விருது கொடுத்து எங்களின் போராட்டத்தை முடக்காதீர்கள் கேரளாவில் போர்க்குரல் எழுப்பிய சி.கே.ஜானு

janu3 47 குழந்தைகள் உட்படப் பெண்கள், வயதானோர், இளைஞர்கள் அனைவருமாக சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். பாதிக்கப்பட்டோருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை. உயிருக்குப் போராடியவர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டபோது, அவர்களின் உறவினர்களை கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது.

எத்தனையோ ஆண்டுகள் காடுதான் வாழ்க்கை என்று பாரம்பரியமாக இருந்தவர்கள் மலைவாழ்மக்கள். ‘ஷெட்யூல்டு’ பிரிவினர் என்று அரசு என்னதான் சலுகைகளை அறிவித்தாலும் அவர்களுடைய உறைவிடமான காட்டுக்கும் அவர்களுக்குமான தொடர்பை இன்னொரு விதத்தில் துண்டிக்கும் வேலையைச் செய்திருக்கிறது. இதில் மத்திய அரசு, மாநில அரசு என்கிற பேதங்கள் இல்லை.பெற்ற தாயைப் போல காட்டுடன் நெருக்கம் கொண்டிருக்கிற மலைவாழ் மக்களைக் காட்டிடமிருந்து பிரித்தெடுத்தார்கள். வனங்களில் பணப்பயிர்கள் முளைத்தன. அதைச் சுற்றி மின்சாரவேலிகள் முளைத்தன. காட்டில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டன. இதில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை சிதறிப்போனது. விலங்குகள் பல அழிந்துபோயின. வேட்டையாடப்பட்டன.இப்படித் தங்களுக்குச் சொந்தமான காட்டிலிருந்து தங்களை அப்புறப்படுத்தித் தனிமைப்படுத்துவதற்கு எதிரான குரல் இந்திய மலைவாழ் மக்களிடம் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

janu4

கேரளாவில் இம்மாதிரியான குரலை எழுப்பியவர் சி.கே. ஜானு.

கேரளம் வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி தாலுகா திரிசிலேரி அருகல் செக்கோட்டை என்ற வனக்கிராமத்தில் பிறந்தவர் ஜானு. அடர்ந்த வனப்பகுதிகளில் எப்போதாவது சூரிய ஒளியைப் பார்க்கும் குழந்தையாக வளர்ந்த அவர், மரம், செடி, கொடிகளைத் தொட்டு இயற்கையுடன் உறவாடி விளையாடினார். சுமார் 16 வயதில்தான் ஆதிவாசி சமூகத்திற்கு பிற இனத்தவர்களால் ஏற்பட்ட துன்பங்கள் ஆணி அடித்தாற்போல் பதிவாகியது. அந்த உணர்வு உருவானதும் குழுவை அமைத்தார்.குழுவாகச் சேர்ந்த கிராமத்தை சுத்தம் செய்வது, நடைபாதை அமைப்பது, குடிசை கட்டிக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஆதிவாசிகளை ஒருங்கிணைத்துத் தங்கள் பிரச்சினைகளுக்கு நியாயம் கேட்கப் புறப்பட்டார். இயற்கையைப் பற்றியும் இன்றைய சமூகக் கட்டமைப்பு, அரசியல், பொருளாதாரம் பற்றியும் தெளிவான புரிதல் உண்டானது. இவரின் உணர்வுப்பூர்வமான மேடைபேச்சு பலரைச் சிந்திக்க வைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் பணியாற்றினார். இடதுசாரிகளே பழங்குடிகளை  அடிமைப்படுத்துவதைப் பொறுக்க முடியாமல் அதைவிட்டு விலகினார்.

  

1992ல் “ஆதிவாசிகளின் விகாசன பிரவர்த்தக சமூதி” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதே ஆண்டு மானந்தவாடி என்ற இடத்தில் ஆதிவாசிகள் சங்கமம் என்ற மாநாட்டை நடத்தி இழந்த நிலத்தை மீட்கக் கோரிக்கை வைத்தார். உரிமைக்குரல் எழுப்பிப் பலமுறை சிறை சென்றார். பல மாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளை நேரடியாகப் பார்வையிட்டு இந்திய ஆதிவாசிகளின் நிலைமையையும் உணர்ந்தார். 1994ல் கேரள அரசு இவருக்கு வழங்கிய விருதை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தார். ஐக்கிய நாட்டு சபை சென்று மறைக்கப்பட்ட இந்திய ஆதிவாசிகளின் நிலையை உலகறியச் செய்தார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார்.

 2001ல் கேரளாவில் உள்ள பழங்குடிகளைத் திரட்டி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன் குடிசை போட்டு 48 நாட்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினார். இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சி.கே. ஜானு – ஏ.கே. அந்தோணி என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. பழங்குடிகளையும் தலித்துகளையும் ஒருங்கிணைத்து ‘ஆதிவாசிகள் கோத்தர மகாசபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். கேரளா அரசு ஒப்பந்தங்களைக் காற்றில் பறக்கவிட்டதால் முத்தங்கா நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது பரவலாக இந்திய மக்களின் பார்வையை இவர்மீது விழச் செய்தது. இதன் விளைவு ஆயிரக்கணக்கான ஆதிவாசிக் குடும்பங்களுக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்து வாழவைத்து வருகிறார். தற்போது ராஸ்டிய மகாசபா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிச் செயலாற்றி வருகிறார்.சுல்த்தான்பத்தேரியில் இருந்து மானந்தவாடி சென்று அங்கிருந்து காட்டிக்குளம் வழியாக சி.கே.ஜானு வாழும் பணவள்ளி கிராமத்திற்குச் சென்றோம். பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டை விசாரித்தோம்.

  “ஜானு சேச்சி வீடு எவிட” என்று கேட்டதும் உடனே ஜானு சேச்சியா என்று மகிழ்ச்சியுடன் எங்கள் கையைப் பிடித்துப் பாதி வழிவரை கூட்டமாகக் கூட்டிச் சென்று தூரத்தில் உள்ள குடிசையைக் காட்டினார்கள். சுற்றிலும் சிறிய மலைகளும் சமவெளிகளும் கலந்த பசுமையான சோலைக்காடுகள். எங்குப் பார்த்தாலும் வானுயர்ந்த மூங்கில்களும் காட்டுமரங்களும் பறவைகளின் சத்தமும், அந்த மலை உச்சியில் ஏறிச்செல்ல எந்தவித களைப்பையும் ஏற்படுத்தவில்லை. பழங்காலத்து பாழடைந்த வீட்டின் அருகில் நின்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார் ஜானு. எங்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் வரவேற்றார். மூங்கில்களினால் மறைக்கப்பட்ட வீட்டின் முற்றத்தில் உட்கார வசதியான இடத்தைத் தெரிவு செய்து அமரச் செய்து அவரும் அருகில் உட்கார்ந்தார். உங்களின் செல்போன் என்ன ஆனது? என்று கேட்டோம். “எங்கோ விழுந்துருச்சி. வேறு செல் வாங்கப் பணம் இல்லை” என்றார். இந்தியா முழுவதும் பேசப்படும் பிரபலமான தலைவியின் இந்த பதில் எங்களை மவுனமாக்கியது. சிறிது நேரம் கழித்து வந்த நோக்கத்தைப் பற்றி சொன்னோம்.
“இப்பதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. காட்டுல (தோட்டத்தில) பல வேலைகள் செய்யாம அப்படியே கிடத்திடுச்சி. அதைச் சரிசெய்யும் வேலையில் இருக்கிறேன். இத பண்ணுனாதான் சாப்பாடு கிடைக்கும்.” என்று கன்னடம், தமிழ், மலையாளம் கலந்த அழகிய உச்சரிப்பில் பேசினார்.
 
இதுதான் நீங்கள் பிறந்த ஊரா?

இல்லை. இது எங்கள் முன்னோர்களின் காடு. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு நபர் இதை ஆக்கிரமிப்புச் செய்து வைத்திருந்தார். 11 வருடங்களுக்கு முன் இந்தநிலத்தை மீட்டெடுத்து தற்போது இதில் சுமார் 52 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இதில் வாழை, இஞ்சி, மரவள்ளி, காப்பி, குருமிளகு போன்றவை விவசாயம் செய்கிறோம். வனத்துறையையும் போலீசையும் வைத்து இங்கிருந்து எங்களை வெளியேற்றப்  பார்த்தனர். முடியவில்லை. தற்போது இந்த இடத்திற்கும் வழக்கு நடைபெற்று வருகின்றது.

  ஆதிவாசிகளுக்கும் – காடுகளுக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லுங்கள்?

 

 “காடு இருந்தால்தான் நாங்கள் இருப்போம்; நாங்கள் இருந்தால்தான் காடு இருக்கும்.” எங்களுக்கு காடு பற்றிய அனைத்து விபரங்களும் தெரியும். மரங்கள் செடி, கொடிகள் பற்றியும் மூலிகைகள், வனவிலங்குகள், பறவைகள் எல்லாம் பற்றி எங்களிடம் இருந்துதான், மற்றவர்கள் தெரிந்து கொண்டனர். எங்கப் பெரியவங்களுக்கு இது பற்றிய விபரம் நிறையத் தெரியும். காட்டைப் பற்றிப் படிப்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எமது உதவி இல்லாமல் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. யானை, புலி, சிறுத்தைகளுடன் காடுகளில் வாழ்ந்தோம். அதன் வழியில் அவை செல்லும். நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எங்களுக்கும் காட்டு ஜீவராசிகளுக்கும் நல்ல புரிதல் இருந்ததால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. வேட்டையாடுவதைக்கூட இயற்கையின் சமன்பாட்டிற்கு ஏற்றபடிதான் செய்வோம். குறிப்பாக, இனப்பெருக்கக் காலத்திலும் கர்ப்பக் காலத்திலும் வேட்டையாடமாட்டோம். மரங்களைத் தெய்வங்களாக நினைப்பதால் அவற்றை வெட்ட மாட்டோம். அதன் வாதுகளையும் குச்சிகளையும்தான் பயன்படுத்துவோம்.பெரிய பெரிய காங்கிரீட் வீடுகளைக் கட்டுவது எங்களின் பழக்கமல்ல. குடிசைக் கட்டி வாழ்வதுதான் எங்களின் பாரம்பரியப் பழக்கம். காடுகள் எங்கள் கையில் இருந்தவரைக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.
 

உங்களின் தொடக்கக் கால வாழ்க்கை – அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்…

 

திரிசிலேரி என்ற இடத்தில் செக்கோட்டை என்ற காட்டுக் குடியிருப்பில் பிறந்தேன். எனது அப்பா கரியன், அம்மா, வெளிச்சி. எங்கள் குடும்பத்தில் மூத்தவர் அக்கா. இரண்டாவது நான், ஒரு தங்கை மற்றும் இரண்டு சகோதரர்கள். நாங்கள் அடியா இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் பாசையில் அடியா என்றால் ராவலர் என்று பொருள். நம்பூதிரிகள் வந்த பின்தான் அடியர் என்று கூப்பிட்டார்கள். எங்கள் மொழியும் ராவலர் மொழிதான். சிறுவயதில் வயல்களில் மீன், நண்டு, நத்தைகளைப் பிடித்து விளையாடுவோம். அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்போம். நீளமாக உள்ள கோரைப்புல்லை எடுத்து நண்டு உள்ள ஓட்டைக்குள் விடுவோம். நண்டு புல்லின் நுனியைக் கொடுக்கால் பிடித்துக்கொண்டு மேலே வரும். அப்படியே கைகளில் அமுக்கிக்கொள்வோம். வயல்களில் வளவளவென்று இருக்கும் மீன்களை கையால் பிடித்து விடுவோம். மழைக்காலங்களில் இந்த வகை மீன்கள் அதிகமாக கிடைக்கும். இதையெல்லாம் இப்ப நினைத்தாலும் சந்தோசமாக இருக்கிறது. இப்ப ராசவளம் என்ற பெயரில் விஷங்களை எல்லாம் போட்டு இத அழிச்சிட்டாங்க. காட்டுல நிறையப் பழங்கள் கிடைக்கும். இஷ்டத்திற்கு பிடுங்கிச் சாப்பிடுவோம். விதவிதமான பறவைகளையும் அதன் சத்தங்களையும் கேட்பதில் மகிழ்ச்சி. காட்டுக்குள் கிடைக்கும் கிழங்குகளையும் எங்கள் அம்மா அப்பா கொண்டுவந்து வேகவைத்துக் கொடுப்பார்கள். பெரிய மரங்களிலும், பொந்துகளிலும் இருக்கும் விதவிதமான தேனை எடுத்துத் தின்போம். குட்டைகளில் தண்ணீர் குடிப்பதோடு, ஆறுகளுக்குக் கூட்டமாகச் சென்று குளித்து விளையாடி மகிழ்வோம். குச்சிகளையும் கற்களையும் உரசி எங்கள் பெரியோர்கள் தீ மூட்டுவார்கள். இந்த வெளிச்சத்தில் தூங்குவோம். காட்டு மிருகங்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினயும் இல்லை. எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த நிலத்தில் சிறு தானியங்களைப் பயிரிடுவோம். குடும்பத்தோடு எல்லோரும் சேர்ந்து வேலை செய்வோம். இரவில் காட்டு மிருகங்கள் வராமல் இருக்க மூங்கில் குழலில் ஓசை எழுப்புவோம். மேலும் உடுக்கை அடித்து சத்தம் போட்டு மிருகங்களை விரட்டுவோம். அப்படியே அவை வந்தாலும் பயிர்கள் எல்லாவற்றையும் அழிக்காது. எங்களுக்கு மிச்சம் வைக்கும். நாங்கள் விதைக்கிறது எல்லாவற்றிற்கும் சேர்த்துதானே!வெள்ளமுண்ட என்ற ஊரில் ஒரு டீச்சர் வீட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகச் சென்றேன். இதுதான் எனக்கு வெளியில் சென்ற முதல் அனுபவம். பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இதேபோல அறிவொளி இயக்கத்தினர் எங்கள் ஊருக்கு வந்து பெரியோர், சிறியோர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். நானும் சென்றேன். சிபி என்ற ஒருவர் மிகுந்த அக்கறையுடன் படித்துக் கொடுத்ததோடு வெளி உலக அனுபவங்களைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். இதன்பின் எனது முயற்சியில் முழுமையாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். எங்கள் சமூகத்தில் அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களுடன் பேசமாட்டார்கள். மிருகங்களிடம் எங்களுக்குப் பயமில்லை. ஆனால் வெளி ஆட்களைப் பார்த்தால் பயம். காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்தோம்.
 

எப்போது இந்த நிலை மாறியது?

நம்பூதிரிகளும், நாயன்மார்களும், பட்டர்களும் எங்கள் காடுகள் மற்றும் நிலங்களை தங்களுடையது என்று கூறி சுலபமாகப் பறித்துக் கொண்டனர். பறிக்கப்பட்டது எங்கள் காடும் – நிலமும் மட்டுமல்ல. எங்கள் சுதந்திரமும்தான் என்பது பிறகுதான் தெரிய வந்தது. எங்கள் பெற்றோர்களிடம் இருந்து பறித்த நம்பூதிரி, நாயர்களின் நிலங்களில் வயல் வேலைக்கு எம்மவர்கள் அமர்த்தப்பட்டனர். கூலியாகத் தானியங்களைக் கொடுப்பார்கள். அது போதாது. வயிறு நிறைய வேண்டுமென்றால் காட்டுக்குள் செல்லவேண்டும். இதன் பிறகு பிரிட்டீஷ்காரர்கள் தங்களுக்கு வரி தேவையென்பதால் காடுகளையும் வன நிலங்களையும் நம்பூதிரிகளுக்கும் நாயன்மார்களுக்கும், வாரியார்களுக்கும் கொடுத்து அவர்களை ஜமீன்தார்களாக மாற்றினர். அப்போது பறந்து விரிந்துகிடந்த எங்களது காடு எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டது. தனித்து காலனிக்குள் நாங்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டோம். குடும்பத்திற்கு நான்கு சென்டு நிலம் கொடுத்து அதில் குடிசை போட்டு வாழ்ந்தோம். நம்பூதிரிகளின் அடிமைகளாக மாற்றப்பட்டோம். அவர்களுடைய நிலங்களில் இரவு, பகல் பாராது உழைத்தோம்.அரைவயிறு கஞ்சிக்குக்கூட பெரும் பாடுபட்டோம். இதுபோல தான் கேரளாவில் எல்லாப் பகுதியும் இருந்துச்சி. இந்தக் கொடுமைகள் இளம் வயதில் என்னைப் பாதித்தன. இதற்கு விடைதேட முற்பட்டேன். 1964 பூமி பரீஸ்கரன நியமனம் வந்தது (நில உச்ச வரம்புச் சட்டம்). இருந்தும் நில உடைமையாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம் ஆதிவாசிகளுக்கு மட்டும் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. இதுபற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட கவலைப்படவில்லை.
 

janu8

  

உங்களது போராட்ட வாழ்க்கைக்கு உந்துசக்தியாக இருந்தது எது?

  

நாங்கள் பட்ட கஷ்டங்கள்தான். எங்கள் வன நிலங்கள் பறிக்கப்பட்டு அந்த இடத்திலேயே கொடுமையான முறையில் வேலை வாங்கப்பட்டோம். எங்கள் பெண்கள் மாடுகளை ஏர்ப் பூட்டி நிலங்களை உழுவதுண்டு. மாடுகள் இல்லாத பொழுது பெண்களே மாடுகளைப் போல ஏரைப் பிடித்து இழுத்து உழுவதுண்டு. கால்கள் சேற்றில் மாட்டிக்கொள்ளும். கால்களை வெளியில் எடுக்கக்கூட மேஸ்திரிகள் விடமாட்டார்கள். விரட்டி விரட்டி வேலை வாங்குவார்கள். நானும் இதுபோன்ற வயல் வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். பொழுதுபோவதுகூடத் தெரியாமல் நாற்று நட்டு இருட்டிய பிறகு குடிசைக்கு வருவோம். எல்லா வேலைகளும் எங்கள் அடியர் சமூகத்தினர் செய்து முடித்தப் பிறகு நெல் களத்தில் குவிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த நெல் முழுவதையும் நிலத்தின் முதலாளி வந்து எடுத்துச் சென்றுவிடுவார். இதெல்லாம் என் மனதைப் பாதித்தது.கட்சி ஊர்வலத்திற்கு ஆட்கள் தேவைப்படும்போது கட்சிக்காரர்கள் ஊர்ப்பக்கம் வந்து எங்களை எல்லாம் கூப்பிடுவார்கள். ஊரில் உள்ள அனைவரும் கலந்துகொள்வோம். இதில் கலந்துகொண்டால் கூலி உயர்வும், விடுதலையும் கிடைக்கும் என்று சொல்வார்கள். முதல் முதலாக ‘கல்பற்றா’ என்ற இடத்தில் நடந்த கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டத்திற்குச் சென்று சிறிது காலத்திற்குப் பிறகு “விவசாயத் தொழிலாளர் யூனியனில்” சேர்ந்து வேலை செய்தேன். நான் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சியை முழுமையாக நம்பினேன். இருந்தும் எமது நம்பிக்கைகள் நிறைவேறவில்லை. எங்கள் சமுதாயத்தில் வேலை செய்யும் முதலாளிக்கும் கட்சிக்காரருக்கும் எந்தவித வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. இது ஒத்துவராது என்று விவசாயத் தொழிலாளர் யூனியனை விட்டும், கட்சியை விட்டும் விலகினேன். ஆதிவாசிகளுக்கு என்று தனியாக ‘சமுதி’ (சங்கம்) அமைத்து செயல்படத் தொடங்கினேன்.
 

 janu9

  

கேரளா ஆதிவாசிகள் நிலை பற்றிச் சொல்லுங்கள்?

இங்கு 35 இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறோம். கேரளத்தில் வயநாட்டு மாவட்டத்தில்தான் ஆதிவாசிகள் அதிகம். சுமார் 4 லட்சத்திற்கு மேல் வாழ்கிறோம். எங்கள் சமுதாயத்தினர் உழைத்துத்தான் பணக்காரர்களை வாழவைத்திருக்கிறார்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு நாங்கள் அடிமையாக்கப்பட்டோம். கேரள ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில் ஒரு பைசா கூட எங்களை வந்து சேர்வதில்லை. ஆனால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எங்களை முன்னேற்றிவிட்டதாகச் சொல்கின்றனர்.
 

ஆதிவாசிகளுக்காக கேரளா அரசியல் கட்சிகள் செயல்பாடு பற்றிச் சொல்லுங்கள்? குறிப்பாக இடதுசாரி கட்சிகளைப் பற்றி…

 

எல்லாக் கட்சிகளும் ஒரே மாதிரிதான். எங்கள் மக்கள் பெரும்பாலும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில்தான் அதிகமாக உள்ளனர். கட்சியின் ஊர்வலம் மாநாடு போன்றவற்றிற்கு கோஷம் போடுவதும் போஸ்டர் ஒட்டுவதும் நாங்கள்தான். கூட்டங்களில் கட்சித் தலைவர்கள் என்ன பேசுகின்றனர். நாங்கள் போடும் கோஷங்களின் அர்த்தம் என்ன? எது பற்றியும் பங்கெடுக்கும் எமது சமுதாயத்தினருக்குத் தெரியாது. காடும் நிலங்களும் எங்கள் கையை விட்டுப் போனதற்கு கட்சிகளும் முக்கியக் காரணமாகும். கேரள ஆதிவாசிகள் சமுதாயம் கட்சிகளினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் கொத்தடிமை முறை எப்போதோ ஒழிந்து போய் விட்டது. ஆனால், ஆதிவாசிகள் சமுதாயம் கட்சிகளின் கொத்தடிமைகளாக மாற்றப் பட்டிருக்கிறது. கட்சிகள் எங்களை வெறும் ஓட்டுப்பெட்டி என்று கருதுகின்றன. அதனால்தான் எங்கள் நிலம் பற்றியும் வாழ்க்கை பற்றியும் கட்சிகளின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை. என்னைக் கட்சிக் கூட்டங்களில் பேச அனுமதிப்பதில்லை. காரணம் உண்மைகளைச் சொல்லிவிடுவேன் என்ற பயத்தால். மற்ற சமூகத்தைப் போல் கட்சிக்காரர்களும் ஆதிவாசிப் பெண்களைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளனர். இதனால் கல்யாணம் ஆகாத பல தாய்மார்கள் உருவாகியுள்ளனர்.

 

 

உங்களை கேரளப் பொது சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த மானந்தவாடி சங்கமம் மாநாட்டின் நோக்கமென்ன?

 

அந்த மாநாட்டை 1992ல் நடத்தினோம். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பகுதிகளில் உள்ள ஆதிவாசி இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் இழந்த வனத்தையும் நிலத்தையும் மீட்டெடுப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டதோடு இக்கோரிக்கையை பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தினோம். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உரிமைக் குரல் எழுப்பினர். மீடியாக்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்தன. ஆதிவாசிகள் தன்னிச்சையாக ஒருங்கிணைவதை எம்மைச் சுரண்டிய சமூகத்தாரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒருசில விஷமிகள் எமது மாநாட்டுப் பந்தலின் முன்புறம் போடப்பட்டிருந்த கோபுரத்திற்குத் தீ வைத்து எங்களை பயமுறுத்தப் பார்த்தனர். இது எங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

 

ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை அரசு வன விலங்கு சரணாலயம், தேசிய பூங்காக்களாக அறிவிப்பது பற்றிச் சொல்லுங்கள்?

 

வன விலங்குகளையும், காடுகளையும் பாதுகாக்கத்தான் அந்த அறிவிப்புகள் என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு. அவை பணம் சம்பாதிக்கத்தான். இப்படி எல்லாம் அறிவித்தால் கோடி கோடியாய் உலக வங்கி வனத்துறைக்குப் பணம் கொடுக்கும். அறிவிக்கப்பட்ட சரணாலயம், தேசிய பூங்காக்களில் என்ன நடக்கிறது என்பது பெரும்பான்மை மக்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாகப் படித்த நகர்ப்புறவாசிகளுக்குத் தெரியாது. வனவிலங்குகள் நடமாற்றத்திற்கும் இதன் வாழ்விற்கும் தொல்லை கொடுக்கும்படி தார்ச்சாலைகள் போடுவது, சொகுசு ஹோட்டல்கள் கட்டுவது, உப்புப் போட்டு யானைகளை சாப்பிடச் செய்து விரட்டுவது, திருவிழாக் கூட்டத்தைப்போல் சுற்றுலாப் பயணிகளைக் காட்டுக்குள் விடுவது, இவர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு விலங்குகளுக்குத் தொல்லை கொடுப்பது போன்ற எத்தனையோ கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு எத்தனையோ யானைகள் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளன. இதைப்போல் பல்வேறு இன வன விலங்குகள் கொலை செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் எங்களிடம் உள்ளன. எங்களை வெளியில் அனுப்பிவிட்டு யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனம் பண்ணவும், சுற்றுலாவை வளர்த்துப் பணம் சம்பாதிக்கவும்தான் இவை எல்லாம் அறிவிக்கப்படுகின்றன. நாங்கள் காட்டுக்குள் இருந்தவரை எங்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பாக இருந்தோம்.
 

 

ஆதிவாசிகள் ஆக்கிரமிப்பாளர்களா?

 

பூமி தோன்றிய காலம் முதல் நாங்கள் காடுகளில் பாரம்பரியமாக வாழ்கிறோம். எங்களுக்கு வாழ்வளிப்பது காடுகள்தான் (சிரித்துக்கொண்டே எல்லோருக்கும்தான் என்றார்). இதை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். மன்னர்களும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ்காரர்களும் எங்கள் காட்டிற்குள் புகுந்து மரங்களை வெட்டியபோதும், வேட்டையாடியபோதும் அதற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களை ஆதிவாசிகள் நடத்திய வரலாறு உள்ளது. எங்கள் கிளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத பிரிட்டிஷ்காரர்கள் மரம் வெட்டுவதற்குத் தந்திரமாக முதல்முதலில் வனச்சட்டத்தை கொண்டுவந்தனர். என்னைப் பொறுத்தவரை மரம் வெட்டிக் கடத்தத்தான் வனத்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, அத்துறை இன்றுவரை அதை முழுமையாகச் செய்கிறது. காடுகளை அழித்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட வனத்துறை காடுகளையும் வன விலங்குகளையும் காப்பாற்றும் என பொது சமூகத்திலுள்ள ஒரு சில படித்த சுற்றுச்சூழல்வாதிகள் முட்டாள்தனமாக நம்புவது நகைப்பிற்குரியது. வனச்சட்டங்களும் வனத்துறையும் உருவாக்குவதற்கு முன்பே காடுகளில் ஆதிவாசிகளாகிய எங்கள் சமூகம் வாழ்கின்றது. எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வது மிகக் கொடுமையான அநீதியாகும். எங்கள் வனங்களையும், நிலங்களையும், ஏன்? வாழ்வையும் ஆக்கிரமித்தவர்கள் வனத் துறையினர்தான். “எதை யாரிடமிருந்து திருடினார்களோ அதை மீட்பதுதானே சரியானது?”

 

 

கேரளா அரசு கொடுத்த விருதை ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள்?

janu

சிறந்த உழைப்பாளி என்ற விருதை கேரளா அரசு 1994ல் எனக்கு அறிவித்தது. விருது வழங்கும் விழாவிற்குச் சென்றேன். அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட அந்த மேடையில் விருதைப் பெற்று திருப்பிக் கொடுத்தேன். இது அவர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. இது சட்டவிரோதம் என்றனர். சட்டம் இருந்தால் தண்டனை கொடுங்கள் என்றதோடு “எனக்கு விருது கொடுத்து எங்கள் போராட்டத்தை முடக்கத் திட்டுமிடுவதை கண்டிக்கிறேன்” என்றேன். “எமது சமூகத்திற்கு இழந்த நிலமும், வளமும் எப்போது கிடைக்கிறதோ அதுதான் எனக்கு விருது” என்று சொல்லிவிட்டு வந்தேன். சரிதானே?”
 

நீங்கள் ஐக்கியநாட்டு சபை சென்று பேசியதன் சிறப்புப் பற்றி சொல்லுங்களேன்?

ஐக்கிய நாட்டு சபைக்கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஆதிவாசிகள் முன்னேறிவிட்டார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இதை ஐ.நா. சபைத் தலைவர்களும் நம்பினர். இக்கருத்தை எனது பேச்சின் மூலம் உடைத்தெறிந்தேன். சொந்தக் காடுகளையும், நிலங்களையும் இழந்து காலனிகளில் எங்கள் மக்கள் படும் கஷ்டங்களையும் இந்தியாவில் ஆதிவாசிகள் ஒடுக்கப்பட்டு வீதிக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றியும் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தேன். வறுமையின் கோரப்பசியில் சிக்கி இறந்தவர்கள் பற்றிப் பேசினேன். வனத்துறையினரால் எமது இனம் படும் கொடுமைகளைப் பட்டியலிட்டேன்.அதன் மூலம் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தேன். இந்தியாவிற்கு நேரடியாக வந்து ஆதிவாசிகள் நிலைமைகளை ஆய்வு செய்யக் கோரினேன். பல தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு என்னைச் சந்தித்து விரிவாகப் பேசினர். இந்தியா வரும்போது நாங்கள் வாழும் பகுதிகளுக்கு வாருங்கள் என்றேன். ஐ.நா. குழு இந்தியா வந்தது. ஆனால் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்கு இவர்களை அதிகாரிகள் அழைத்துச் செல்லவில்லை. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உள்ள ஆதிவாசி இயக்கங்களைச் சந்தித்து அம்மக்களுடைய நிலைமைகளைக் கண்டறிந்ததோடு, அவர்கள் நடத்திய கூட்டங்களிலும் பேசியிருக்கிறேன்.
 

கேரள தலைமைச் செயலகம் முன் முற்றுகை போராட்டம் ஏன் நடத்தப்பட்டது?

வனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோம். வாழ நிலம் இல்லை. உண்ண உணவு இல்லை. பெண்களும் குழந்தைகளும் எமது சமுதாயத்தினரும் சீரழிக்கப்பட்டார்கள். 2001ல் வயநாடு மாவட்டத்தில் 34 ஆதிவாசிகள் உணவில்லாமல் பட்டினியால் இறந்தனர். இதை அரசு ஏதோ நோய் வந்து இறந்து போய்விட்டார்கள் என்று மறைக்கப் பார்த்தது. நாங்கள் விடவில்லை. போராட்டத்தைத் தீவிரப்படுத்தினோம். மேலும் அப்பகுதியில் ஆதிவாசிகள் பட்டினியால் இறக்காமல் இருக்க அரசு நான்கு மாதங்களுக்கு இலவச அரிசி கொடுத்தது. வேறு ஒருசில நிவாரணங்களையும் கொடுத்தனர். தற்போதைக்கு இது தேவை என்றாலும் நிரந்தர உதவி நிலம் கொடுங்கள் என கோரிக்கை வைத்தோம். கிரிசி (வேளாண்மை) செய்ய ஒரு வருடம் உதவிக் கேட்டோம். இதெல்லாம் கிடைக்கவில்லை. இங்கு பட்டினியால் சாவதைவிட கேரள தலைமைச் செயலகம் முன்பும், முதலமைச்சர் ஏ.கே.அந்தோணி வீட்டிற்கு முன்பும் சாவோம் என முடிவு செய்தோம். எங்களைப் போல் பாதிக்கப்பட்ட கேரளா முழுவதுமுள்ள ஆதிவாசிகளைத் திரட்டி திருவனந்தபுரம் நோக்கிச் சென்றோம். 2002ம் ஆண்டு தலைமைச் செயலகம் முன்பு குடிசைகள் போட்டு 48 நாட்கள் தங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இப்போராட்டத்தை முறியடிக்க கேரளா அரசு காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எங்களுடைய உறுதியை முறியடிக்க முடியவில்லை. மேலும் பொதுமக்கள் மத்தியிலும் எமக்கு ஆதரவுப் பெருகியது. போராட்டம் தீவிரம் அடைந்து கேரளாவை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது. இதன் விளைவால் கேரள முதலமைச்சர் ஏ.கே. அந்தோணி பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தார். சி.கே.ஜானு – ஏ.கே. அந்தோணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கேரளா முழுவதுமுள்ள ஆதிவாசிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றது. இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
 

ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதா?

 

இதில்தான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ஒப்பந்தம் போடப்பட்டதோடு சரி. இதை நிறைவேற்ற கேரளா அரசு முயற்சி எடுக்கவில்லை. தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். எந்தப் பயனும் இல்லை. இதன் விளைவுதான் முத்தங்கா கிளர்ச்சி.

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் உள்ளே புகுந்து நிலத்தை அபகரிப்பது சரியா?

நாங்கள் எங்கேயும் நிலம் பிடிக்கவில்லை. எங்கள் நிலத்தையும், காட்டையும்தான் வனத்துறையும் மற்றவர்களும் பிடித்துள்ளனர். முத்தங்கா எமது ஆதிவாசிகளின் பாரம்பரிய பூமி. இதன் உள்ளே 600 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்தனர். இவர்களை வெளியே விரட்டிவிட்டு வனத்துறையினர் ஆக்கிரமிப்புச் செய்தனர். எமது மக்கள் காலனிக் குடிசைகளில் அடைக்கப்பட்டனர். எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட அந்தக் காடு வனத்துறையாலும், இவர்களின் கூட்டாளிகளாலும் அழிக்கப்பட்டது. இந்த முத்தங்கா வெளியிலிருந்து பார்க்கத்தான் காடு மாதிரி தெரியும். உள்ளே யூகலிப்டஸ் மரங்களும், தரிசு நிலங்களும்தான் உள்ளன. ஒப்பந்தம் நிறைவேற்றப்படாத நாங்கள் இழந்த நிலத்தை மீட்டெக்க உள்ளேச் சென்றோம்.
 

முத்தங்காவில் என்ன நடந்தது?

2003 ஜனவரி 5ம் தேதி எங்கள் நிலங்களை மீட்க உள்ளே சென்றோம். குடிசைகள் கட்டியதோடு, விவசாயம் செய்ய நிலங்களைப் பண்படுத்தினோம். சுல்தான்பத்தேரி பகுதிகளில் மரம் வெட்டியும், வன விலங்குகளை கொலை செய்தும், நிலங்களை கொள்ளையடித்து வாழும் கூட்டமும் முத்தங்கா உள்ளே சாராயம் காய்ச்சும் கும்பலும் எங்களை எதிர்த்தனர். வனத்துறையினருடன் சேர்ந்துகொண்டு எங்களை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்தனர். வனத்துறையினர் யானையின் சாணத்தில் பெட்ரோலை ஊற்றி எமது குடிசைகள் மீது வீசினர். இதில் குடிசைகள் எல்லாம் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதில் ஈடுபட்டவர்களை எமது இளைஞர்கள் பிடித்து விரட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து எங்களை முத்தங்காவை விட்டு வெளியேற்ற வேண்டுமென கோரி பிப்ரவரி 16ம் தேதி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது. வனத்துறை, காடழிக்கும் மாஃபியா கும்பல் அரசியல் கட்சியின் ஒருசில விஷமிகளின் தூண்டுதலால் 19ம் தேதி போலீசும், வனத்துறையினரும் உள்ளே புகுந்து காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டனர். குடிசைகளுக்குத் தீவைத்து கொளுத்தியதோடு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் எல்லோரையும் அடித்து உதைத்து மண்டைகளை உடைத்து, கை கால்களை முறித்தனர். எரியும் தீயில் குழந்தைகளைத் தூக்கி வீசினர். துப்பாக்கியால் வெடி வைத்துப் பலரை காயப்படுத்தியதோடு, ஜோசி என்ற ஆதிவாசி இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தக் கலவரத்தில் வினோத் என்ற போலீசும் இறந்தார். நானும் கொடுமையாகத் தாக்கப்பட்டேன். 47 குழந்தைகள் உட்படப் பெண்கள், வயதானோர், இளைஞர்கள் அனைவருமாக சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம். பாதிக்கப்பட்டோருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை. உயிருக்குப் போராடியவர்கள் மருத்துவமனையில் கிடத்தப்பட்டபோது, அவர்களின் உறவினர்களை கூடப் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டோர் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் இன்றும்கூட தீயை பார்த்தால் அலறுகின்றனர். இந்த அளவிற்கு மனப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

கட்சிகள் ஏன் உங்களுக்கு எதிராக சாலைமறியலில் ஈடுபட்டனர்?

எங்களுக்கு நிலம் கிடைக்கக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர். காரணம் கட்சிகளின் எடுபிடியாகவும், வேலைக்காரர்களாகவும், கோஷம் போடவும், மாநாட்டிற்குப் போகவும், கொடி பிடிக்கவும் வேறு யார் இருப்பார்கள்? நிலம் கிடைத்து விவசாயம் செய்து நாங்கள் தன்னிச்சையாக வாழ ஆரம்பித்துவிட்டால் இவர்கள் சார்ந்திருக்கும் முதலாளிகளின் தோட்டத்தில் வேலை செய்வது யார்? எங்கள் சமுதாயம் தொடர்ந்து அடிமையாக இருக்கவேண்டும் எங்களுக்கு விடுதலை கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்தான்.
 

முத்தங்கா சம்பவத்தால் காடு அழியும் என சுற்றுச்சூழல்வாதிகள் பேசுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முத்தங்கா உள்ளே மரம் வளர்க்கிறோம் என 27 கோடி ரூபாய்க்கு மேல் வனத்துறை பணம் பெற்றுள்ளது. இந்தப் பணத்தில் ஒருசில இடங்களில் யானைகளுக்குத் தண்ணீர் குடிக்கும் தொட்டிகள் கட்டப்பட்டதோடு சரி. மிச்சப் பணத்தை ஏப்பம் விட்டனர். உள்ளே இருந்த காட்டுமரங்கள் எல்லாம் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. தரிசு நிலமாக பாதி இடங்கள் உள்ளன. பேரல் பேரலாக காட்டுக்குள் சாராயம் காய்ச்சப்படுகிறது. நாங்களே இதுபோல பலவற்றை உடைத்தெறிந்தோம். காப்பி, மிளகுத் தோட்டங்களைப் பணக்காரர்கள் வைத்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட காங்கிரீட்டால் ஆன பெரிய பெரிய வீடுகள் உள்ளே கட்டப்பட்டுள்ளன. யானைகளின் நடைபாதையில் மின்வேலி அமைக்கப்பட்டு மிருகங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் ஒருசில சுற்றுச்சூழல்வாதிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் இது பற்றியெல்லாம் பேசினால் இவர்களுக்கு வரும் ‘பண்ட்’ (நிதி) நின்றுபோய்விடும். காடு யாருக்குத் தேவையோ, அவர்கள்தானே அதை பாதுகாப்பார்கள்? எங்களைத் தவிர வேறு யாரால் காடுகளையும் காட்டு மிருகங்களையும் பாதுகாக்க முடியும்?

 

உங்கள் மீதுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?

அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்தித்து வருகிறோம். கொச்சியில் 7 வழக்குகள் நடைபெற்று வருகின்றது. இதில் 180 நபர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை தேவை என நாங்கள்தான் கூறினோம். ஆனால், அவர்களும் எங்களுக்கு எதிராகவும், உண்மைக்குப் புறம்பாகவும் செயல்படுகின்றனர். வழக்குகளை பி.யு.சி.எல். மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் போன்றவர்கள் உதவியுடன் சந்தித்து வருகிறோம். நீதி வெல்லும்.

 

ஆதிவாசிகள் கோத்தர மகா சபா செயல்பாடுகள் என்ன?

கேரளாவில் தலித் மக்கள்தான் பெரும்பான்மை நிலமற்ற மக்களாக உள்ளனர். இவர்களையும் ஆதிவாசிகளையும் இணைத்துப் புதிய கண்ணோட்டத்தோடும், அரசியல் செயல்பாட்டோடும் ஆதிவாசிகள் கோத்தர மகாசபா செயல்பட்டு வருகின்றது.
 

நீங்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியின் செயல்பாடு எப்படியிருக்கிறது?

 

உண்மையான ஜனநாயகத்தின்மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அரசியல் கட்சி தொடங்கியதற்கு கேரள அரசியல் சூழ்நிலையே காரணம். இதனால் ராஷ்டிய மகாசபா என்ற கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இதில் பெரும்பான்மை தலித்துகள், ஆதிவாசிகள், பிற பாதிக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறோம்.

 

உங்களது ஒட்டுமொத்த போராட்டத்தின் விளைவு என்ன?

எங்கள் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் உருவாகியிருக்கிறது. எங்களை அடக்கி ஒடுக்கியவர்கள் இனியும் அதைச் செய்யமுடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தி உள்ளோம். கேரள ஆதிவாசிகளின் பிரச்சினைகளை நாடறியச் செய்திருப்பதோடு பலரது கவனத்தை எங்கள்மீது விழச் செய்திருக்கிறோம். கேரளாவில் சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலம் கிடைக்க முயற்சி எடுத்துள்ளோம். இடுக்கி, குண்டாலா, பூபாலா, மரையூர் பகுதிகளில் ஏற்கெனவே நிலங்களும், அதற்குப் பட்டாவும் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டோம். தற்போது ஆர்லா பாம் என்ற இடத்தில் 7500 ஹெக்டேர் நிலம் எமது சமுதாயத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3500 ஹெக்டேர் இதுவரையில் பிரித்து மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 840 குடும்பங்களுக்குப் பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலத்தில் கிரிசி செய்வதற்கு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். இதெல்லாம் எமக்குக் கிடைத்த வெற்றிதான். போராடியதால்தான் இதை எல்லாம் சாதிக்க முடிந்தது.
 

தமிழ்நாட்டு ஆதிவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எம்மைப்போலவே அவர்களும் காடுகளையும் நிலங்களையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்து வருகின்றனர். இதிலிருந்து விடுபட முடியாமல் தொண்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கி உள்ளனர். ஆதிவாசிகளுடைய குரல் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெளிப்படவில்லை. அதற்கான முயற்சிகள் முழுமையாக எடுக்கப்பட வேண்டும். நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதி ஆதிவாசிகளுடன் இணைந்துச் செயலாற்றி இருக்கிறேன். கேரளாவைவிட தமிழ்நாட்டுப் பழங்குடிகளை ஒருங்கிணைப்பது சுலபமானது. காரணம் கேரளாவில் கட்சிகளின் பிடியில் ஆதிவாசிகள் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த நிலை இல்லை.

 நன்றி நட்பூ, என்.எம் செல்வராஜா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *