அம்மாவைத்தேடி… தேவா ( ஜேர்மனி)

அண்மையில் ஒரு விவரணபடம் தற்செயலாக பார்த்தேன்…

போர்காலத்திலே இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகன்,மகள்களை, கணவரை, பெற்றவர்களை தேடியலையும் துயரம் ஒரு புறமும், அரசை உலுப்பி  நீதி கேட்டுகொண்டே இருக்கும் உரத்த குரல்கள் தாயகத்திலும்,புகலிடங்களிலு ம் என மறுபுறமுமென மனதை துன்பத்தில் ஆழ்த்திகொண்டிருக்கும் காலமிது.

வளம் அழிக்கப்பட்ட,- அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளிலே  போரும் வறுமையும் கைகோர்த்திருக்கிறது… நிலங்களில் பயிரிட முடியாத நிலைமை. மழையின்மை. குடிநீர் தேடி பல கிலோமீட்டர் போகவேண்டும். . சுற்றுசூழல் அழிந்தகாலநிலை போன்ற இன்ன பிற காரணிகளால் ஆசிய,ஆபிரிக்க மக்கள் அகதியாக ஆக்கப்படும் கோரம் தொடர்ந்தபடியே இருக்கிறது. .யார்தான் அகதிவாழ்வை விரும்பிதேடி எடுக்கின்றனர் ?

ஐரோப்பா,அமெரிக்கா நாடுகள் உயர உயர கம்பிவேலியடைத்து கொண்டுள்ளது.. ஐரோப்பாவில் (ஆபிரிக்காவிலும்தான் )அக்கம்பிவேலிகளை  இன்னும் எத்தனை மீட்டர்களுக்கு உயர்த்தலாம்.  மத்தியதரைக்கடல் அண்மியநாடுகளின் நீர்எல்லைகளை இன்னும் எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற ஆலோசனைகளையும்  முன்வைத்து அந்நாடுகளுக்கு நிதிஉதவி செய்து அகதிகளாக்கப்பட்டோரை  மேலும் உள்நுழையவிடாமல் செய்ய ஐ.நா. வட்டமேசை மாநாடு நடத்துகிறது. . உயிர்வாழ, கடல்மேலே உயிரை பணயம் வைத்து வரும் மக்களை நோக்கி துப்பாக்கிமுனை நீட்டப்படுகிறது.. பொருள்தேடி நம்மை சூழ்கிறார்கள் என மேற்குலகஊடகங்கள்  பிரச்சாரம் செய்கின்றன.  ஆசிய,ஆபிரிக்க மக்களின் அல்லல் கண்கூடாக தெரியும் உண்மை. வளமிக்க நாடுகள் தம் காலனிஆதிக்க காலத்தில் தாம் அடிமைப்படுத்தியிருந்த நாட்டுமக்களை அடிமைகளாய்-விலங்குகளாய் நடத்தியமைக்கும், இப்போது அவர்களை நோக்கி துப்பாக்கியில் குறி வைப்பதற்கும் என்ன வித்தியாசமாம்?

நிற்க…

குடும்பம் பிரிக்கப்படுவதே கொடுமை. அதிலும் தாய்க்கு தன் பிள்ளை எங்கே என தெரியாமல் இருப்பது மிக கொடுமை. பிள்ளைக்கும் என் தாய்-குடும்பம் எங்கே இருக்கின்றனர் என்ற ஏக்கமும் இவ்வாறான மனசித்திரவதைகள்  நம் தாயகத்திலே உரிமைப்போர் காலத்தில் அனுபவித்தவைகள்..

ஈழத்தில் போரற்ற தற்தால சூழலிலே கூட இறந்தவர்களை -அநிநாயமாய் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூறலே  தடைசெய்யப்படவேண்டுமென்ற  இனவிரோத கருத்து சிறுபான்மையினரின் உரிமை மறுப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது..  இறந்தவர்கள் மீதான இரக்கம் மீண்டும் உரிமை இழப்பை போராட உயிர்பெற செய்யலாமென்ற உள்நோக்கம் கொண்டது. ஆனால் அது உடன் பிறந்தோரின், தந்தையின், தாயின்,மகளைின்,மகனைின் ,கணவன்-மனைவியின் இழப்பை நிராகரிக்கிறது..குடும்ப அமைப்பை போற்றி கொண்டாடும் பண்பாடு கொண்டது நம் சமூகம் என்று பெருமிதம் கொள்வதில் அர்த்தமேயில்லை..

இனி விவரணப்பட விடயம்:

விவரணப்படத்தின் தலைப்பு.: பிறந்த நாடே அந்நியம் (Mein fremdes Land. )

பொலிவியன்நாட்டு கிறித்துவமடாலயத்திலிருந்து  ஒரு ஒருவயதுக் குழந்தை பலவருடங்களுக்கு முன் ஒரு ஜேர்மன் குடும்பத்தால் தத்து எடுக்கப்படுகிறது..  வளர்ந்த இளைஞனான பின் அவன் தன் வேரை தேடி தன் பிறந்த இடம் என்று அறிந்த அந்த பொலிவிய கிராமத்துக்கு???(ஒடிந்து,நலிந்து, எந்நேரத்திலும் உயிர்விட தயாராய் இருக்கும் சிதைந்த சிற்றூர்) வருகின்றான்..  ஒரு மிக நீண்ட பயணம் செய்து வரண்டநிலத்தினுடாக,  பாதையே அற்ற பாதை ஊடாக அவன் தாயை தேடி ,சகோதரர்களை தேடி கண்டுபிடிப்பதை  இப்படம் விபரிக்கிறது.. இளைஞனின் தாய் வீட்டில்தான் வறுமையும் பிறந்திருக்க வேண்டும்..    தாயோடு,-சகோதர்களோடு  உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகின்றார். . மிக கரடுமுரடான, பயிரிடவே முடியாத பூமியிலே நோயால் இறந்துபோன ஒருமகளின் இரு சிறிய குழந்தைகளோடும், 25 ஆடுகளோடும் ,சில பன்றிகளோடும் வாழ்கிற பெளதிகதாயை கண்டுபிடிப்பதே  அவள் மகனுக்கு ஒரு பெரும் சவால். தண்ணீர் எடுத்துவர தொலைதூரம்  போகணும். விறகடுப்பில் சூப் செய்யும் தாய்க்கு அவர் வளர்க்கும் ஆடுகள் சமயங்களில் தம்முயிர் தருகின்றன.. மாவு,சீனி,உப்பு போன்ற அத்தியாவசியங்கள்  வெளியார்க்கூடாக  எப்போதாவது அவருக்கு  கிடைக்கிறது. .வயிற்றுபாட்டை சமாளிப்பதே பெரும் சிக்கல்.. 5~6  குழந்தைகள் அவருக்கு பிறந்திருக்கின்றன. ஆனால் 2 பிள்ளைகள் மட்டுமே அவருக்கு மிஞ்சுகின்றன.ர். அவர்களோடும் அரிதான தொடர்பு.ண்டு. காரணம் : அவர்களும் வேலை தேடி நகர்பக்கங்களுக்கு நகர்ந்தனர்.  தாயிடம் வந்து போவது மிக சிரமமான பயணம். குழந்தைகள் பிறந்தது அவருக்கு தெரிந்திருக்கிறது..  ஆனால் இறந்த சில குழந்தைகளை பற்றிய விபரமும் சரியாக அவருக்கு  தெரியாது. அதாவது தற்போது 2 பிள்ளைகள் மட்டுமே தனக்கிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட தாயின் ஒரு குழந்தை 20வருடங்களுக்கு முன் தாயின் மாமனாரால் கிறித்துவமடாலயத்தில்  பிறந்த 3ம்நாள் சேர்க்கப்பட்டது.. வறுமையிலே மற்றும் போரின்போது  பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ஏதாவதுவழி உண்டாஎன்ற கேள்விக்கு பதில் யாரிடம் இருக்கிறது? ஒரு சில கத்தோலிக்கமதநிறுவனங்களின் இரக்கத்தாலும், சில தனிப்பட்டசிறு நிறுவனங்களாலும், ,மேலும் தனிப்பட்ட நபர்களாலும் சில உயிர்கள் காப்பாற்றபடுகின்றன..

அன்னையை தேடிவரும் மகனுக்கு அம்மாவோடு பேச முடிவதில்லை.. இருவரும் கட்டியணைத்து  அழும் மொழியே அவர்களுக்கிடையேயான பாசமொழி. தாய்க்கு பூர்விக சிவப்பிந்தியரின் மொழி தவிர அந்நாட்டு மொழியான ஸ்பெயின் தெரியாது.  அவருக்கு தன்வயது தெரியாது. சுற்றியுள்ள வரண்ட நிலக்காணியில் வளர்ந்திருக்கும் ஒவ்வொரு மரமும் தன் ஓவ்வொரு பிள்ளைக்கும் உரியது என்கிறார்.!

This image has an empty alt attribute; its file name is mein-vfremdes-land.jpg-5-1024x576.jpg

பெற்றோரின் தாய்மொழிப்பிரச்சினை புலம்பெயர் நாடுகளில் வாழும் பலஇளம்தலைமுறைகளிடத்தும்  ஊண்றியிருக்கும் குழப்பம்தான். ஜேர்மனியில் துருக்கி,மற்றும் பல இனத்தவர்களும்  தம் மொழியை பரம்பரையாக பற்றியிருக்கின்றனர்.. அதற்கு பல காரணங்கள்-பின்னணியில் உண்டு.   

பிறந்ததுமே தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகனை அந்நிய ஒருவர்  ,,உங்கள் மகன் ஒருவன்  உங்கள்,முன் வந்திருக்கிறான்,, என சொல்லித்தான்  அந்தத் தாய்க்கு புரியவைக்கிறார்.. தாயும்,மகனும் தழுவி அழத்தான் முடிகிறது.!உடல்மொழிகளால் பேசிக்கொள்கின்றனர்.

“ஏன் என்னை விட்டு போனாய் “என தாய் மகனைகேட்டு அழும்போது, மகனால் என்னத்தை சொல்ல முடியும்?

மகனை கண்ட சந்தோசத்தில் தாயும்,அம்மாவை கண்ட மகிழ்வில் மகனும் அழுது தீர்ப்பதை தவிர வேறென்ன  அந்த சூழ்நிலையில் முடியும்? 

“என் அப்பா எப்போ,எப்படி இறந்தார்?”

மகனின் கேள்விக்கு அம்மாவின் பதில்:

முன்னர் நாங்க எப்பிடியோ கஸ்டப்பட்டு சோளம் பயிரிடுவோம். .அறுவடையோ மிக சொற்பமாவே இருக்கும். மீத சோளத்தில் மது தயாரிப்போம். மது குடித்தால் பசி தெரியாது. களையாய் இருக்கும்.  நாளும், பொழுதும் நித்திரையில் மூழ்கிவிடுவோம். .மது இல்லாவிட்டால் பசி நம்மை விழுங்கிவிடும்.. குழந்தைகள் பெறும்போதுகூட எனக்கு காரமான அந்த பியர் தரப்பட்டது. இந்த  வீட்டிலே தான் எல்லா குழந்தைகளும் பிறந்தன. வைத்தியசாலை இங்கே எங்கிருக்கிறது? அங்கு போய்ச்சேரவே எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று  இன்றுவரை எனக்கு தெரியாது. உன் அப்பா எத்தனையோ இரவும் பகலும் நோயில் கிடந்தார். யாருமே உதவி செய்யமுடியாத நிலைமை இங்கே. அவர் நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருந்ததை  பார்த்தபோது என்னால் அழவே முடிந்தது. யாராவது வந்து அவரை வைத்தியசாலைக்கு  அழைத்து செல்ல முடிந்தால் அதற்கு எப்படியும் பல பகல்கள் தேவை. .அவர் இறந்தபின் தான் அவருக்கு விடுதலை..அவர் எப்போ இறந்தார் என்றும் எனக்கு தெரியாது. அதற்கு பின்னும் எத்தனையோ இரவு,பகல்கள் வந்து போயின.

தாய் பற்றிக்கொண்டிருக்கும் மற்ற ஒரு சகோதரனை, சகோதரியை  சந்திக்கும் வாய்ப்பு இளைஞனுக்கு கிடைக்கிறது..

இந்த இளைஞனைவிட 4-5வயது இளமையான சகோதரிக்கு  3பிள்ளகள். சுமார் 200கி.மீ தூரத்திலுள்ள ஒரு நகரமொன்றில் வீட்டுவேலை செய்து வாழும் இந்த தங்கை தான் தாயுடன் ஓரளவு தொடர்பில் இருக்கிறாள்.

இளைஞன் சகோதரனை சந்திக்கிறான் .அவன் சுரங்கமொன்றிலே–எந்நேரமும் டைனோமோ வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலைமையில்- கல்லுடைப்பு தொழிலாளியாக வேலை செய்கிறான்.  அவன் தன் தொழிலிடத்தை தம்பிக்கு சுற்றி காட்டியபின் கேட்கிறான்:

“நீ மீண்டும் இங்கு வருவாயா” என.

பதில் :ஆம். கட்டாயம்.

சகோதரன் : நல்லது. நீயும் இங்கு வந்துவிடு. இங்கேயும் வேலைக்கு ஆட்கள் தேவை.யே. தொழிலாளர்கள் இங்கே தூசியாலும்,ஆஸ்மாவாலும் இளவயதிலேயே  இறந்துபோகிறார்கள். .

கேலியாக சொல்லி சிரித்துக்கொண்டே அவன் தன் வாயில் கனாபிஸ் இலைகளை அடைக்கின்றான்.  மற்ற சக தொழிலாளர்கள் போல.

“எங்களுக்கு இவ்விலைகள்தாம் காலையிலிருந்து மாலைவரை அதாவது வேலைநேரம் முடியும்வரை உணவாகிறது..இது உடலை சக்தியோடு இயக்குகிறது. .சாப்பாடே தேவையில்லை.. உணவுக்கே திண்டாடுகிற நிலைமையில் காலை-மத்தியாண உணவுக்கு எங்கே போவது? கனாபிஸ் தான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. .மேலும் இந்த தொழிலும் நம்மை கைவிட்டால் அவ்வளவுதான்…”

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *