‘வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம். ஆடுவோம்… பாடுவோம்…. எழுச்சி கொள்வோம்’, நூறு கோடி மக்களின் எழுச்சி

 சிவதர்சினி. ர

வார்த்தை, இருவிழிப்பார்வை என உடல் கொண்ட ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தி வன்முறை செய்பவர்கள் நாம். கத்தியும் இரத்தமும் மட்டுமே வன்முறையின் அடையாளங்களாக வரையறை செய்யப்பட்டு, இதரவித வன்முறையின் வடிவங்கள் அலட்சியம் செய்யப்படுகின்ற அல்லது அவற்றின் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுகின்ற சமூகத்தில் சகலவிதமான வன்முறைகளையும், அவற்றின் தாக்கத்தின் ஏற்ற இறக்கம் கருதாது எதிர்க்கவும் பலர் விழைந்துள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடே நூறு கோடி மக்களின் எழுச்சி தினமாகும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச்செல்கின்ற அதேவேளை அது சாதாரணமயமாக்கப்பட்டு அலட்சியம் செய்யப்படுகின்ற போக்கு நம் சமூகத்தில் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி வன்முறைக்குட்படுகின்ற பெண்ணுக்கே தான் வன்முறைக்குட்படுகிறார் என்ற விழிப்பின்மை, பெண்களுக்கான சமூககட்டுப்பாடுகளால் நியாயப்படுத்தப்படுவதாக அல்லது அதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. பெரும்பாலான வன்முறைகள் வார்த்தைகளாகவே உருப்பெறுகின்றன. நம் சமூகத்தில் உணர்வுரீதியான வன்முறைகளுக்கும் குறைவில்லை. அனேக சந்தர்ப்பங்களில் குடும்பங்களுக்குள் வன்முறை நிகழ்கையில் பெண் சமூகத்தாலும் தன் உள்ளுணர்வுகளாலும் ஆளப்பட்டு மௌனமாக்கப்படுகிறாள்.

உலகப் புள்ளிவிபரங்களின் படி இவ்வுலகில் வாழும் மூன்று பெண்களில் ஒரு பெண் ஏதாவதொரு வகையில் தன்வாழ்நாளில் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றார். அந்த வகையில் அறுநூறு கோடி மக்களை கொண்ட உலக சனத்தொகையில் (2012இல்) அண்ணளவாக சரிபாதியினரான முன்னூறுகோடி பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினரான நூறு கோடி பெண்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். உலகசனத்தொகை எழுநூறுகோடியை எட்டியுள்ள இந்நிலையில் இவ்வெண்ணிக்கை தற்போது நூறு கோடியை தாண்டிச் செல்கின்கின்றது. இந்த வன்முறைகளைப் பகிஷ்கரிப்போம், எதிர்ப்போம், எழுச்சி கொள்வோம் என மக்கள் சபதம் கொள்ளும், எழுச்சி கொள்ளும் தினமாக ‘நுர்று கோடி மக்களின் எழுச்சி’ (ழுNநு டீஐடுடுஐழுN சுஐளுஐNபு) எனும் பிரச்சாரம் 2012ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி செயற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனையொட்டி உலகெங்கிலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து 2013ம் ஆண்டு தொடக்கம் இந்தப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெருந்திரளான மக்கள் செயற்பாடாகும்

.

இலங்கையிலும் நூறுகோடி பெண்களின் எழுச்சியானது வன்முறையற்ற வாழ்வுதனைக் கட்டியெழுப்பப் பாடுபடும் பெண்ணியவாதிகள், படைப்பாளர்கள் சமூக மாற்றச் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களால் 2013 தொடக்கம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பில் 2013 பெப்ரவரி 14ம் திகதி பெண்களும் ஆண்களும் இணைந்து நடாத்திய ஊர்வலமும், மனிதச் சங்கிலிப் பிரச்சாரமும் இடம்பெற்றன. 2015இல் கல்லடி கடற்கரையில் ‘நீதிக்கான பறை’ எனும் நிகழ்வில் பறை அறைந்தும், மணல் உருவங்கள் செய்தும் கொண்டாடப்பட்டது. இதே செயற்பாட்டாளர்களால் 2016இல் முல்லைத்தீவில் பறைமேளத்துடனும் பாடல்களுடனுமான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2017 இல் 08 ஓவியர்கள் இணைந்து ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்’ என்கின்ற தொனிப்பொருளில் 03 நாள் ஓவியக் கண்காட்சியை முல்லைத்தீவில் ஒழுங்கு செய்திருந்தனர். இந்தக்கண்காட்சிக்காக இணைந்த ஓவியர்கள் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் என்ற பெயரில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். சமூகத்தில் எண்ணிக்கையில் சரிபாதியினரான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அற்ற உலகை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்தவர்களே இந்த ஓவியர்கள். பெண்கள் வன்முறைக்குட்படுத்தப்படுவதால் தனிப்பட்ட நபர், அவரது குடும்பம் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்கள்.

பெண்களையும் அனைவரையும் பாதிக்கும் அனைத்து விதமான வன்முறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். வன்முறையற்ற, யாவரும் மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தங்களையும் மற்றையவர்களையும் இணைத்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களுடன் இன்னமும் பல காண்பியக் கலைஞர்களும், செயற்பாட்டாளர்களும், பெண்ணியவாதிகளும் இணைந்து 2018 ற்கான நூறு கோடி மக்களின் எழுச்சியை ‘இயற்கையை வன்முறை செய்யாத வாழ்வை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்துள்ளனர்.
இது மட்டக்களப்பு திருமலை வீதியோரம், சத்துருக்கொண்டான் வாவிக்கரையில் திறந்த வெளிக்கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையற்ற வாழ்விற்காய் குரல்கொடுப்போம் ….வானெங்கும் ஓயாது முழங்கட்டும் நம் குரல்கள்.. ‘கனவு மெய்ப்படும் காலம் காண்போம்’ என்று கூவி ஆடுவோம் பாடுவோம் எழுச்சி கொள்வோம்…..

சிவதர்சினி. ர

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *