மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன் – சப்னா இக்பால்

மொழிகளற்று மெளனத்தில் புதைந்தேன்

தாய்மடிக்காய் ஏழுமாதங்கள் ஏங்கினேன்

அனைத்து வலிகளையும் விலக்கியது ஊடறு

மெளனத்துள் புதைந்த எனக்கு ஓய்வற்ற அனுபவங்கள்

ஊடறுவின் பெண்கள் சந்திப்பும் பெண் நிலை உரையாடலும்  என்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் தந்த றஞ்சி மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  றஞ்சிமாவுடன் ஏற்பட்ட உறவு என்பதும் அவரை காண வேண்டும் என்ற ஆவலும் நெடுநாளாய் இருந்தது. அவ்வப்போது தொலைபேசி வழியாக மிக நீண்ட உரையாடல்கள்.  ஒரு தொலைபேசி அழைப்பு இம்முறை ஊடறு சந்திப்புக்காக உன்னை அழைக்கின்றேன். மிகவும் சந்தோசத்தில் உடனடியாக எ ன் னுடைய பல்கலைக்கழக வேலைகளுக்கு அனுமதி வாங்கி செல்வதற்காக புறப்பட்டேன்.  றஞ்சி மாவை நேரடியாக காணப்போகின்றேன் என்ற ஆவலுடனும் தர்சி அக்காவும் இலங்கையில் இருந்து வருகிறார் என்ற ஒரு செய்தியும் பல்வேறு பெண்களை சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையலாம் என்ற எண்ணமும் ஆழ்மனதில் அடியொட்டி இருந்தது

முதல் நாள் புறப்படுவதை அறிவித்ததும் றஞ்சிமா கல்பனா அம்மாவின் தொடர்பு என்னை வழங்கினார். அவரிடம் நீ வருவதை தெரிவித்துள்ளேன். நீ ஒரு முறை கதை என்றார். கல்பனா அம்மாவிற்கு அழைத்தது சப்னா வாடா புகையிரத நிலையத்திலிறங்கியதும் சொல் என்றார் உரிமையுடன் சொந்த வீடு செல்வது போல சென்றேன். எல்லோரும் அரவனைத்தார்கள்.  பின்னர் தர்சி அக்கா மூன்று வருடகால தொடர்பு தங்கைக்கான அனைத்து கடமைகளையும் எனக்கு செய்பவர். யோகி அக்கா இரு தடவைகள் ஊடறு ZOOM  செயலி ஊடாக கலந்துரையாடல்களில் பார்த்திருக்கின்றேன். என்னை பார்த்ததுமே வாடா என்றார். நீண்ட நாள் பழகிய ஓர் உணர்வு எனக்கு அன்று தான் றஞ்சிமாவையும் முதற்தடவை காண்கின்றேன். அணைத்து முத்தமிட்டு பயணம் தொடர்பாக விசாரித்தார்.  பின்னர் புதிய மாதவிமா. அவரிடம் எங்களை அறிமுகப்படுத்தினார்கள். அவர் உங்களை இன்று நேரடியாக கண்பதில் மகிழ்ச்சி ஆனால் உங்களை பற்றிய செயற்பாடுகளை ஏற்கனவே ஊடறு மூலமாக நான் அறிவேன் என்றார். இந்த சந்திப்புடன்

மாலை மூன்று மணிக்கு ஏலகிரி செல்வதற்காக புகையிரத நிலையம் சென்றோம்.

புகையிரத நிலையத்தில்  பல்வேறு பகுதிகளில்  இருந்து பல அனுபவங்களையுடைய வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் என பலதளங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கும்  பெண்களை தொடரியில் சந்தித்தேன். கவிஞர் சல்மா அவரது சகோதரி, கல்வி ஆலோசகர் ஷெரின், ஊடகவியலாளர் நந்தினி, திரைப்பட தயாரிப்பாளர் சந்திரா ,தோழர் மதி, கவிஞர் கங்கா, எழுத்தாளர் லதா, வழக்கறிஞர் ஹேமாவதி, தொழிற்சங்க செயற்பாட்டாளர் பரிமளா, மியன்மார் ரேவதி, கனகா, நாடகவியலாளர் ஆண்டனி ஜானகி மற்றும்  ஸ்ரீதேவி அனைவரது அறிமுகமும் கிடைத்தது. தொடரியில்  மூன்று மணிநேர அறிமுகமும் அனுபவப் பகிர்வுகளும்  தொடர்ந்தன. திருப்பத்தூரிலிருந்து வான் ஒன்றில் பதினான்கு வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலையை அடைந்தோம். அங்கு சினேகா கா, விஜி மா ,பாரதி, கீதா, நீலா,சரோஜா, ரஜனி, அரங்கமல்லிகா மணிமொழி, சிவகாமி, பஞ்சாயத்து தலைவிகள் ரம்யா, வேதநாயகி ,ராஜஶ்ரீ, வனிதா, புவனேஸ்வரி என பல்வேறு ஆளுமைகளை சந்தித்தேன். தங்களுடைய அனுபவங்களையும் எம்முடன் மிக இலகுவாக பகிர்ந்து கொண்டார்கள். இன்னும் எங்களிடம் காணப்படும் தேடலை மிக விரைவாக மேலூட்டுவதற்கும் இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பெரும்பாலும் சந்திப்பு என்றால் உடனடியாக முடிந்து விடும் என்று ஒரு அவா அனைவரிடமும் காணப்படும், ஆனால் நேரம் சென்றது தெரியாமல் அது தொடர்ந்து கொண்டே இருந்தது.

வெறுமனே இரண்டு நாட்கள் சந்திப்பு மட்டுமின்றி பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களில் காணப்படும் பெண்களுடன் சந்திப்பு என்பதும் மிக ஆத்மார்த்தமான அனுபவத்தை வழங்கியது. அந்தப் பெண்கள் எவ்வாறு தலைமைத்துவம் உடையவர்களாக காணப் படுகிறார்கள் அவர்களுக்கான நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்த சந்திப்பு காணப்பட்டமை மிகவும் சந்தோஷமான ஒரு விடயம்.

அவ்வகையில் என் அன்பிற்குரிய அனைத்து பெண்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவத்தை உணரச் செய்ததுடன், பரீட்டைக்கு விரைந்து செல்வதற்கான விமான பயணத்தை ஒழுங்குபடுத்தி தந்த  றஞ்சி மா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

வியக்கத்தக்க அனுபவங்களும் எண்ணிட முடியாத நபர்களும், மனதை விட்டு அகலாத காட்சிகளும் என்றுமே நினைவலைகளாக என்னுள்.

மீண்டும் ஒரு சந்திப்பில் அனைவரையும் காணும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனது வேலைகளை தொடர்ந்தவளாக…

ரேவதி – மியன்மார



தமிழ்நாட்டின் ஏலகிரிமலையில் கடந்த 11இ 12 மார்ச் 2023 நாட்களில் நடந்த ஊடறு சந்திப்புக்கு ‘ஊடறு’ வின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டேன். மார்ச் 10 அன்று சென்னையிலிருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்குச் செல்லும் தொடர்வண்டியில் நாங்கள் அறிமுகமாகிக்கொண்ட நிகழ்வு மனதில் நிற்கிறது. மார்ச் 11 அன்று முதல்நாள் நிகழ்வில் கலந்துகொண்டபோது “where is justice ” solo performance என்ற பெண்களைப்பற்றிய மிக உணர்ச்சிகரமிக்க நாடகம் என் நினைவில் அழியாது. அந்த அளவிற்கு அனைவரையும் சிந்திக்கவைத்ததோடு அழுகையும் வரவைத்தது.
அன்றைய தினமே நடைபெற்ற ‘கல்வியும் கற்பித்தலும்’ என்ற ஷெரின் ஆஷா அவர்களின் உரை சமகால இந்திய மாணவர்களின் செயல்பாட்டை மையமிட்டு மிக நேர்த்தியாக விவாதிக்கப்பட்டது.

மார்ச் 12 இரண்டாம் நாளில் ’சட்டமும் பெண்களும்’ என்ற தலைப்பில் பேசிய சினேஹா அவர்களின் உரை இந்தியச் சட்டங்கள் பற்றிய அறிமுகத்தை என்போன்ற அயலகத்தவர்களுக்குத் தெளிவாகத் தந்தது. ‘பெண்களும் அதிகாரமையமும்’ என்ற தலைப்பில் சிவகாமி அவர்களின் உரையில் பெண்கள் தவறவிடும் வாய்ப்புகள் பற்றிய தெளிவான பார்வையை வழங்கி என்னை சிந்திக்கவைத்தார். இப்படியாக ஊடறு சந்திப்பில் மிக ஆளுமைமிக்க உறுதிப்பிடிப்பு மிகுந்த பெண் தலைமைகளோடு இணைந்து இப்பயணத்தை மேற்கொண்டதில் பெருமை அடைகிறேன். இவ்வளவு அடர்த்தியான நிகழ்வுக்கு அழைப்பும் பங்கெடுக்க வாய்ப்பும் அளித்த ரஞ்சிமா அவர்களுக்கு உளம் நிறைந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *