டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி

கார்குழலி


டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அகமலர்ந்து அவர் சிரிக்கும் இந்தப் புகைப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது.சமூக சேவகர், தயாரிப்பாளர், உடலழகை நேர்மறையாக அணுக உதவும் தலைவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், கறுப்பினப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றுபவர் என்ற பன்முகங்களைக் கொண்டிருக்கிறார். தன்னுடைய ஆளுமை, ஆற்றல், நயமிக்க பண்பு இவற்றால் முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுத் தன்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். கிளப்ஹவுஸில் பொருளாதாரம், இனவாதம் போன்ற பதட்டம் ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளில் கலந்துரையாடல்களை நெறியாள்கை செய்தார். ஒருவரையொருவர் முன்பின் அறிந்திராதவர்கள் பேசிக்கொள்ளும்போது அவர்களிடையே பாலமாகச் செயல்பட்டார். மாறுபட்ட அரசியல் சமூகக் கருத்தியல்களைக் கடந்தும் மக்கள் கலந்துரையாடல் செய்ய உதவி வருகிறார். “இனி யாரும் சார்புநிலையின்றி இருப்பது இயலாத காரியம். இன்னமும் மதில்மேலே பூனையாக இருந்தீர்களானால் விரும்பியோ விரும்பாமலோ வன்முறைக்கும் அவமரியாதைக்கும் துணைபோகிறீர்கள் என்றுதான் பொருள்,” என்கிறார்.டண்டரா பகு இளவயது முதல் வறுமை, வன்முறை, இனவாதம் போன்ற கொடுமைகளைச் சந்தித்து வளர்ந்தவர். ஆனால் உளவியல் சிகிச்சைமூலம் ஆழ்ந்த ஒத்துணர்வையும் நன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டது உணர்வுசார்ந்த வலியை எதிர்கொள்ளவும் வாழ்க்கையில் தொடர்ந்து பயணம் செய்யவும் உதவியது என்கிறார். “என்னைப்போலவே மற்றவர்களும் மாறமுடியும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். நம் ஒவ்வொருவரின் கையிலும் அதற்கான ஆற்றல் இருக்கிறது,” என்கிறார்.

நன்றிhttps://www.facebook.com/karkuzhali.sreedhar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *