பெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.

நா.நவராஜ்

இருபத்தியாறு கவிஞைகளின் எழுபது கவிதைகளைக் கொண்ட நூல்: பெயரிடாத நட்சத்திரங்கள் கிடைத்தது. ரமேஷ் அதனைத் தந்தார். அது பற்றிய ஒரு மதிப்பீட்டுக்காக. கவிதைகளோடு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நான் என்னத்தை மதிப்பீடு செய்வது. பெண்போராளிகள் வேறு அதனைப் படைத்துள்ளனர். கவிதையென்றாலும் ஓரளவு பரவாயில்லை. அரசியல் நான் பிரவேசிக்க விரும்பாத பக்கமாகவே இருக்கின்றது. என்றாலும் அச்சூழலில் வாழ்வதால் நானும் ஓர் அரசியல் விலங்குதானே. பார்த்துவிட்டுப் பதில் உரைப்பதாகக் குறிப்பிட்டேன். எனக்குப் பரிச்சயமில்லாத, நான் பிரவேசிக்கவிரும்பாத இருநிலைகளைக் கொண்ட ஊடறுவின்  பிரதியுள், தொகுதியுள் ஊடறுத்து உட்புகுந்த போது ‘ஊடறுப்பு’ என்ற தலைப்பினுள் இருந்த உரைப்பகுதியில் ‘இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எம் வாசிப்பில் தோற்றுவிக்கும் அதிர்வுகள் போரியலையும், போரியலைத் தாண்டிய வெளிகளையும் தொட்டு பன்முக – சமூக, அரசியல், இலக்கிய, பெண்ணிய – உரையாடல்களையே இங்கு வேண்டிநிற்கின்றன’ (பக்கம் – 12) என்ற வேண்டுதலைக் கண்டு, நின்று நிதானித்து மதீப்பீடு செய்து பார்க்கும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு வாசித்த போது அந்நூல் பற்றி எழுந்த எனது சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம், பதிவு செய்யலாம் எனக் கருதித் தொடர்கின்றேன்.

PeyaridathaNadsathirankal-jpg

மனிதனது வாழ்வியல் பால், பால்நிலை என்ற இரு கருத்தாக்கங்களுக்கு உட்பட்டுத் தன்னைக் கட்டமைத்து வைத்திருக்கின்றது. பால் என்னும் போது ஆண், பெண் என்ற உடல்சார்ந்த பேதங்களைக்கொண்டதான இயற்கையால் இயல்பாக உருவாக்கப்பட்ட உருவம் சார்ந்த ஓர் அம்சமாகக் கொள்ளலாம். பால்நிலை என்னும் போது அந்த உருச்சார்;ந்த உடல்சார்ந்த அடிப்படைகளை வைத்து ஆண் என்றால் இப்படியிருக்க வேண்டும் பெண் என்றால் இப்படியிருக்க வேண்டும் என எம்மால், சமூகத்தால் உடல் உளம் சார்ந்து கருத்தேற்றப் பட்ட ஓர் அம்சம் எனலாம். இந்தப் பால்நிலைசார்ந்த கருத்தேற்றத்திற்கு உட்பட்டே காலம் காலமாக ஆண்களும் பெண்களும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். அது சமூகத்தின் முக்கியமான கருத்தேற்றமாக ஆகிவிட்டது. அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. இதனை ஆண்களும் பெண்களும் நம்பத்தொடங்கி, தமது எல்லைகளை வரையறுத்து இயங்கத்தொடங்கினர் எனலாம். குறிப்பாகப் பெண்கள் அந்த எல்லைக்குள் இயங்க வற்புறுத்தப்பட்டனர். இவ்எல்லைகள் மீறப்படுகின்ற போது ஆண்களைப் ‘பொண்ஸ்’ என்றும் பெண்களை ‘ஆண்மூச்சுக்’ கொண்டவள் போன்றவசைச்சொற்களைக் கொண்டு அடக்குவதும் பிறழ்வான நடத்தை என முத்திரை குத்துவதும் சமூகத்தின் தேவையாகிப்போனது. உதாரணமாக ஆண்கள் வீரத்தின் பிறப்பிடமாகவும் பெண்கள் அன்பின் இருப்பிடமாகவும் கணிக்கப்பட்டனர். இந்தக் கணிப்பீட்டில் மாற்றம் நிகழும் போது சமூகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறலை அது எதிர்கொள்கின்றது. அதனைக் குணமாக்க அத்தகையவர்களை அது தன்னில் இருந்து வெளித்தள்ளித் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றது. ஆனால் இதற்கு மாறான நிலைகள் எமது வாழ்வியலில் இருக்கத்தான் செய்கின்றன. சமய நோக்கில் பார்த்தால் வீரத்திற்குப் பெண்ணையும் (துர்க்கை) அன்பிற்கு ஆணையும் (சிவபெருமான்) போற்றுகின்ற முரண்நிலையை நாம் கண்டுணரலாம்.இந்தப் பண்புகள் முடிந்த முடிவாக இன்னாருக்கு இன்னதுதான் என்று நிலைநிறுத்தப்படவில்லை. புராணங்களில் நிகழும் சம்பங்களில் இவை இணைந்தும் மாற்றமுற்றும் நிகழ்வதை நாம் தரிசிக்கமுடியும். சாதாரண வாழ்வியலில் ஆண்நிலைப்பட்ட மனோபாவம் இதனை (ஆணுக்கு வீரம் பெண்ணுக்கு அன்பு என) மாற்றியமைத்து, இது மாற்றமுடியாத இயல்பு, இதுதான் இயற்கை என்று நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் வாழ்ந்த பெண்கள் அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுத் தமது வாழ்க்கையை நடத்திவந்துள்ளனர். வருகின்றனர். எனினும் அதற்கு எதிரான அதில்இருந்து விடுபடவேண்டும் என்ற மனப்பாங்கினையும் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். இருக்கின்றனர். அதற்கான களம் அன்று அவர்களுக்குச் சரிவர அமையவில்லை என்றே சொல்லலாம்.

பாரதி நீ
சிறுமைகளைக் கண்டால்
சீறு… காறு… என்றாய்..
சீறிய போது சமூகம் இவளைச்
சினத்தது.
பெண்ணினத்தைச் சீரழிக்கும்
பேடிகளைக் கண்டு இந்த
குஞ்சுப் பாஞ்சாலி
குரல் கொடுத்த போதெல்லாம்.
பாண்டவர்களே இவளைத்
தூசித்தார்கள்.
என்று ஆதிலட்சுமி (பக்கம்- 53)

கூறுவது போல் தமது எண்ணங்களை நடைமுறைப்படுத்தியவர்களைச் சமூகம் நேர்மையற்றவர்கள், அடங்காப்பிடாரிகள் என்றது. இப்படித்தான் எமது சமூகம் தனது மனப்பாங்கை நிலைநிறுத்தி வைத்திருந்தது. எனவே அதனிலிருந்து விட்டுவிடுதலையாகி நிற்கும் விருப்பினை அவர்கள் தமது ஆத்மாவிற்குள் அடைகாத்து வைத்திருந்தனர். அது அவர்களினூடாக அவர்கள் பிள்ளைகளுக்கு, பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு எனக் கடத்தப்பட்டுவந்திருக்கின்றது. போராட்டம் அதற்கான களத்தைக் கொடுத்தபோது அதில் ஈடுபட்ட பெண் ஒருத்தி வியப்பெய்துகின்றாள்..

நான் எரிமலையிலிருந்துதான்
தோன்றியிருக்க வேண்டும்
ஆம் அப்படித்தான் இருக்கும்
இல்லையேல்
எனக்குள்ளிருக்கும் நெருப்பு
எங்கிருந்து வந்தது.?

ஆம், ஒரு தொடர்பில்லாமல், வேர் இல்லாமல் அது வந்திருக்க முடியாது. அப்படியானால் அம்மாவிடமிருந்தா அது வந்தது? என அவள் ஆராய்கின்றாள். அம்மாவைப் பார்த்தால் அப்படியில்லையே,

அவள் ஊருக்கெல்லாம் சோறு போட்டு
தன் பசியாறுபவள்
என் சிரிப்புக்காகவே உயிர்வாழ்பவள்
அவளிடம் நான் எரிநெருப்பை
ஒருபோதும் கண்டதில்லை.
என்றே அவள் முடிவிற்கு வருகின்றாள். ஆனால் அதற்கான பதிலை
ஓ! ஒருவேளை அவள்
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும்
அடக்கி வைத்த ஆத்திரம் தான்
3
என்னிலிருந்து
பெரும் பொறியாய் எழுகிறதோ
அவளது உரிமைகள்
மறுக்கப்பட்டதால் தான் என்
குரல் ஓங்கி ஒலிக்கின்றதோ. (மலைமகள்: பக்கம் – 88)

எனத் தாயாரின் ஆழ்மனத்தில் அது இருந்திருக்கலாம் என்ற புரிதலில் கண்டுகொள்கின்றாள். தனிநபரைப் பொறுத்தவரையில் அடக்கப்படுகின்ற கோப உணர்வானது இடப்பெயர்ச்சிநிலையில் (னுiளிடயஉநஅநவெ) வெளிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் வாழ்வியலில் நடைபெறுகின்றமையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இந்த கவிதையில் உள்ள உணர்வு ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு ஊடுகடத்தப்பட்டு, கூட்டுநனவிலியில் (ஊழடடநஉவiஎந ருnஉழளெஉழைரள) கிடந்து தனக்கான களம் கிடைக்கும் போது தனது தேவையைத் தீர்த்துக்கொள்கின்றது. ஒட்டுமொத்தப் பெண்களின் குரலையும் அது எதிரொலிக்கின்றது. நாம் எமக்காக மட்டுமல்ல எம் மூதாதையரின் அடக்கிவைக்கப்பட்ட ஆத்திரத்தின் திரட்சியாகவே, கிடைக்கப்பெற்ற களத்தில் திரண்டு முன்நிற்கின்றோம் என்கிறது. இந்தவாறு போராட்ட களத்தில் இனவிடுதலைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் முன்னின்ற இவர்களிடம் தெளிவான பரந்துபட்ட சிந்தனைப் பாங்கு இருந்திருக்கின்றது. வழிவழியாக வந்த எரிநெருப்பை, பெண்விடுதலையின் பெருநெருப்பைத் தமது நெஞ்சங்களில் மட்டும் வைத்திருக்காமல் மற்றவர்களுக்கும் அதனைத் தொற்றவைக்க வேண்டும் என்ற பெருவிருப்பிருந்திருக்கின்றது. உயிர்ப்பு என்ற கவிதையில் கிருபா (பக்கம் – 87)

காலத்தின் சுமைகள் என்
இதயத்தை அழுத்துகின்றன – நான்
விடுகின்ற மூச்சுக் கூட
முனகியபடியேதான்.
இருப்பினும்
ஊன்றிச் சுவாசிக்கின்றேன்
அது செல்லட்டும்
தூரச் செல்லட்டும்
மிகத் தூரச் செல்லட்டும்
ஒரு சிறிய மூலைக்குள்ளும்
பொந்துக்குள்ளும் கூட
செல்லட்டும் – அங்கே
என்னைப் போன்ற
இன்னொருவருக்கு அது
உயிர்ப்பளிக்கலாம். (கிருபா: பக்கம் – 87)

என்று கூறுவதைப் போராட்டம் என்ற எல்லைக்குள் குறுக்கிவிடநான் விரும்பவில்லை. பெண்விடுதலை என்ற தளத்தில் வைத்துப்பார்க்கவே விரும்புகின்றேன். மனிதர்களின் பொருட்டு தேவஉலகத்தில் இருந்து நெருப்பை எடுத்து புறொமீதியஸ் மனிதர்களுக்குக் கொடுத்தார். அதனால் அவர் பெரும்பாறையில் கட்டிவைக்கப்பட்டு அவரது ஈரலைப் பிடுங்கித் தண்டிக்கப்பட்டார். பிடுங்கி எடுக்கப்படும் ஈரல் மீள வளர வளர அது ஒவ்வொரு நாளும் கழுகளால் பிடுங்கப்படும் தண்டனையை அனுபவித்தார். என்கின்றது கிரேக்கம். அடக்கப்பட்ட பெண்களின் பொருட்டு அவர்தம் ஆழ்மன
4
நெருப்பை ஏந்திப் புறப்பட்ட இக்கவிஞைகள், பெண்விடுதலையைப் பெறும் தமக்கான வெளியாகப் போராட்டத்தையே கண்டுகொண்டனர்.

உன்னைக் குட்டுபவர்கள்
குட்டக் குட்ட
நீயும் குனிந்து குனிந்து
அங்கே குசினிக்குள்ளேயே
குமுறிக்கொண்டிருப்பாய்.
புறப்பட்டுவா
ஒரு புதுயுகம் படைப்போம்,
நாம் தூக்கிய
துப்பாக்கியின் பின்னால்.
எம் இதயம் நேசிக்கும்
தேசத்து விடுதலை
எமக்கு எட்டும்போது – அங்கே
பெண்ணடிமைக்கு
சமாதி கட்டப்படும்
சமுதாயத்தின்
பிற்போக்குச் சிந்தனைகளுக்கு
புதைகுழி தோண்டப்படும். (வானதி: பக்கம் -66)

என்று நம்பிக்கை வளர்த்திருந்தனர். இதனால் போராட்டத்தில் இணைந்து தமக்குள் இருந்த தலைமைத்துவத்தினைச் சிந்திக்கும் திறனை, வீரத்தினை வளர்த்து முன்பிருந்த சமூகத்தடைகளை உடைத்து முன்செல்லும் பாதையினை உருவாக்கிக்கொண்டனர். பெண்கள்சார்ந்திருந்த பால்நிலைசார் சமூகமனப்பாங்கினைப் புறந்தள்ளி சாதனைகளையும் சாகசங்களையும் புரிந்து பலபெண்களுக்கு முன்மாதிரிகள் ஆயினர். எனினும் போரின் பின்னரான தற்காலச் சூழலில் அவர்களது நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டு, முன்னைய நிலையிலும் கீழான நிலைக்குப் பின்தள்ளப்பட்டதுடன், இவர்கள் குடும்ப வாழ்விற்குச் சரிப்பட்டுவரமாட்டார்கள் என்ற மனப்பாங்கினையும் ஊன்றி வளர்த்துச் சமூகம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளமாகவே தன்னை இனங்காட்டி நிற்கின்றது. சற்றும் சலிப்பில்லாமல் சமூகமாகிய வேதாளத்தைத் தம்மைநோக்கி இழுத்துவரும் விக்கிரமாதித்த மனநிலையையே தற்போது பெண்கள் அடைந்திருக்கின்றனர். குறிப்பாகப் போராளிகளாக இருந்த பெண்கள் தமது உள்ளத்தில் இருந்த நெருப்பை வெளிப்படுத்தியதால் புறொமீதியஸ் போல கணத்திற்குக் கணம் ஈரல் பிடுங்கி எடுக்கப்படும் வலியையே அனுபவிக்கின்றனர். போர்க்காலங்களில் கௌரவமாகவும் புனிதமாகவும் பார்க்கப்பட்டவர்களுக்கு, இன்று சாதாரண சமூகச் சூழ்நிலையில் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாதபடி விரக்தியும் சலிப்பும் இனியென்ன வாழ்க்கை என்ற கையறுநிலையும் கொண்ட வாழ்க்கைமுறைமையையே நமது சமூகம் வழங்கி நிற்கின்றது. அன்ரன் செக்கொவின் ‘அந்திமாலைப் பாடல்’ (ளறயn ளுழபெ) என்ற நாடகத்தில் வயதான ஒரு நடிகனின் மனநிலையைப் புலப்படுத்திச்செல்லும்போது அவன் தனது காதலைப் பற்றிச் சொல்லும் ஓர் இடத்தில் ‘… அவை கைதட்டி ஆரவாரஞ்செய்து என்னைப் போற்றுவினம்; என்ரை படத்தை வேண்ட ஒரு றூபிள் சிலவழிப்பினம்; ஆனால், அவையைப் பொறுத்தவரையில் நான் ஒரு அன்னியன்; அவையைப் பொறுத்தளவிலை நான் அழுக்கு நிறைஞ்சவன்; கிட்டத்தட்ட ஒரு விபச்சாரி! தங்கடை போலிப்
5
பெருமையைத் திருப்திப்படுத்த அவை என்ரை அறிமுகத்தை நாடுவினம்; ஆனால், அவேலை ஒருத்தராவது தங்கடை சகோதரியையோ, மகளையோ எனக்குக் கலியாணம் செய்து வைக்கத் துணிய மாட்டினம்..’ எனக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இந்த வசனம் நடிகனுக்கு மட்டுமல்ல நாட்டைக் காக்கப்புறப்பட்டவர்களுக்கும் உரியதாகவே எனக்குப்படுகின்றது. அவர்கள் போராட்ட மேடையில் நிற்கும் போது விசில் அடித்து உணர்ச்சிவயப்பட்டு ஆரத்தழுவிய சமூகம் இன்று அவர்களைத் தனக்குள் ஈர்த்து வாழ்வளிப்பதற்குத் தயங்கும் மனநிலையுடய ஒன்றாகவே தன்னை இனங்காட்டி நிற்கின்றது. எத்தனை அனுபவங்களைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமூகத்தில் முன்நிலைக்கு வருகின்ற போதும் சுதந்திர உணர்வை அனுபவிக்கின்ற போதும் ஆழப்பதிந்த சமூதாயக் கருத்தேற்றங்கள் என்ற மனத்தளைகளில் இருந்து எளிதில் மீளமுடியாது எமது சமூதாயமும் தவித்துக்கிடக்கின்றது.சமூகத்தின் இ;ந்த நிலைப்பாடு மட்டும் அவர்களைப் பின்தள்ளவில்லை போராட்டக் களத்தைத் தமது விடுதலைக்கான பாதையாகத் தெரிந்தெடுத்து அதனை ஒரு தவக்கோலமாகக் கண்டு அந்த நினைப்புக்குள்ளும் சம்பவங்களுக்குள்ளும் ஆழமாக ஊறிப்போனவர்களாக சிலர் இருந்தனர். இதனால் இயல்பான இன்றைய சூழலிலும் வெளியே வந்து அச்சூழலோடு இணைந்து செயற்படமுடியாத இறுக்கமானமனதைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்தவாறு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையில் கொண்ட பற்றுறுதியும் இன்றும் பலருக்குப் பிரச்சினையைத் தந்து நிற்கின்றது. இவற்றோடு சம்பவங்களின் மீள் சூழற்சி, அதிபரமன எழுச்சி, தற்போதும் முன்னர் வாழ்ந்த சூழுலில் வாழ்வது போன்ற நினைப்புக்கள், கனவுகள், தொட்டதற்கும் கோபங்கொள்பவர்களாக ஒதுங்கியிருப்பவர்களாக அவர்களை மாற்றிவைத்திருக்கின்றன. 2002 இன் பின்னர் திறக்கப்பட்ட ஏ-9 வீதியைப் பார்த்து 2004 இல் ‘ஏ-9 வீதி பற்றிய குறிப்புகள்;’ (பக்கம் – 26) என்ற கவிதையில் அம்புலி இவ்வாறு எழுதுகின்றார்;.

அந்தச் சாலையை நீங்கள்
இப்போது
அழகாய்ப் பார்க்கிறீர்கள்
சொகுசு வாகனங்களும்
தார்போட்ட மவுசுமாய்
கடைகள்
கடைநிறையக் கன பொருட்கள் என
கலகலத்துக் கிடக்கிறது…….
இனி அந்த வழி நெடுகிலும்
ஆனந்தப் பயணங்களே
தொடர்வதான கனவு.
எனக்கு அவ் வீதியின்
வர்ணங்களெதுவுமே தெரிவதில்லை
முன்பு எப்படித் தெரிந்ததோ
அப்படியே
புற உருவத்தை ஊடுருவி
என்புருவைக் காட்டும்
‘எக்ஸ்றே’ படங்களைப்போல்
இந்த வீதியின்
6
சில வருடங்கள் முன்னான
காட்சிகளே
கனவிலும் வருகிறது……
காலம் ஆற்றமுடியாத வலியாய்
இக்காட்சிகளே
என்னுள் பதிந்து போயின…

அவரின் இக் கவிவரிகள் சுட்டுகின்ற மனநிலைக்கு உட்பட்டவர்களாகப் பலர் வாழ்கின்றனர். கவிஞர் சேரன் குறிப்பிடுவது போன்று ஆற்றொணா அஞருக்கு (மனவடுவிற்கு) உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இது சீர்செய்யப்படவேண்டியது. சமூகம் இதற்கான வழியைத் திறக்கவேண்டும். அதைவிடுத்து வலிகளை விளம்பரமாக்கி விற்கக்கூடாது.போராட்டக்களத்தைத் தமது விடுதலைக்கான வழியாக அவர்கள் தெரிந்தெடுத்திருந்தாலும் அதில் ஈடுபாட்டோடு இருந்தாலும். சீ.வீ. வெஜ்வூட் (ஊ.ஏ.றுநனபறழழன) டின் ……எந்தவொரு பிரச்சினையையும் யுத்தம் தீர்த்து வைத்ததில்லை. அதன் உடனடியான விளைவுகளும் மறைமுகமான விளைவுகளும். எதிர்மறையானவையாகவோ, பேரழிவு மிக்கனவாகவோதான் இருந்துள்ளன…. யுத்தம், யுத்தத்தை மட்டுமே ஈனும் என்பதை, மனிதர் அன்றும் அறிந்திருக்கவில்லை, இன்றுவரை அறிந்துகொள்ளவும் இல்லை.” என்கின்ற யுத்தம் பற்றி கூற்றுக்கு ஏற்பச் சிலர் யுத்தத்தை மனதளவில் வெறுக்கும் கருத்துநிலையைக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புக்களில்
வெறுப்படைகிறேன்
நரம்புகள் அறுந்து தசைகள் பிய்ந்த
மனிதர்களின்
கோரச் சாவு கண்டு என்
மனம் குமுறுகின்றது……
எப்பொழுதும்
யுத்தம் எனக்குப்பிடிக்கவில்லை
ஆயினும் அதன் முழக்கத்தினிடையே
எனது கோலம் மாற்றமடைந்தது
கால நிர்ப்பந்தத்தில்.. (அம்புலி: பக்கம் – 16)

யுத்தம் திணிக்கப்பட்டதாக இருக்கிறது. அந்தத் திணிக்கப்பட்ட பாதையில் நடந்து தமக்கான சுதந்திர வெளியை அடைவதற்கு அவர்கள் விரும்பினர். எரிக்ஃபிராம் (நுசiஉh குசழஅஅ) தேவைகளை எட்டு அடிப்படைத் தேவைகளாகக் காண்கின்றார். அதில் மிக முக்கியமான தேவையாகக் கடந்துசெல்லுதல் (வுசயளெஉநனெநnஉந) என்ற தேவையைக் குறிப்பிடுகின்றார். அது தங்களுடைய சம்பந்தமின்றி உலகினில் தூக்கி எறியப்பட்ட மனிதர்கள், மக்களை அல்லது பொருட்களை அழிப்பதன் மூலமாகவோ அல்லது படைப்புக்களின் வழியாகவோ தங்களது இயற்கையைக் கடந்து செல்ல வேண்டியதாக இருக்கின்றது என விளக்கப்படுகின்றது. ( இந்த விளக்கத்திற்கு வேறு பரிமாணங்களும் உண்டு. இங்கு நான் இந்தக்
7
கவிஞைகளின் கவிதைகாட்டும் மனநிலைக்கு ஏற்ப இதனை விளக்கமுயல்கின்றேன்.) இந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்குக் குறிப்பாக இந்தப் பெண் போராளிக் கவிஞைகளுக்கு தங்களது சம்பந்தமின்றித் தம்மை அடக்கிய, பின்தள்ளிய சமூகத்தின் வரையறையைக் கடந்து செல்ல வேண்டிய தேவை இருந்தது. அதற்கு அவர்கள் போராடுதல் (அழித்தல்), படைத்தல் என்ற இருநிலைகளைப் பிரயோகிக்க வேண்டும். பெண்போராளிகளில் எல்லோரும் படைப்பவர்கள் ஆகவில்லை. அழிப்பதோடு அதாவது யுத்தம் புரிவதோடு மட்டும் பலர் நின்றுவிட்டார்கள். இப் பெண்போராளிக் கவிஞைகளைப் பொறுத்தவரையில் யுத்தம் புரிந்து எதிரிகளை, தமக்கெதிரான சமூகமனப்பாங்கினை அழித்துத் தாம் விரும்பும் சுதந்திரத்தைப் படைத்தல், படைப்பினூடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தித் தமக்கான இலக்கினைப் படைத்தல் என்ற இரண்டு வழிகளையும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இந்த இரு அடிப்படைகளையும் தம்மகத்தே கொண்டு வெளிக்கிளம்பும் இவர்களிடம் யுத்தம் தேவை என்ற மனநிலையும் யுத்தம் தேவையில்லை என்ற மனநிலையும் இருப்பது இயல்பானது. ஓன்று அழித்தலை விரும்புகின்றது மற்றயது படைத்தலை விரும்புகின்றது. மொத்தத்தில் இந்த இருநிலைகளுக்கும் ஊடாகத் தமது பிரச்சினைகளைக் கடந்து சென்று உன்னதத்தை அடைய படைக்க அது விரும்புகின்றது. மேற்குறிப்பிட்ட கவிதையின் இறுதியில் அது இவ்வாறு விபரிக்கப்படுகின்றது.ஆயினும்

ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாகத்
தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச
நான் தயார்
நிம்மதியான பூமியில் நித்திரை கொள்ள
எனக்கு விருப்புண்டு. (அம்புலி: பக்கம் – 17)

இந்தத் தளத்தில் நின்று கொண்டு இப்பெண்போராளிக் கவிஞைகள் தமது துன்பத்தை, கால்களில் பூட்டப்பட்ட விலங்கை முதலில் உடைத்துப் பின்னர் உலகுதழுவிய அக்கறைகாட்டுபவர்களாகவும் தம்மையொத்த துன்பம் உறுபவர்கள் மீது இனம் மொழி கடந்து நேசத்தைப் பொழிபவர்களாகவும் தமக்கு ஏற்ற வகையில் சமூகத்தைக் கட்டமைக்க நினைப்பவர்களாகவும் இறப்பின் பின்னரும் இருக்கும் தமது இருப்பின் தொடர்ச்சிகளை விரும்பி நிற்பவர்களாகவும் தமது கவிதைகளின் செல்நெறிகளை அமைந்துச் செல்கின்றனரோ என எண்ணத்தோன்றுகின்றது.அவள் ஒன்றுக்கும் அசையாள் என்ற கவிதையில் மலைமகள் இப்படி எழுதிச் செல்கின்றார்;.

வானமே கிழிந்தது போல்
வாரிவாரி மழைபெய்தது
காவலரணையும் மேவி
வெள்ளம்
கால் பரப்பி நடந்தது
கடும்பயிற்சி எடுப்பதால்
8
தேய்ந்து நைந்து
கிழிந்த காற்சட்டை ஒன்றை
தைத்தவாறிருந்தாள் ஒருத்தி.
ஊசியில் நூல் கோர்த்தவாறு
அவள் மெல்லச் சொன்னாள்
‘வானமும் பீத்தலாய்ப் போய்ச்சுது
இது முடிய அதையும் நான்
பொத்தித் தைக்கப்போறன்’ (மலைமகள்: பக்கம் -90)

தனது பிரச்சினையாக இருக்கும் கிழிந்த காற்சட்டை என்ற பிரச்சினையை சீர்செய்ய முனையும் ஒருத்தி அதன் முடிவில் வானத்தைத் தைக்கப்போவதாகக் கூறுவதை, சுயதேவையை முன்னர் பூர்த்திசெய்து விட்டு அதன் பின்னர் பொதுப்பிரச்சினையைச் சீர்செய்யும் மனநிலையின் வெளிப்பாடு எனக் கொள்வது பிழையில்லை என நினைக்கின்றேன். தமது சுயதேவைகளில் இடைவெளியைவைத்திருப்பவர்கள், சுயபிரச்சினைகளைச் சீர்செய்யமுடியாதவர்கள் பொதுவெளிகளில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பது கேள்விக்குறியே. அவர்களால் நேர்மையுடனும் தைரியத்துடனும் தொழிற்பட முடியாது என்றே கருதுகின்றேன். வேண்டுமானால் தம்மை நேர்மையானவர்கள், தைரியமானவர்கள் என்று காட்டலாம்; நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து. இதனைத் தான் இங்கு நாம் அரசியலாகப் பார்த்து நிற்கின்றோம். அதுதான் இன்றைய யதார்தம் போலும்.தன்னில் இருந்து கிளம்பும் இந்த விடுதலை உணர்வு தம்மையொத்த துன்பத்தை உணரும் மற்றவர்களிடத்திலும் நேசத்தை உருவாக்கி விடுகின்றது. உன்னைப்போல் உன் அயலவனை நேசி என்பது தன்னை நேசிக்கும் ஒருவராலேயே சாத்தியமாகும். தன்னை நேசிக்காத ஒருவரால் தன் குடும்பத்தையும் நேசிக்க முடியாது, தன் தேசத்தையும் நேசிக்க முடியாது. தன்தேசத்தை நேசிக்க முடியாத ஒருவரால் பிறர் தேசங்களை எப்படி நேசிக்க முடியும். அவர்களால் உலகத்தவரைநோக்கி நான் உங்களுக்காய் உருகித்துடிக்கின்றேன் என உண்மையாகச் சொல்லமுடியாது. ஆனால் இனவெறி ருவண்டாவில் வீசியபோது ஆதிலட்சுமி சொல்லுகிறார்.

குஞ்சுகளே! உங்கள்
கூடுகலைத்த குரங்கு எது?
அஞ்சி அஞ்சி நீங்கள்
அழுது துடிப்பதனை
எண்ணிப் பார்க்க எந்தன்
இதயம் வலிக்கிறது
மொழி வேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்றுதானே. (ஆதிலட்சுமி:பக்கம் – 54)

உண்மையாகச் சொல்லுகிறார். மூச்சினூடு கலந்துவிடுகின்றார். இத்தகைய பரந்த மனம் உள்ள இக்கவிஞைகள், போரட்டம் (அழித்தல்) படைத்தல் என்ற இரண்டு விடயங்களுக்குள்ளும் நின்று உன்னதமான நிலையொன்றை அவாவி நின்றார்கள் என்று முன்னே குறிப்பிட்டேன் அந்த உன்னதமான நிலையில் தமது சமூகத்தின் நிலைமை எப்படியிருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதைத் தமது தாய் எப்படியிருக்க வேண்டும் என்பதன் ஊடாகச் சொல்லிச் செல்கின்றனர் என்றே
9
நான் கருதுகின்றேன். தமக்கு மூலமான தம் தாய் ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மூலமான தாய் எப்படியிருக்க வேண்டு;ம்.
என்னால்
பரிசளிக்க முடியாத வாழ்வை
நீயே சென்றடைவாய்
வழிகளில் சிவப்பும்
இறக்கைகளில் நெருப்பும்
உனக்குச் சொந்தமாகட்டும்
எம்மை வேகவைத்த காலம்
உன்னால் வேகி
சாம்பராகட்டும்
ஒரு புதிய வாழ்வு
உன்கரங்களில் பிறக்கட்டும் (அம்புலி:பக்கம் -25)

என்று கூறி வழிப்படுத்துபவளாக, பிள்ளைகளைச் சுயமாக இயங்கத் தூண்டும் உந்துசக்தியாக இருக்கவேண்டும். ‘தேடி அடைவாய்’ என்ற கவிதையில், ஒரு தாயின் கூற்றாக வரும் கவிதையில் மேற்படி வரிகள் வருகின்றன. ரூபி மார்க்கிரட் ‘அப்புறமாய் வருகின்றேன்’ என்ற கவிதையில் தாயாருக்கு ஒரு உபதேசத்தையே நடத்திவிடுகின்றாள். தாம் காணும் சமுதாயத்தில் எப்படியான எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இருக்கவேண்டும் என அவள் கூறுகின்றாள்.

கன்றுக்குப் புல்சேர்த்து வைத்து

பசுவொன்று இறந்ததாய்
வரலாறு கிடையாது – அதனால்
கவலையை விடு (ரூபி மார்க்கிரட்: பக்கம் – 108)

 

தனது வாழ்வைத் தான் பார்த்துக் கொள்வேன் எனத் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாதிருக்கப் பாடம் நடக்கிறது. ஆனால் இதற்கான, கவலையைத் தீர்ப்பதற்கான தீர்வு முன்வைக்கப்படவில்லை. கவலையை விடு என்றால் அது விட்டுப்போகுமா..? பாரதி தனது ‘அன்பான அம்மா’ என்ற கவிதையில், தனது உள்ளத்துணர்வுகளைத் தாய்க்கு கூறுவதாக வடிக்கும் கவிதையில் இதற்கான ஒரு மாற்று ஏற்பட்டைத் தன் தாய்க்கு கூறுகின்றார்.

நாளை
திரும்பிவராத உன்
மகளை எண்ணி
நீ கவலைப்படாதே
என் மறைவின் பின்னர்
புதிய தோழர்கள்
அந்த வைகறைக்காய்
புறப்படுவர்கள்
அதற்கு முன்னால்
அவர்கள் உன்னிடம் வரலாம்
அப்போது அவர்களின் ….
10
இனிய முகங்களில்
என்னைப் பார்
அடுத்துவரும் நாட்களில்
அவர்களும்
இல்லாமல் போகலாம்…
எம் மக்கள் புறப்படுவர்கள்
அப்போது அந்தப்
புதிய விடியலை வரவேற்கும்
அதிகாலைப் புஷ்பங்களாய்
மெல்லிய பனித்துளியின்
முகத்தின் பின்னால்
நாம் முகையவிழ்ந்து
தென்றலின் தடவலில்
முகமலர்ந்தாடுவோம்.
அப்பொழுது நீ இருந்தால்
உற்றுப்பார்
உன் செல்ல மகளின் முகம்
சிரித்தபடி தெரியும். (பாரதி:பக்கம்-117)

மற்றவர்களில் தன்னைத் தரிசிக்கும் நேசத்தை வழங்குகின்றாள். தமது தாய்மார் இப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் ஊடாகச் சன்னதம் கொண்ட ஊழிக்காற்றாய், தாய்மாரின் பால்நிலைசார்ந்த பிம்பத்தைச் சுடரை அணைத்துச் செத்தைக் கதவை நீக்கிக் கடலில் இருந்து தண்ணொளி பரப்பி எழுகின்ற மதியைப் பார்க்க வைக்க முயன்றார்கள். அரிஸ்டோட்டிளின் கவிதையியல் என்ற நூலில் அவர் பாத்திர உருவாக்கம் பற்றிக் கூறும் போது ‘எந்தப்பாத்திரத்தையும் ஆண்மையுள்ளதாகப் படைக்க முடியும்; ஆயினும் ஒரு பெண்பாத்திரத்தை இங்கு நாம் கருதும் வகையில் ஆண்மையுடையதாகவோ, அஞ்சவரு தோற்றமுடையவளாகவோ படைக்க முடியாது அப்படிப்படைத்தால் பாத்திரப்பொருத்தம் அமையாது என்கிறார். (அறிவு, நுட்பம், வீரம் போன்றவற்றில் ஆண்களைவிடப் பெண்கள் இயற்கையாகவே குறைந்தவர்கள் என்ற தனது காலக் கிரேக்கக் கருத்தியலில் அதனைச் சொன்னார்). அதனை மாற்றி உடைத்து தமது மனஉணர்விற்கும் கருத்தியலுக்கும் ஏற்றதாகத் தம் தாய்மாரினை மாற்றுவதன் மூலம் சமூகத்தின் மாற்றத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள் போலும் இதற்காகவேகவிதைகளைச் சுமந்த

கருவறையை இன்று
கல்லறை ஒன்று சுமக்கிறது (பாரதி: பக்கம் – 113)

என்னக் கிடந்தார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் இன்று காண்பதென்னவோ காந்தாவின் ‘எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த’ என்ற கவிதையில் வரும் தாயின்

எந்த மகனுக்காய்
என் கால்களை நகர்த்த?
நேற்று விதையுண்டு போன
11
மூத்தவனுக்காக? இல்லை
இப்போதுதான்
விதைக்கப்பட்ட
என் இளைய குஞ்சுக்கா? (அ.காந்தா: பக்கம் – 35)

என்ற கேள்வியோடு கூடிய இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்த மனநிலையுடன் தனித்துத் தவித்திருக்கும், தாய்மார்களின் பெருக்கத்தையே.
இந்தவாறே காதல் என்ற உணர்விலும் புதிய பரிமாணம் கொண்டுவரப் படவேண்டும் என்று நாமகளின் ‘காதலின் புதிய பரிமாணம்’ (பக்கம் – 98) என்ற கவிதை பேசுகின்றது.

எப்போதாவது தெருவில்

அவசர இயக்கத்தில்
கண்டுவிட நேர்கையில்
சந்திப்பை வரவேற்பதாய் அவன்
கண்கள் ஒருமுறை விரியும்
மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்.
அவனுக்குத் தெரியும்
எனக்கு அது போதுமென்று.

பாலுக்குரிய ஈர்ப்பினால் காதல் உருவாகிவிடினும் இலட்சியத்திற்கு அது தடையாக இருந்துவிடக் கூடாது என்ற விழிப்புநிலையை அதில் தரிசிக்கலாம். அத்துடன் காதல் என்பது விடுதலையின் மீதானதாக இறப்பின் பின்னரும் வாழும் விருப்புடன் தன்னைப் பிணைத்துக்கிடக்கின்றது. எரிக் ஃபிராமின் மொழியில் இதனை வேர்பிடித்த தன்மை (சுழழவநனநௌள) என்ற தேவையாகச் சொல்லலாம். இயற்கையின் பிடியை உதறிக் கடந்துபோனாலும் மீளவும் இவ்வுலகில் சொந்த வீட்டிலிருப்பதைப்போல் உணர்வதற்கும், அதில் வேர்பிடித்து நிலைகொள்ளுவதற்கும் தேவை உள்ளது என்று அவர் குறிப்பிடுகின்றார். இக்கவிஞைகளின் இத்தேவையினை தமது மரணத்தின் பின்னரும் மற்றவர்களில் எம்மைக் கண்டுகொள்ளுங்கள், சுதந்திரத்தின் பின்னரான வேளையில் அதனை நாம் பார்த்து மகிழ்வோம் போன்ற தொனியில் அமைந்த கவிவரிகள் வெளிப்படுத்துகின்றன. வானதியின் ‘எழுதாத கவிதை’ (பக்கம் – 65) என்பதில் வரும்

அர்த்தமுள்ள என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலா வருவீர்கள்
அப்போ எழுதாத என் கவிதை
எழுந்து நிற்கும் உங்கள் முன்
என்னைத் தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள்
அன்புகாட்டியவர்கள் அத்தனைபேரும்
எழுதப்படாமல் எழுந்து நிற்கும்
என் கவிதைக்குள் பாருங்கள்
அங்கே
12
நான் மட்டுமல்ல, என்னுடன்
அத்தனை மாவீரர்களும்
சந்தோசமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்

வரும் கவிவரிகளில் அதனைத் தரிசிக்கலாம் போலத் தோன்றுகின்றது.இந்தவாறு பல கருத்துநிலைகளைச் சிந்தனையில் கிளறிவிடும், புறத்தே போர் நடந்த போது தம் அகம் தீண்டிய கருக்களை உள்ளே வைத்துக் கிடைத்த கால இடை வெளியில் பிரசவிக்கப்பட்டவையாகக் காணப்படும் இக்கவிதைகள். புறப்போர் முடிவுற்று அது ஒவ்வொருவர் உள்ளத்திலும் அகப்போராக மாற்றமுற்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகச் சூழலில் சூழ்நிலைமை கருதிப் பெயரிடாத நட்சத்திரங்களாக வெளிவந்திருக்கின்றன. உள்ளிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் போது அவை எரிகற்களாகவே எனக்குத் தெரிகின்றன. நட்சத்திரங்கள் என்று அழைப்பவை கூட தொலைவில் இருக்கும் எரிகற்கள் தானே. தூரத்தில் இருந்து தரிசிப்பவர்களுக்கு, இந்த அனுபவத்திற்குத் தொலைவில் நிற்பவர்களுக்கு வேண்டுமானால் இது நட்சத்திரங்களாகத் தெரியலாம். அவர்கள் அதனை நட்சத்திரங்கள் என்று கொண்டாடலாம். ஆனால் அந்தத் தகிப்பில் கிடந்து புரண்டு எழும் நமக்கு, அருகில் இருந்து பார்த்த எமக்கு இவை எரிகற்களாகவே புலப்படுகின்றன. எரிகற்கள் என்று குறிப்பிடுவதற்கு இன்னுமொரு காரணம் உண்டு. இலக்கியங்கள் உண்மைகளை முன்வைப்பதில்லை அதி உண்மைகளை முன்வைக்கின்றது என்று அரவிந்தரின் (ழேவ வசரவாள டிரவ ளுரிநசவசரவாள) கருத்தை ஒட்டி ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். அவர் அதி உண்மை என்பதைச் செறிந்த உண்மை என்கின்றார். உண்மையில் நடந்த ஒரு விடயத்தை புனைவுகளின் ஊடாக இலக்கியம் செறிந்த உண்மைகளாக, அதி உண்மைகளாக மற்றி விடுகின்றது. ஆனால் இக்கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகள், உண்மைகளாக மட்டுமே இருக்கின்றன. அவை அதிஉண்மைகளாக மாற்றப்படவில்லை.

ஊர்ந்து போன கதை
ஊர் கலைத்த எதிரிகளை
உளவறிந்த கதை
கொல்லவந்த பகைவருக்கு
குண்டெறிந்த கதை
அலையலையாய் நாம் புகுந்து
‘ஆட்டி’ அடித்த கதை என
ஆயிரம் கரு எமக்கு
கவிதை எழுத.. (மலைமகள்: பக்கம் – 95)

மேற்போந்த வரிகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இப்படிப் பல கவிதைவரிகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. இதனால் கிடைத்த அனுவம் அல்லது கரு ஆழ்மன ஆழத்திற்குக் கொண்டு செல்லப்படாமலேயே படைக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றமை தவிர்க்க முடியாது. மேற்படி கவிதையின் (மலைமகள்: பக்கம் – 95) இறுதிப்பந்திக்கு முதல்பந்தி இவ்வாறு சொல்கின்றது.

பளை போவதற்காய்
இயக்கச்சி கடக்கையிலே
அரியாலையில் அடிவைத்தார்
13
கைதடியில் கால்பதித்தார்
நாவற்குழியை
நாலு எட்டில் கடந்தார்
நானெதை எழுத?
இந்த அவசரத்தில் எதை
என்னவென்று எழுத?

இந்த அவசரம் இத்தொகுதியில் உள்ள எல்லாக் கவிஞைகளுக்கும் உரிய பொதுமைப்பாடுடைய ஒன்றாகவே கருதத்தக்கது. இதனால் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் கவிதையின் உயர்ந்த தரத்தை அடையாமல் பெரும்பான்மையாக வெளிப்படைத்தன்மை கொண்டவையாகக் காணப்படுவதோடு போராட்ட உணர்ச்சியைத் தூண்டுதல், பிரசாரப்பாங்கு, வெற்றியைப்பாடுதல், புகழ்பாடுதல் போன்ற அம்சங்களையே வெளிப்படுத்தி நிற்கின்றன எனக்கருதத்தக்கதாக இருப்பினும் அலையிசையினுடைய நான்கு கவிதைகள் இக்கவிதைத் தொகுதியில் ஓரளவிற்கு உண்;மைகளைச் செறிந்த உண்மைகளாக்க முயன்றிருக்கின்றன என்றே எனக்குத்தோன்றுகின்றது.

வாழ்வுப் படிம அத்திவாரங்களின்
வேர்களை
கறையான்கள் அரித்திருந்தன
எஞ்சியவைகளில்
அவர்களின் ரேகைள்
உருவேறிய மனங்களின் தாண்டவங்கள்
அரங்கேறத் துடித்தன (அலையிசை: பக்கம் – 38)

இவை அரவிந்தரின் அளவுகோலை வைத்துச்சொல்ல முனைவது. இது முடிந்த முடிவல்ல. இரண்டாம் உலகமாகா யுத்தத்தின் பின்னரான சூழு;நிலையில் எழுந்த கவிதைகள் உளவெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்ட உளவெளிப்பாட்டுக் கவிதைகளாக (ஊழகெநளளழையெட Pழநவசல) இருந்ததை அவதானிக்க முடியும். அவை சுயம் என்ற புள்ளியில் நின்று தனக்கும் சுயத்திற்குமான முரண்பட்ட நிலைகளையும் தனிநபர்கள் தங்களுக்குள் அனுபவிக்கும் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாத வேதனைகளையும் துன்பங்களையும் வெளிப்படுத்துபவையாகத் தம்மைக் காட்டி நின்றன. இவ்வகைப்பட்ட கவிதைகள் கவிஞர்களுக்கான ஓர் ஆறுதல்; மொழியாக மட்டுமல்லாமல் சிகிச்சை மொழியாகவும் இருந்தது. இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள் யுத்த காலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பினும் உளவெளிப்பட்டுத் தன்மையின் உட்கூறுகளைக் கொண்டவையாகக் காணப்படவில்லை.

ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வர முடியவில்லை
எல்லையில் என்
துப்பாக்கி எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன். (வானதி: பக்கம் – 64)
14
என்ற வேண்டுதலை மட்டுமே அவை முன்வைக்கின்றன. சுயம் என்பது போராட்டத்தை மையப்படுத்தியதாகக் கட்டமைக்கப்பட்டாலும். போரினால் ஏற்பட்ட தனிமனித உணர்வுகளை அகம் சார்ந்து பேசாமல் புறவயமாகப் பொதுமைப்படுத்தியே இக் கவிதைகள் பேசுகின்றன. புறவயமாகப் பேசினாலும் அவை சத்தியத்தின் சாரத்தைப் பேசுகின்றன. இதனால் இத்தொகுதியில் உள்ள கவிதைகள்

நீயும் இல்லை
உனக்குக் கல்லறையும் இல்லை
கண்ணீர் விட்டு அழமுடிந்தும்
பெயர் சொல்லியழ முடியவில்லைத் தோழி
கல்லறையில்லாத காவியமே உன்
தணியாத காதலை நான் அறிவேன்
உன்னை ஓவியமாய்
கண்ணெதிரே வரையாவிட்டாலும்
கற்பனைச் சித்திரமாய்
இதயத்தில் வரைந்துவிட்டேன் (நகுலா:பக்கம் – 97)

என்ற நிலையையே வாசகராகிய எமக்கு ஏற்படுத்தி, உண்மையின் அடிப்படையில் மனிதர்கள் மதிப்பிடப்படவேண்டும் என்ற நீதியுணர்வினை எமக்குள் விட்டுச்செல்வதோடு

ஒரு தேசத்தின் இருளை
விடியலை நோக்கி அசைக்கும்
ஆயிரமாயிரம் பேருடனான
என் பயணமும்
ஒருநாள் இலக்கை அடையும். (ஞானமதி:பக்கம் – 63)

என்று அமைதிகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ‘பெயரிடாத நட்சத்;திரங்கள்’ ஒரு காலத்தின் பதிவாகச் சாட்சியாக எம்முன் விஸ்;வரூபம் எடுத்து நிற்கின்றது. இவை எப்பொழுதோ முடிந்த காரியம் ஆனால் முழுதும் உண்மை. அவ்வளவும் தான்.

மௌனமாக என்
மன இடுக்குகளில் பதியப்பட்டுள்ள
உயிரின் உணர்வுகளோடு ஒன்றிப்போக
வாழ்வு நகர்கிறது
இமைப்பொழுதிலும்
ரணமாகும் உயிரின் நிதர்சனத்தை
என் அகம், பாடலாக
என்றுமே இசைத்துக்கொள்ளும். (அலையிசை: பக்கம் – 37)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *