கேணல்’ஸ் லேடி — கவிதா லட்சுமி நோர்வே

வில்லியம் சோமர்செட் மௌஹம் (William Somerset Maugham ) எழுதிய சிறுகதை கேணல்’ஸ் லேடி The Colonel’s Lady மிகச் சாதாரணமான அழகுள்ள, வசீகரமற்ற, எந்த ஒப்பனையும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தாத தனது மனைவியிடம் என்னதான் இருந்திருக்கக்கூடும் என்ற கேணலின் எண்ணத்தை, ஆண் மனத்தின் சொல்லமுடியாத போராட்டத்தை, ஆணாதிக்க மனோபாவத்தை, அதன் உளவியலை ஊடுருவி, ஆண் மனத்தின் இருண்ட பகுதியில் வெளிச்சம் பாய்ச்சுகிறது கதை

வில்லியம் சோமர்செட் மௌஹம் (1876-1965) ஓர்ஆங்கில சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் நாவலாசிரியர். சோமர் செட் பெண் சமூகத்திற்கு அளித்த சிறந்த சிறுகதை ‘கேணஸ்ல் லேடி’. இச்சிறுகதையானது மனித மனதின் பல்வேறு உணர்வுகளை, அதன் வெளிப் பாடுகளை ஆராய்கின்றது. சிறுகதையின் உட்பொருள், கையாளப்படும் சூழ்நிலைகள், மனித மனத்தின் நுண்ணுணர்வுகள் என்பவற்றை வாசகர்களுக்குத் தன் எழுத்து வடிவத்தின் மூலம் அவர் கடத்தும் முறை ஒரு சிறந்த சிறுகதைக்கானது. அவருக்கேயான நேர்த்தியான எழுத்தின் போக்கும் பாத்திரங்களும் இரத்தமும் சதையுமாக வாசகரின் ஆன்மாவை தொட்டுவிடும் திறன் படைத்ததாக இருக்கிறது.‘கேணல்ஸ் லேடி’ சிறுகதை, லண்டனில் இருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறுகிறது.

கணவன் மனைவி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட இக்கதை திருமணம் என்ற நிறுவனத்திற்குள் தம்மைப் பிணைத்துக்கொண்ட இரு மனிதர்களின் உணர்வுகளையும் அது கொண்டுவரும் மெய்ப்பாடுகளையும் ஆழமாகப் பேசுகின்றது. கேணல் ஜோர்ஜ் பெரிகிரின் உயரமான திடகாத்திரமான, கம்பீரமான தோற்றமுடையவர். அவரது மனைவி எவி மெல்லிய உடல்வாகும், சாதாரண அழகும், அழகை மேம்படுத்திக் காட்டாத இயல்பான தன்மையும் பொறுமையும் மிக்கவள்.

விருந்தினர்களை உபசரிப்பதிலும் வீட்டை அழகுபடுத்தி நிர்வகிப்பதிலும் வல்லவள். அவர்களுக்கு குழந்தை இல்லை. கேணலைப் பொறுத்தவரை அவர் தனது மனைவியைத் திருமணத்திற்கு முன்
காதலித்ததாக நினைத்தாலும், குழந்தை இல்லாத அவர்களுடைய திருமண வாழ்வில் காதல் தோல்வியடைந்ததாகவே உணர்கிறார்.அந்த வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே வாழ்கின்றனர்.
அவர்கள் வாழும் அவ்வூரில் கேணல் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு மனிதராக இருக்கிறார். களியாட்டம், வேடிக்கை, மகிழ்ச்சி அனைத்தும் ஆணுக்குரியதெனக் கருதும் அவர், திருமண பந்தத்திற்கு வெளியிலும் ஒரு பெண்ணை இணைத்திருக்கிறார். இப்படியான அவருடைய செயற் பாட்டில் எவியினுடைய உணர்வுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. அன்பிற்கு எதிர்ப்பதம் அலட்சியம்தானே! இந்நிலையி கேணலின் மனைவி புனைப்பெயரி ஒரு கவிதை நூல் வெளியிடு கிறாள். இந்தப் புள்ளியிலிருந்தே கதை தொடங்குகிறது. எப்பொழுதும் தன் மனைவியின் உணர்வு களைப் புரிந்து கொள்ளாத கேணலுக்கு அவள் கவிதை எழுதி அதையும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறாள் என்பதே நகைப்புக்குரியதாக இருக்கிறது.

எப்போதும் போல அவளுடைய கவிதை நூலையும் குறைத்தே மதிப்பிடுகிறார். மேலும் அப்படி என்ன பெரிதாக எழுதியிருக்கப் போகிறாள் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இங்கும் அவருடைய அலட்சியம் தொடர்கிறது. எப்படி இருந்தாலும் ஆணுக்கு அடங்கியவள் தான் பெண் என்னும் கருத்தி அசைக்க முடியாத எண்ணமுடையவராகவே கேணல் எவியை நடத்தி வந்தார். அவளுடைய எதுவும் உதாசீனத்தோடே பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் படிக்கப் போவதில்லை என்று தெரிந்து அவர் மேசையிலிருந்த தனது கவிதைத்தொகுப்பினை அவளே அகற்றிவிட்டிருந்தாள். எவியோ கேணலின் அலட்சியப்போக்கைப் புரிந்துகொண்டாலும் தனது அன்றாட வாழ்க்கை வினைகளை எப்போதும் போல தொடர்கிறாள்.

ஆனால் கேணலின் எண்ணத்திற்கு மாறாக புத்தகக்கடைகளிலும் இலக்கிய விமர்சனப் பார்வைகளிலும் எவியின் கவிதைப் புத்தகம் கொண்டாடப்படுகிறது. காதலின் நுண்ணுர்வுகளை இப்படி யாரும் பல காலங்களாய்க் கவிதையில் சொல் லியதில்லை என அவளது கவிதைகளை விதந்துரைத்தனர். கேணலின் மனைவி என்று அறியப்பட்ட எவி இப்போது ‘கவிஞர் எவி’ என்று மரியாதையாக அழைக்கப்பட்டாள். எல்லோரும் கேணலை இவர்தான் எவியின் கணவர் என்று சொ ல் லத் தொடங்கினர்.கேணல் ஜோர்ஜ் பெரிகிரினுக்கு தன் மனைவியின் செல்வாக்கு ஒருவித ஒவ்வாமையையும் சினத்தையும் உண்டாக்குகிறது.கவிதை நூலின் அழகு, ஆழம் மற்றும் அதன் உண்மைத்தன்மை பற்றி அவரது காதுபடக் கருத்துக்கள் வைக்கப்பட்ட போது அனைத்தும் மாறுகின்றன. பலரின் கருத்துக்களினால் ஆவல் கொண்ட கேணல் , லண்டன் சென்றிருந்தபோது தன் மனைவி எழுதி வெளிவந்த கவிதைப்புத்தகத்தைத் தேடி வாங்கிப் படித்துப் பார்க்கிறார். முதலில் படித்த போது அவருக்கு எதுவும் புரியவில்லை. இதையா சிறந்த கவிதைகள் என்று கொண்டாடு கிறார்கள் என வியப்படைந்தார். அவர் அறிவுக்கு எட்டிய கவிதைகள் போல அல்லாமல் ஏதோ கிறுக்கல்கள் போல இருப்பதாக உணர்ந்தாலும் கவிதை வரிகள் ஒரே அளவில் இருப்பதைப் பார்த்து தனது பள்ளிப் பருவ கவிதை போலச் சற்று இருப்பதால் திருப்தி கொள்கிறார்.கேணலுடைய கருத்துக்களைப் போல் அல்லாமல் அவரைச் சுற்றி உள்ள மனிதர்களும், இலக்கிய விமர்சகர்களும் கவிதைத் தொகுதியின் கனதியைப் பற்றி பேசுகின்றனர். கவிதை பேசும் காதல் உணர்வுகளில் ஆழ்ந்து காதலாகி கசிந்து போகின்றனர்.கேணலோ, ஏன் கொண்டாடுகிறார்கள் எனப் புரியாமல் மீண்டும்
மீண்டும் படிக்கிறார். பலதடவைகள் படிக்கும் போது அக்கவிதைகள் ஒரு வயதான பெண்ணுக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையிலான காதலைப் பேசுவதைப் புரிந்துகொள்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் போது கேணலுக்கு இது தன்னுடைய மனைவியின் காதலாக இருக்குமோ என்ற எண்ணம் மெல்லத் துளிர்விட்டு ஒரு பெரிய மனப்போராட்டத்தை அவருக்குள் ஏற்படுத்தி விடுகிறது. ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எத்தனை காதலிகளோடும் வாழலாம் என்ற எண்ணம் கொண்ட – தான் வெளியூர் செல்லும் தருணங்களில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டகேணலுக்கு, தன் மனைவியையும் ஒருவன் காதலித்தான் என்பதைக் கற்பனை செய்து பார்க்கக்கூட அவரது மனம் விரும்பவில்லை. ஆண் என்றால் இப்படித்தான் கேளிக்கைகளை விரும்புபவனாகவும் நிறையப் பெண்களோடு தொடர்புகள் வைத்திருப்பதற்கு நியமம் கற்பித்தாலும் தனது மனைவியை ஒருவன் காதலித்திருக்கக்கூடும் என்பதைக் கேணலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகத்தில் சிறந்த கவிஞராகக் கருதப்படும் எவியின் மீது தற்போதும் தான் கொண்ட அலட்சியத்தையும், கருத்தையும் அவரால் மாற்றமுடியவில்லை. பதிலாக, அவளுடைய புத்திசாலித்தனமும் வசீகரமும் அவரைக் கோபப்படுத்துகிறது.

அதுவும் மிகச் சாதாரணமான அழகுள்ள, வசீகரமற்ற, எந்த ஒப்பனையும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தாத தனது மனைவியிடம் என்னதான் இருந்திருக்கக் கூடும் என்ற கேணலின் எண்ணத்தை, ஆண் மனத்தின் சொல்ல முடியாத போராட்டத்தை, ஆணாதிக்க மனோபாவத்தை, அதன் உளவியலை ஊடுருவி ஆண் மனத்தின் இருண்ட பகுதியில் வெளிச்சம் பாய்ச்சுகிறது கதை. கேணலுடைய மனப்போராட்டம் அவருள் பல குழப்பநிலைகளை உண்டாக்குகின்றது. எவியை விவாகரத்து செய்யவும் நினைக்கின்றார். ஆனாலும் எவியை விட்டு அகன்றால் அவளைப்போல சேவை செய்ய இனிய யாரும் வருவதற்கில்லை, இவளைப் போல கனிவான அமைதியான பெண்ணும் வருவது சாத்தியமில்லை. அவருடைய மோசமான நடவடிக்கைகளைக் கண்டும் காணததது போல இருக்கும் பெண்ணும் வேண்டும். ஒரு பிரபலமான கவிஞராகவும் இனி வருபவள் இருக்கமாட்டாள் போன்ற எண்ணங்கள் அனைத்தும் அவரை விவாகரத்து விடயத்தைத் தேவையற்றதாக்கி
விடுகிறது.

மேலும் இச் சிறுகதையானது, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத சூழலில் அன்றாட வாழ்வை நகர்த்தும் ஒரு அறிவார்ந்த பெண்ணின் நுண்ணு ணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. கேணல் தனது மனைவியைப் புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கலாம், வாசகர்களான நாம் கேணலைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கலாம், ஆனால் மனைவி எவியோ தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தனக்கேயான வழிகள் சிலவற்றைக் கண்டுகொள்ள வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார். கவிதைத் தொகுப்பில் காதலன் இறந்துவிடுகிறான். அவன் யாராக இருக்கக் கூடும் என்பதில் கேணலைப் போலவே நமக்கும்ஆவல் மிகுகிறது.

காப்புரிமை காரணமாக இணையத்தில் இவரது கதைகளைப் பெறுவது கடினம். நூலாக வாங்கிப் படிக்க முடியும்.

எவியின் கவிதை நூலின் தலைப்பு: பிரமிடுகள் சிதையும் போது.

எவியின் காதலன்: கதையில் குறிப்பிடப்படும் ஒரு படிமத்தின்
மூலம் யார் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்க முயல்கிறார்.

கதையின் போக்கு:

கதையின் போக்கு:
‘கதாபாத்திரங்கள் வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக வந்து போகின்றன. உயிரோட்டமுள்ள பாத்திரங்களையும், தடையற்ற வாசிப்பையும் மௌமின் எழுத்துக்கள் நதிபோல நகர்த்திச் செல்கிறது. பிறருடைய நுண்ணுணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள், தமது நுண்ணுணர்வுளைப் பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்க்கைக்குள் இருக்கும் மனிதர்கள், தனது ஆற்றலைச் சிரமப்படாமல் வெளிக்கொணரும் மனிதர்கள் என்போரே இதன் கதைமாந்தர்கள். ‘வுhந ‘The Colonel’s Lady’ என்னும் இச்சிறுகதை வில்லியம் சோமர்செட் மாமின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.

கருப்பொருள்:
பெண் வெறுப்பு மற்றும் பாலின சமத்துவமின்மை, சிறுமைப்படுத்தல் போன்றவை இதில் கையாளப்பட்டிருக்கிறன. குடும்பம் என்ற நிறுவனத்தில் பெண் எப்படி அலட்சியப்படுத்தப்படுகிறாள், எப்படி சுயமரியாதையை இழந்து நாட்களை நகர்த்த வேண்டிய இடத்தில் தனது வாழ்வை நகர்த்திச் செல்கிறாள் என்பதை மையமாகக் கொண்டு கதையின் போக்கு நகர்கிறது. அவளுடைய மதிப்பை அவளுடைய கணவனே மதிப்பிடுகிறான். சமூக மற்றும் குடும்ப நிறுவனப் படிநிலைகளில் பெண்கள் இரண்டாம் இடத்தில் நிறுத்தப்படுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

தலைப்பு:
கதையின் தலைப்பு, கதையின் உள்ளடக்கத்தோடு பொருந்திப்போகிறது. கதையின் நாயகி எவியே முதன்மைப் பாத்திரமாக இருந்த போதும், அவள் கணவரின் வழிதான் அறியப்படவேண்டியவள் என்ற சமூகத்தின் பார்வை தலைப்பின் வழி காட்டப்படுகிறது.

நன்றி தாய்வீடு கனடா june 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *