எழுத்தியப் பதிவு: ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

சப்னா இக்பால்

பெண்களுக்கான தளம் இளம் தலைமுறைக்கான ஒரு களம். ஊடறு தனது பதினெட்டாவது ஆண்டில் பல்வேறு பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதாக தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி என்ற கிராமத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 11,12) பெண்நிலைச் சந்திப்பு ஒன்றை  ஒழுங்கு செய்திருந்தது. குறிப்பாக இளம் பெண்களை உள்ளீர்த்தல் என்ற கருப்பொருளில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு துறைகளிலிருந்தும் பல இளம் பெண்களும் சந்திப்பில்  கலந்து சிறப்பித்தனர். அவர்கள் அனைவரிடமும் நாடுகாண் பயணம் என்பதும் அதனைச் சிறப்புற பயன்படுத்த வேண்டும் என்ற ஆவாவும் மிகைத்திருந்தது. அதற்கு வாய்ப்பாக இரண்டு நாட்களுக்குரிய நிகழ்வின்  முழுப் பொறுப்பும் இளம் தலைமுறையினரிடமே கொடுக்கப்பட்டுருந்தது.

காலை ஒன்பது மணியளவில் பாரதியாரின் கவிதையுடன் சிங்கப்பூர் கங்கா அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பின் நோக்கம் நிகழ்வொழுங்குகள் தொடர்பான ஒரு குறிப்பு வழங்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.  அனைவரையும் வரவேற்றதுடன் ஊடறுவின் ஆசிரியர் ஊடறு றஞ்சி அவர்கள் பற்றிய  அறிமுகத்துடன் ஊடறுவின் அறிமுக உரையை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.  ஊடறு றஞ்சி அவர்கள் 2002 இல் சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட ஊடறு 2005 இல் அனைத்துலக தமிழ் பெண்களுக்கான ஒரேயொரு இணையத்தளமாக  உருவானமை பற்றியும், ஊட றுவின் செயற்பாடுகள், முன்னைய சந்திப்புக்கள், ஊடறுவின் வெளியீடுகள் தொடர்பாகவும் பல புதிதாக கலந்து கொண்டவர்களுக்காக ஊடறு செயற்பாடுகளை தெளிவுபடுத்தினார்.

அமர்வு : 1 (11.03.2023)

அதனைத்தொடர்ந்து ஊடறு பெண்கள் களமும் வாழ்வும் என்ற தலைப்பில் கருக்களைப்   தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களுள் மிகவும் முக்கியமான சல்மா அவர்கள் பேசுகையில் ஊடறுவின் செயற்பாடுகள் மிக உன்னதமானவை, பெண்களும் அவர்களின் குரல் பரவுகையும் ஊடறுவினால் விரிவாக்கம் செய்யப்படுகின்றது,  ஒவ்வொரு பெண்களை சந்தித்தல் என்பதும் அவர்களின் பயணம் எவ்வாறுள்ளது என்ற அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக உள்ளது, சிறு அமைப்புகளும், பெண் அனுபவங்களும் மிகவும் பாரியவை,  பெண்களின் பதிப்புரிமை படைப்புக்கள் பற்றி பேசுதல் அதன் முரண்பாடுகள் எவ்வாறானது என்பதை எழுத்தூடாகப் பேசுதல், இதற்கான ஒரு வாய்ப்பாக தீர்வுகளை தேடுதல் எழுத்தையும் பதிவையும் மேலெழச் செய்தலுக்கான ஒரு தளமாக ஊடறு உள்ளது என்றும்,  ஊடறுவின் பயணம் தொடர வாழ்த்துக்களை தெரிவித்தார்

இவர்களைத் தொடர்ந்து புதியமாதவி அவர்கள் பேசுகையில் ஊடறுவின் பங்களிப்புகள் மிக முக்கயமானவை என்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் தான் தொடர்ச்சியாக ஊடறுவின் பங்களிப்பு உள்ளது என்றும் விளக்கினார்.

அமர்வு : 2  கலை இலக்கியம்.

இவ்விநிகழ்வைத் தொடர்ந்து “முகமூடிகள் அரங்கம்”  அமைப்பினர் நாடகவியலாளர் ஆண்டனி ஜானகி மற்றும் நாடகவியலாளர்  ஸ்ரீதேவி அவர்களால் ஒரு நாடக நிகழ்வு ஆற்றுகை செய்யப்பட்டது. “Where is Justice? என்ற தலைப்பில் பெண்களின் வாழ்வியலை கண்முன் கண்ணிருடன் ஆற்றுகை செய்தனர்.

ஆற்றுகையைத் தொடர்ந்து

மூன்றாவது அமர்வு கலை இலக்கியம் என்ற பொருளில் அரங்கமல்லிகா அவர்களினால் பெளத்தமும் பெண் விடுதலையும் என்ற தலைப்பிலும், ச.விஜயலட்மி அவர்களால் பெண் எழுத்து பின் நவீனத்துவம் என்ற தலைப்பிலும் சந்திரா தங்கராஜ் அவர்களால் காமிரக் கண்கள் பெண்ணுலகம் (இந்திய சினிமா) என்ற தலைப்பில் தனது அனுபவங்களை மிகவும் அர்த்ததுடன் பகிர்ந்து கொண்டார்.

அமர்வு : 3 புலம்பெயர் வாழ்வும் பெண்களும் 

புலம்பெயர் வாழ்வும் பெண்களும் புவனேஸ்வரி ஒருங்கிணைப்பில் ஆரம்பமானது.  மலேசிய வாழ்வும் உழைக்கும் பெண்களும் என்ற தலைப்பில் மலேசியா யோகி அவர்களால் உரையாற்றப்பட்டது.   மலேசியாவில் பெண்கள் பல்வேறு மட்டங்களில் வேலை செய்கின்றனர், அதன் சமூக நிலவரங்கள் எவ்வாறுள்ளது அவர்களின் சவால்கள்  தொடர்பானதாக அவருடைய உரையாடல் அமைந்திருந்தது. இரண்டாவது கருத்து பகிர்வாளராக சப்னா இக்பால் அவர்கள் இளைய தலைமுறை செயற்பாடுகளும் ஊடறுவின் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஆவணப்படுத்தலில் இளைய தலைமுறையின் பங்கு, எழுத்துக்களும் பதிப்புக்களும், ஊடறுவின் இணையதள பயன்பாட்டு முறைகள், ஆவணப்படுத்தலுக்கான தளமாக ஊடறு என்ற ரீதியில் இவரது கருத்துப் பகிர்வு இடம்பெற்றது.  மூன்றாவது பேச்சாளராக பெண்களை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் இலங்கையைச் சேர்ந்த தன்சிகா ரமணாகரன் அவர்களினால் ஆவணப்படுத்தல் என்பதும் அதன் வரலாற்றுப் பின்னணியும், இன்றைக்கு எவ்வாறு ஆவணப்படுத்தல்  செயல்படுத்தப்படுகிறது வாய்மொழி வரலாறுகள் என்றால் என்ன, என்பது தொடர்பாகவும் உரையாற்றப்பட்டது. இந்த அமர்வின் முடிவில் கருத்துப் பகிர்வுக்கும் வினாக்களுக்குமாக சபைக்கு விடப்பட்டது. புதியமாதவி அவர்கள் அமர்வு பற்றிய ஒரு சிறு கருத்துப் பகிர்வை மேற்கொண்டார். உ வே சாமிநாதன் அவர்களுடைய சில கருத்துக்களையும்  சிறு தொழில் முறைகளையும், அவர்களது வாய்மொழி வரலாறுகளை  ஆவணப்படுத்தலின் அவசியம் தொடர்பாகவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது.

அமர்வு : 4  சமூகம் பெண்ணுடல்

 சமூகம் பெண்ணுடல் என்ற தலைப்பில் கல்பனா அவர்களின் ஒருங்கிணைப்பில் அமர்வு இரண்டு ஆரம்பமானது. முற்போக்கான எழுத்துக்கள் சார்ந்த சமூகத்தில் உடல் ஊடுருவி பெண்ணுடல் சமூகத்துடன் எவ்வாறு  இணைந்துள்ளது  என்ற  கருத்தை முன்வைத்ததுடன்  முதலாவது பேச்சாளருக்கான வாய்ப்பு எழுத்தாளர் நீலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. விராலி மலை கள ஆய்வுகள் என்ற தலைப்பில் அவரது கள ஆய்வும் அனுபவங்களும் தொடர்பாக கலந்துரையாடினால்வ்  தேவதாசிகளின் பிரச்சனைகள், சதிராட்ட கலைஞர் முத்து கண்ணம்மா பத்மாவதி அவர்களினுடைய வரலாற்று பின்னணி, அவர்களினுடைய அனுபவங்கள் பற்றி பேசுதல் என்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இருந்தது. இன்று பதின்மூன்று கலைஞர்கள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் அவர்களின் நடன கலை வரலாறு என்ன அது பற்றிய பிரச்சனைகளும் பதிவுகளும் எவ்வாறு உள்ளது என்பது பற்றி அவரது கலந்துரையாடல் அமைந்திருந்தது. இரண்டாவது பேச்சாளராக எழுத்தாளர்  லதா அவர்கள் அவர்களுடைய உரையைத் தொடர்ந்தார்.  ஆண் பெண் பாலியல் உறவுகள் பிரச்சினைகள் என்ற கருப்பொருளில், பாலியல் கல்வி என்பது எவ்வளவு முக்கியம், எதிர்தரப்பினர் மீது பழி சொல்லுதல், பெண்கள் அவர்களது தேவையே அவர்களை பேச வேண்டும், குழந்தை வளர்ச்சிப் பருவத்தில் பாலியல் பற்றிய விழிப்புணர்வுகளை வழங்குதல் அவசியம் என்பது தொடர்பாக அவரது கருத்து அமைந்திருந்தது. அவரைத் தொடர்ந்து ஊடகவியலாளர் மு.வி. நந்தினி அவர்களின் சூழலியல் பாதிப்பும் பெண்களும் என்ற தலைப்பில் உரை இடம்பெற்றது. பெண்கள் அன்றாட வேலைகளின் போது எவ்வாறான பாதிப்புகளை தாங்களாகவே உள்வாங்கிக் கொள்கின்றார்கள், அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு பற்றிய கருத்துக்கள் பகிரப்பட்டன. அந்த கருத்து முடிவில் அவர்களுக்கான செயற்பாடுகளை அவர்கள் எவ்வாறு மாற்ற வேண்டும் என்றும், எவ்வாறான தளங்களை அமைக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டன.

அமர்வு : 5  கல்வியும் கற்பித்தலும்

மதிய நேரத்தின் அசதியை புத்துணர்வூட்டுவதாக சிங்கப்பூர் கங்கா அவர்களால்  நான்கு செயற்பாடுகள் செய்யப்பட்டன. பிறருடன் அறிமுகத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளுதல், குழுச்செயற்பாடு/ஒருங்கிணைப்பு, அறிவுறுத்தல்களை முழுமையாக உள்வாங்குதலும், கூர்ந்து நோக்குதலும், வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தல் என்பது தொடர்பாக விளையாட்டுக்களை முதன்மைப்படுத்தி இவ் அமர்வு செய்யப்பட்டன.

அமர்வு : 5 கல்வியும் கற்பித்தலும் என்ற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. முதலாவது பேச்சாளராக புதுக்கோட்டை பள்ளி ஆசிரியர் கீதா அவர்களால் இந்திய சூழலில் கல்வித்திட்டங்களும், குழந்தைகளும் என்ற தலைப்பில் கல்விக்கொள்கைகளை சமகால விடயங்களுடன் இணைந்ததாக இவரது உரை அமைந்தது. இரண்டாவது பேச்சாளராக செறின் ஆஷா அவர்கள் தேர்வுகளும், தற்கொலைகளும் என்ற தலைப்பில் மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன?  குழந்தைகளை கையாளுதலும் இன்றைய நிலைமையும், என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாதாரங்களினூடாக தனது பகிர்வை முன்வைத்தார். அமர்வின் இறுதிப் பேச்சாளாராக பா. கங்கா அவர்கள் பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் கல்வி, கலை மற்றும் விளையாட்டு ஆகிய மூன்றின் மூலமாக பெண்கள் கல்வியை ஊக்குவித்தல் என்ற வகையில் பல்வேறு உதாரணங்களுடன் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

அமர்வு : 6   தொழில்துறையில் பெண்கள்

அமர்வு : 6 தொழில் துறையில் பெண்கள் என்ற கருப்பொருளில் தொழில் முனைவராக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதுசார்ந்த அனுபவங்கள், அதனை மாற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக வான்மதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அவரைத்தொடர்ந்து தொழிற்சங்க வாதியாக பெண்கள் என்ற தலைப்பில் மதி தனது கள ஆய்வுகள் செயற்பாடுகளுடன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தி ஆழமான ஓர் விளக்கத்தினை வழங்கியிருந்தார். அமர்வின் அடுத்த பேச்சாளராக ஐ.டி துறையில் பெண்கள் என்ற கருப்பொருளில் தனது அனுபவங்களையும் பெண்களின் பல்வேறு சிக்கல்களையும் திரை அகழ்ந்தார். இறுதிப்பேச்சாளராக அவர்கள் பரிமளா தொழிற்சங்கமும் ஐடி துறையும் என்ற தலைப்பின் தொழிற்சங்க செயற்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அமர்வு : 7   பெண்கள் இன்று

(11.03.2023) நாளின் இறுதி அமர்வாக ஊடகவெளி என்ற அரங்கில் பெண்களும் ஓவியக்கலையும் என்ற தலைப்பில் ஓவியர் சக்தி மா அவர்கள் தனது வாழ்க்கை அனுபங்களையும், ஓவியங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். அடுத்த பேச்சாளராக ஊடகவியாலாளர் பாரதி அவர்கள் செய்தித்தாள்களில் பெண்கள் எங்கே? மறைக்கப்படும் செய்திகளில் அதன் பிரள்வுகளும் தொடர்பான வெளியில் பெண்களின் இருப்பு பற்றி தனது ஆழமான கருத்துக்களை முன்வைத்தார். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் பேச்சாளர்களுக்கான அன்பளிப்பாக ஊடறுவின் வெளியீடுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இவ்வாறான அறிவும் தேடலும் தொடரும் வகையில் அமைந்த முதலாம் நாள் நிகழ்வை மலேசியா யோகி அவர்கள் இரண்டாம் நாளுக்கான அறிவுறுத்தல்களுடன் நிறைவு செய்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வு (12.03.2023)

முந்திய நாளின் தொகுப்புரையுடன் ஆரம்பமானது.  தொகுப்புரை (சப்னா இக்பால்) அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக என்னால் தொகுத்து முன்வைக்கப்பட்டது


அமர்வு :  8   ப பெண்களும் அதிகாரமையமும்

பெண்களும் அதிகாரமையமும் என்ற பொருள் முனைப்புடன் இரண்டு பேச்சாளர்களை கொண்டதாக இருந்தது.  புதிய மாதிவி அவர்கள்  அதிகாரப் பகிர்வும் பெண்களும் என்ற தலைப்பில் பெண்ணோடு அதிகாரத்தை பகிர்வதற்கு இரண்டு விடயங்கள் உள்ளது. ஒன்று  சமூகம் அரசியல் கொள்கை இரண்டாவது மதம் என்ற துணைப் பொருளிலும், நிலமும் அதிகாரம் மையமும் பெண்களுக்கு மறுக்கப்பட்டு கொண்டுள்ளது என்பதை சங்ககால ஐந்நிலங்களை உதாரணங்களை கூறி தனது உரையை நிறைவு செய்தார். சிறப்புரைப் பேச்சாளராக சிவகாமி அவர்கள் நிலம் பெண்ணதிகார மையம் என்ற தலைப்பில் தனது கருத்தை பகிர்ந்தார். அந்த வகையில் அவரது கருத்து நிலமும் அரசும், நிலமும் பெண்களும், நிலப்பங்கீடும் சாதி அமைப்பும் முறைகளும், நிலமும் சட்டமும், நிலமும் காலனியவாக்கமும், பெண்களும் அவர்கள் கொள்கைகளுக்கான குரல்களும், முடிவுகளை தாமே எடுக்க விளைய வேண்டும் என்பது தொடர்பாகவும் உரையாற்றினார்

அமர்வு :  9  சட்டமும் பெண்களும்

சட்டமும் பெண்களும் என்ற தலைப்பில் சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாக இவ் அமர்வு இடம்பெற்றது. இந்த அமர்வுக்கு வழக்கறிஞர் ரஜினி தலைமை வகித்தார் பெண்களுக்கு சட்டம் இன்றைக்கு சமூகத்தில் எவ்வாறு உள்ளது என்ற  அறிமுகத்துடனும்  முதலாவது பேச்சாளராக வழக்கறிஞர் மணிமொழி அவர்கள் ஜீவனாம்சமும் வழக்குகளும், நீதிமன்றத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையில் பெண்களின் நிலை என்ன என்பது தொடர்பாக தனது உரையை ஆற்றினார். இரண்டாவது பேச்சாளராக வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீ அவர்கள் ஆண் பெண்கள் என்ற சம உரிமைச் சட்டம்,  சர்வதேச மகளிர் தின வரலாறு, சதிர் பெண்கள், சிசுக்கொலை, விதவைத் திருமணம், பாலியல் சட்டம் என்பவற்றுடன்  போரிட்டுப் பெற்ற சட்டங்கள் இன்று எப்படி நடைமுறையில் இருக்கின்றன என்பது தொடர்பாக அவரது உரை அமைந்திருந்தது. இறுதிப் பேச்சாளராக வழக்கறிஞர் சினேகா  அவர்கள் பெண்கள் சட்டம் இயற்றும் இடங்களில் இல்லை என்பதற்கான காரணங்கள் என்ன? சாதிமுறை இன்று பெண்கள் அதிகாரத்திற்கு எவ்வாறு சவாலாக உள்ளது. நீதி வழங்கும் அமைப்பில் சாதி ஊடுருவி உள்ளமை தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதில் சிலகருத்துக்களை வழக்கறிஞர் மும்தாஜ் அவர்களும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

மியான்மாரில் தமிழரும் வாழ்வும் என்ற வகையில் ரேவதி மற்றும் கனகா ஆகியோர் தமது அனுபவங்களை கொஞ்சும் தமிழில் மிக அழகான முன்வைத்தனர்.

அமர்வு : 10  உள்ளாட்சி அதிகாரத்தில் பெண்கள்

கடைசி அமர்வாக பஞ்சாயத்து இராஜ்ஜியம் என்ற தலைப்பில் இந்தியாவின் பல்வேறு பஞ்சாயத்து தலைவிகளை ஒன்றிணைத்து கல்பனா அவர்களினால் கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பஞ்சாயத்து தலைவியர்கள் ரம்யா, தேவநாயகி, ராஜஸ்ரீ மற்றும் வனிதா ஆகியோர் இதில் கலந்து சிறப்புரையாற்றினர். பஞ்சாயத்து தலைவர்களாக அவர்களது அனுபவங்கள், எவ்வாறு அவற்றை போராடி பெற்றார்கள், இன்று வினைத்திறனாக எவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள், அவர்களுடைய செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பாக அவர்களினுடைய உரை அமைந்திருந்தன. இறுதி அமர்வாக விவசாயமும் பெண்களும் என்ற தலைப்பில் சரோஜா அவர்களினால் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. விவசாயத்தில் பெண்களின் நிலை என்ன பெண்கள் எவ்வாறு விவசாயத்தை பேணி வருகின்றார்கள். புதிய வித்துமுறை தயாரிப்புஇ விவசாயத்தின் ஊடாக ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளுதல் என்பது தொடர்பாக அவரின் உரை அமைந்திருந்தது. அதற்கான உணவு பண்டங்களையும் அவர் வழங்கி அந்த உணவுகள் தொடர்பான உள்ளீடுகளையும், அதனை எவ்வாறு உற்பத்தி செய்கின்றோம் என்பது தொடர்பான ஒரு செயற்பாட்டு முறைமையையும் அங்கு நிகழ்த்தியமை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இறுதியாக மலேசியா யோகி அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. சந்திப்பின் புகைப்படப் பதிவுகளுடன் பெண்களுக்கான களம் என்ற ஊடறுவின் சந்திப்பு பெண்களுக்கான களமாக அமைந்தது. அறிவிப்பாளார்கள் ஃ நெறியாள்கை ஃ ஆவணப்படுத்தல்போன்ற அனைத்து விடயங்களையும் கூட்டு செயற்பாட்டுடன் இளையதலைமுறையினரான /யோகி/கங்கா/ சப்னா தர்சிகா/பாரதி/ரேவதி/கனகா/மிகச் சிறப்பாக செயற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *