பெண்ணிய வாழ்க்கையும், தொடரும் போராட்டங்களும்

சந்தியா கிரிதர்

          Thadagam : On Woman - Sandhya Giridhar     ஒரு பெண்ணின் பொறுமை அவளுடைய பலவீனத்தைப் பற்றி சொல்லுகிறதா? அல்லது வருங்கால மனிதத்திற்கு எச்சரிக்கை தொடுக்கிறதா? என்று நெருடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய மௌனமான மொழிகள் அதிர்ச்சியையோ அல்லது ஆச்சரியத்தையோ கொடுக்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வுலகில் பிறக்கபோகும் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பது என்பது எவராலும் தீர்மானிக்க முடியாது. ஒரு காசுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இந்த உலகத்தில் பெண் குழந்தை பிறந்ததும் இருவகையான உணர்வுகளை அனுபவித்த குடும்பங்களைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பெண்குழந்தையை மஹாலஷ்மி என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமான தருணத்தை அனுபவித்த குடும்பத்தையும் பார்க்கலாம். இன்னொரு குடும்பத்தில் பெண் குழந்தையைஇ சுமையாக கருதி வேதனையடைந்த நொடிகளையும் உணரலாம். இன்னொரு உயிரை படைக்கக்கூடிய சக்தி ஒரு பெண்ணிடம் மட்டும் தான் இருக்கிறது. அந்த ஜிவனை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கு ஒவ்வொரு பெண்ணும்இ தான் சிரமமப்படும் ஒவ்வொரு நொடிகளையும்இ பரவசத்தோடு அனுபவிக்கிறாள். வயிற்றில் சுமக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறாள்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவோஇ பெண்ணாகவோ இருக்க வேண்டுமென்று எந்தப் பெண்ணும் பாகுபடுத்தியதில்லை. ஒரு பெண்இ குழந்தையை பெற்றெடுத்துஇ அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அவ்வளவு பரவசமடைகிறாள். அவள் முகத்தில் கண்ட பரவசத்தை எந்தக் கடையிலும் விலை கொடுத்து வாங்க முடியாது. கர்ப்ப காலகட்டத்தில் பெண்ணுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வப்போது வம்சவிருத்திக்கு தாங்கள் ஆண் குழந்தைக்காக ஏங்குவது போல உணர்வைக் கொடுப்பதால் அந்தப் பெண்ணின் மனதில் ஏதோவொரு நெருடல் இருந்து கொண்டேயிருக்கிறது. இந்தச் சமுதாயமானது ஒரு பெண்ணுடைய கர்ப்ப காலகட்டத்திலும் அவளை நிம்மதியாக வாழ விடுவதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளால் பெண்கள் படும் வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

,          Thadagam : On Woman - Sandhya Giridhar

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமம்: அந்த கிராமத்தில் இன்றுவரை பெண்வீட்டார் திருமணம் நடத்தியதேயில்லை. அந்தக் கிராமம் இன்னொரு கிராமத்திலிருந்து பெண் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்தக் கிராமத்தில் தப்பித்தவறி பெண் குழந்தை பிறந்துவிட்டால், சில நொடிகளிலே அந்தக் குழந்தையை கொலை செய்து விடுகிறார்கள். அந்தக் கிராமத்தில் பொது இடத்தில் பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. தொட்டி முழுவதும் பால் நிரப்பி பிறந்த பெண் குழந்தையை மூழ்கடித்து மூச்சு திணறடிகபட்டு அந்த பெண்சிசு பலியாகிறது. மூடநம்பிக்கையின் பெயரில் இந்தக் கிராமத்தில் தொன்றுதொட்டாக பெண்சிசு வதம் நடைபெற்று வருகிறது. இந்த அநீதிக்கு துணை செல்லும் அந்த கிராமத்து பெண்களின் மௌனமே பெண்சிசு வதத்திற்கு காரணமென்று சொல்வதா? அல்லது எல்லை மீறி தாண்டவமாடும் ஆணாதிக்கத்தின் மீது குறை சொல்வதா? இத்தகைய கொடூரத்திற்கு யாரை பொறுப்பென்று குற்றம் சொல்வது?

ஹரியானா மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்: அந்த கிராமத்தில் வயிற்றுப் பிழைப்பிற்காக பெண்கள் மட்டும் தான் வேலை செய்து பிழைக்கிறார்கள். படிப்பறிவில்லாத அந்த கிராமத்து பெண்கள் உடலை விற்றுப் பிழைக்கிறார்கள். அங்குள்ள ஆண்கள் தங்களால் வம்சம் விருத்தி பெறுவதால் வரட்டு கௌரவம் பிடித்து, எந்தப் பணியிலும் ஈடுபடாமல் பெண்களின் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். விருப்பமில்லாமல் பிற ஆடவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் இந்த பெண்களின் வேதனை என்றும் ஆறாத புண்ணாகிறது. ஒரு வேளை சோற்றுக்காக இந்தப் பெண்கள் சதைப்பிண்டத்தை விற்றுப் பிழைக்கும் நிலைமை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்: அந்த கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்க்கைச் சக்கரம் கரடுமுரடான பாதையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வறுமை அந்த கிராமத்து பெண்களோடு விளையாடுகிறது. போதாக்குறைக்கு ஆண்கள் தேவையில்லாத ஆதிக்கத்தை பெண்களின் மீது திணிக்கிறார்கள். அங்குள்ள பெண்கள் கர்ப்பப்பையை வாடகைக்கு விற்றுப் பிழைக்கிறார்கள். குழந்தை பாக்கியமில்லாத தம்பதியர்களின் ஒருவரின் உயிரணுக்களை தங்களுடைய கர்ப்பப்பையில் சுமக்கிறார்கள். பத்து மாதங்கள் கழித்து புதிய உயிரை பெற்றெடுத்து அந்த தம்பதியர்கள் கைகளில் ஒப்படைக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி சொல்லி மடியாது. ஒரு பக்கம் பணம் கொடுத்தவர்களுக்கு குழந்தையை பாதுகாப்பாக பெற்றுத் தர வேண்டும், இன்னொரு பக்கம் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டும். இருந்தாலும் இந்தச் சுமையான வாழ்க்கையை ஒரு பகுதியாக எண்ணி வாழும் இந்த கிராமத்து பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்?

மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கிராமம்: அந்த கிராமத்து மக்கள் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறhர்கள். இந்தச் செய்தி நமக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் அதனுள்ளே மறைந்துகிடக்கும் நிஜமான செய்தி நம்மை உயிரற்ற நடைபிணமாக்குகிறது. சந்தையில் ஆடுமாடுகள் விற்கப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேhம். ஆனால் இந்த கிராமத்தில் சந்தையில் பத்து அல்லது பதினொன்று வயதுடைய பெண்குழந்தைகள் விற்கப்படுகிறார்கள். அரபு நாட்டைச் சேர்ந்த ஷேக்குகள் இந்த பெண்குழந்தைகளை சொற்ப தொகைக்கு வாங்கிச் செல்கிறார்கள். சொற்ப தொகைக்கு ஆசைப்பட்டு மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய பெண்களை விற்றுப் பிழைக்கிறார்கள். இந்தச்சிறுமிகளை அரபு நாட்டிற்கு அழைத்துச் சென்று ஷேக்குகள் கொடுமைப்படுத்துகிறார்கள். காமத்தைப் பற்றி அறியாத அந்த துளிர் விடும் வயதில், ஷேக்குகள் காம-வெறியை பூர்த்தி செய்து கொள்வதற்கு இந்தச் சிறுமிகளை பலவந்தமாக வற்புறுத்தி பயன்படுத்துகிறார்கள். இந்தச் சிறுமிகள் அனுபவிக்கும் கொடுமைகளும், வேதனைகளும் உலகிலுள்ள எந்தப் பெண்ணிற்கும் இழைக்கப்படக்கூடாது. இந்தச் செயலுக்கு சமூகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இதற்கு துணை செல்கிறதென்று சொல்லலாம்.

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள காட்டுப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்கள் வாழ்க்கையையும் வார்த்தைகளால் சித்தரிக்க முடியாதது. நக்ஸலைட்டுகள் இங்குள்ள சிறுமிகளை உளவுத் தொழிலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்தச் சிறுமிகளின் வாழ்க்கை கயிற்றில் ஏறி வித்தைக் காட்டுபவனின் உயிரைப் போல சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவில் ஊசலாடுகிறது. இந்தச் சிறுமிகள் திறமையாக செயல்பட்டால் வாழ்க்கையை வாழலாம் அதுவே பிடிபட்டால் இந்தச் சிறுமிகள் உயிரைவிட வேண்டும்.

தில்லியிலும், மும்பையிலும் அதிகபட்சமாக பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இரக்கமில்லாத நெஞ்சங்கள் நிறைந்த இந்த மெட்ரோ மாநகரங்களில் இத்தகைய கொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்;. புகுந்த வீட்டுக்காரர்கள் கொடுக்கும் மன அழுத்தத்தால் பெண்கள் தற்கொலை செய்யுமளவுக்கு முயற்ச்சி செய்கிறார்கள். இங்கு திருமணங்கள் விலை பேசப்படுகின்றன. பேசப்பட்ட தொகையை கொடுக்கத் தவறிய பெற்றோர்கள் தங்களுடைய மகளை இழக்க நேரிடுகிறது. உயிரை விட இந்த மாநகரங்களில் பணம் தான் மேலோங்கி நிற்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. சுயநலவாதிகள், காமவெறியர்களின் தொல்லை தாளாமல் இந்தப் பெண்கள், காட்டில் பதுங்கி வாழும் மான்குட்டியைப் போல அவர்கள் கைகளில் சிக்கித் தவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.

பிஹார் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்: அந்தக் கிராமத்தில் 8 அல்லது 10 வயது சிறுமிகள் பீடி தொழிற்சாலையில் பணிபுரிகிறார்கள். பீடியில் இருக்கும் மருந்துகள் சிறுமிகளின் சுவாசக் குழாய்களில் புகுவதால் அந்த சின்ன வயதில் அவர்கள் இருதய நோயால் அவதிப்படுகிறhர்கள். அவர்களுடைய ஏழ்மையே அவர்களது உயிரை பலியாக்குகிறது. பிஹாரில் அதிகபட்சமாக பெண்கள் கட்டிடம் கட்டும் பணியை செய்கிறார்கள். சுமைகளை தூக்கித்தூக்கி நடுத்தர வயதுடைய பெண்கள் முதுமையாக தென்படுகிறhர்கள். பெண் சம்பந்தப்பட்ட நோயினால் இந்த இளம்வயதுப் பெண்கள் மருத்துவ வசதியில்லாமல் உயிரிழக்கிறார்கள். வரட்டு கௌரவம் பிடித்த ஆண்கள் அவர்களை அடக்கி ஆள்வதை மட்டும் தப்பாமல் செய்வார்களே தவிர்த்து குடும்பத்திற்கென்று ஒரு போதும் உழைத்ததாக வரலாறே கிடையாது.

இவற்றை எல்லாம் சகித்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பொறுமை அவளுடைய பலவீனத்தைப் பற்றி சொல்லுகிறதா? அல்லது வருங்கால மனிதத்திற்கு எச்சரிக்கை தொடுக்கிறதா? என்று நெருடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய மௌனமான மொழிகள் அதிர்ச்சியையோ அல்லது ஆச்சரியத்தையோ கொடுக்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.

தடாகம் சஞ்சிகையில் இருந்து ஊடறுவுக்காக  யசோதா இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *