துவிட்டு வந்தால் உடையாதக் குடும்பம், ஆண் பரத்தையிடம் போய்விட்டு வந்தால் உடையாதக் குடும்பம், பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால்/ பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் டொப்புனு உடைந்துவிடுமா என்ன? உடைவதற்கு அது என்ன மண்பாண்டமா?

விழித்தெழு இயக்கத்தின் ஸ்ரீதர் ஈழம் குறித்தும் அங்குள்ள பெண்கள் நிலைக் குறித்தும் கேட்டகேள்விக்குப் பதில் சொல்லும் போது லீனா மணிமேகலையின் செங்கடல் படத்திற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டித்தார். செங்கடல் படத்தை நான் பார்த்தேன். சிங்கள இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கிறார்.,லீனா.
அது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது தான் புரியவில்லை.

அண்மையில் காலச்சுவட்டில் அருந்ததிராய் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக் குறித்தகேள்வியை எழுப்பினார் எழுத்தாளர் தமிழ்நேசன். 1992 , பாபர் மசூதி இடிப்பு, அதன் பின் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள், அதிலும் குறிப்பாக மிகவும் அதிகமாக்ப் பாதிக்கப்பட்ட மும்பை வாழ் மக்கள்.. இந்த வரலாறு எதையும் அந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளாக இருந்தவர்களும் சரி, அதன் பின் பிறந்து வளர்ந்தவர்களும் சரி, சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம், போலீஸ் பாதுகாப்பு, பதட்டம்..? அந்த இடத்தில் கழிவறைக் கட்டுங்களேன் என்று அவர்களால் சொல்ல முடிகிறது ( இதுவும் நல்ல ஐடியா தான் ! அப்புறம் கழிவறைகளுக்கு யார் பெயரை வைப்பது என்று பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது!!!). இக்கட்டுரை உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் தெளிவுக்காக மீண்டும் வாசிக்கும்படியும் அம்பை கேட்டுக்கொண்டார்.

 

ambai

 

அம்பை மும்பையில் தமிழர்களின் அமைப்பு சார்ந்த எந்த பொது நிகழ்விலும் இதுவரைக் கலந்துக் கொண்டதில்லை. இங்கிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் நடத்தும் பட்டிமன்றங்கள் அம்பைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதை அவரே ஒப்புக்கொண்டார். அந்த வகையில் இந்நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் அம்பை மனம் விட்டு பேசியதும் மாற்றுக்கருத்துகளை அமைதியாக கேட்டு ஆணித்தரமாக தன் விளக்கங்களை வைத்ததும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த சிந்தனையாளர் சங்கம அமைப்பின் ராஜாவாயிஸ், உதவியாக இருந்த கராத்தே முருகன், முகவைத் திருநாதன் அனைவருக்கும் நன்றி.

1 Comment on “எழுத்தாளர் “அம்பை”யுடன்”

  1. அரைவேக்காட்டு முட்டையும் அம்பையின் காஷ்மீரமும்
    தமிழகத்துக்குக் கல்வி கற்க வந்திருந்த அஸ்ஸாமிய மாணவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேச்சை ஆரம்பிக்கையில் ‘அஸ்ஸாமிய தேசத்திலிருந்து வருகிறீர்களா?’ என வினவினேன். சட்டென்று பளிச்சிட்ட கண்களுடன், ‘என்ன கேட்டீர்கள்? என்றார். மீண்டும் ஒருமுறை சொன்னேன். என் இரு கைகளையும் தன் கையில் பிடித்துக்கொண்டு ‘இந்தியர் ஒருவ’ரிடமிருந்து இவ்வார்த்தைகளைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா? என்றார். இதுதான் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நாம் கட்டிக்காத்து வரும் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணம்.
    இவர் வேறு யாருமல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டணக் கழிப்பறையைக் கட்டச் சொல்லி அம்பையிடம் கருத்துத் தெரிவித்த அதே இளைய தலைமுறையைச் சார்ந்தவரில் ஒருவர்தான். ஆனால் அம்பைதான் பாவம். அவரே எழுதியிருப்பது போல் ‘கடந்த காலம் என்னும் புதைகுழியில் காலைப் புதைத்துக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் மூத்த தலைமுறையினரின் வழக்கமான மாரடிப்பு’ என்பது வேறு எதுவுமல்ல. அது அவருடைய இக்கட்டுரை தான். என்னதான் வெகு எச்சரிக்கையுடன் மதச்சார்பற்ற கருத்துகளை ஆங்காங்கே இட்டு நிரப்பி அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் கூடவே பதற்றத்துடன் ஒலிக்கும் ‘பண்டிட்’ இனக் குரலை அடையாளம் காண முடிகிறது. இவ்வகையில் பிறரால் கட்டுடைக்கப்பட வேண்டிய அவசியமில்லாமலேயே அவரே தன்னைத்தானே கட்டுடைத்துக் கொண்டுவிட்டார். மதிப்பிற்குரிய மூத்த பெண்ணியப் படைப்பாளியாகவே அவர் இருந்திருக்கலாம்.
    காஷ்மீர் மக்களாகட்டும் வடகிழக்கு இந்தியப் பகுதி மக்களாகட்டும் இந்தியாவுடன் ஒட்டுறவு இன்றி வாழும் மனோபாவம் அறிய சிறுபான்மை வாழ்வுக்குரிய மனது வாய்க்க வேண்டும். நமக்கோ கற்பிக்கப்பட்ட தேசியத்தின் வழி ஒழுகும் பொது சாதாரண மனது அல்லது பெரும்பான்மை வாழ்வுக்குரிய மனது. எனவேதான் நமது ஆடிக்கேற்றவாறு அக்காட்சிகள் பிரதிபலிக்க வேண்டுமென விரும்புகிறோம். இத்தகைய ஒரு மனோநிலைதான் காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அவர்கள் மறந்துவிட்டு இந்தியாவின் பகுதியாக நீடிக்க வேண்டுமென விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதையே அவர்களின் தொடர் போராட்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதன் நியாயத்தை உணர்ந்து அக்குரலுக்கு ஆதரவாகப் பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து சார்பற்ற ஒரு குரல் ஒலிக்கும்போது அக்குரலை எதிர் இனத்தின் அல்லது மதத்தின் அல்லது குழுவின் அங்கமாக எதிர் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் அபாயத்தை உணர்ந்தே இங்கு செயல்பட வேண்டிய நிலை. ஆதலால்தான் தேசத் துரோகியாகவும் அருந்ததி ராய் பார்க்கப்படுகிறார்.
    அம்பைக்கு இந்த அடையாளச் சிக்கல் ஏதுமில்லை. பெரும்பான்மைச் சமூக உணர்வுடன் அவர் குரல் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீருக்குச் சுதந்திரம் என்கிறபோது இரண்டு பெரும் நாடுகளுக்கிடையே உள்ள சிறு நிலப்பகுதி எவ்வாறு சுதந்திரத்தைச் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கவலைப்படுகிறார். ருஷ்யாவாலும் ஜெர்மனியாலும் பாதிப் பாதியாய்த் தின்னப்பட்டும்கூடத் தன்னை மீளவும் உருவாக்கிக்கொண்ட போலந்து கதைகளை அவர் மறக்கக் கூடாது. மேலும் காஷ்மீரின் சுதந்திரத்துக்கு முன்புறமாய் அசைந்தாடும் பச்சை நிற பாகிஸ்தானியக் கொடிகள் அவர் கண்களை உறுத்துகின்றன. ஆனால் காஷ்மீரிகள் விரும்புவது முழு முதலான சுதந்திரம்தான் என்பதை நம்பகமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியொரு சுதந்திரம் கிடைத்து அதைப் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கும் என்றால் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை நிகழ்த்தியாவது மற்றொரு ‘பங்களாதேஷாக’த் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் காஷ்மீரிகளுக்கு இருக்கும். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சேர்ந்ததாகவே அது அமையக்கூடும்.
    அம்பை கவலைப்படும் இன்னொரு செய்தி அது மத அடிப்படை நாடாய் இயங்கினால் என்னசெய்வது? இது பிச்சைக்காரருக்கு அளிக்கப்பட்ட காசை அவர் சாப்பிடப் பயன்படுத்துகிறாரா அல்லது ‘டாஸ்மாக்’கில் செலவழிக்கிறாரா என வேவுபார்க்கும் உத்தி. அளிக்கப்பட்ட பிறகு அது நமக்குச் சொந்தமானது அல்ல என்பதாலேயே தான் கச்சத்தீவுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் பிணங்களாகத் திரும்பிவருவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கிறோம்.
    சைவ சமய விதிகளுக்கு முரண்பட்டு அக்கமாதேவியும் லால் தேத்தும் சமணத்தின் திகம்பரத்தைச் சுவீகரித்துக் கொள்கையில் அதைப் பெண்ணிய சுதந்திரமாகக் காணும் அம்பை, தங்கள் சுதந்திரம் எப்படி அமைய வேண்டும் என்பதை காஷ்மீரிகள் தீர்மானிப்பதை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?
    நான்கு லட்சம் பண்டிட்கள் விரட்டப்பட்ட வடு அவர் மனத்தில் ஆழமாகவே பதிந்திருக்கிறது. இதற்கு ராமச்சந்திர குஹாவை ஆணைக்கழைக்கும் அவர் சதத் ஹசன் மண்டோவை மறந்தது ஏனோ? ‘திற’ கதை ஒன்று போதாதா? நமது யோக்கியதையைச் சொல்ல உண்மை என்னவெனில் பண்டிட்களாகட்டும், பாலஸ்தீனியர், இந்தியர், செவ்விந்தியர், அபாரிஜின், யூதர்கள், யாழ்ப்பாண முஸ்லிம்கள் என ஆக்கிரமிப்பால் அகற்றப்பட்ட இனங்கள் என நீண்ட வரலாறு இருக்கிறது. இதற்கு இனம், மதம், மொழி போன்ற எதுவும் ஒரு பொருட்டல்ல. அவ்வகையில் பண்டிட்களும் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள்தான். ஆனால் இவர்களுக்கு ஆதரவாக இந்துத்துவச் சக்திகள் வரும்போது எதிர் அணியில் அயொதுல்லா அலி கமென் வருவதை அருந்ததிராயால் எப்படித் தடுக்க முடியும்?
    நடுநிலையான மனங்களில் காலியாக உள்ள நியாயமான அரசியல்வாதி என்கிற சக்தி மிக்க பிம்பம் இன்று பொய்த்துப் போயிருக்கிறது. அதை ஈடுசெய்யும் விதமாய் அக்குரலில் அருந்ததி ராய் பேசுவது படைப்பாளிகள் என்கிற முறையில் நாம் மகிழ்வடைய வேண்டிய செய்தி. ஆனால் அம்பையோ அருந்ததி ராயால் தானொரு தனிநாடாய் இந்தியாவில்தான் செயல்பட முடியுமெனக் கேலி பேசுகிறார். இவ்விடத்தில் பெரியாரைத் துணைக்கழைப்பது அம்பைக்கு ஒவ்வாமையாக அமையலாம். ஆனால் வேறு வழியில்லை. மற்ற மதங்களின் மூடநம்பிக்கைகள் குறித்து ஏதும் பேசமாட்டீர்களா என்னும் கேள்விக்குப் பெரியாரின் பதில் என்னவோ அதுவே அருந்ததிக்கும் பொருந்தும். ஏனெனில் அருந்ததி ராய் பாகிஸ்தானியர் அல்ல.
    நிலோஃபரின் தந்தை அருந்ததி ராயின் கையில் அளித்த இரு அவித்த முட்டைகளும் அவர் மனம், செயல் இரண்டிலும் வேறுபாடற்று முழுவதுமாகச் சமைந்த நிலையைக் குறிப்பிடுகிறது. அதுபோல் அம்பையின் கையிலும் ஒரு முட்டை இருக்கிறது. அது பாதி சமைந்தது. சமைந்த பகுதி பெண்ணியம், சமைக்கப்படாத பகுதி ஆதிக்கச் சாதி மனம். அதாவது அது ஒரு அரைவேக்காட்டு முட்டை.
    நக்கீரன்
    நன்னிலம்

    kalachuvadu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *