மாமி

 

 

This image has an empty alt attribute; its file name is 012_story-puthiya-2.jpg

 

ஒரு மகளோடும், ஒரு மகனோடும் எங்களிடம் வந்துசேர்ந்த போது எனக்கு 10 அல்லது 12 வயதிருக்கலாம் என்று தான் நினவில் இருக்கிறது. ஏனெனில் நான் அப்போது படித்துக்கொண்டிருந்த அதே வகுப்பிலே மாமியின் மகளும் சேர்க்கப்பட்டாள். என்னைவிட ராணி நாலுவயது முத்தவள். அவள் எங்களிடம் வரமுன் பாடசாலைப் படிப்பை கொண்டிருந்தாளா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை பாடங்களை கிரகிக்க அவளால் இயலவில்லை. வகுப்புக்குள்ளே தெரியாமல் சிக்கிக் கொண்ட பாவமான ஒரு முகம் அவளிடமிருந்தது.

அதுமாதிரித்தான் மாமியும் எங்களிடம் வந்து மாட்டிக்கொண்டது. அவர் அப்பாவின் சகோதரியோ அல்லது அம்மாவின் உறவு வழியிலோ அறிமுகமான மாமி அல்ல. ரொம்ப தூரத்து உறவில் குடிகார கணவனோடும் வறுமையோடும் ஒன்பது பிள்ளைகள் பிறந்து ஆனால் இரண்டு பிள்ளைகளே பிழைத்துகொள்ள, வாழுதலுக்காக போராடிக் கொண்டிருந்தவர் என எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

தேவா (ஜேர்மனி)

எங்கள் அப்பா உருவாக்கியிருந்த ஒரு மளிகைக்கடை வீட்டின் முன் முழுபாகத்தையும் அடைத்துக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு வியாபாரம் செய்தல் மிக விருப்பமான விடயம். இந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிலும் இருவருடத்துக்கு ஒரு குழந்தைசெல்வம் பெருகிக்கொண்டிருந்தது. சமையல் செய்வது, கடையை நடத்துவது, பிள்ளகளை கவனிப்பது அம்மாவுக்கு சிரமமாகிக்கொண்டே போனதை அம்மாவின் அப்பாதான் கவனித்திருக்க வேண்டும். அப்பா பெரும் தெருவுக்கு காலை ஒன்பது மணிபோல் சைக்கிளில் போய் கடைக்குரிய மொத்த பொருட்களை சேகரிக்க கிளம்பினார் என்றால் அவர் மாட்டுவண்டிலுக்கு பின்னால் திரும்பவர, நாமும் பாடசாலையிலிரும்து திரும்பி வந்திருப்போம். எல்லாரும் பசிக் கோபத்தில் இருப்போம். காலைத் தேநீரோடு மட்டும் வாழப் பழகிய நமக்கு இரைப்பையின் இரைச்சல் தாஙக முடியாதது. எமக்குள்ளே ஆளை ஆள் குதறிக்கொண்டிருப்போம். அம்மா அவசர அவசரமாக சமைப்பார். அவரின் பசியும் சேர்ந்து குசினியே கொதித்துக் கொண்டிருக்கும்.

எங்கள் தாத்தா மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது எங்களிடம் வருவார். அவருடைய மகளின் கஸ்டத்தை உணர்ந்தார். அவரின் ஒரே மகளுக்கு ஏதாவது வகையில் உதவ யோசித்தார். மலைநாடொன்றில் அவர் வாழ்ந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்த வள்ளி பற்றிய சிந்தனை எழுந்தது. அவளை மகளிடம் கொணர்ந்து விட்டால் வள்ளிக்கும் ஒரு நல்லகாலம் பிறக்கும் என்று நினைத்தார்.மேலும் அவரின் வளர்ப்பு பிள்ளையான வள்ளியை, ஒரு குடிக்கு அடிமையானவனுக்கு -நம் சாதிக்காரன் என்பதை மட்டும் கருத்தில் வைத்து- இரண்டாம் மனைவியாக தேடிக்கொடுத்த பாவத்துக்கு பரிகாரம் தேட வேண்டும் என்பதும், அவர் மனதை அரித்துக் கொண்டிருந்ததாக அப்பா அம்மாவிடம் முறையிட்டாராம். ஆகவே வள்ளியையும், அவரின் இரு பிள்ளகளையும் எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்மானமாகியது.

தாத்தா வள்ளியையும் அவரின் இரு பிள்ளைகளயும் எங்கள் வீட்டில் கொண்டு சேர்த்தார். சமையலுக்கு, வீட்டுவேலைகளுக்கு, குழந்தை வளர்ப்புக்கு ஊதியம் கொடுக்க தேவைப்படாத உழைப்பு எங்கள் வீட்டுக்கு நிரந்தரமாக கிடைத்தது. சந்தோசமாக இந்த மாமியை பற்றிக் கொண்டது நம் குடும்பம். மாமிக்கு கணவனிடமிருந்து, வறுமையிடமிருந்து விடுதலை. தன் இரு பிள்ளைகளுக்காக ஒரு எதிர்காலம். தங்க ஒரு நிரந்தர கூரை.

ஆறாவது குழந்தைபேற்றில் இருந்த அம்மாவுக்கு வியாபாரத்தில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாமியின் வரவு பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. பிள்ளைப்பேறு, குழந்தை பிறந்தபின் அதனை பராமரிப்பது தொடங்கி சமைத்தல், மற்றும் ஓடித்திரியும் பிள்ளைகளை குளிப்பாட்டுவது, உடைகளை துவைப்பது, சிறுமிகளான எங்களில் ஒரு ‘கவனம்’ வைத்துக் கொள்வது என அவருக்கான வேலைகள், கடமைகள், பொறுப்புக்கள் ஆக சுமக்க வைக்கப்பட்டன.

அப்பாவின் பலசரக்கு கடையின் வளர்ச்சியும் கூடிக்கொண்டே போனது. நாம் மூவர் பாடசாலை முடிந்து, வீடு வந்து, மத்தியாண உணவை, வீட்டுப்பாடங்களை முடித்தபின் கடைக்குள் வரவேண்டும். பல தெருக்கள் கொண்ட அந்தப் பகுதிக்கு எங்கள் கடை ஒன்றுதான் கூப்பன்கடை. சுற்றிலும் வாழ்ந்த மீனவர்களின் அரிசி, உப்பு, மண்எண்ணெய், தேயிலை, சீனி…… இப்படி சிறிய அளவில் அவர்களுக்கு அன்றாடத் தேவைளை நம் கடை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. மாலை நாலு மணியிலிருந்து ஆறு மணிவரை கடை பரபரப்பாயிருக்கும். மின்சாரமில்லாத பூமி எட்டு மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து பாயை விரித்துவிடும். மேலும் நடுஇரவில் மீனவர் கடலுக்கு கிளம்பிவிடவேண்டுமே.

நம் பாடசாலை சகோதரர்களுக்கு, அம்மா அப்பாவுக்கு, ராணிக்கு ஆறுமணிக்கு மேல் ஒரு குட்டி அமைதி உண்டு. பின் மீண்டும் நாம் பரபரப்பாகிவிடுவோம். கடையைக் கூட்டி சுத்தம் செய்வது பெண்பிள்ளைகளான எமக்கான வேலை. பழைய பேப்பர்களை அளவாய் கத்தரித்து, அதில் சுருள் போடும் வேலையை அம்மா ஆர்வத்தோடு செய்வார். அப்பா சாக்கு ஒன்றை பிரித்து, சணலாக உருவி அதை பந்துபோல உருட்டி அதை தராசுக்கு பக்கமாக முகட்டில் ஆணியொன்றில் கொழுவி தொங்க வைப்பார். இப்படி இரவு பத்துமணி வரை அலுவல்கள் நடக்கும்போது அப்பாவுடைய இளமைக் காலத்தில் நடந்த நகைச்சுவை, புராண, அறிவியல் கதைகள் எம் காதில் விழுந்து கொண்டிருக்கும். அவர் சொல்வதை கேட்டுக்கொள்வது எமது கடமை. எதிர்கேள்வி வரக்கூடாது.

அடுத்த நாளைக்குரிய சீனி, மாவு  கால், அரை ராத்தல் அளவுகளிலும், தேயிலை, கடுகு, சீரகம், மல்லியை நிறுத்து சின்னசுருள் கடதாசி பேப்பர்களில் நிரப்பி மடித்து பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்றவைகளை செய்து முடிக்க எப்படியும் இரவு பத்துமணியாகிவிடும். சொல்லிவைத்தாற் போல பெட்ரோமல்மெக்ஸ் விளக்கு அணைகிற நேரம் வந்துவிடும். லாந்தர் வெளிச்சத்தில் மாமி கையில் வைக்கும் சோற்று உருண்டைக்கு வயிறும் மனமும் அடித்துகொள்ளும்.

மாமி எம்மிடம் வந்துசேர்ந்ததிலிருந்து நாம், பிள்ளைகள் எல்லாரும் இரவு தூங்கப்போகும் போது மாமியுடன் நெருங்கிகொள்வோம். அவருடைய வியர்வை மணம் எங்களுக்கு அருவருப்பு ஊட்டியதில்லை. அம்மா-அப்பாவின் அணைப்பை அறிந்திராத எமக்கு மாமியின் அருகாமை அரவணைப்பூட்டியது. தூக்கம் எம்மை தழுவும் பல இரவுகளில் போது அவர் ஏதாவது முனங்கியபடி இருப்பார். “அந்த பாடையில போவான்” என தன் புருசனை திட்டிக்கொள்வார். இதனைக் கேட்ட எமக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும். அந்த மனிதனை காணவேண்டும் என்ற ஆவல் எமக்கு எழும். அந்த ஆவல் பூர்த்தியாகமலே போனது. தாத்தா மாமியை எம்மிடம் கொணர்ந்து சேர்த்த மாதிரியே, ஒருநாள் மாமியின் கணவன் இறந்துபோன செய்தியை பல வாரங்களின் பின் கொண்டுவந்து சேர்த்தார்.

மாமியோ, மகள் ராணியோ அல்லது மகன் செல்வமோ அது விடயத்தை சிறுவிடயமாக, எடுத்து மறந்து போனார்கள்.

அவர்களின் சொந்த ஊரான ஏறாவூரைப் பற்றியோ படித்த பாடசாலை பற்றியோ, பழைய நண்பர்கள் பற்றியோ அல்லது ஏதாவது சந்தோசமான சின்ன விடயங்கள் பற்றியோ ராணியும், செல்வமும் எதுவும் எந்த சமயத்திலும் எம்மோடு பகிர்ந்து கொண்டதில்லை. மாமியும் ஒன்றும் சொன்னதில்லை. எங்களுக்கு அது ஒரு குறை மாதிரி தெரிந்தாலும், அவர்கள் அதுபற்றி பேச விரும்பவில்லை என புரிந்தது. அந்த பழைய ஊர்வாழ்வு அவர்களுக்கு ரொம்ப சுலபமாக மறந்திருக்க வேண்டும். பாட்டிதான் ஒருதடவை எம்மிடம் வந்திருந்தபோது “ஐயோ,இந்த வள்ளி அவனோடு பட்ட கஷ்டம், சொல்லி மாளாது. ஆக்கின சோத்தை தின்னவுடமாட்டான் அந்தநாய்….. கொதிச்சுக் கிட்டிருக்கிற சோத்துப் பானய நல்லா குடிவெறியில பலதடவ உதைச்சு பொரட்டியிருக்கிறான். கட்டின பொண்டாட்டிக்கு காசு அவன் தாறதே அரும. அதிலயும் ஆக்கின சோத்த தின்னவுடாம பண்ணின அந்த குடிகார மட்ட செத்ததே நிம்மதி” என்று மாமிக்கு முன்னால் சொன்னபோது அவர் சேலை முந்தானையால் முகத்தை முழுவதுமாக துடைத்துக் கொண்டார். அது வியர்வையாலா, துக்கத்தாலா என யாருக்கும் புரியவில்லை.

மாமி வந்ததிலிருந்து நமக்கும் சகோதர்ர்கள் கூடிக்கொண்டே போனார்கள். ஒவ்வொரு மகப்பேற்றின் பின் அம்மாவுக்கு பரிகாரம் செய்வது, மருத்துவ இலைகளை தேடி, அவைகளை அவித்து, அம்மாவை குளிப்பாட்டுவது, பிறந்த குழந்தையை குளிப்பாட்டி, சாம்பிராணிப் புகை பிடித்து, நெற்றியில் ஊதி, பவுடர் போட்டு, பெரிய கறுப்புபொட்டு ஒன்று மழலையின் நெற்றியில் வைத்து கொஞ்சுவார். அம்மாவிடம் அதைக் கொடுப்பார் பால் கொடுக்கும்படி. மாமி குழந்தையை நடுவீட்டு முகட்டில் கட்டியிருக்கும் சேலைத் தொட்டிலில் போட்டு பெரிய ராகத்தோடு தாலாட்டு பாடி தூங்க வைப்பார். உடைகளை அடித்து துவைப்பார். கிணற்றிலிருந்து கயிற்றுவாளி மூலம் நீரை பெரிய டிரம்மில் நிறைப்பார். சின்ன சகோதரர்ளை குளிப்பாட்டுவார். உணவூட்டுவார் மத்தியாணம் மீந்த உணவை, மாலையானதும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு குழைப்பார். பலகை கட்டைக்கு மேல் உட்கார்ந்திருக்கும் மாமிக்கு முன்னால் ஏழு பெரிய, சிறிய பிள்ளைகள் அவருக்கு முன்னாக அரைவட்ட வடிவத்தில் நிலத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருப்போம். ஒவ்வொருத்தர் உள்ளங்கைகளிலும் மாமி ஒரு சோற்றுருண்டை வைப்பார். நாமும் அதை வேகமாக சாப்பிடுவோம். அடுத்த சுற்றுக்கு ரெடியாக வேண்டிய பரபரப்பும், அந்த சுற்றில் எனக்கு தருவதைவிட மற்றவருக்கு கூட கொடுக்கப்படுகிறதா என்ற சந்தேக் கண்ணும் இயங்கும். அப்படி கொடுக்கப்படுகிறதாக கற்பனை தீவிரமாகும். ஏனெனில் மாமி தன் மகளுக்கு, மகனுக்கு எங்களுக்கு தருவதை விட கொஞ்சம்கூட தருவதாக நம்பினோம். இரவுகளில் கடைசிக் குழந்தையை தன்காலை நீட்டி அதன் மேலே தலயணை போட்டு கால்களை அசைத்து, தாலாட்டு பாடி தூங்க வைத்தார். சிறுமிகளான எனக்கும், ராணிக்கும் இந்தப் பயிற்சி தரப்பட்டபோது, எங்களுக்கும் அது சந்தோசம் தந்தது. விளையாட்டும், பொறுப்பும் சேர்ந்த ஒரு விடயம்.

ஒரு புதிய நிம்மதியான சூழல் வீட்டில் நிறைந்தது. மாலை தேநீருக்கும் கூட பொரிவிளஙகாய் போன்ற சங்கதிகளும் நம்மை சந்தோசிக்க வைத்தன. எல்லாமே சரிவர நடந்துகொண்டிருந்தாக நினைப்பிருந்தது. அம்மாவை நாம் காணுவது அவர் குசினிக்கு சாப்பிட வரும்போது. அல்லது கடையில் ஒதுக்கமான ஒரு இருட்டில் புதிதாக பிறந்த குழந்தைக்கு பாலூட்டும்போது அல்லது இரவு நித்திரையாய் கிடக்கும்போது. அப்பாவுடைய இருப்பு அவரை நாம் கடையில் காணுவதோடு சரி. அவர் இருக்கிறார் என்பதும் ஒரு அதிகாரத் தொனியும் அவர் கொண்டிருக்கும் கொள்கைப்படி குடும்பம் நடக்கிறது என்பதும் எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

மாமியின் மகன் பக்கத்துவீட்டு பெண்ணின் மீது காதல் கொண்டபோது மீண்டும் மாமியின் வாழ்வில் புயல் தொடங்கியது. அந்தக் காதலை பிரிக்க மாமியும் ஒத்துக் கொண்டார். காதலிப்பது அப்பாவுடைய கொள்கைக்கு முரணானது. முக்கியமாக அப்பாவால் முடிவாக்கப்பட்ட எந்த விவகாரத்துக்கும் எதிர்ப் பேச்சில்லை. யாவரும் அதற்கு இணங்கியாகவே வேண்டும்.

ஆகவே செல்வம் தூரத் தொலைவூருக்கு இன்னொரு உறவுக்கார வீட்டுக்கு அனுப்பபட்டான். அவன் போன நாளிலிருந்து பல வாரங்களாக மாமியின் இரவுநேர அழுகை எம்மையும் அழவைத்தது. எதற்காக நாமும் அழுகிறோம் என புரியாமலே நாமும் துக்கப்பட்டோம். அவன் வீட்டில் இல்லாமை எங்களுக்கு குறையாகவே தெரியவில்லை. எங்கள் வீட்டில் நிறையப்பேரும் வேலைகளும் நிறைந்திருந்தது. இரவுகளில் மாமியோடு ஒட்டிக்கொண்டு நித்திரை கொள்ளும்போதுதான் மாமியின் பெருமூச்சும், மூக்கைச் சீறி சீலை முந்தானையில் துடைத்துக் கொள்வதும் எங்களுக்கு புரியும்.

மகனிடமிருந்து ஒரு சின்ன கடதாசி கூட கிடைக்காத மாதங்கள் வருடங்களாக பெருகின. “அவன் ரொம்ப கோபத்தில் இருக்கிறான்”என தாத்தா செய்தியை மாமிக்கு சேர்த்தார். அது தன் தலைவிதியென தன்னையே அவர் நொந்துகொண்டார். அவர் மகனைப்போய் பார்த்து சமாதானப்படுத்த வேண்டுமானால் பல தடைகள் இருந்தன. 1வது கூடப்போக ஒரு துணை வேண்டும். 2வது எங்களுக்கு இந்த இடைவெளிகாலத்தில் சமையல், வீட்டு வேலைகளுக்கு யார் உதவி செய்வார். 3வது பயணசெலவுக்கான பணத்தை மகனிடமிருந்து பெறமுடியுமா. அவனும் ஒரு கடையில் ஊழியனாய் வேலை செய்கிறானாம். அவன் தன் விடுமுறை நாளையும் பற்றி யோசிக்கணும்.

மாமியின் இரவுகள் அழுது புலம்பி கழிந்தன. மகள் ‘பெரியவளாகியபோதும்’ இதே அழுகையும், புலம்பல்களும் தொடர்ந்தன. மகளை எப்படி காப்பாற்றி ஒருத்தன் கையில் ஒப்படைக்கப் போகிறேன் என்ற கேள்வியே அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தது. ராணி மாலை நேரங்களில் வீட்டுவாசலில் நின்றால், வீதியில் போகிற ஆண்கள் அவளை கண்கொட்டாமல் பார்ப்பதும் காரணமாயிருக்கும் என்றாலும், மாமி அவர்கள் முதுகுக்குப் பின்னால் அவர்களுக்கு கேட்கிறமாதிரி காறி துப்புவார். அவர்கள் திரும்பி பார்த்தால், இன்னொரு துப்பல் மாமியிடமிருந்து கிளம்பும்.

என் முதல் மாதவிடாய் வெளிப்பட்டபோது மாமி பழந்துணியை கிழித்து, அதை எப்படி மடித்து, இடுப்பை சுற்றி கட்டியிருக்கும் மெல்லிய கயிற்றில் தொடைகளுக்கிடையில் கோவணம் மாதிரி எப்படி செருகுவது என சொல்லி தந்தார். நனைந்த துணியை கிணற்றடியில் ஆண்கள் கண்ணில் படாதபடி காலால் மிதித்து கழுவுவது, காயப்போடுவது, காய்ந்தபின் அவைகளை அடுத்த மாதம்வரை மறைவான இடத்தில் வைப்பது போன்ற விடயங்கள் மட்டுமல்லாமல் ஆண்களை நெருங்க விடக்கூடாது ஆகியவைகளையம் எமக்கு சொல்லித்தந்தார். நாம் பெண்பிள்ளைகள் இரவில் ‘வெளிக்கு’போக தேவைவேண்டிய தேவை ஏற்பாட்டால், மாமி என மெல்லிய குரலில் அவர் கையை நோண்டினால் போதும். அவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாலும் கலைந்து கிடக்கும் தன் சேலையை உடலோடு அணைத்தபடி எழுந்து கூட வருவார். பாக்குவெட்டியை எங்கள் கைகளில் திணிப்பார். அவருக்கு பேய், பிசாசு, பில்லி சூனியங்களில் நம்பிக்கை இருக்கா என்று நாம் அவரைக் கேட்டதுமில்லை. “அவைகள் அப்படித்தான் என்று” எம் இளமைகள் தொடர்ந்தன. மாமியோடே எம் நாளும் பொழுதும் ஒட்டியிருந்த காலங்களில் நாம் அம்மாவை நெருங்கியதில்லை. அவரும் பெரிய, சிறிய பிள்ளைகளை தேடவே இல்லை.

மாமி நலமில்லாமல் படுத்திருந்தது மிகவும் அருமை. ஒரு அரைநாள் கூட பாயில் கிடக்க முடிந்ததில்லை. காய்ச்சல் வந்தாலும் குசினி சுவரில் சாய்ந்தபடி, நாம் பெண்பிள்ளைகள் வீடு, முற்றம் கூட்டி பாத்திரங்கள் கழுவி, தேங்காய் துருவி, மிளகாய் அரைத்து, காய்கறிகளை துப்பரவாக்கி, சமைக்க ஆயத்தமாக வைத்திருப்பதை பார்த்திருப்பார். முனகியபடி எழுந்துவந்து, பலகை கட்டையிலிருந்தவாறு விறகு அடுப்பில் சமைப்பார். யாவும் முடிந்தபின் மீண்டும் மூலைப்பாயில் சுரண்டுவிடுவார். அவருக்கு இப்படி நலமில்லாமல் போகும்போது, நாமோ அம்மா,அப்பாவோ அவர்கிட்டே நெருங்கி அவருக்கு ஏதாவது தேவையா அல்லது “என்ன செய்கிறது உங்களுக்கு”என்று கேட்டதில்லை. வேளாவேளைக்கு எம் வயிறு நிரம்பியது. அவராகவே எழுந்திருந்து பழைய சுறுசுறுப்போடு வேலை செய்யும்போது வீட்டை சுற்றியிருந்த சோகம் கலைந்த மாதிரி இருக்கும்.

மகள் ராணிக்கு அவளின் பதினெட்டு வயது தொடங்கு முன்னரேயே திருமணம் நடந்தது. கலியாண பேச்சு தொடங்கிய நாளிலிருந்தே அவள் அழுதுகொண்டிருந்தாள். மாமி அவளை ஏசுவது கலியாணநாள் வரை நடந்து கொண்டிருந்தது. கலியாணத்தன்று அவள் தலையை இடதுபக்கமாக முகத்தை குனிந்தபடி இருந்தாள். யாருமே அதை சட்டை செய்யவில்லை. அப்பாதான் அவளுக்கு சில நகைகளும் தந்து, கலியாணம் செய்து வைத்ததாக அம்மா எல்லாரிடமும் சொன்னார். தாய்க்கு, மகளுக்கு, மகனுக்கு நல்லதொரு வாழ்வு கொடுத்தஅப்பாவை எல்லாரும் புகழ்ந்தார்கள். மகள் கொழும்பில் வாழத் தொடங்கிய போது, மாமி மாதம் ஒருதடவையாவது அவளைப் பார்க்க போய்வருவார். முதல்முறையாக அவர் கொழும்புக்கு போகையில், என் தம்பி பேருந்து நிலையம் கூடப்போய், டிக்கட் வாங்கி ஓட்டூனரிடம் எந்த தரிப்பில் மாமியை இறக்கிவிட வேணுமென்று சொன்னான். அவருடைய மருமகன் அங்கு வந்து மாமியை அழைத்துக் கொள்வதாக ஏற்கனவே ஏற்பாடு. மாமியுடைய சந்தோசம் பெருகியிருந்ததை நாம், அவர் எம்மிடம் திரும்பி வந்தபோது கவனித்தோம். வழமையாகவே வெள்ளை சேலையில் எமக்கு தெரிந்த மாமி, நிறமான சேலையில் இப்போது அழகாகவும் தெரிந்தார்.
“மகளிடம் அடிக்கடி போவது அவ்வளவு நல்லதில்ல. மருமகன் வருமானத்தில் மாமி வாழுவது மரியாதையில்ல” என்று அம்மா அடிக்கடி மாமியிடம், அவர் எம்மிடம் திரும்பிய போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

நானும் தங்கைகளும் வீட்டுவேலைகளை பகிர்ந்து கொண்டிருந்ததால் மாமிக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கத் தொடங்கியது.மேலும் அவர் மகளிடம் தங்கியிருக்கும் நாட்கள் வாரங்களாகி நீண்டபோது, எங்கள் பெற்றோருக்கு அது எரிச்சலை, கோபத்தை தரத் தொடங்கியது. “நன்றிகெட்ட ஜென்மங்கள்” என்று திட்ட தொடங்கினர். என்றாலும் மாமி எங்களிடம் வந்துவிட்டால், பழைய சுமுக நிலைமைக்கு நாம் வந்துவிடுவோம். அவருடைய உழைப்பு எமக்கு இன்னும் தேவையாய் இருந்தது. மகளுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் குடியிருந்தது. அம்மாவோ இன்னோரு குழந்தைக்கு தாயாகி இருந்த சமயம் மாமி எம்மோடே இருந்தார். தங்கையும் பிறந்து மூன்று, நாலு மாதங்களின் பின் மாமி மகளைப் பார்க்கப் போனார்.சில வாரங்கள், மாதங்கள் ஆகியும் மாமியை பற்றியே நாம் கவலைப்படவில்லை. கவனமெடுக்கவுமில்லை. நாம் வளர்ந்தவர்களாகி, எல்லா வீட்டு வேலைகளையும் ஏற்றுக் கொண்டோம். மாமி எங்களுக்கு தேவையற்றவர் ஆகிவிட்ட ஒரு சமயத்தில் எம் தூரத்து உறவினர் மாமியைப் பற்றிய ஒரு செய்தியை கொண்டு வந்தார். அதாவது மாமி மிகவும் நோய்வாய்ப்பட்டு அரசு வைத்தியசாலையில் வைத்திருக்கப்பட்டிருப்பதாக!.
எங்களுக்கு அது ஒரு செய்தியாக மட்டுமே மனதில் அப்போது பதிந்தது. எங்கள் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் அவரைப் போய் பார்த்ததாக தெரியவில்லை.

16.07.21

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *